பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 31 mars 2015

காசநோய் விழிப்புணர்வு தினம்


இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது  TUBERCULOSIS (டியூபர்க்குலோசிசு) என்பதன் சுருக்கமாகும். முற்காலத்தில் இந்த நோயானது  சயரோகம், ‘உருக்கி நோய்' எனவும் அழைக்கப்பட்டது. இரத்த இருமல், காய்ச்சல், வெளிறிய உடல், எலும்புக் கூடு போன்ற உடல் தோற்றம் போன்ற அறிகுறிகளால்   இப்பெயரிட்டு அழைத்தனர்.
மனித வரலாற்றுக்கு முன்னைய காலத்தில் (கி.மு. 7000 ஆண்டு) வாழ்ந்த உயிரினங்களின் என்பு எச்சங்களில் TB இருந்தது கண்டறியப்பட்டுள்ளது]. அத்துடன் கி.மு. 3000-2400 ஆண்டுகளில் இருந்த பழம் உடலங்களின் தண்டுவடத்தில்  இன்னுண்ணுயிர்களின்  அழிவுகள் காணப்பட்டன. எகிப்திய மம்மிகளிலும் இக்கிருமி காணப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் காசநோய்க்கிருமிகள் உலக காலநிலை மாற்றங்களினால் அழிவுறாது தப்பி உயிர்வாழும் தன்மை உடையவை என்பது தெரிகிறது.

டாக்டர்  ரொபட் கொவ் காசநோய் கிருமியை(Mycobacterium tuberculosis) 1884 -ஆம் ஆண்டு மார்ச் 24 -ஆம் தேதி கண்டறிந்தார். இதை நினைவு கூரும் வண்ணம் மார்ச் மாதம்  24 -ஆம் நாள் உலக காசநோய் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது பாக்டீரியாவால் பரவக்கூடிய மிகப்பெரிய உயிர்கொல்லி நோய்.இந்நோய்க்கெதிராக உலகம் பல நூற்றாண்டுக் காலமாகப் போராடிக்கொண்டே வருகின்றது. வயது வரம்பின்றி ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அனைவரையும் இந்நோய் பாதிக்கும். இரண்டு வாரத்திற்கு மேல் சளி இருமல், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், இருமும் போது சளியுடன் ரத்தம் கலந்து வருதல் - காசநோயின்  அறிகுறியாகும். அளவுக்கு அதிகமான சோர்வை நீங்கள் உணர்ந்தால், அதுவும் காசநோயின் அறிகுறியாகும்.
இவர்கள்  மருத்துவமனையை அணுகிப் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோய் உண்டாகும்  சந்தர்ப்பம் யாருக்கும் வாழ்க்கைக் காலத்தின் எந்நிலையிலும் ஏற்படலாம். இந்நோய் இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை உடையது. காசநோய்க்கிருமி தொற்றுக்குள்ளான அனைவருக்குமே காசநோய் ஏற்படுவதில்லை. ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சந்தர்ப்பத்திலேயே அவருக்கு காசநோய் ஏற்படுகிறது.எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நோயெதிர்ப்பு சக்தி முற்றிலும் குறைந்திருப்பதால், காசநோய் வரும் வாய்ப்பு அதிகம்.காசநோயானது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடிய தொற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது.

காசநோய் பொதுவாக மூச்சு தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோய் உண்டாக்கினாலும், இவை நரம்பு, நிணநீர், இரைப்பை குடல் தொகுதிகள், எலும்புகள், மூட்டுகள், குருதி சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்கக்கூடியது.முடி,நகம் தவிர இந்நோய் உடலின் எந்த உறுப்பையும் தாக்கும்.

இந்தியா,  போன்ற சத்துக்குறைவால் வாடும் நாடுகளிலும் ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளிலும் இந்நோய் உருவாகும் வாய்ப்பு அதிகம். மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள், இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.

தடுப்பூசி:

1921 ஆம் ஆண்டில் பாஸ்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த பாசில்லசு கால்மெட், அவரது உதவியாளர் குவெரின் ஆகிய இருவரும் தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். இவர்களின் பெயரிலேயே - Bacillus Calmette-Guerin (BCG) என அழைக்கப்படுகிறது.. இது குழந்தைகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் மருந்து.

குழந்தை பிறந்ததும் போடப்படும் முதல் தடுப்பூசி, பி.சி.ஜி.குழந்தை பிறந்தவுடன் 0.1 மி.லி. அல்லது 0.05 மி.லி. அளவில் இடது புஜத்தில் தோலுக்குள்  போடப்பட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் இது போடப்படவில்லை என்றால், அடுத்த ஒன்றரை மாதத்தில் போட்டுக்கொள்ளலாம்; அப்போதும் போடப்படவில்லை எனில், 5 வயதுக்குள் போட்டுக்கொள்ளலாம்.தடுப்பூசி போடப்பட்ட இடத்தை இரண்டு நாட்களுக்குத் தேய்க்கக் கூடாது. குழந்தையைக் குளிப்பாட்டக் கூடாது. அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.பிசிஜி போடப்பட்ட புஜத்தில் ஆறு  வாரங்கள் கழித்து, சிறு கொப்புளம் ஏற்படும். அது பெரிதாகி நீர்க்கொப்புளம் ஆகி, சில நாட்களில் சீழ்க்கொப்புளமாகும். பிறகு, அது உடைந்து புண்ணாகும். 12 வாரங்களுக்குள் அது தானாகவே சரியாகி, அந்த இடத்தில் நிரந்தரத் தழும்பு உருவாகும். இந்தக் கொப்புளத்திலும் தழும்பிலும் எந்த மருந்தையும் தடவக் கூடாது. இந்தத் தழும்பு, தடுப்பூசி நன்றாகச் செயல்படுகிறது என்று அறிவிக்கும் அறிகுறி. இவ்வாறு தழும்பு ஏற்படாதவர்கள், 5 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ளலாம்.

ஐரோப்பாவிற்கு வெளியே காசநோய்த் தடுப்பூசி  இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளில்தான் பயன்பாட்டுக்கு வந்தது.

எர்மன் பிரேமர் (Hermann Brehmer) என்னும் மருத்துவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஓய்வு  எடுத்துக்கொள்ள இமாலயம் சென்றிருந்தார். இங்கிருந்த தூய காற்று,நல்ல தட்பநிலை இவற்றால் இவர் விரைவில் குணம் பெற்றார்.எனவே 1854 -ஆம் ஆண்டு சிறு சிறு குழுக்களாக தங்கும் வசதிக்கொண்ட குடில்களை மலை பிரதேசமான சோக்கோலோவ்சுக்கோ (Sokołowsko) என்னுமிடத்தில் உருவாக்கினார்.இதுதான் இந்நோய்க்கான முதல் சிகிச்சை நிலையம் ஆகும். இத்தகைய இடங்கள் sanatorium என்று அழைக்கப்பட்டன. சென்னைக்கு அருகில் தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய இரு ஊர்களுக்கும் இடையில் உள்ள் சனட்டொரியம் இன்றும் காச நோயாளிகளுக்கு  சிகிச்சை அளித்து வருகிறது.

 "காசநோயாளர்களை  அடையாளங் காண்போம்- சிகிச்சையளிப்போம்- அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம்” என்பது  2015 ஆம் ஆண்டு காச நோய் விழிப்புணர்வு நாளின் கரு பொருளாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire