பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 30 septembre 2014

வாழ்வியல் பதிற்றந்தாதி



பாடலின் இறுதியில் (அந்தம்) வரும் வார்த்தையே முதலில் (ஆதி) வருவது போன்று எழுதும் கவிதை முறைக்கு "அந்தாதி" என்று பெயர். பத்துக் கவிதைகள் சேர்ந்தது "பதிற்றந்தாதி". இங்கு ஒவ்வொரு கவிதையின் இறுதிச் சொல்லும், அடுத்தக் கவிதையின் ஆரம்பமாகவும் உள்ளது.

  
உலகெலாம் வாழ்த்தும் உயிரெலாம் போற்றும்
நிலமெலாம் சாற்றுமந் நீரும் - நிலவின்
கதிரெலாம் காட்டும் களமெலாம் நின்றே
பதியுமாம் ஈசன் பதம்!


பதந்தனை நாடிடும் பண்புடை மாந்தர்
இதந்தனை நல்கும் இறைவன் - சதமே!
நலமதை நாளும் நமக்கெனக் கொள்ளார்
பலர் பெறக் காண்பார்  பலன்!


பலன்தரும் வாழையே பற்றி அவர்தம்
குலமோர்  பெருமையே கொள்ளும் - மலரின்
மணமாய்ப் பயனுற வாழ்வார்  தமையே
வணங்கும் இகமே மகிழ்ந்து!


மகிழும் எளிய மனமொரு கோவில்
முகியா அருளின் முடிவாய் - அகிலம்
இடையில் களித்திட ஈங்கவர் செப்பும்
கொடையே அன்பெனக் கூறு!


கூற்றும் செயலுமே கொண்டவர் ஒன்றென
ஏற்றம் பெறுவரே என்றுமக் - கூற்றுவன்
தோற்க நயம்படும் தோழமை கண்டவர்
ஏற்கும் அறமே இயைபு!


இயைபும் உறவை இசைந்திட உள்ளம்
தயையினை நல்கும் தகைமை - இணையிலா
மாண்பும் அதுவாம் மனுக்குலம் காத்திடும்
கேண்மையும் அஃதெனக் கேள்!


கேள்புலன் ஞானமும் கேடிலா தன்மையும்
மீள்வகை யாகிட வீணிலே - மூள்கிறக்
கோபமே சூழும் கொடுமை மாறவே
தீபமெனக் கூட்டும் சுடர்!


சுடர்விடும் அன்பு, துளிர்விடும் இன்பம்
தடமெனக் கல்விச் சரமும் - இடரிலா
ஆற்றலும் இல்லாள் அரும்பேர் மழலையென
வற்றிடா தூறும் வளம்!


வளம்பெறும் பூமி , மணந்தரும் சோலை
கிளர்ந்தெழும் தென்றல், கிளைக்கும்; - இளமை
கவிதைத் தமிழதன் காதல் அடடா
செவிபெறும் இன்பமே தேன்!


தேன்தரும் உண்ணத் தெவிட்டாச் சுவையென
வான் புகழ் பெறவே வாழ்வில் - சான்றோர்
செயலென மாந்தரும் தெள்ளியப்  பிணைப்பால்
 உயர்ந்திட  உய்யும் உலகு!

மற்றுமொரு முயற்சியாக ஒவ்வொரு வரிக்குப் பின்னும் முதல் வரி இணைந்து பொருள் தருகிறது.

யாதுமாகி நின்றாய்!

யாதுமாகி நின்றாய் வாழ்வில்!
     யானெனது எண்ணும்  மண்ணில்
சூதுணரா(து) ஈயும் அன்பில்
     சுகந்தனையே தந்த போதில்
தூதுவிடும் கண்கள் தன்னில்
     துலங்குமொரு பாச ஈர்ப்பில்
ஏதுமிலா ஏழை நெஞ்சில்
     இயங்குமொரு உயிரின் மூச்சில்!

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire