பிரான்ஸ் மேற்கு ஐரோப்பாவில் தனது பெரும் நிலப்பரப்பையும் வடக்கு அமெரிக்கா,கரிபியா,தென் அமெரிக்கா, தெற்கு இந்து சமுத்திரம், பசிபிக் சமுத்திரம், அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும் கொண்ட நாடாகும்.இதன் நிலப்பரப்பானது தெற்கே மத்தியதரைக் கடல் தொடங்கி வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வரையும் விரிந்து உள்ளது.பெல்ஜியம், ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,லுக்சாம்பூர், இத்தாலி, மொனாக்கோ, ஆண்டோர், ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகளாகும் .
பிரஞ்சுக் குடியரசு மக்களாட்சி முறையைக் கொண்ட, சமூக நலனை கருத்தில் கொண்ட மதச் சார்பற்ற குடியரசு ஆகும். பாரிஸ் இதன் தலைநகரம். தேசிய மொழி பிரெஞ்சு. நீலம், வெள்ளை, சிகப்பு - மூவர்ணக் கொடியே நாட்டின் கொடியாகும்.. தேசிய கீதம் மர்ஸேயஸ். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - பிரஞ்சுக் குடியரசின் பொன்மொழியாகும். மதச் சார்பின்மை தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளது.
மே 6, 2012 இல் நடந்த தேர்தலில் பிரான்சு குடியரசின் அதிபராகப் பிரான்சுவா ஜெரார் ஜியார்ஜ் ஒலாந்து (François Gérard Georges Nicolas Hollande) தேர்ந்தெடுக்கப்பட்டார். சோசலிசக் கட்சியை சேர்ந்தவர் இவர்.
நிர்வாகக் காரணங்களுக்காக 27 பகுதிகளாகப் பிரான்ஸ் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 21 பகுதிகள் பிரான்ஸ் நாட்டுக்கு உள்ளே இருக்கின்றன ; ஒரு பகுதி மட்டும் பிரான்ஸ் நாட்டை ஒட்டி அமைந்துள்ள கடல் புரத்தின் கோர்சிகா நிலப்பரப்பில் உள்ளது. ஏனைய ஐந்தும் உலகின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன(பிரஞ்சு கயானா, குவடலூப், மர்த்தினிக், மயோத்,ரெயுனியன் ). இந்தப் பகுதிகள் யாவும் 101 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அகர வரிசைப்படி இவற்றுக்கு எண்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த எண்கள் அஞ்சல்க் குறிப்பு எண்களில் பயன்படுகின்றன. வாகனங்களின் பதிவு எண்களிலும் இந்த மாவட்ட எண்கள் இருக்கும்.
பரப்பளவு:
674,843 சதுர கிலோ மீட்டர்கள்மக்கள் தொகை:65,350,000 (2012 மதிப்பீடு)
நாணயம்:
யூரோ
இணையத் தளக் குறியீடு: .fr
இந்நாட்டின் பொருளாதாரம் ஐரோப்பாவில் 2 -ஆவது இடத்திலும் உலகின் பொருளாதரத்தில் 5 -ஆவது இடத்திலும் உள்ளது.
பிரான்சில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வாக உள்ளது. மருத்துவ வசதிகளும் சிறப்பாக உள்ளன.
உலகின் 13 -ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு பிரான்ஸ். அணு ஆயுதம் வைத்திருக்கும் எட்டு வல்லரசுகளில் இதுவும் ஒன்றாகும்.
பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படும் முக்கிய தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுக்கும் வல்லமை கொண்ட ஐந்து நாடுகளில் பிரான்ஸ் நாடும் ஒன்றாகும். ஏனைய நான்கு நாடுகளும் முறையே அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா ஆகும். பிரான்சின் கல்வி முறை உலகளவில் பெயர் பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரம் வெளிநாட்டு மாணவர்கள் இங்குக் கல்வி பயிலுகிறார்கள். கல்விக்குப் பிரான்சில் நிதியுதவிகள் பிரெஞ்சு அரசால் தரப்படுகின்றன.
பிரான்சுதான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 75 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
காலனி ஆதிக்கத்தின் விளைவாகப் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த தமிழர்களும், மொரிஷியஸ் தமிழர்களும் பிரான்சில் குடியேறியவர்கள். இதுதவிர இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழரும் இங்கு உள்ளனர்.
வெள்ளையர், கறுப்பர்(பிரான்சின் பல காலனிகளை சேர்ந்தவர்கள்) , யூதர், இந்தியர்,வியட்நாமியர், பாகிஸ்தானியர், அல்ஜெரி நாட்டை சேர்ந்தவர் என பல இனத்தை சேர்ந்தவர்கள் இங்கு ஒன்று சேர்த்து வாழ்கிறார்கள். முதன் முதலாக பிரான்சுக்கு வருபவர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
பிரான்ஸ் பற்றிச் சொல்ல பல செய்திகள் உள்ளன. அவற்றை அவ்வப்பொழுது உங்களுடன் பகிர்ந்துக்கொள்வோம்.
லூசியா லெபோ
Aucun commentaire:
Enregistrer un commentaire