பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 28 février 2015

குறு வடிவில் பிரஞ்சு நாடு


லிலிபுட்  நாடு - கேள்விப்பட்டு இருகிறீர்களாகுட்டி குட்டி மலைகள் ; சின்ன சின்ன கடல்கள் ; ஆறு அங்குலக் குள்ள மனிதர்கள் ... உள்ள
சித்திரக் குள்ள நாடு அது! 'Jonathan Swift ' என்ற ஆங்கில ஆசிரியரின் கற்பனையில் உருவான நாடு. அவர் 1727 - ஆம் ஆண்டு கலீவர் பயணங்கள் (Gullive's Travels') என்ற நாவலைப் படைத்தார். அதில் தான் இந்தக்   குறு வடிவ நாட்டை வருணித்திருக்கிறார். இணையதளத்தில்  இலவயமாகக் கிடைக்கிறதுபடித்துப்பாருங்கள் ; சுவையாக இருக்கும். அந்த நாவலில் வரும் லிலிபுட் நாடு போல ஒரு நாடு இருந்தால்... எப்படி இருக்கும்? பார்க்க ஆவலா? வாருங்கள் - பரி நகரில் இருந்து 20 நிமிடத் தொலைவில் இருக்கும் எவ்லின் வட்டாரத்தில் (Yvelines) எலான்கூர் (Elangour) நகருக்கு வந்து  பாருங்கள்.
அங்கே -


பிரான்சு நாடே சித்திரக் குள்ள வடிவில் உங்களுக்காகக் காத்திருக்கிறது. ஐந்து ஏக்கர் (5 hectares) பரப்பளவில் பரந்து  விரிந்திருக்கும் அதில், பிரான்சின் புகழ் பெற்ற நினைவுச் சின்னங்கள் (Tour Eiffel, Arc de Triomphe...), பெரும் பேராலயங்கள் (Notre Dame de Paris, Cathédrale d'Amiens, Cathédrale de Chartres...), கோட்டை கொத்தளங்கள் (Châteaux de Versailles, Châteaux de la Loire et les petits villages montagnards...) ஆகியவற்றைக் கண்டு களிக்கலாம்நினைவுச் சின்னங்கள் மட்டும் 116 உள்ளன ; பிரான்சின் புகழ் பெற்ற நிலப் பகுதிகள் எண்ணிக்கை 150! குட்டி குட்டி போன்சாய் மரங்கள் மட்டும் 30 000 உள்ளனவாம்! மூலங்களின்  சின்னஞ் சிறு வடிவங்கள் இவை என்று எண்ணிவிடாதீர்கள் - காட்டாக இங்குள்ள ஈபில் கோபுரத்தின் குறு வடிவம் 33 அடிகளாகும்.ஏறக்குறைய 3 மாடிக் கட்டடத்தின் உயரம்!




அவை மட்டுமா? -


சுண்டெலிகளாய்ப் பிரான்சு நெடுக குறுக்கும் நெடுக்கும் ஓடும் TGV, Corail, Intercité...மாதிரிகளின்  குட்டி குட்டி ரயில்கள் நாலா  புறமும்
ஓடிக்கொண்டே இருக்கும்பிரான்சு நாட்டின் மேற்குப் பக்கம்  அட்லாண்டிக் பெருங் கடலிலும் மத்திய தரைக் கடல் பகுதியிலும் பயணம் செய்யும் கப்பல்கள் போலவே அசலான குட்டிக் கப்பல்கள் இங்கும் உண்டு .
இவை அனைத்தும் மூலத்தின் அச்சு அசல் நகலாக,   ஒரு சிறிதும் வேறுபடாமல், 30:1 விகிதத்தில் வடிவமைக்கப்பட்டுத் திகழுகின்றன. பெல்ஜியம் தலை நகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் மினி ஐரோப்பா பார்க் உள்ளது ; ஆலந்து நாட்டில் உள்ள மிடுரோடம் பார்க்கும் இது போன்றதே! ஆனால் இவை யாவற்றையும் விடப்  பெரியது இந்த France miniature தான்!

சரி இங்கே போவது எப்படி?
Gare Montpanrnasse அல்லது La  Défense நிலையத்தில் இருந்து ரயில் பிடிக்க வேண்டும். La Verrière என்ற நிலையத்தில் இறங்கி 411 எண்ணுள்ள பேருந்தைப் பிடித்துப்  France Miniature என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஏறக்குறைய அரை  மையில் தொலைவு நடக்க வேண்டி இருக்கும்.சொந்த வண்டியில் செல்வது சாலச் சிறந்தது.

கட்டணம் பெரியவர்களுக்கு 18.50 யூரோக்கள் ; 4 முதல் 14 வயதுள்ள சிறுவர்களுக்கு 14.50 யூரோக்கள். பெப்ருவரித்  திங்களில் 23 முதல் 28 தேதிகள், மார்ஸ்  மாதம் எல்லாச் சனி, ஞாயிறுகளில் அவரில் மாதம் எல்லாச் சனி, ஞாயிறுகளில், 20 முதல் 30 தேதிகளில் இந்த  France miniature thème parc  திறந்திருக்கும். அதன் பின் மே  மாதம் முதல் ஊத்(august)   மாதம் 30 ஆம் நாள் வரைக்கும் இங்கே செல்லலாம். செப்தம்பர் மாதம் எல்லாப் புதன் வியாழன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இது திறந்திருக்கும். ஒக்தோபர் மாதம் 2, 5, 9,12,13, 16 தேதிகள் நீங்கலாக மற்ற நாள்களில் திறந்திருக்கும். இது 2015 ஆம் ஆண்டு நோவோம்பர் 2 ஆம் நாள் முதல் 
2016 -ஆம் ஆண்டு பெருவரி  22 ஆம் நாள் வரை மூடி வைக்கப்படும். பார்வை நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை. கடைசியாக உள்நுழையும் நேரம் மாலை 05.00 மணி. நுழைவுச் சீட்டை இணையதளம் வழியாக வாங்குபவர்களுக்கு/ இட ஒதுக்கீடு செய்பவர்களுக்குச சிறப்புச் சலுகைகள்  பல உண்டு. விவரங்கள்  காண  இங்கே அழுத்துக :http://www.franceminiature.fr/tarifs-en-ligne
வழி காட்டிவிட்டேன் ; சென்று பார்த்துப் பிரான்சை ஒருநாளில் சுற்றிப் பார்த்து மகிழ்வது இனி உங்கள் பொறுப்பு!
- பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire