நெறி கெட்டுத் தறி
கெட்டுச் சென்று கொண்டிருந்த மனிதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வருவதற்காக நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட நெறிதான் மதம்.இரை தேடலும்
இறை தேடலும் மனிதனின் அன்றாடத் தேவைகளாகும் ஒன்று உடலுக்கு ; பிந்தியது
உள்ளத்துக்கு.எல்லா மதங்களிலும் மனித சமுதாயத்துக்கு நன்மை தரும்
கருத்துகள் உள்ளன.அவற்றைப் பின்பற்ற வேண்டுமே தவிர என் மதம்தான் சிறந்தது,
அதை மட்டுமே ஆதரிப்பேன் மற்ற மதங்களை வெறுப்பேன் என்று சொல்ல
கூடாது.ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் சுதந்திரத்துக்கு இடையூறு
ஏற்படுத்தாத வரைதான் அமைதியும் மானிடத்துவமும் காக்கப்பெறும்.
நதிகள் பலவாறாகத் தோன்றினாலும்
கடைசியில் கடலை அடைகிறது. அதே போல் நாம் எந்த மதத்தைப் பின்பற்றினாலும்
இறைவன் ஒருவனேயே அடைகிறோம் என்கிறார் விவேகானந்தர்.கரைகள் நதியை
வழிப்படுத்த. மதங்கள் மனிதனை நெறிபடுத்த! வெறிபடுத்த அல்ல.
அண்மைக்காலத்தில் உலகெங்கும் பரவலாக
மதத்தின் அடிப்படையில் வன்முறைகளும் மனித நேயமற்ற நிகழ்வுகளும்
நடைபெறுவதைக் காண்கிறோம்.மதம் என்னும் போதை அளவுக்கு அதிகமாகும் போது
மனிதன் மதம் பிடித்தவனாகிறான் ;
தன்னிலை இழக்கிறான் ; விலங்குகளைவிட மோசமான நிலையில் மனிதனை மனிதனே
அடித்துக்(அழித்துக்) கொல்லும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறான். "மதத்தின்
பேராலும் இனத்தின் பேராலும் இரத்தம் சிந்தப்படுவதை வன்மையாக
எதிர்க்கிறேன். மனித நேயமே என் மதம் " என்பது ஆல்பிரட் ஐன்ஸ்டின் கருத்து.
மத நல்லிணக்கம் உருவாகாதவரை உலகிற்கு விமோசனம் இல்லை.மதச் சகிப்புத் தன்மை
என்பது , பிற மதங்களின் மீது ஒருவருக்குள்ள மனவெறுப்பை நீக்குவதே. இதுவே
மத நல்லிணக்கத்தின் முதல் படியாகும்.இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு எல்லா
மனிதர்களுக்கும்; உள்ளது. இதைக் கட்டாயப்படுத்தி உருவாக்க முடியாது. அது,
மனித இதயங்களின் அன்பால் உருவாக்கப் படவேண்டியது.எந்தச் சமயத்தவராய்
இருந்தாலும் அன்பு, ஈகை, உண்மை, சகிப்புத்தன்மை உடையவராக இருத்தல் வேண்டும்.
மகாத்மா காந்தி மிகுந்த மதநம்பிக்கை
உடையவராக இருந்தாலும் மதப்பற்றுக்கும் மதச் சார்பின்மைக்கும் உள்ள
வேறுபாடுகளை நன்கு உணர்ந்தவர். மதவெறிக்கு எதிராகக் கடைசிவரை போராடியவர்.
"பேச்சு சுதந்திரம் மதவெறியை மக்களிடையே தூவுவதாக இருக்கக்கூடாது. மதவெறி,
இனவெறி, கெட்ட எண்ணம், மதங்கள் இனங்கள் இவற்றிற்கிடையே வெறுப்பைத்
தூண்டும் பத்திரிகைகளைத் தடைசெய்யும் உரிமை எனக்கிருந்தால் அதனை உடனே
செய்வேன்" என்கிறார் காந்தி.
சமூகத்தின் அமைதியை உறுதிப்படுத்தும் பல்சமய பன்மதப் புரிமாற்றங்களை
நிகழ்த்தலாம். உலகளாவிய பொதுத் தேவைக்குப் பல மதங்களும் ஒன்று கூடிக்
கூட்டுப் பிராத்தனைகளை நடத்தலாம். இளைய தலை முறைக்கு நாம் விட்டுச் செல்ல
வேண்டிய முக்கியமான உடைமை மதநல்லிணக்கம் என்பதை அவர்களுக்கு உணர்த்த
வேண்டும்.அரசியல், பொருளாதார இலாபம், பேர் புகழ் எதிர்பாராமல் மத
நல்லிணக்கத்தை மட்டுமே மக்களிடம் எடுத்துச் செல்லும் செயல்கள் வரவேற்கத்
தக்கவை.இங்ஙனம் பல வழிகளில் செயல்பட்டு மதசார்பற்ற சமுதாயத்தை
உருவாக்குவோம்.
லூசியா லெபோ.
Aucun commentaire:
Enregistrer un commentaire