பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 30 avril 2015

இளங்கோவடிகள் தீட்டும் எழிலோவியங்கள்

(பிரஞ்சு-இந்தியக் கலை-இலக்கியப் பண்பாட்டுக் கழகம்
அத்திஸ்-மோன்ஸ் நகரில் 25.04.2015 அன்று நடத்திய
 'சிலப்பதிகார விழாவில்' ஆற்றிய உரையின் சுருக்கம். )

ஓவியமா? காவியமா?(காப்பியமா?)
இதில் எதைப்பற்றிப்  பேசுவது! இதுதான் என்னுள் தோன்றிய கேள்வி .ஓவியத்துக்கும் கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இவை இரண்டுமே நுண்கலைகளாகும்.
தான் வரைந்த காட்சியைக்  காண்பவர்களின் கண்ணில் நிறுத்தும் திறம் படைத்ததால் கண்ணுள்  வினைஞர் என்று ஓவியனைக்  குறிப்பிடுகிறது இலக்கியம். கோடு , புள்ளி, வண்ணங்கள் கொண்டு அழகிய சித்திரத்தைத்  தூரிகை கொண்டு  ஓவியன் தீட்டுகிறான். கவிஞனோ  தேர்ந்தெடுத்த சொற்களை ஓசை நயம்படக்  கவிதையாக வடிக்கிறான்.உவமை அணிகள் கொண்டு அவற்றை மேலும் அழகுபடுத்துகிறான், மெருகேற்றுகிறான். தொல்காப்பியத்தின் உரை ஆசிரியராகிய பேராசிரியர் 'கவி, கண் காட்டும்' என்கிறார்.
"painting is mute poetry and poetry a speaking picture" என்பார்கள். அதாவது ஓவியம் பேசாத கவிதை, கவிதை பேசுகின்ற ஓவியம்.
சிலப்பதிகாரம் என்னும் எழுத்தோவியத்தில் இளங்கோவடிகள்  தீட்டியுள்ள    ஓவியங்களில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
(தொடர்ந்து படிக்க 'Plus d'infos' பட்டனை அழுத்துக!)உயிர் ஒவியங்கள் :

மற்றெந்தக்  காப்பியத்திலும் இல்லாத பெரும் சிறப்பு சிலப்பதிகாரத்துக்கு உண்டு. இயற்கையை  (திங்கள், ஞாயிறு, மழை) வாழ்த்திக் காப்பியத்தைத்  தொடங்குகிறார் இளங்கோவடிகள். கதையின் போக்கிற்கு ஏற்ப நாடு, மலை, ஆறு இவற்றைப்  பற்றிப்  பாடுகிறார்.
கோவலனுடன் பாணர்கள் வரும் காட்சியைத்  தென்றலுடன்  வரும் வண்டுகளுக்கு ஒப்பிட்டு அழகிய ஓவியம் தீட்டுகிறார் அடிகளார்.
கோவலன் கண்ணகியின் திருமணக்  காட்சிகள் அவர் தீட்டிய நீண்ட தொடர் ஓவியமாகும்.
திருமணம் முடிந்து தம்பதியர் நறுமணம்  பொருந்திய வாடாத மலர்ப் படுக்கையில்  இருந்த காட்சியைச் 

சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கை
கரும்பும் வள்ளியும் பொருந் தோளேழுதி
முதிர்கடல் ஞால முழுவதும் விளக்கும்
கதிரொருங் கிடந்த காட்சி போல" என்கிறார்.
ஞாயிறும் நிலவும் ஒருசேர இருந்து நாம் கண்டதுண்டா?இயற்கையில் இல்லாத காட்சியை இருப்பது போல இவர்களை ஒப்பிட்டுப்  பாடுகிறார்.
"மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும் பெறற் பாவாய் "
என்று கோவலன் கண்ணகியின் அழகை வருணிக்கிறான். என்ன அழகான இயல்பான வருணனை!
 இளங்கோவடிகள் மாதவியைப்   பல இடங்களில் "மாமலர் நெடுங்கண் மாதவி" என்று வருணிக்கிறார். யாழ் மீட்டும் அவள் விரல்களை "மரகத மணித்தாள் மணிக்காந்தள் மெல்விரல்கள் என்று உயிரோவியம் தீட்டுகிறார்
கற்பனை ஓவியம்:
மதுரை எத்தனைக்  காதம் தொலைவில் இருக்கிறது என்ற கோவலனின் கேள்விக்குப்  பாணர்களின் பதில் - பொதிகைத் தென்றல் போலாது பலவகை வாசனை சூழ்ந்த புகை படர்ந்து வருகிறது ; அதுவே மதுரைத் தென்றல் ;
பலவகை ஒலிகள் நிறைந்து ஒலிக்கின்றன ; எனவே மதுரை மூதூர் தொலைவில் இல்லை ;  வீதிகள் கடந்து சென்றால் நகர மதில் சுவரைக்  காணலாம் என்கின்றனர். 
நகர மதில் சுவரின் மீதுள்ள கொடிகள் காற்றில் அசைகின்றன : கோவலன் கண்ணகிக்கு நேர இருக்கும் துன்பத்தை உணர்ந்து இங்கே வராதீர்கள் என்று அவை கைகாட்டுவதைப் போல உள்ளது என்று அதன் மேல் தன்  கற்பனையை ஏற்றி அவலச் சுவை மிகுதிப்பட

"நெடுங்கொடி வாரலென்பனபோல் மறித்துக் கைகாட்ட"என்கிறார் அடிகளார்.

காற்றின் திசைக்கு ஏற்பக்  கொடிகள் அசைகின்றன. இந்த இயல்பான நிகழ்ச்சியின் மீது தன் கருத்தை ஏற்றிப் பாடிய கற்பனை ஓவியம் இது.
வைகை ஆற்றைப்  பெண்ணாக வருணிக்கிறார். பலவகை வாசனை பொருந்திய பூக்கள்தான் அவள் மேனியை மூடுகின்ற துகில்.ஆற்றின் உயர்ந்த கரைகள் அவளுடைய அல்குலாகிய இடை .மலர்கள் நிறைந்து பின்னிப்  படர்ந்த கொடிகள்  அவள் இடையை அலங்கரிக்கும் மேகலை. மணற்குன்று அவளது கொங்கை. முருக்க மலர்கள் சிவந்த வாய். முல்லை மலர்கள் பற்கள் , குறுக்கும் நெடுக்கும் ஓடும் கயல் மீன்கள் கண்கள், மலர் நீங்காத கருமணல் அவளது கூந்தல். - அவர் தீட்டிய இந்த எழிலோவியத்தில் அவல சுவையையும் வைத்து முடிக்கிறார்.  தையற்கு உறுவது தானறிந்தனள் போல் புண்ணிய நறுமலராடை போர்த்துக் கண்நிறை நெடுநீர் சுரந்தனள் அடக்கி" என்று.
அரசர்களின்  செங்கோல் ஆட்சிச்  சிறப்புப் பற்றி  இலக்கியங்கள் கூறுவது மரபு.இதை வழக்குரை காதையில் கண்ணகியின் கூற்றாகவும் கட்டுரைக் காதையில் மதுரையின் காவல் தெய்வமாகிய மதுராபதியின் கூற்றாகவும் காட்டுகிறார்.
முன்னதில் நீ யார் எனப்  பாண்டிய மன்னன் கண்ணகியிடம் கேட்க, தன்  நாட்டு மன்னனின் நீதிதவறாமை பற்றிப்  பேசும் கண்ணகி
 "வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுடத் தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்" என்கிறாள்.
பின்னதில்,  பாண்டிய மன்னனின் இறப்புக்குப்  பிறகு மதுராபதி தெய்வம் கண்ணகியிடம் கூறுகிறது :
"மறைநா  ஓசை யல்லாது யாவதும்
 மணிநா  வோசை கேட்டது மிலனே" என்று.
வேதங்களை ஓதுகின்ற ஓசையைத்  தவிர நீதிகேட்டு மக்கள் எழுப்பும் மணியோசையைப்  பாண்டிய நாடு அறிந்திலது என்பது பொருள்.சொற்களை அழகாக அமைத்து ஊழ்வினை உருத்து வந்ததால் பாண்டிய மன்னன் செங்கோல் வளைந்தது என்ற காப்பியத்தின்  கருத்தைச்  செம்மையாக எடுத்தியம்பும்  கருத்தோவியம் இது.
"காவியுகு நீரும் கையில் தனிச்சிலம்பும் ஆவிகுடிபோன அவ்வடிவம்"
"மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும்"
கண்ணகியை ஓவியமாகத்  தீட்டவும் உளி கொண்டு கல்லில் வடிக்கவும் துணை நின்றவை மேற்கூறிய பேசும் எழுத்தோவியங்கள் என்பதில் ஐயமில்லை.

"அறிவறை போகிய பொறியது நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே" - நறநற வென்று கண்ணகி பல்லைக  கடிப்பது போன்றதொரு ஓசையை நாம் உணரச்   செய்யும் வரிகள் இவை
கொற்றவை அல்லள்; கன்னியர்  எழுவருள் பிடாரியும் அல்லள் ; பத்திர காளியும் அல்லள்; கண்டார்க்கு அச்சத்தைத் தரும் காளியும் அல்லள்; தாருகனின் பரந்த மார்பைப் பிளந்த துர்க்கையும் அல்லள். கணவனை இழந்தவள். . . . .    வாயில் காவலனின் இந்த விளக்கம்(வழக்குரை காதை) 
- குற்றமற்ற தன் கணவனின் கொலைக்கு நீதி கேட்டு வந்துள்ள  நங்கையின் ஆவேசத்தையும் ஆத்திரத்தையும்  படம் பிடித்துக்  காட்டுகின்றன. மேலும் அவள் தெய்வத் தன்மை பெற்றவள் என்பதையும் உணர்த்திவிடுகின்றன

இவை போன்று எண்ணற்ற காட்சிகளை எழுத்தோவியங்களாகச்   சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள் தீட்டி உள்ளார்..படித்து இரசித்துப்  பயன்பெறுவோம்.


திருமதி. லூசியா லெபோ .


Aucun commentaire:

Enregistrer un commentaire