பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 juillet 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                         


உலகின் தலை சிறந்த நாடுகளில் ஒன்றான பிரான்சு தனக்கே உரித்தான பல உயர்வுகளைத் தன்னகத்தேக் கொண்டது.ஜனநாயக மூச்சான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை தன் அடையாளமாகக் கொண்டது. ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற சாதாரண ஆர்வத்தை விட, நாம் வசிக்கும் நாட்டின் சிறப்பை உணர்வது ஒரு சிறந்த குடிமகன்-மகளின் அடையாளம் என்பதாலேயே பிரான்சின் சிறப்புகளை நினைவு கூற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் செயலாக்கமே இந்த வலைப்பூவில் மலர்ந்துள்ளது.

இதமான காலச் சூழல். மலைகளும், காடுகளும், பச்சைப் புல்வெளிகளும், இயற்கையின் சிரிப்பைப் போன்ற மலர்க்கூட்டங்களும்  பாடித் திரியும் பறவைகளும், சிரித்த முகத்தோடு வணங்கும் பண்புள்ள மனிதர்களும் மனத்தைக் கவரும் நாடு. கூட்டத்தில் தெரியாது பிறர் மேல் தொட்டு விட நேர்ந்தாலும் தங்களை அறியாது உடன் மன்னிப்புக் கோரும் உயர் குணம். வாழ்வை ஒரு ரசனையோடு வாழ்ந்து பார்க்கும் மனநிலை! 

இரண்டு உலகப் போர்களில் ஏற்பட்டச் சரிவுகளைத் தாண்டி சரித்திரம் படைத்த சாதனை. கலைகள் முதற்கொண்டு, அறிவியல் வரை உச்சத்தில் நிற்கும் பாங்கு. சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து, அவர்களைத் தங்கள் அன்பாலும், நடத்தையாலும் வெற்றி கொள்ளும் பக்குவம் இவை பிரெஞ்சு மக்களுக்கே உரியவை. கிறிஸ்தவ நம்பிக்கைக் கொண்ட நாடாயினும், பிற மதத்தினர் தங்கள் விருப்பம் போல் இறையுணர்வில் வாழ வழிவகுக்கும் பரந்த மனப்பான்மையும் இவர்களுக்கு உண்டு.

ஒரு நாட்டின் பெருமையை ஒரு ஏட்டின் சில வரிகளில் அடக்கி விட முடியாது. ஒரு கோடி மட்டுமே காட்டியுள்ளோம். பிரான்சின் மன்னராட்சி அனுபவங்களும், உலகுக்கே வழி காட்டிய அவர்களது புரட்சியும், அதன்மூலம் துளிர்த்த ஜனநாயக உணர்வும், திறந்த புத்தகம் போலான இன்றைய நடைமுறை வாழ்வும் ஆழ்ந்தறிய வேண்டிய ஒன்று. நுனிப் புல்லாவது மேய்வோமே!

திருமதி சிமோன் 

பிரான்ஸ் பற்றி...........



பிரான்ஸ் மேற்கு ஐரோப்பாவில் தனது பெரும் நிலப்பரப்பையும் வடக்கு அமெரிக்கா,கரிபியா,தென் அமெரிக்கா, தெற்கு இந்து சமுத்திரம், பசிபிக் சமுத்திரம், அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும்  கொண்ட நாடாகும்.இதன் நிலப்பரப்பானது தெற்கே  மத்தியதரைக் கடல் தொடங்கி வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வரையும் விரிந்து உள்ளது.பெல்ஜியம், ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,லுக்சாம்பூர், இத்தாலி, மொனாக்கோ, ஆண்டோர், ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகளாகும்    .  
பிரஞ்சுக்  குடியரசு  மக்களாட்சி முறையைக் கொண்ட, சமூக நலனை கருத்தில் கொண்ட  மதச்  சார்பற்ற குடியரசு ஆகும். பாரிஸ் இதன் தலைநகரம். தேசிய மொழி பிரெஞ்சு. நீலம், வெள்ளை, சிகப்பு - மூவர்ணக் கொடியே நாட்டின் கொடியாகும்.. தேசிய கீதம்  மர்ஸேயஸ்.  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் -  பிரஞ்சுக் குடியரசின் பொன்மொழியாகும்.  மதச் சார்பின்மை தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளது.   

மே 6, 2012 இல் நடந்த தேர்தலில் பிரான்சு குடியரசின்  அதிபராகப்   பிரான்சுவா ஜெரார் ஜியார்ஜ் ஒலாந்து (François Gérard Georges Nicolas Hollande)  தேர்ந்தெடுக்கப்பட்டார். சோசலிசக்   கட்சியை சேர்ந்தவர் இவர்.  




நிர்வாகக் காரணங்களுக்காக 27 பகுதிகளாகப் பிரான்ஸ் பிரிக்கப்பட்டுள்ளது.  இவற்றுள் 21 பகுதிகள் பிரான்ஸ் நாட்டுக்கு உள்ளே இருக்கின்றன ;  ஒரு பகுதி மட்டும் பிரான்ஸ் நாட்டை ஒட்டி அமைந்துள்ள கடல் புரத்தின் கோர்சிகா நிலப்பரப்பில் உள்ளது. ஏனைய ஐந்தும் உலகின்  பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன(பிரஞ்சு கயானா, குவடலூப், மர்த்தினிக், மயோத்,ரெயுனியன் ). இந்தப் பகுதிகள் யாவும் 101 மாவட்டங்களாகப்  பிரிக்கப்பட்டுள்ளன. அகர வரிசைப்படி இவற்றுக்கு எண்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த எண்கள் அஞ்சல்க் குறிப்பு எண்களில் பயன்படுகின்றன. வாகனங்களின்  பதிவு  எண்களிலும் இந்த மாவட்ட எண்கள் இருக்கும்.  
 பரப்பளவு:
674,843 சதுர கிலோ மீட்டர்கள்மக்கள் தொகை:
65,350,000 (2012 மதிப்பீடு) 
நாணயம்:
யூரோ 

இணையத் தளக் குறியீடு:  .fr

இந்நாட்டின் பொருளாதாரம் ஐரோப்பாவில் 2 -ஆவது இடத்திலும் உலகின்  பொருளாதரத்தில் 5 -ஆவது இடத்திலும் உள்ளது.
பிரான்சில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வாக உள்ளது. மருத்துவ வசதிகளும் சிறப்பாக உள்ளன.
உலகின் 13 -ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு பிரான்ஸ். அணு ஆயுதம் வைத்திருக்கும் எட்டு வல்லரசுகளில் இதுவும் ஒன்றாகும்.
பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. 
ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படும் முக்கிய தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுக்கும் வல்லமை கொண்ட ஐந்து நாடுகளில் பிரான்ஸ் நாடும் ஒன்றாகும். ஏனைய நான்கு நாடுகளும் முறையே அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா ஆகும்.    பிரான்சின் கல்வி முறை உலகளவில் பெயர் பெற்றது. ஒவ்வோர்  ஆண்டும் பல்லாயிரம் வெளிநாட்டு மாணவர்கள் இங்குக்  கல்வி பயிலுகிறார்கள். கல்விக்குப் பிரான்சில் நிதியுதவிகள் பிரெஞ்சு அரசால் தரப்படுகின்றன.
பிரான்சுதான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 75 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 
 

காலனி ஆதிக்கத்தின் விளைவாகப் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த தமிழர்களும், மொரிஷியஸ் தமிழர்களும் பிரான்சில் குடியேறியவர்கள்.  இதுதவிர இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழரும் இங்கு உள்ளனர்.
வெள்ளையர், கறுப்பர்(பிரான்சின் பல காலனிகளை சேர்ந்தவர்கள்) , யூதர், இந்தியர்,வியட்நாமியர், பாகிஸ்தானியர், அல்ஜெரி  நாட்டை சேர்ந்தவர் என பல இனத்தை சேர்ந்தவர்கள் இங்கு ஒன்று சேர்த்து வாழ்கிறார்கள். முதன் முதலாக பிரான்சுக்கு  வருபவர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
பிரான்ஸ் பற்றிச் சொல்ல  பல செய்திகள் உள்ளன. அவற்றை அவ்வப்பொழுது உங்களுடன் பகிர்ந்துக்கொள்வோம்.

லூசியா லெபோ 

dimanche 29 juillet 2012

கலை நயமும், கலாச்சாரமும்

                                                      


பிரான்சு அல்லது பாரிஸ் என்றாலே அதன் சின்னமாகப் பொறிக்கப்படுவது ஐபில் கோபுரம்தான்! இந்நாட்டின் இரண்டாவது சுற்றுலாப் பயணிகள் குமிழும் இடம். 312 மீட்டர் உயரம். 125 மீட்டர் அகலம். 10,100 எடை கொண்டு பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் இதில் 18,038 இரும்பு பட்டைகளும், 2,500,000 ஆணிகளும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன. இரண்டாவது தளம் வரை 1665 படிகள் உள்ளன. 276 மீட்டர் உயரத்தில் உள்ள மூன்றாம் தளத்தில் கண்காட்சி (musée de cire)  உள்ளது. இதை நிர்மாணிக்க 41 வருட உழைப்புத் தேவைப்பட்டது. 1887-1889 இல் கட்டப்பட்டு, 31-3-89 இல் திறப்பு விழா நடந்தது.

7.1 மில்லியன் மக்கள் வருடந்தோறும் இதைக் கண்டு களிக்கிறார்கள் எனினும் கட்டுவதற்கு முன் பல கலைஞர்கள் எதிர்ப்பை இது சந்தித்தது. வெறும் இரும்புப் பட்டைகளால், கலை உணர்வுக்கு இடமில்லாது நகரின் நடுவே பிரதானமாக கட்டப்படுவதில் அவர்களுக்கு உடன்பாடில்லை! ஆனால் இதன் வேலை முடிவதற்குள்ளாகவே பலர் ஓவியம், நவீனம், புகைப்படம் போன்றவற்றில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்று ஐபில் கோபுரம் இல்லையேல் பிரான்ஸ் இல்லை!

வருடந்தோறும்  14 ஆம் தேதி ஜூலை மாத இரவில் வாணவேடிக்கை இங்கு நடைபெறும். இதனருகே நடக்கும் concert, exposition போன்றவற்றுக்கு மதிப்பும் கூட்டமும் அதிகம்.


                                         


1623 - அரசன் லுய் XIII வேட்டையின்போது கூடுவதற்காக பலதரப்பட்ட மனிதர்களிடம் 350 ஹெக்டார் நிலத்தை வாங்கினார். இன்றைய 'வெர்சேய்' யின் அன்றைய ஆரம்பம் இதுதான்! பிறகு லூயி XIV 1682-1789 களில் கட்டியதே இம்மாபெரும் கோட்டை. அப்போது மன்னர்களின் இரும்புக் கதவு "Grille du Roi" என்றழைக்கப்பட்டது. சுற்றிலும் 180 மீட்டர் வரைக் காடுகளும், பசுமையும் நிறைந்திருக்க, அரச ஆடம்பரத்துக்காக 'உருவாக்கப்பட்ட ஓர் நகரம்'. 150 மீட்டர் உயரத்தில்  பிரமிக்க வைக்கும்  கோட்டையும், பரந்து விரிந்த தோட்டமும், கண்ணைக் கவரும் சிலைகளும் இன்றளவும் எல்லோரையும் கவர்கின்றன. வருடத்திற்கு 695.5mm மழை பெய்வதால் செழிப்புக்குப் பஞ்சமில்லை. (climat océanique) குளிர் காலத்தில் 6.1°c, கோடையில் 23.9°c என மிதமான, இதமான தட்ப வெப்ப நிலை. (2009  இலேயே 86,477 குடிமக்களைக் கொண்டது)

லூயி பிலிப் 1837 இல் 'பிரான்சின் வரலாற்று அருங்காட்சியகம்' ஒன்றை இதில் ஆரம்பித்தார். 1805 இல் ( Pie VII ) போப் நெப்போலியனுக்கு முடி சூட்ட வந்தபோது, இங்கு அழைக்கப்பட்டார். அரச குலத்தவர் கொண்டாட்ட இடமான இக்கோட்டை   "புரட்சியின் தொட்டில்" எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில்  புரட்சித்தலைவர்கள் 'தேசிய அசெம்பெலி' என்ற பெயருடன் 1789 இல் இதைக் கைப்பற்றினர். பின்னர் ஒரு கூட்டம் கோட்டையின் உள்ளே புகுந்து அரச குடும்பத்தை பாரீசுக்கு வர வைத்தது. அங்கே அவர்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியும் இடப்பட்டது.

1999 இல் பிரான்சைப் புரட்டிப் போட்ட புயல் இங்குள்ள மரங்களை வேரோடு சாய்த்தபோதும், மீண்டும் இதன் அழகு நிர்மாணிக்கப்பட்டது. கோடைக் காலத்தில் 250 க்குக் குறையாத நாடகம்,சர்கஸ்,கான்செர்ட் போன்றவை நடைபெறுகின்றன. இப்போது பெரும் இரும்பு வண்டிகள், கார்கள் போன்றவையும், 218 டன் எடையுள்ள, பாலம் கட்ட உதவும் இரும்பு இயந்திரம் ஒன்றும் ஒரு பக்கத்தில் தஞ்சமடைந்துள்ளன.

UNESCO வேர்சாய் ஒரு பரம்பரைச் சொத்து என்ற ( claasé Patrimonie mondial de unesco) தகுதியை வழங்கியுள்ளது. 


                                                  


 1,35,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த லூவ்ர்அருங்காட்சியகமும் அரசர்களின் அரண்மனையாக இருந்ததுதான். தற்போது ரோமன் பார்லிமென்ட்டுக்குப் பின் இரண்டாம் பெரிய கட்டடமாகவும், உலகத்திலேயே சிறந்த கருவூலங்களைக் கொண்ட அகமாகவும் காட்சி அளிக்கிறது. 2011 இல் 8.9 மில்லியன் பார்வையாளர்களைக் கண்ட இது சார்லஸ் V  தான் வசிப்பதற்காக கட்டியது. லூயி XIV வரை 800 வருட அரச உடைமையாக விளங்கியது. பிலிப் ஒகுஸ்த் தன் பாதுகாப்புக்காக சுற்றிலும் 31 மீட்டர் உயரமும், 19 மீட்டர் அகலமும் கொண்டதாக 1202 இல் கட்டிக்கொண்டார். பின்  வந்தவர்களின் விருப்பத்திற்கிணங்க பலவகைகளில் விரிவுபடுத்தப்பட்டது. புரட்சி வரை மன்னர்கள் ஆதிக்கத்தில் இருந்த பின்னர் கைவிடப்பட்டது.

போர் அழிவுக்குப்பின் 1692 இல் அகாடெமி ஓவியம், சிற்பங்கள் இவற்றை அதிகப்படுத்தியது. ஏனெனில் ஏற்கனவே ஹென்றி IV 'Grand Dessin' என்ற பெயரில் அரண்மனையின் ஒரு பாகத்தை அழகுபட அமைத்திருந்தார். 1790 இல் தேசிய அச்செம்ப்லி இந்த அரண்மனையைக் காப்பாற்ற நாட்டுடைமை ஆகியது. 1871 இல் நெருப்பில் தீக்கிரையானப் பகுதியை 1880 வரை சீர்படுத்தினார்கள். பின்னர் சரித்திரச் சின்னமாகிய இவ்வரண்மனையில் 1981-1999 பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் 1989 இல் பிரான்சுவா மிதேரானால் திறக்கப்பட்ட கண்ணாடி பிரமிடும் ஒன்று. ஆனால் இது அந்தப் பழைய கம்பீரத்தைக் குறைப்பதாகவும் தோன்றுகிறது.

திருமதி சிமோன் 

பிரெஞ்சு இலக்கியம்

                                                

மொழியின் அடையாளம் கொண்டே அழைக்கப்படும் நாடு பிரான்ஸ். இங்கு மட்டுமின்றி பெல்ஜியம்,சுவிஸ்,கனடா,செநேகால்,அல்ஜீரியா,மொரோக்கா போன்ற நாடுகளிலும் பிரெஞ்சு பேசப்படுவதால் பிரெஞ்சு இலக்கியம் பறந்து விரிந்ததாய் இருக்கிறது. இது வரை இலக்கியத்தில் அதிக நோபல் பரிசுகளை வென்ற மொழி பிரெஞ்சு மட்டுமே! மேலை நாடுகளில் இலக்கியச் செழுமை உள்ள பெருமை கொண்டதும் இதுவே!

இலத்தீன் மூலம் வளர்ந்த உணர்வு பூர்வமான மொழி(romance language).  Celtic, Frankish (செல்டிக்,பிரான்கிஷ்)மொழிகளின் தாக்கமும், Spanish, Italian (ஸ்பெயின், இத்தாலியன் ) உடன் தொடர்பும் கொண்டது. 14  ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரைத் தொடரும் இலக்கிய வளம் உடையது. இது வரை 15  நோபல் பரிசுகளை வென்ற பிரெஞ்சு, முதல் நோபல் பரிசைத் தட்டிச் செல்லக் காரணமாய் இருந்தவர் Sully Prudhomme (1901). 2000 இல் கோ சிங்க்ஜியன் என்பவர் வென்றார்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மேதைகள் பிரெஞ்சு மொழியின் புலமையை உலகுக்கு எடுத்துக் காட்டினும், ஒரு சில உலகறிந்தவர்களின் பெயர்கள் கீழே:

18 ஆம் நூற்றாண்டு: Voltaire, Jean Jacques Rousseau, Denis Diderot
19             ,,                  : Honoré de Balzac, Gustare Flaubert, Emile Zola
20             ,,                  : Marcel Proust, Jean Genet, Louis Ferdinaud Céline

கவிதை: Victor Hugo, Arthur Rimbaud, Lafontaine
நாடகம்: Molière, Samuel Beckett, Jean Genet
சரித்திரம் மற்றும் கற்பனை: Blaise Pascal அறிவுக்கப்பாற்பட்டவைப் பற்றிய ("Les Pensées") சிந்தனை.
                                                      Bescarte - logic, arts et science
                                                      Jean-Jacques Rousseau - romantic
                                                      Jean Paul Sartre - Existentialism is a humanism-being and nothingness

இன்னும் இலக்கிய விமர்சனம், குழந்தைகள் சம்பந்தப்பட்ட கதைகள் முதல் குறுந்தகடுகள் வரை என்று பிரெஞ்சு இலக்கியம் ஒரு முடியாத தொடர்கதை.

திருமதி சிமோன் 



புனிதமும் வரலாறும்

                                                         

மோன்மார்த்று திரு இருதயப்  பேராலயம் :( Basilique Sacré coeur de Montmartre)

16 ஜூன் 1875 இல் ஆரம்பிக்கப்பட்டு முதல் உலக மகா யுத்த முடிவில் 1919 இல் முடிவடைந்த,  ரோமன் கத்தோலிக்கர்களால் கட்டப்பட்டு  தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட   பிரம்மாண்டமான ஆலயம். 

1870 இல் பேராயர் ப்புர்னியர்   (Fournier), 1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்  நாட்டின் குலைந்த மனித நேயத்தை, இறைவனிடம் மன்னிப்பு வேண்டிப்  பெறுவோம் என்று பேசினார். அனைவரது ஆதரவையும் பெற்ற இந்த உரையே தேசிய விருப்பாக (Oeuvre du Voeu National) மாறி இந்த ஆலயமாக உருவெடுத்தது.

இக்கோவில் கட்டப்பட்டுள்ள மலை ஆராதனையின் அடையாளமாக தொன்றுதொட்டு விளங்கி வருகிறது. கொலுவா-ரோமன் (gaulois-romains) காலத்தில்  (Mercure-Mars) வழிபாட்டுத் தளமாக விளங்கியது, 3ஆம் நூற்றாண்டில்  ஆயர் தெனிஸ் (Dènis) சித்திரவதை செய்யப்பட்டு இறந்த பின் 11ஆம் நூற்றாண்டில் ( eglise St. Pierre de Paris) 6வது லூயி மன்னனால், அவர் நினைவாகக் கோவிலாக மாறியது. 

1871இல் தேசிய அசெம்ளி வோட் (National Assembly Vote) மூலம் புது ஆலயம் எழுப்ப அங்கீகாரம் அளிக்கப்பட்டது. 7 மில்லியன் பிரான் (franc-அந்தக்கால பிரஞ்சுப்  பணம்) நிர்ணயிக்கப்பட்டு, 87 போட்டியாளர்களால் 76 குழுக்களாக 78  திட்டம் சமர்பிக்கப்பட்டு , போல் அபாதி (Paul Abadie) எனும் கட்டடக் கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 50 வருடங்களில் 10 மில்லியன் பக்தர்கள் மூலம், 46 மில்லியன் பிரான் சேகரிக்கப்பட்டது.

பல கலைஞர் களின் ஒத்துழைப்பால் இன்றையக் கோயில் எழுந்தது. இதன் நடுப்பகுதி (central dome) 83 மீட்டர் உயரம் உள்ளது.  கூரைப்பகுதி (plafond) பிரான்சு மொசெய்க்கால் (473.78 மீட்டர் சதுர அடி) வேயப்பட்டது. கோவில் மணி 3 மீட்டர் அகலமும், 18,835 டன்  எடையும் கொண்டது.அதில்  மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் இசைக்கருவி பொருத்தப்பட்டது. அதைத் தாங்கி நிற்கும் கருவியே 7,380 கிலோ எடை உள்ளது.   மணி அடிக்கும் சுத்தியலின் எடை 1200 கிலோவாகும்.

பிரான்சின் இரண்டாவது சுற்றுலாப் பயணிகளின் ஆன்மிகத்  தளமாக இக்கோவில் விளங்குகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அல்லும் பகலும் தெய்வ ஆராதனை நடைபெற்று  வருகிறது.

                                                         

லூர்து:
பிரான்சின் தெற்கில் Midi Pyrénées என்றழைக்கப்படும் பகுதியில் 16,000 குடிமக்களைக் கொண்டது லூர்து நகர். மலைப் பிரதேசம். இயற்கை எழில் கொஞ்சும் இடமாயினும் சண்டை, புரட்சி என அழிவுகளையும் கண்ட இடம். இயேசு பிறப்பதற்கு முன்  முதல் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை ஒன்று இங்குண்டு.
1858 ஆம் ஆண்டு பெர்னதேத் என்ற சிறுமிக்கு பலமுறை "மாதா" காட்சி கொடுத்த பிறகு, இது கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமாக மாறினாலும், மத பேதமின்றி உலக முழுவதிலிருந்தும் பக்தர்கள் குவியும் புண்ணிய பூமியாயிற்று.

வருடம் முழுவதும் ஆறு மில்லியன் புனித யாத்திரையாளர்களும், 60,000 நோயாளிகள்-ஊனமுற்றவர்களும் இங்கே மாதாவின் அருள் நாடி வருகிறார்கள். உலகின் மிகப் பெரிய யாத்திரை ஸ்தலங்கள் மூன்றில் லூர்தும் ஒன்று. (மற்ற இரண்டு: Notre Dame de Guadalupe-Mexico) இங்கு  குமிழும் பக்தர்கள் பலரும் தனிப்பட்ட விதங்களில் "புதுமை"கள் பலவற்றை உணர்கின்றனர். இது வரை 2,000  தீவிர நோய்கள் விளக்க முடியாத வகையில் சுகப்பட்டதாக திருச்சபைக்கு தெரிவிக்கப்பட்டாலும், அது 66   புதுமைகளையே "அதிசயம்" என்று பிரகடனம் செய்துள்ளது.


                                                      
நோத்ரு தாம் த பரி (Notre Dame de Paris):


பாரீசின் "Paien"  கோவிலாக இருந்த இந்த மாபெரும் பொக்கிஷம், 'கோதிக்,ரோமன்' கலை வடிவங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. அரசன் ஏழாம்  லூயி 1163 இல் கட்ட ஆரம்பித்த இந்த வழிபாட்டுத் தலம், 1345 இல் முடிவுற்றது. மேலை நாட்டின் மிகப் பெரிய 'Cathédrale', அதி மேற்றாணியாரின் இருப்பிடம், பிரான்சின் முதல் சுற்றுலாத்தலம் என்ற பெருமைகளை உடையது. இரண்டு உலகப்  போர்கள்,புரட்சி,காலத்தின் அழிவு போன்றவற்றினின்று தொடர்ந்து இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் இக்கோவில் பிரான்சின் பிரம்மாண்டத்துக்கும், அதன் பெருமைக்கும் ஓர் எடுத்துக்காட்டு! அரச பரம்பரைத் தொட்டு, அரசியல் நிகழ்வுகள் வரை சரித்திரத்தில் பதிக்கப்படும் எல்லாமே இந்தக் கோவிலில்தான் நடைபெறும். உதாரணத்திற்கு ஒரு சில முக்கியச் செய்திகள்:

1239 செயின்ட் லூயி இயேசுவின் தலையில் சூட்டப்பட்ட முள்முடியை இக்கோவிலில் கொணர்ந்து வைத்தார்.
இன்னும் பல நினைவுச் சின்னங்களும் , கையெழுத்துப் பிரதிகளும் பாதுகாக்கப் பட்டுள்ளன.
அரச திருமணங்களும், முடி சூட்டல் விழாக்களும் இங்கு நடைபெற்றன. நெப்போலியன் பாப்பாண்டவர் Pie VII ஆசீரோடு பேரரசனாக முடிசூட்டிக் கொண்டார்.
மிகப் பெரிய மனிதர்களின் இறுதிச் சடங்கு இங்கு நிறைவேற்றப்படும். அதற்கான தேசிய புகழாரம் (hommage national) செலுத்தப்பட்ட நபர்கள்: Charles de Gaule, Francois Mitterand, Abbé Pière, Sr.Emmanuelle.
Rio-Paris Air France (Vol.447) விபத்துக்கு உள்ளானபோது அதில் இறந்தவர்களுக்கு இங்கு இரங்கல் அஞ்சலி சமர்பிக்கப்பட்டது.

இந்தக்கோவில் 4,800 சதுர மீட்டர் உள்பரப்புக் கொண்டது. மொத்தமோ 5,500 ச.மீ. நீளம் 127 மீ.-அகலம் 48 மீ. உயரம் -69 மீ. ரோசா வடிவத்தில் செய்யப்பட்டுள்ள பூ வேலைப்பாட்டின் அகலம் 13 மீ. சன்னல்களே 113 உள்ளன. இங்குள்ள இசைக்கருவிக்கான குழல்கள் மட்டும் 8,000. , ஒலிக்கும் மணியின் எடை  13  டன் , அடிக்கும்  நாக்கு 500 கிலோ .இன்னும் சிற்பங்கள், கண்ணாடி பூ வேலைகள், மரக் கதவுகளில் செய்யப்பட்டுள்ள நுணுக்கங்கள் என சொல்வதற்கு எண்ணிலாச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

Victor Hugo 'Notre Dame de Paris'  என்றே நவீனம் ஒன்றைப் படைத்திருக்கிறார். குழந்தைகளுக்கான கதைகள், சினிமா,தொலைகாட்சி  என .பலரது படைப்பில் இந்தக் கோவில் இடம் பெற்றுள்ளது.

வருடத்திற்கு சுமார் 13.5 மில்லியன் மக்கள் வருகை புரிகின்றனர். (இது 2010 ஆம் ஆண்டு கணக்கு) 2,000 வழிபாடுகள் நடைபெறுகின்றன. (இந்த இடத்தில் பிரான்சில் இருக்கும் "இந்தியத்  தமிழ் ஞானகமும்" தன் பங்குக்கு சில காலம் தமிழில்  வழிபாடுகளை இம்மாபெரும் கோவிலில் நடத்தியது என்பதைப் பெருமையோடு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

திருமதி சிமோன் 


அறுசுவையும் பிரான்சும்

                                                    

படத்தைப் பார்க்கும்போதே நாவில் நீர் ஊறுகிறது  அல்லவா? உண்மையில் உணவைச் சுவைத்து, மணிக்கணக்கில் ரசித்து உண்பவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். எல்லா சக்திகளும் கலந்த உணவை முறைப்படுத்தி உண்பது அவர்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று சொன்னால் அது மிகையல்ல.

இன்று காலை உணவு அதிகச் சக்தி உள்ளதாக இருக்க வேண்டும், மாலையில் சீக்கிரம் சாப்பிட்டு விட வேண்டும்  என்று சொல்லப்படும் ஆலோசனையை பல நூற்றாண்டுகளாகவே  கடைப்பிடிப்பவர்கள்.

"Lever à cinq, diner à neuf-Super à cinq, coucher à neuf-Font vivre d'ans nonante et neuf" - " நீண்ட ஆயுளுடனும், புத்துணர்வுடனும் வாழ காலை ஐந்து மணிக்கு எழுந்து ஒன்பது மணிக்கு உண்ணவும். மாலை ஐந்து மணிக்கு எளிமையாக உண்டு ஒன்பது மணிக்கு உறங்கவும்" என்ற சொற்றொடர் பழங்காலத்தியது.

பொதுவாக காலையில்  தானியக் கலவை (céréale) - பால் அல்லது ரொட்டி- , பழக்கூழ்(confiture) , காபி,டீ , சாக்கலேட் பானம், பழச் சாறு, தயிர்  போன்றவைகளை  உண்பார்கள்.
 திடமாக இருக்க விரும்புவோர் முட்டை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி(charcuterie), பால்கட்டி (fromage) சேர்த்துக்கொள்வர்.

பகலுணவு : நுழைவு (entrée) சமைத்ததோ,பச்சைக் காய்கறிகளோ; முக்கிய உணவு:கறி,கிழங்கு அல்லது தானியங்கள்,சமைத்த காய்கறிகள்; பால் கட்டி (fromage), கீரைகள் (salade),பழங்கள் அல்லது இனிப்பு வகைகள்; உடன் ரொட்டி,  பழ ரசம் (vin), நீர்; காப்பி.

gouter: குழந்தைகளுக்கு பிஸ்கட் அல்லது கேக் - பழ ரசம் (jus)
இரவு உணவு: சூப், மீன், கீரைகள்,பழங்கள்.

இது இல்லாமல் கொறிக்க (grignoter), croustille, brunch  என்றெல்லாம் சிறு பசி அல்லது ருசிக்குப் பலவகை உண்டு.

விருந்து என்றாலோ கேட்கத் தேவையில்லை. apéritif பசி உண்டாக்க, hors-d'oeuvre, potage -சூப் , entrée  -நுழைவு, premier,seconde plat -முதல்,இரண்டாம் தட்டு, salade verte -பச்சைக் கீரை , fromage -பால் katti,  entremets, dessert, fruit,digestif-செரிமானத்திற்கு café avec chocolat ou fruit sec - உலர் பழங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். மொத்தத்தில் மனித இன்பங்களுள் தலையான உண்ணுதலை ஒரு கலையாகச் செய்பவர்கள் பிரெஞ்சுக்காரர்கள்!

திருமதி சிமோன் 

இராஜா பண்டிகை

                                                       

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். வாழ்க்கைப்பட்ட  இடமோ பாண்டிச்சேரி.என் கணவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தமிழர்.திருமணமான சில மாதங்களில் பாண்டிச்சேரியில்  இராஜா பண்டிகை வந்தது.காலையில் பாண்டு(band)  வாசிக்கப்பட்டு உள்ளூர் சொல்தாக்கள்(பிரெஞ்சு ராணுவத்தில் வேலை செய்தவர்கள் ) கடற்கரையில் அமைந்துள்ள சிப்பாய்கள் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை  செலுத்தினர்.பாண்டிச்சேரி பொது மருத்துவமனையின் அருகிலுள்ள பூங்கா   கடற்கரை எங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இரவில் வாண வேடிக்கை நடைபெற்றது கண்கொள்ளாக்  காட்சி. இந்தச் சிறப்புகளே  குறைவு . முன்பெல்லாம் அதிக செலவு செய்வார்களாம் இவ்விழாவுக்காக.  ஆமாம்  இராஜாவுக்கும் இந்த விழாவுக்கும் என்ன தொடர்பு?
எந்த இராசாவுக்காக   எதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது  என்று தெரிந்துகொள்ள  மிகுந்த ஆவலுடன் இருந்தேன். நீங்களும்  தானே?!

 மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசர்களை மக்கள் கொண்டாடுவது பொருத்தமானதே. அப்படி இல்லாமல் தங்கள் அரண்மனை ஆடம்பரங்களுக்காக அரசு வருவாயின் பெரும்  பகுதியைச் செலவிட்டு, பிரான்சின்  நிர்வாகப், பொருளாதாரச் சீர்கேடுகளைப்  பல்லாண்டுகளாக நீட்டித்திருந்த (பதினைந்தாம் லூயி,பதினாறாம் லூயி)  மன்னராட்சி முறையை வீழ்த்திய நாளுக்கான கொண்டாட்டம்தான் இது. பிரான்சில் அது நடந்தது 14 07 1789. இந்த நாள் Bastille Day (பஸ்தி நாள்) என்றும் "Fête Nationale"(தேசிய விழா) என்றும் அழைக்கப்படுகிறது. அதன் வரலாறு இதோ:

மன்னர்கள் உறுதியும் திறமையும் அற்றவர்களாகவும் ஆடம்பரத்தில் திளைத்தும் இருந்தனர்.அமைச்சர்களும் அதிகாரிகளும் ஊழல் மிகுந்தவர்களாகவும் நேர்மை அற்றவர்களாகவும் இருந்தனர். வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. இதனால்  மக்கள் அதிருப்தி கொண்டனர்.  'ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்' என்ற ராணி மேரி அந்துவானேத்தின் (மன்னர் பதினாறாம் லூயியின் மனைவி) கேலிப் பேச்சு   மக்களின் குமுறலை அதிகரித்தது.  
மேலும் வால்டேர்,ரூசோ , திதரோ,மண்டேச்க்கு முதலான அறிஞர்களின் எழுத்துகள்  மக்களின் போராட்டத்திற்கும்  புரட்சிக்கும் தூண்டுதலாக அமைந்தன.விளைவு   'பஸ்தி '  (Bastille)சிறைச்சாலை தகர்க்கப்பட்டது.
1789 ஜூலை 14 - ஆம் நாள் பல்லாயிரம்  பேர் கொண்ட மக்கள் கூட்டம் Hôtel des Invalides என்ற இடத்தில் அமைந்த படைக்கொட்டிலைச் சூறையாடி  ஆயுதங்களைக் கைப்பற்றியது. அதே போராட்ட உணர்வோடு அடுத்த சில நிமிடங்களில்  அடிமைத் தனத்தின் சின்னமாக திகழ்ந்த 'பஸ்தி '  சிறைச்சாலையைத் தகர்த்தெறிந்தார்கள்.ஒன்றுபட்ட மக்களின் எழுச்சியும் போராட்ட உணர்வும் செயல்பாடுகளும் அடக்குமுறைச் சின்னங்களையும் தகர்த்தெறியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது எனலாம்.இச்சிறை உடைப்பு நிகழ்வு நவீன காலப் பிரெஞ்சு தேசியத்தின்  எழுச்சியாகக் கருதப் பட்டது மல்லாமல் இந்நிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாக வடிவெடுத்து பிரான்ஸ்  குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது.   

 பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி   (monarchie "absolue" ) வீழ்த்தப்பட்டு, நிலப் பிரபுத்துவ , கிறிஸ்தவ அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.பல்லாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள், சமத்துவம், குடியுரிமை, வாழ்வுரிமை ஆகிய அனைத்திற்கும் வித்திட்டது பிரெஞ்சுப் புரட்சியே என்றால் மிகையாகாது. அது மட்டுமல்ல, பிரெஞ்சுப் புரட்சிதான் இவ்வுலகில் உள்ள எல்லா சோசியலிச குடியரசு புரட்சிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளில் குடியரசு அரசாங்கம் அமைவதற்கும் அடித்தளமிட்டது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.    
 
1880 முதல் இந்த நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு  கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிரெஞ்சு இராணுவ அணிவகுப்பு Champs Elysées என்ற அவெனுயுவில் நடைபெறும்.முப்படைகளின் ராணுவ மரியாதையைக் குடியரசுத் தலைவர் தன் சக அமைச்சர்கள் , அழைக்கப்பட்ட விருந்தினார்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்.இதுதான் ஐரோப்பாவில் மிக பழமையும் நீளமுமான அணிவகுப்பாகும்.இந்த அணிவகுப்பின் நேர்முக வருணனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். 1971 ஆம் ஆண்டு அணிவகுப்பில் பெண்கள் முதல் முறையாகப் பங்கேற்றனர்.
1989 - பிரெஞ்சு புரட்சியின் 200 -ஆம் ஆண்டின் நிறைவை முன்னிட்டுப் பல  சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. மார்கரெட் தட்சர், ஜார்ஜ் புஷ், ஹெல்முட் கொஹி போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.
அண்மைய  காலங்களில்  நேச  நாடுகளின் தலைவர்களும்  ராணுவமும்  அணிவகுப்பில் பங்குபெற அழைக்கப்படுகிறார்கள். 1994 -ஆம் ஆண்டு குடியரசு தலைவர் மித்திரன் அவர்களின் அழைப்பை ஏற்று  ஜெர்மன் வீரர்கள் பங்கேற்றனர்.
1999 -இல் மரோக் அரசர் ஹசன் II பங்கேற்றுச் சிறப்பித்தார்.
2005 -இல் பிரேசில் தலைவர் லுலா(Lula) அவர்களும் அந்நாட்டு இசைக்குழுவினர்,  விசேட  விமானப் பிரிவினர்களும் (escadrille de la fumée) சிறப்பு  செய்தனர் .
2007- ஹெலிகாப்ட்டர் உருவாக்கத்தின் 100 -ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது.மேலும் traité de Rome கையொப்பமிட்டதின் 50 -ஆவது ஆண்டின் நினைவாக, 27 ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தவர்கள் குடியரசு தலைவர் சர்கோசி அழைப்பிற்கிணங்கி வந்திருந்தனர்.        

2008 -இல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மேடையின் முன்பாக பிரான்ஸ், ஐரோப்பியக் கூட்டணி, ஐ.நா.சபை ஆகிய கொடிகளை ஏந்திய வீரர்கள் பராசுடில் இறங்கி மக்களை மகிழ்வித்தது முதல் முறையாகும்.
2009: இந்தியாவுக்குச் சிறப்புக் கவுரவம் அளிக்கப்பட்டது.90 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவ பேண்டு இன்னிசைக் குழுவினர், எழுச்சி பாடல்களை இசைத்தபடி முன் செல்ல இந்தியாவின் முப்படைகளையும் சேர்ந்த 400 வீரர்கள் அணிவகுப்பில் பீடுநடை போட்டனர். இந்த அணிவகுப்பை அதிபர் சர்கோசியுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்  பார்வையிட்டார். பிரான்ஸ் தேசிய தின விழா அணிவகுப்பில் இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
 2010: முன்பு ஆபிரிக்கா கண்டத்தில்  பிரான்சின் வசமிருந்த 13 காலனிகள் பங்கேற்றன.
2011: ( France outre-mer) பிரான்சின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஆனால் பிரான்சுக்கு வெளியில் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் லா மர்செய்ஸ் பாடிச் சிறப்பித்தனர். தீயணைப்புப்   படை உருவாக்கத்தின் இரண்டாம் நூற்றாண்டின் நினைவாக அவர்களால் பல சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.       

 பிரான்சில் பெரும்பாலும் எல்லா நகரங்களிலும் 13 அல்லது 14 தேதிகளில் வாண வேடிக்கை நடத்தப்படும். மேலும் Bal நடனமும் நடத்தப்படும்.
 இந்த நாளில் சிறு  சிறு குற்றங்களை மன்னிக்கும்  அதிகாரத்தைக்   குடியசரசுத் தலைவருக்குப் பிரெஞ்சு அரசியலமைப்பு  தந்துள்ளது.

"போராட்டமே பொதுமக்களின் திருவிழா" என்ற லெனின் சொற்கள் இங்கு மெய்ப்பிக்கப்பட்டுள்ளன எனலாம். பிரான்சின் புரட்சியாக வெடித்த போராட்டம் மக்களின் கோலாகல விழாவாக நடைபெற்று வருகிறது.

_- லுர்சியா லெபோ