பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 26 avril 2012

மனிதன் கண்ட மருத்துவ முறைகள்

                                                                  பரவலாக             உலகில் உயிர்களின் தோற்றத்திற்குப் பிறகு அவற்றின் உணவு முறையாலும் காலநிலை மாற்றங்களினாலும் நோய்களும் தோன்றின. தனது உடலில் ஏற்படும் கோளாறுகளினால் துன்பமடைந்த உயிரினங்கள் அவற்றிற்குத்  தீர்வைக் காணும் வழிமுறைகளைத் தேடினநோய் தீர்க்கும் வழிமுறைகளே மருத்துவம் எனப்படுகின்றது நாய், பூனை போன்ற விலங்குகள் தங்களது உடல்நிலை,சரியில்லாதபோது சிலவகைத் தாவரங்களை உண்பதை நாம் பார்த்திருக்கின்றோம். மனிதனும் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைச் சக்திகளையும் தாவரங்களையுமே  தனது  மருத்துவத்திற்கான காரணிகளாகப் பயன்படுத்தினான். மருத்துவக்  குணம் கொண்ட தாவரங்கள் மூலிகைகள் எனப்பட்டனமூலிகைகளைக் கண்டறிவதிலும் அவற்றைச் சரியான முறையில் கையாண்டு நோய் தீர்க்கும் கலையிலும் இந்தியர்களே முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளனர். மூலிகை மருத்துவத்தைத் தொடர்ந்து உலகில் இன்றுவரை பல்வேறு மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப் பட்டன, இன்னும் கண்டுபிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒருசில மருத்துவ முறைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

மூலிகை மருத்துவம்:
                                     இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்திச்  செய்யப்படும் முறையாகும். இந்தியா, சீனா, திபெத் ஆகிய நாடுகளில் தோன்றி வளர்ந்தது.

சித்த மருத்துவம்:
                                   பண்டைய சித்தர் பெருமக்களால் கண்டறியப்பட்ட  மருத்துவ முறையாகும்.சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த முறையே யோகாக் கலையாகும்; தமிழ் மண்ணில் தோன்றிய நாகரிகம், பண்பாடு,கலை, இவற்றில் வேர் ஊன்றித் தமிழர்களின் உணர்வோடு தழைத்தோங்கி வளர்ந்தது.

ஆயுர் வேதம்:
                                இந்தியாவில் தோன்றி  மருத்துவ உலகின் முன்னோடியாகத் திகழ்வது. எல்லா விதமான சிகிச்சை முறைகளும் கையாளப் படுகின்றன. அன்றாட வாழ்க்கை முறையோடு மூலிகைகள், யோகா, தியானம், அரோமாவாசனைகளைப் பயன்படுத்தும்  முறைகளையும் வைரம் போன்ற கற்களையும் மணிகளையும் பயன்படுத்தும் முறைகளையும் கொண்டது. நோய் வந்ததற்கான காரணம்,அதற்கான அறிகுறிகள், குணப்படுத்தும் முறை இவற்றோடு நாடிகளைச் சமன்படுத்துதல்,செரிமான சக்தியைத் துண்டுதல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல் உடற்பயிற்சி முதலியவற்றின் மூலம் நோயைக் குணமாக்கும் முறையாகும்.

இயற்கை மருத்துவம்:
                                 உணவுப் பொருள்களினால் உடலில் ஏற்படும் நச்சுத் தன்மையை வெளியேற்றி உடலைத் தூய்மைப் படுத்தி உடலின் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாத்து உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் இவற்றோடு ஒளி, நீர்,வெப்பம் மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மருத்துவ முறை.

 அக்கு பங்க்சர்:
                              சித்தர்கள் வளர்த்த வர்ம அறிவியலோடு சீனாவில் தோன்றிய மருத்துவமுறை. மனித உடலில் உள்ள முக்கியமான புள்ளிகளில்,மயிரிழை போன்ற மிகவும் மெல்லிய ஊசிகளைக் கொண்டு குத்தி நரம்புகள் மற்றும் தசைகளைத் தூண்டுவதால் அவற்றை ஊக்கப்படுத்தி முறையாகச் செயல்படவைத்து நோயைக் குணப்படுத்துதல் அக்குபங்க்சர் எனப்படும்.

அக்குபிரஷர்:
                          இதுவும் அக்குபங்க்சர் போலவே உடலின் முக்கியப் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து நோயைக் குணப்படுத்தும் முறையாகும்..  தொடுசிகிச்சை முறையும் அக்குபிரஷர் போன்றே நம் உடலின்  சக்தி ஓட்டப் பாதையில் உள்ள முக்கியமான புள்ளிகளைத் தொட்டு அவற்றின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு நோயைக் குணப்படுத்துவதாகும்;

யுனானி மருத்துவம்:
                              யுனாநிமுறை மருத்துவம் நான்கு கோட்பாடுகளைக் கொண்டது.மனித உடலில் உள்ள இரத்தம்,இரைப்பை,மஞ்சள்  மற்றும் கரும் பித்தநீர், கபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சித்த மருத்துவத்தோடு கிரேக்க மருத்துவ முறையும் கலந்த மருத்துவ முறையாகும்;

ரெய்கிஎன்னும் ப்ராணிக் மருத்துவம்:
                          பிரபஞ்சத்தில் பரவியுள்ள காஸ்மிக்,ஜீவாதார சக்தியை உடலுக்குள் கொண்டுவந்து, உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் முறை.காஸ்மிக் சக்தியைத் தங்கள் உள்ளங்கையில் கொண்டுவந்துத் தங்களுக்குத் தாங்களே குணப்படுத்திக் கொள்ளலாம்,தொடுதலின் மூலம் மற்றவர்களையும் குணப்படுத்தலாம்;


ஹோமியோபதி:
                            எந்த ஒரு பொருளுக்கு உடலில் நோயை உண்டாக்கக் கூடிய தன்மை உள்ளதோ அந்தப் பொருளுக்கே அந்த நோயைக் குணப்படுத்தும் தன்மையும் உண்டு என்னும் இயற்கையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே ஹோமியோபதி மருத்துவ முறையாகும்.

அலோபதி என்னும் ஆங்கில மருத்துவம்:
                          இன்றைய உலகில் அலோபதி மருத்துவமே எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்ற மருத்துவ முறையாகும்; கிரேக்க தத்துவஞானியான  ஹிப்போகிரேட்ஸ் ஆங்கில மருத்துவத்தின் தந்தையாகக் கருதப் படுகிறார்;
நோய்க் குறிகளை அகற்றுவதும் நோய்க்கான காரணிகளை அகற்றுவதும் இதன் நோக்கமாகும்.அலோபதி சிகிச்சை முறையில்
மருந்துகள், அறுவை சிகிச்சை, நோய்க் கடுமையைத் தணித்தல் ஆகிய முறைகள் பின்பற்றப் படுகின்றன.புதிய புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகளும் உறுப்பு மாற்று அறுவை சிக்கிச்சைகளும் அழகுக்கான அறுவை சிகிச்சைகளும் செயற்கை முறைக் கருத்தரிப்பு முறைகளும் இன்றைய அலோபதி மருத்துவத்தின் சிறப்புகள். .எலும்பியல்,நரம்பியல், மகப்பேறு, குழந்தைநல மருத்துவம்,இயன்முறை மருத்துவம்  போன்று பல்வேறியல்ககளைக் கொண்டு மனித உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளின் இயல்புகளையும், அவற்றில் வரக் கூடிய நோய்களையும் ஆராய்ந்து அதற்கேற்ற முறையில் தேவையான சிகிச்சையை அளிப்பதே அலோபதி மருத்துவத்தின் நோக்கமாகும். இம்மருத்துவத்திற்கு உதவியாக இன்று பல்வேறு துணை மருத்துவ முறைகள் தோன்றியுள்ளன. 'ஸ்டெம் செல்' பற்றிய ஆராய்ச்சிகளால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வரும் பரம்பரை வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்பது மிகப் பெரிய வரப் பிரசாதமாகும். எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும் அலோபதி மருத்துவம் அதிகப் படியான  பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதே உண்மை. இருந்தாலும் உடனடியான அவசரத் தேவைக்கு அலோபதி மருத்துவமே கைகொடுக்கின்றது.  
            மேற்கண்ட மருத்துவ முறைகளோடு 'காந்த' சிகிச்சை , மலர்சிகிச்சை,வர்மசிகிச்சைமுறை போன்று பல்வேறு சிகிச்சை முறைகள் அங்கங்கே நடைமுறையில் உள்ளன. பாட்டி வைத்தியம், கைவைத்தியம் போன்ற எளிய வைத்திய முறைகள் நம் அன்றாட வாழ்வில் கையாளும் மருத்துவ முறைகளாகும்.எது எப்படி இருந்தாலும் நாம் நமது உணவுப் பழக்க வழக்கங்களாலும் உடல் பயிற்சிகளாலும்  வாழ்க்கை முறைகளாலும் மருந்துகள் அவசியமில்லாத நோயற்ற வாழ்க்கை வாழ்வதே மகிழ்ச்ச்சியான வாழ்க்கையாகும்.
     சரோசா தேவராசு

                                                                                                  

Aucun commentaire:

Enregistrer un commentaire