பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 19 décembre 2011

எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம்


சாகித்ய அகாடமி:
 இந்திய அரசால் மார்ச் 12 1954 இல் துவக்கப்பட்ட அமைப்பு. இந்திய இலக்கியவாதிகளுக்கு ஊக்கம் ஊட்டவும் அவர்களின் ஆக்கம் பெருக்கவும் இந்த அமைப்பு  செயல்பட்டு வருகிறது. இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும் அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஓர் ஊடகமாகத்  திகழ்கிறது இது. இலக்கிய  கூட்டங்கள்,  பயிற்சி முகாம்கள் நடத்துவது , இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைப  பிற மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவது,தற்கால மாறுதல்களையும் புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது போன்ற பல அரிய சேவைகளை இவ்வமைப்பு ஆற்றிவருகிறது. சிறந்த  இலக்கியப் படைப்பாளிகளுக்குத் தேசிய அளவிலும் மாநில அளவிலும்  விருது வழங்கிப் பெருமை படுத்துகிறது.  இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கிய வரலாறு, இலக்கிய விமரிசனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நாஞ்சில் நாடன் அவர்களின் 'சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதை தொகுப்பு இவ்விருதுக்காகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது .
நாஞ்சில் நாடன், நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். இவர் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காகப் புகழ்பெற்றவர். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார எழுத்துநடை . 6 புதினங்கள், 9 சிறுகதை தொகுப்புகள், 2 கவிதைகள், 6 கட்டுரைகள் இலக்கிய உலகிற்குக் கொடுத்துள்ளார்.  தலைகீழ்  விகிதங்கள் என்ற இவரது நாவலை, இயக்குனர் தங்கர்பச்சன் சொல்லமறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.  கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு  கொண்டவர்.  இவரைப்பற்றிய வலைத்தளத்தில் உள்ள முகப்புக் குறிப்பு இவ்வாறு சொல்கிறது:
'எழுத்து என்பது எனக்குத் தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப்    புரிந்துக்கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி! எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம்; மாறுபடலாம் ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு"  

 பால  சாகித்ய புரஸ்கார் என அழைக்கப்படும் குழந்தை இலக்கியத்துக்கான விருது  இந்த ஆண்டு முதன் முறையாக அறிவிக்கப்பட்டது.    தமிழ் மொழிக்காக குழந்தைகள் எழுத்தாளர் கமலவேலன் விருதைப் பெற்றார். 'அந்தோணியின் ஆட்டுக்குட்டி" என்னும் குழந்தைகளுக்கான இவருடைய நாவலுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.இந்த விருதினைப் பெரும் முதல் தமிழ் படைப்பாளி என்னும் சிறப்பைப் பெறுகிறார் கமலவேலன் அவர்கள்.  
இவருடைய எழுத்துப்பணியில் 50 ஆம் ஆண்டினைத் துவங்கும்போது இந்த அங்கிகாரம் கிடைத்து இருக்கிறது.விருது பெற்ற 'அந்தோணியின் ஆட்டுக்குட்டி" என்ற புதினம் குழந்தைகளுக்குச் சாலைப் பாதுகாப்பு பற்றி மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் நல்ல கதை வழியாகச் சொல்கிறது.
நவம்பர் 15 2010 தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில், குழந்தைகளுக்காக எழுத வேண்டும் என்று தீர்மானித்த பிறகு வேறு எந்த வகையான இலக்கியத்தையும் தான் படிக்க முயன்றது இல்லை என்றும் வேறு எந்த வகையான படிப்பின் மீதும் ஆர்வம் காட்டவில்லை என்றும் தன்னுடைய  ஏற்புரையில் குறிப்பிட்டார்.குழந்தைகளுக்காகவே தன்னை அர்பணித்துள்ள  அவரது நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது இது.
தன்னம்பிக்கை தந்த பரிசு, நம்ப முடியாத நல்ல கதைகள், மரியாதை ராமன் கதைகள், கம்ப்யூட்டரை வென்ற காரிகை மற்றும் குழந்தை நாடகங்கள், பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் குழந்தைகளுக்காக எழுதி இருக்கிறார்.  

குழந்தை  இலக்கிய  விருதுக்கு  (2010), புதுச்சேரி எழுத்தாளர் லெனின் தங்கப்பா அவர்களின் 'சோளக்கொல்லை பொம்மை" என்ற நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது . 

"உண்மையான தகுதி மதிக்கப்பட வேண்டும். குழந்தைகளோடு பழகி, இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததன் வெளிப்பாடாகச் சோளக்கொல்லை பொம்மை நூலை எழுதினேன்.தகுதியான நூலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
40 -உக்கும் மேற்பட்ட  நூல்களை  இவர்  எழுதியுள்ளார் . சிறந்த மொழிப்பெயர்ப்பாளரான தங்கப்பா தமிழக அரசின் பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

தமிழக  அரசும் புதுவை அரசும் தமிழ் எழுத்தாளர்களுக்கு கலைமணி, கலைமாமணி போன்ற விருதுகளையும் வழங்கிக் கவுரவிக்கிறது.

தொகுப்பு லூசியா லெபோ