பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 23 novembre 2011

வேண்டியது வேண்டும் பொழுது…! (தொடர் கதை)    'ஆயா.. இந்த பொறிகடலை பாக்கெட் எவ்வுளோ..?”
    'பன்னன்டு ரூவா..” என்று சொல்லிவிட்டு அந்தக் கிழவி இவளை உற்றுப் பார்த்தாள்.
    'ஏ புள்ள.. நீ மீன்கட அந்தோணி பொண்டாட்டி சகாயந்தானே..?”
    கேள்வியைக் கேட்டதும் சகாயம் நிமிர்ந்து  அந்தக் கிழவியைப் பார்த்தாள்.
    வேளாங்கன்னித் தெருவில் கிழங்கு மல்லாட்டை சோளம் என நேரத்திற்கு தகுந்தார்  போல் வேகவைத்ததைக் கூடையில் விற்கும் செல்லாயிக் கிழவிதான் அவள்! இப்பொழுது கோவில் தெருவில் கடைவைத்து பொறிகடலை பேரீச்சம்பழம் என பாக்கெட் போட்டு விற்கிறாள்.
    சுனாமி பலபேரின் உயிரையும் உடமையையும் கொண்டு சென்றாலும் சில பேரைச் செல்வந்தராகவும் ஆக்கிவிட்டுத் தான் சென்றிருக்கிறது. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அன்றாடம்  போராடும் கிழவி இன்று கடை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிறாள்! காது மூக்கு கழுத்தில் தங்கம் பளபளத்தது.
    ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெற முடியுமாம்! இந்தக்கிழவி எதைஎதை எல்லாம் இழந்த பிறகு இவைகளைப் பெற்றாளோ!!
    'ஏண்டி .. கேக்குறேன் இல்ல.. சகாயந்தானே? ஆமா.. ஒம்புருஸன் சுனாமியில செத்துப்போயி நாலு அஞ்சி வருஸமாவுது. நீ புள்ளதாச்சியா இருக்க? வேற கண்ணாலம் கட்டிக்கிட்டியா..?”
    கிழவியின் குரல் ஆறுதலாக ஒலித்தாலும் கண்கள் சகாயத்தின் வெற்றுக் கழுத்தை யோசனையுடன் பார்த்தப்படி  இருந்தது.
    சகாயம் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கையில் இருந்தச் சில்லரையை எண்ணிப் பலகையின் மேல் வைத்துவிட்டு ஒரு பாக்கெட் பொறியை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
    செல்லாயிக் கிழவி குழப்பத்துடன் கேள்வியாக அவள் போவதையே பார்த்தபடி  நின்றாள்.


    கோவில் தெரு! புதியதாக முளைத்தக் கடைகளில் உள்ளவர்களுக்குத்  தன்னை அடையாளம் தெரியாது என்றாலும் செல்லாயிக் கிழவிப்போல் சுனாமியில் தப்பிப் பிழைத்தவர்கள்  கண்களில் விழுந்துவிடக் கூடாது என்று முந்தானையை முக்காடாக இட்டுக்கொண்டு நடந்தாள்.!
    அந்தத் தெரு முழுவதும் அவள் பழகியத் தெரு!  அவள் கணவன் அந்தோணி வியாபாரம் செய்தத்தெரு! அந்தத் தெருவில் உள்ள ஓட்டல்கள் மீன் கடைகளுக்கு அவள் கணவன் அந்தோணி தான் மீன் சப்ளை செய்வது வழக்கம். அவனைத் தெரியாதவர்கள்  வேளாங்கன்னி நகரில் இல்லை என்றே சொல்லலாம்! அந்த அளவுக்கு அவன் அங்கு பிரபலமானவன்.
    சகாயத்திற்கு  அந்தோணியைக் கட்டிக்கொண்ட போது பெருமிதமாகத்தான் இருந்தது. அவனும் நல்லவன் தான். ஆனால் ஒன்றே ஒன்று…
   ஆசையாகக் கட்டிவந்தவள் ஐந்து வருடம் ஆகியும் மலடியாகவே இருக்கிறாளே… ஒரு பிள்ளையைப் பெத்துக் கொடுக்க வக்கில்லாமல் இருக்கிறாளே…
   அதனால் அவன் ஆண்மைக்கு அல்லவா இழுக்கு!! இது இவளுக்குத் தெரியவில்லையே என்று மனத்தில் இருந்தக் கோபத்தைக் குடித்துவிட்டு வந்து அவளை அடிப்பதிலும் உதைப்பதிலும் காட்டுவான். கோழை அவன்! குடிக்காமல் அவளை அடித்ததில்லை.
   ஒருமுறை அல்ல. இருமுறை அல்ல. எப்பொழுதெல்லாம் குடிக்கின்றானோ… அப்பொழுதெல்லாம் அவன் ஆண்மையை நிருபிக்க ஒரு வாரிசு இல்லையே என்று இவளை வதைப்பான்.
   மருத்துவரிடம் போனாள். அவர்  சோதித்து..
   ‘அம்மா உனக்கு எந்த பிரட்சனையும் இல்லை. உனக்குக் குழந்தையைப் பெற்றுக்கொள்ள எல்லா தகுதியும் இருக்கிறது. வேண்டுமானால் உன் கணவரை நல்ல மருத்துவரிடம் போய் பார்க்கச்  சொல்லு.’ என்று சொல்லிவிட்டார;.
   இதை எப்படி கணவனிடம் சொல்வது? சான் பிள்ளையென்றாலும் ஆண்பிள்ளை நான் என்று மீசையை முறுக்கும் கணவனிடம் ‘உனக்கு ஆண்மை இருக்கிறதா என்று ஒரு நல்ல மருத்துவரிடம் சோதிக்க சொன்னார் ’ என்பதை எப்படி சொல்ல முடியும்?
   இருந்தாலும் இதை எவ்வளவு நாள் தான் மூடி மறைக்க முடியும்?
   நீறு பூத்த  நெருப்பாயிற்றே! சற்று ஊதினாலும் பற்றிக் கொள்ளுமே..!
   ஒருநாள் அவன் குடித்துவிட்டு இவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து நெற்றியைச் சுவரில் மோத வலி பொருக்க முடியாமல் கத்தினாள்…. ‘ஒனக்குத்தான் கொழந்த பெத்துக்க தகுதி இல்லைன்னு டாக்டர் சொன்னார் … எனக்கொன்னும் பிரட்சனை இல்லையாம்… ஒம்மேல தப்பவச்சிக்கினு என்னைப் போட்டு அடிக்கிறியே….’ முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
   உண்மை எப்பொழுதும் சுடும் தான்! ஆனால் இந்த உண்மை  எறிகிறத் தீயில் எண்ணை வார்த்ததுப்  போலாக்கி விட்டது அவனுக்கு. கொதித்தெழுந்தான்!!

                                    (தொடரும்)

அருணா செல்வம்