பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 12 mars 2011

இன்றைய அறிமுகம்



நெல்சன்  மண்டேலா



                       உலக  மக்களால் இன்றளவும்  பெரிதும்  மதிக்கப்படும்  தலைவர்களில் ஒருவரும்,  நிறவெறிக்கு  எதிராகப்  போராடி நீண்டகாலம்  கொடுஞ்சிறையில்  வாடிய  தென்  ஆப்பிரிக்க  முதல் குடியரசுத் தலைவருமான  நெல்சன் மண்டேலா  கறுப்பர் இன மக்களின் விடிவெள்ளி  ஆவார்.
                        மண்டேலா 18-7-1918  அன்று  தென் ஆப்பிரிக்காவில் குளு என்னும்  கிராமத்தில்  பிறந்தார் இவரது தந்தைக்கு நான்கு  மனைவிகள்  பதின்மூன்று  பிள்ளைகள். இந்தப்  பெரிய  குடும்பத்திலிருந்து  முதன்முதலில்  கல்விகற்கப்  பள்ளிக்குச் சென்ற ரோபிசலா மண்டேலா  வுக்கு  இவரது  ஆசிரியரால்  நெல்சன்  என்னும் பெயர்  சூட்டப்பட்டது.
                        இளமையில் கல்வியோடு  சண்டைக்கலையையும்  பயின்ற  மண்டேலா  தொடக்
கத்தில்  குத்துச்சண்டை  வீரராக மக்களால் அடையாளம்  காணப்பட்டார்; கல்வியறிவைப்  பெறுவதில்  பெரிதும்  நாட்டம் கொண்ட இவர் ஜோகன்ஸ்பர்க்கில்  சட்டக்கல்வியும், லண்டன்  மற்றும்  தென் ஆப்பிரிக்கா பல்கலைக்கழகங்களில்  மேற்கல்வியையும்  தொடர்ந்தார்.
                          1948  ஆம்  ஆண்டில் தென்னாப்பிரிக்காவின்  ஆட்சி  அதிகாரங்களைப்  பொறுப்  பேற்ற அரசு, வன்முறை  நடவடிக்கைகளைக்  கட்டவிழ்க்கத்  தொடங்கியது. இனவாதமும்,  அடக்குமுறையும்  அரசின்  ஆதரவுடன்  அரங்கேறுவதை  அறிந்த மண்டேலா  அரசின்  இன  வாத  கொள்கைகளுக்கு  எதிராக; மகாத்மா காந்தியின்  கொள்கைப்படி  அறவழிப்  போராட்  டங்களைத் தலைமையேற்று  நடத்தினார். இனவெறித் தாக்குதல்களுக்கு  ஆளாகிய கறுப்பின  மக்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்காகக்  குரல்  கொடுத்தார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக் கட்சியின்  தலைவராகப் பொறுப்பேற்று  இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். அதன்விளைவாக, 1956
 டிசம்பரில்  தேசத்துரோகக்  குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரது   150  தோழர்களும்  கைது செய்யப்பட்டு மிகக் கடுமையான  எச்சரிக்கைகளின்  பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
                           1958 ஆம் ஆண்டு மண்டேலா,வின்னி மடிகி லேனா என்பவரை  மணந்தார். வின்னி மண்டேலா, தலைவரின் கொள்கைகளுக்காகப்  போராடி வந்தார்.,ஆண்டாண்டு  காலமாகத்  தொடர்கின்ற  ஆட்சியாளர்களின்  அடக்கு முறைகளுக்கும்  வன்கொடுமை களுக்கும்  எதிரில் அறவழிப் போராட்டம் தோல்வியடைந்ததால், ஆயுதப் போராட்டமே  இறுதிவழி  என உணர்ந்த  மண்டேலா 1961  ஆம் ஆண்டு  ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின்  ஆயுதப்படைத் தலைவர் ஆனார்; வெளிநாட்டு நட்புச் சக்திகளிடமிருந்து பணம் மற்றும்  இராணுவ  உதவிகளைப் பெற்றுத் தென்னாப்பிரிக்க  அரசின் இராணுவத்தின் மீதும்  இராணுவத்  தளவாடக் கிடங்குகள் மீதும்  கொரில்லா போர்முறைத் தாக்குதல்களை  ஒருங்  கிணைந்து  நடத்தினார். 
                           இனவெறிக்கு எதிரான இவரது  போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை  மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க அரசும் இவர்மீது  பயங்கரவாத முத்திரை குத்தி  மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் நுழைவதற்குத்  தடை விதித்தது   2008 சூலைவரை   இத்தடை  நீடித்தது  5-8-1962  அன்று, மண்டேலா தென்னாப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டி போலிசாரால் கைதுசெய்யப்பட்டார். 12-6-1964  அன்று அவருக்கு  ஆயுள்தண்டனை  விதிக்கப்பட்டது. அப்போது அவர்வயது 46 தென்னாப்பிரிக்க அரசு பல  ஆண்டுகள்  அவரைத்  தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தது. மனைவியைச்  சந்திப்பதற்கும்  தடைவிதிக்கப்பட்டது. 
                           மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற  கோரிக்கை உலகம் முழுதும்
எழுந்தது. மண்டேலாவை  விடுதலை செய்யும்படி வற்புறுத்தி  மண்டேலாவின் மனைவி;  வின்னிமண்டேலா  தலைமையில் ஆர்ப்பாட்டங்களும்; ஊர்வலங்களும் தொடர்ந்து  நடந்து  வந்தன. தென்னாப்பிரிக்காவில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப்  புதிய அதிபராக டிகிளார்க்  பதவிக்கு  வந்தார்.  மண்டேலாவின்  விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது.  அதிபர் டிகிளார்க்  அறிவித்தவாறு  1990  ஆம் ஆண்டு பிப்பிரவரித்  திங்கள் 11 ஆம்  
நாள் மாலை நெல்சன் மண்டேலா27 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர்  விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர்வயது 71.

                          மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா  சார்பாக, பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலா  விடுதலையானதும்  பிரதமர் வி.பி. சிங் ,அவருக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில்,"உங்களது  சுதந்திரப்  போராட்டத்திற்கு  இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும்." என்று குறிப்பிட்டிருந்தார். உலக சமாதானத்துக்காக நெல்சன் மண்டேலா ஆற்றிய சேவைகளைப்  பாராட்டி, உலகின் பல நாடுகளும் பல்வேறு விருதுகளை வழங்கிக்   கௌரவித்தன. இந்திய அரசும்  1990 ஆம்  ஆண்டு  அவர் சிறையில் இருக்கும்போதே  "பாரத ரத்னா" என்னும் உயரிய  விருதினை வழங்கிச் சிறப்பித்தது. 1993 ஆம்  ஆண்டில் உலக சமாதானத்திற்கான "நோபல்
பரிசு" மண்டேலாவுக்கு  வழங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.
                            மண்டேலாவின் தியாகம் வீண்போகவில்லை. அமைதியான முறையில் புதிய தென் ஆப்பிரிக்கக் குடியசு மலர்ந்தது. 10-5-1994  அன்று நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக் காவின்  முதல் குடியரசுத் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப் பட்டார். தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களின் நலனுக்காகப் பாடுபட்டுக் குடியரசு ஆட்சியை மலரச் செய்த மாபெரும் தலைவர் திருமிகு. நெல்சன் மண்டேலாஅவர்கள்,தென்னாப்பிரிக்காவில்",ஊச்டன்தோட்டம்"
 இல்லத்தில் தனது முதுமைக்காலத்தில்  அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது  தியாகமும் புகழும் உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை!
                               
                                                                                                                             -  வே.தேவராசு