பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 31 mai 2014

விசித்திரம் ஆனால் உண்மை

ஆண் கடல் குதிரைகள் (sea horses) தாய்மை அடைதல்:

கடல் குதிரை என்பது ஒரு சிறியவகை மீன். இதன் தலை குதிரையின் தலையை ஒத்திருப்பதால்  இப்பெயர் உண்டாயிற்று. எல்லா விலங்கினங்களிலும் பெண் மட்டுமே கருவுற்று, தாய்மை அடைந்து குட்டிகளைப்   பெற்றெடுக்கும். ஆனால் கடல் குதிரைகளைப் பொறுத்தவரை நேர்மாறான நிலைமையே நிலவுகிறது. பெண் கடல் குதிரை தன் முட்டைகளை இட்டு, அவற்றை ஆண் கடல் குதிரையின் வாலின் கீழ் அமைந்துள்ள அகன்ற பையில் (pouch) வைத்துவிடும். முட்டைகளை அவை அடைகாத்து பொறித்து குஞ்சுகள் உருவாகி பைக்கு வெளியே வரும் நிலையில் பையின் வாய்ப்பகுதி அகலமாகத் திறந்து கொள்ளும். இந்நிலையில் ஆண் கடல் குதிரை தன் உடலை மாறி மாறி வளைந்து கொடுத்து, கடல் குதிரைக் குஞ்சு வெளிவருவதற்கு உதவும்; இவ்வாறு பல குஞ்சுகள் ஒவ்வொன்றாக ஆண் கடல் குதிரையின் பையிலிருந்து வெளிவரும். எல்லாக் குஞ்சுகளும் வெளியேறிய பின்னர், ஆண் கடல் குதிரை குஞ்சுகளை ஈன்ற களைப்புடன் காணப்படும்.
எகிட்னா:
எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவை தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவை எறும்பு தின்னி என்ற பெயரால் தமிழில் அழைக்கப்படுகின்றன.
எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன.
இவை ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் கருவுறும் பெண் எகிட்னாவின் கற்பகாலம் 9 முதல் 27 நாட்கள்வரை ஆகும். அதன் பிறகு இவை ஒன்று அல்லது அரிதாக இரண்டு முட்டைகளை இடுகின்றது. இட்ட முட்டைகளை அது தன் அடி வயிற்றில் உள்ள தோல் போன்ற (கங்காருக்கு இருப்பது போல்) பைக்குள் வைத்து 10,11 நாட்கள் வரை அடை காக்கின்றது. இதிலிருந்து வெளிவரும் குஞ்சு(குட்டி) தன்தாயின் வயிற்றில் அமைந்துள்ள பையிலேயே ஏறக்குறைய 55 நாட்கள் வரை தங்குகின்றன. முட்டையிலிருந்து வெளி வந்த இந்த குஞ்சுகள் தன் தாயின் வயிற்றில் அமைந்துள்ள பால் சுரப்பிகளிலேயே பாலை அருந்துகின்றன. இவைகள் பாலூட்டிககளைப் போன்று பால் சுரப்பி அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன்அடி வயிற்றில் வியர்வை சுரப்பதுப் போன்று சுரக்கும் பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன. பிறகு குட்டி வளர்ந்து தன்னிச்சையாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பாதுகாப்பான பைகளைவிட்டு வெளிவருகின்றன.

வௌவால்: பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு வௌவால்தான்.

"கலாங்' என்று அழைக்கப்படும் பழ வவ்வால் கள் இந்தோனேஷியாவில் காணப்படுகின்றன. இந்த வகை வவ்வால் பறக்கும் பாலூட்டி வகைகளிலேயே நீளமானவை. இந்த வகை வவ்வாலின் உடல்... அதாவது, தலை முதல் கால் வரை 40 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. மேலும், 152.5 சென்டிமீட்டர் அளவு இறக்கையும்,900 கிராம் எடையையும் கொண்டது. இந்த வவ்வால்கள்  நான்கு மீட்டர் தூரத்திற்கு அப்பால் வாழைப்பழம் இருக்கிறது என்பதை தன்னுடைய மோப்ப சக்தி மூலம் அறிந்து கொள்கிறது. பழ வவ்வால்கள், நரி போன்று முக அமைப்பைக் கொண்டுள்ளதால், "பறக்கும் நரிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
பெங்குவின்கள்:
பறக்க இயலா பறவைகள் இவை. அண்டார்டிக் பனி பிரதேசத்தில் கூட்டமாக வாழுகின்றன.குடும்பமாக வாழும் விலங்குகளுக்கு சிறந்த உதாரணமாக இவற்றை சொல்லலாம்.தாய் பறவை ஒரே ஒரு முட்டையை தந்தை பறவையிடம் கொடுத்துவிட்டு இரைதேட கடலுக்குள் சென்றுவிடும்.அது கொடுத்த முட்டையை குஞ்சு பொரிக்கும் வரை தன் கால்களுக்கு இடையே உள்ள பையில் வைத்து அடைகாக்கும் தந்தை பறவை.பசியாயினும் பொறுமை காக்கும், தாய் பறவை உணவு கொண்டுவரும் வரையிலும்.குஞ்சு பொறிக்க 60 நாட்கள் வரை அது காத்திருக்க வேண்டும்.குஞ்சை வளர்க்கும் பொறுப்பும் அதற்குஉண்டு .
மகெல்லனிக் பென்குயின்களே விலங்கு இராச்சியத்தில் மனிதனுக்கு அடுத்து அதிக ஆண்டு காலம் ஒரே ஜோடியுடன் மட்டும் உறவு கொண்டு வரும் தன்மையை உடையன. அதாவது இவை ஆரம்பிக்கும் தமது உறவை முறிவு ஏற்படாது 16 வருடங்கள் கடைப்பிடிக்கின்றன.இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இவை இனப்பெருக்க காலத்தின் போது துருவப் பகுதியிலிருந்து குளிர் குறைவான இடங்களுக்கு ஆயிரக் கணக்கான மைல்கள் பயணித்த போதும் தனது ஜோடியை மறக்காமல் இனங்கண்டு கொண்டு அவற்றுடன் மட்டுமே உறவு கொள்ளும் விசேட ஆற்றலைக் கொண்டிருப்பது தான்.

கோலா கரடி:ஆஸ்திரேலியாவில் மரங்களில் காணப்படும் கோலா கரடியின் குட்டி பிறக்கும்போது வெறும் 3 கிராம் எடைதான் இருக்கும். அது ஊர்ந்து சென்று தாயின் பின்புறத்தில் உள்ள பை போன்ற உறுப்புக்குள் சென்று பால் குடிக்கும். பத்து மாதங்கள் வரை அது அங்குதான் இருக்கும்.பின்னர், குட்டி தாமாக இலைகளை உண்ணத் தயாராகும்வரை, தாய் இலைகளைத் தின்று ஜீரணம் செய்து `அரைவேக்காடாக’ குழந்தைகளுக்குக் கொடுக்கிறது.

திமிங்கலமும், டால்பினும் நீரில் வசித்தாலும், இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பிற பாலூட்டிகள் நிலத்தில் மட்டுமே வசிப்பவை.

பொதுவாகவே விலங்குகள், பறவைகளுக்கு தாய்மை அடைந்த நிலையில் மூர்க்கம் அதிகமாக இருக்குமென்று சொல்வார்கள். நம் வீட்டில் வளர்க்கும் கோழிகளிடமே இதைக் காணலாம். அடைகாக்கும் நேரத்தில் கிட்ட ஒருவரும் போகமுடியாது.அதன் எச்சரிக்கைக் குரலே படு ஆக்ரோஷமாக இருக்கும்.

தொகுப்பு: லூசியா லெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire