பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 30 mai 2012

கவிதைக் கடல் அமுதம்

                                                Dark Sea wallpaper


கவிதை என்பது உள்ளத்திலிருந்து மடை திறந்தாற்போல் வார்த்தைக் கோர்வையில் அழகு நடையில் வந்து விழும் ஓர் !அற்புதம்! உரை நடைக்கு இல்லாத கவர்ச்சி கவிதைக்கு உண்டு. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதும், மொழியின் அழகில் மயங்க வைப்பதும் கவிதை.

இது எழுதுபவர் எதைப் பற்றி, எந்த நோக்கத்தில்,எங்கே, எப்போது எழுதுகிறார் என்பதையும், யார் யாருக்காக எழுதுகிறார் என்பதையும் பொறுத்து வெற்றி அடையும். 

கவிதை எந்த  உருவத்தில் இருந்தாலும், அதன் உள்ளடக்கம்  உணர்த்தப்படுகிற முறையில் வெற்றிக் கனி பறிக்கும்.அறிவால் ஆய்ந்து அறிவதை விட ரசித்து மகிழும் பாங்குதான் இதில் முக்கியம். இதில் மொழியறிவு இன்றியமையாதது. கவிதையின் முழு சிறப்பையும் ஒரு சொல்லே அடக்கி இருப்பது கூட உண்டு.

இது காலங்காலமாய் இருந்து வரும் உணர்ச்சிப் பரிமாறல். கல்லிலும், தோலிலும் ஆதி மனிதர்கள் வெளியிட்டச் செய்திகள், பின்னர் ஓலைச் சுவடிகளில் மக்களை அடைந்தன. சகுந்தலை தாமரை இலையிலும், மாதவி தாழை இதழிலும் எழுதியதாக அறிகிறோம்.

கவிதையின் பொருள் அதற்கு உயிரளிக்காது. மாறாக  சொல்லப்படும் முறையே மதிப்பை அளிக்கும்.அதனால்தான் பாடும் பொருள் ஒன்றாகவே இருந்தாலும் பல விதங்களில் பாடப்பட்ட எல்லா பாடல்களுமே சிறப்பைப் பெறுகின்றன.இசை இதற்கு மெருகும், உயிரும் ஊட்டும்.

சங்க காலத்தில் காதலும், வீரமும் பாடுபொருளாக இருந்தது மாறி பிறகு  "வீடு" முதன்மை ஆனது. தமிழன் காமத்திலும் அதன் சார்பான  தரக்குறைவிலும்  ஈடுபட்டதன் விளைவாய் சான்றோர் இத்தகு மாற்றத்தை ஏற்படுத்தினர் என்போரும் உண்டு. மதமும், தத்துவ விசாரணையும், மோட்சமடைய  இவ்வுலக இன்பத்தைத்  துறக்க வேண்டுமென்ற  அறிவுரையும் வளர, பெண்மை ஓரங்கட்டப்பட்டு  'பெண் எனும் பேய்' என்ற அளவில்  பெண்கள் தாழ்த்தப்பட்டனர்.

நடுவே பல காப்பியங்கள் இயற்றப்பட்டன. தமிழ் நாவலும், சிறு கதைகளும்  ஆங்கில பாணியில் பெருகியது போல சமஸ்கிருதத்தைத் தழுவியே இவை பெரும்பாலும் உருவாகின.

 இடையே நாடு சுதந்திரம் அடைய வேண்டிய கட்டாயம் கவிஞர்களை தேசிய பாடல்கள் பக்கம் திருப்பியது.மெல்ல புரட்சிக் கருத்துக்களும், பெண் விடுதலையும்  பேசப்பட்டது.நாட்டுப்பற்று , மொழிப் பற்று  வலியுறுத்தப்பட்டது . பின்னர் மக்களின் அன்றாட பிரச்சனைகளும், தேவைகளும், ஆசைகளும், ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் கூட கவிதையின்  பொருளாயின .

நாட்டுப்புற க்  கவிதைகள் தனியே பொது மக்களால்  வாய்வழி  வளர்ந்து வந்தன ... தற்போது ஒருசிலர் அவற்றுக்கும்  எழுத் து வடிவம் அளித்து  நிலைப்படுத்துகிறார்கள். 

இதேபோலபாடும்வகையும்மாறுதலுக்குஉள்ளானது.'மாத்திரை,அசை,சீர்,
தளை  ,அடி' என்றிருந்தது மாறி வசன கவிதைகளும், புதுக் கவிதை வடிவமும் தோன்றின. சொல் அலங்காரத்தால் முன்பு வசனம் கூட 'கவிதை' போன்று இருந்தது. தற்போது சொல் சிக்கனத்தால் வாசகன் தன்  முயற்சியால் யோசித்து சுவைக்க இடம் தரப்படுகிறது. இது சில வேளைகளில் வாசகன் வரம்புக்கு உட்படாமலே போகவும் வாய்ப்பளித்து விடுகிறது.

கற்பனைப்பாணி பெரும்பாலும் மறைந்து விட்டது.உவமைகளின்றி நேரிடையாக  செய்திகள் சொல்லப்படுகின்றன.நகைச் சுவையாகவோ அன்றி வலி யைப் பிரதிபலிப்பதாகவோ உணர்ச்சிகள் வெளிப்படுத்தப் படுகின்றன.

இன்னும் வருங்காலத்தில், கவிதை நயம், சொல் மயக்கம் , உவமை  அழகு  இவை முற்றிலும் மறைந்து போகலாம். இந்த அவசர யுகத்தில்  அமைதியான  மன நிலையில்  கவிதைகளை ரசிக்க  ஆளின்றி போகலாம். ஆனால்  சுற்றுப் புறச் சூழல் மாசுறுவதால் என்ன கேடு விளையுமோ அதே அளவு  இழப்பு கவிதைகள் மறைவதால் மனித குலத்துக்கு நிச்சயம் உண்டு !

திருமதி சிமோன் 




1 commentaire:

  1. வணக்கம்,
    மனமார்ந்த வாழ்த்துக்கள், கர்த்தர் உங்களுக்கு நீண்ட வாழ்வினை கொடுத்து, உங்கள் தமிழ் பணி தொடர வேண்டுகிறேன்......
    அன்புடன்,
    மனிதன்

    RépondreSupprimer