பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 24 février 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                          

அன்புடையீர்,

வணக்கம். 'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா' என்றான் பாரதி!பூவின் மணம் போல், தென்றலின் இதம் போல், நிலவின் குளுமை போல் வாழ்க்கையை ரசிக்க வைப்பவள் பெண். ஒரு கவிதையைப் போல நெஞ்சை வருடி இன்பமூட்டுபவள் .  ஓவியம் போல நடமாடி கருத்தை நிறைப்பவள். சிலையாக நின்று கண்ணைக் கவர்பவள். அவளை ரசிப்பதில் தவறேதும் இல்லை.  

ஆனால் இவற்றை விட அவள் உயிரும், உணர்வும் உடைய ஒருத்தி. அவள் விரும்பிய வண்ணம்  வாழ அவளுக்கு உரிமை உண்டு. அதிலும் மனமும், எண்ணங்களும், ஆசைகளும் கொண்ட அவளது உடல் அவளுக்கே சொந்தமானது.  அதை அவள் விரும்பி ஒருவனுக்கு அர்ப்பணிக்கும் போதுதான் அவன் வாழ்வும் பூரணமடைகிறது.வழங்குதலும், பெறுதலுமாக   இணைதல்  சிறக்கிறது. அதுவே இல்லறமாகி இன்பம் வளர்கிறது. உலகம் செழிக்கிறது. இயற்கை நிறைவடைகிறது.

மாறாக வலிந்து முகர நினைக்கும்போது அந்த மென்மலர் தன் அழகிய இதழ்களை உதிர்த்து விடுகிறது. மனக்கசந்த பின் அதில் மணமில்லை! அவள் உள்ளக் கதவுகள் மூடிக் கொண்டபின், அங்கு நடக்கும் நிகழ்வுக்கு பொருளில்லை; சிறப்பும் இல்லை. ஆழ்ந்து யோசித்தால் அதில் இன்பமுமில்லை! இதை ஆண்கள் உணர்ந்து விட்டால், கண நேர வடிகாலாக பெண்களைப்  பார்க்க மாட்டார்கள்.

இதில் இன்னொரு அபாயம் உள்ளது. நசுக்கப்படும் எந்த உயிருக்கும் இயல்பாகத் தோன்றும் எதிர்ப்புணர்ச்சி! தனிப்பட்ட ஒருத்தி வலுவின்றி, தோற்று, நலிந்து, அழிந்து விடலாம்.  ஆனால் அவளது அழிவு  நடுகின்ற  சோகம் ஆழமானது. அதன் விளைவாக வளர்கின்ற நியாயமான கோபமும், வன்மமும் பறந்து விரிந்தது. சாதாரணமாகவே பெண்மை சக்தி கொண்டது. உள்ள பலம் உடையது . அது புயலாகி விட்டால் அழிவு சமூகத்திற்குத்தான். காலங்காலமாய் அடங்கியிருந்த பெண்மை, இந்த நூற்றாண்டில்  தலை நிமிர்த்த ஆரம்பித்திருப்பது கண்கூடு. அதில் சற்றே தீவிரம் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.  தூண்டி விடுவதற்குப் பதிலாக அவர்களை அவர்களுக்கு உணர்த்தியும், உறவைச் சமப்படுத்த விட்டுக்கொடுத்து, மதித்து, போற்றவும் செய்தால், உலகு அமைதிப் பூங்காவாக விளங்கும். உறவும் மணம் பரப்பும்!

திருமதி சிமோன்


Aucun commentaire:

Enregistrer un commentaire