பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 31 octobre 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                                     

அன்புடையீர்,

வணக்கம். நாம் எப்பொழுதோ கேட்டு மறக்காத ஒரு கதை. முருகன் மயிலேறி உலகைச் சுற்றப் போய்விட, விநாயகர் பெற்றோரைச் சுற்றி வந்து, பரிசாக மாம்பழத்தைப் பெற்றக் கதை. இது பொதுவாக, உலகை விடப் பெற்றோர் உயர்ந்தவர் என்ற உயரிய நோக்கில் சொல்லப்படுவது. நன்றாக யோசித்துப் பார்த்தால், நடைமுறை வேறாக இருந்தாலும்,  இந்த உலகில் 'தான்' வாழ கடவுளுக்கு அடுத்தபடி காரணமாய் இருந்த அந்த இருவரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கச் சொல்லும் அற்புதமானக் கதை. ஆனால் சமீபத்தில் இதை வேறோர் கோணத்தில் ஒருவர் கண்டதை அறிய வாய்ப்பேற்பட்டது.

முருகனைப் பொறுத்த மட்டில்  அனுபவம் பெறுவது அவரது உலகம் என்றால், வீட்டில் அமைதியான முறையில் சுற்றத்தோடு வாழ்வது விநாயகரின் உலகம் என அவர் விளக்கினார். இதுவும் பார்க்க வேண்டிய ஒரு கோணமே! அதுவும் இன்றையச் சூழலில் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகவும் படுகிறது.

ஒவ்வொருவருடைய ருசியும், ஆசையும், தரமும், லட்சியமும் வெவ்வேறாக உள்ளன. ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ளவோ ஏற்காவிடில் புரிய வைக்கவோ யாருக்கும் பொழுதில்லாத இக்காலக் கட்டத்தில் 'இது என் உலகம்' இதை நான் மதிக்கிறேன்; விரும்புகிறேன். அதே போல் நீ விரும்பும் உன் உலகத்தில் நீ வாழ்ந்து கொள். அதை நான் தடுக்க மாட்டேன்'  என வாழ்வது எத்தனை இலகுவாகப் பிரச்சனைகளை எளிதாக்கும்?

'தான்' வாழும் முறைதான் சிறந்தது; தன் மதம் தான் உயர்ந்தது; தன்னை விடச் சிறந்தவன் வேறு யாருமில்லை என்ற மனோபாவம்தான் சிக்கலையே உண்டாக்குகிறது. பிறரை சகித்துக் கொள்ள விடமாட்டேன் என்கிறது. தனித் தீவாக வாழ்ந்தாலும் பரவாயில்லை. பிறருக்கு கெடுதல் செய்யாமல் இருந்தால் போதும் பாராட்டுவோம்  என்று நினைக்கும் நிலைக்கு மனித இனம் வந்து விட்டது.

விஞ்ஞானம் இன்னொரு பிரபஞ்சத்தையே இன்னும் சிறிது நாட்களில் நிரூபித்து விடுமாம். அப்படிப்பட்ட பிரம்மாண்டத்தின் ஓர் அணுவான உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் உள்ள ஏதோ ஒரு சிறிய ஊரின் ஒரு சின்னஞ்சிறு தெருவின் சிறுவீட்டில் சிலரின் நடுவே வாழும் வெறும் ஆறடி உயர மனிதனின் சிறுமையைச் சற்றே சிந்தித்தால் 'தான்' என்னும் எண்ணமே அழிந்து போகும்!

திருமதி சிமோன் 

கவிதைச் சிந்தனை

                                       
                                            


எந்தப் புத்தகத்தைப் படித்தாலும்,
நமக்குள் இருப்பதுதான் எழுதி இருக்கிறது!


இருப்பதற்கென்றுதான் வருகிறோம், ஆனால் 
 இல்லாமல் போகிறோம்!


ஆர்ப்பரிக்கும் கடலின் அடித்தளம் 
மவுனம்; வெறும் மவுனம்!   -   நகுலன் 


பூப்பதெல்லாம் பூவெனில் - உன் 
புன்னகை எது?


நான் விரும்பியதெல்லாம் தொலைவில் 
நேற்று நிலவு, இன்று நீ!   -  கார்த்திகேயன்


இவன் பசுவின் பாலைக் கறந்தால் 'பசு பால் தரும்' என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால் 'காகம் வடையைத் திருடிற்று' என்கிறான்.


பாட்டன் நாக்கில் முழக்கம்:'வெள்ளையனே வெளியேறு'
பேரன் நாக்கிலேயே வெள்ளையன்.


வேறுபாடு அதிகம் இல்லை நாற்காலிக்கும், கட்டிலுக்கும்.
வீடு தூங்கக் கட்டில். நாடு தூங்க நாற்காலி. -  காசி ஆனந்தன்


கீரை விற்ற கிழவியிடம் பேரம் பேசி சேமித்தேன்
ஒரு ரூபாய் பணமும் ஒரு மூட்டை பாவமும்.


திதி நாளன்று படையல் அம்மாவுக்கு
மற்ற நாளில் பசிக்காதா என்கிறாள் குழந்தை!


மரணித்த மழலைகளில் தன் பிள்ளை இல்லையெனும் நிம்மதி
நொடிப் பொழுதாயினும் எத்தனைக் குரூரமானது!  -  சபிதா இப்ராஹிம் 


குறும் செய்திகள்

                                                                 

ஒன்றரை அடியில் குறள்  எழுதி பலபல கருத்துக்களையும் அறிவுரைகளையும் நமக்கு அளித்த திருவள்ளுவர் நான்கடிகளில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! தனது மனைவிக்காக அந்தப் பாடலை எழுதினார்.
அவரது மனைவி வாசுகி தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து ஒருபோதும் விமரிசித்ததே இல்லை.அவர்  செய்தால் எல்லாம் சரியாகத்தான்  இருக்கும் என்று நம்பினார். எடுத்துகாட்டாக:
வள்ளுவர் சாப்பிடும் பொது ஒரு கொட்டங்குச்சியில் தண்ணீரும் ஒரு ஊசியும் வைத்துக்கொண்டு  சாப்பிடுவாராம்.இவற்றை அவர்  பயன்படுத்தி ஒருநாளும் அந்த அம்மையார் பார்த்ததில்லையாம்.இதற்கான காரணத்தை தான் இறக்கும் தருவாயில்தான் கணவரிடம் கேட்டு  தெரிந்துக் கொண்டாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார்.இருவருக்கும் பழைய சாதம் பரிமாறினார் அம்மையார்.அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது விசிறு என்றார். பழைய சோறு சுடுமா? அந்த அம்மையார் கேள்வியே கேட்காமல் விசிறினார்.

அத்தகைய அன்பு மனைவியின் பிரிவைத் தாளாமல் அவர் எழுதியதுதான்  அந்த நான்கடிப் பாடல் இதோ:

 அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்
இனிதா(அ) ய் என் தூங்கும் என்கண் இரவு.

அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே!என்  சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்  பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என்  கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!என்பது பாட்டின் உருக்கமான பொருள். இந்த காலத்தில் இப்படிப்பட்ட பெண்ணை காண முடியுமா?

காந்தி கணக்கு:

பிறரை ஏமாற்றுவதைதான் காந்தி கணக்கு என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.அதன் உண்மையான அர்த்தம் என்ன?
மகாத்மா அவர்கள் உப்பு சத்தியாகிரகம் தொடங்கியபோது வியாபாரிகள் பலர் அவருக்கு தார்மீக ஆதரவு அளித்தார்கள்.இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்கள் தங்கள் கடைகளில் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு பணம் தராமல் 'காந்தி கணக்கு" என்று சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்கமாட்டோம் என்றார்கள். இப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.

பண்டிதனைவிட பாமரன் . . .:

பேராசிரியர் கல்கி ஒரு முறை “தமிழில் சிறுகதை“ என்னும் தலைப்பில் வானொலியில் பேசினார். சிறுகதை என்பது முதல் வரியைக் கூறும் போதே கேட்பவர் அடுத்தவரி என்ன? என்று கேட்கத் தூண்டுவதாக இருக்கவேண்டும்“ என்றார். உதாரணத்தையும் கூறினார்.

ஒருநாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த சுவாமிகள் தம் வேலையாளைக் கூப்பிட்டு , “குப்பா நீ ஸ்ரீபெரும்புதூருக்குப் போய், திருவெங்கடாச்சாரியார் ஐயங்கார் சுவாமிகள் திருக்கோவில் ஆராதனைக்கு திருத்துழாய் எடுக்கையில், திருக்கோயிலின் திருக்குளத்தில் திருப்பாசி வழுக்கி திருவடி தவறி விழுந்துவிட்டார் என்று கூறிவா"  என்றார்.

பின்னர், “குப்பா, சொல்வாயா. எங்கே ஒரு முறை கூறிக்காட்டு பார்க்கலாம் என்றார்.

அதற்குக் குப்பன், “ சாமி, கும்பகோணத்து ஆசாமி குட்டையில் விழுந்ததை, ஸ்ரீபெரும்புதூர் ஆசாமிக்குச் சொல்லவேண்டும் அவ்வளவுதானே? என்றான்.
ஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதனை விடப் பாமரன் தேர்ச்சியுடையவனாகவுள்ளான்.

சிரிப்பும் சிந்தனையும்,,,

சரியான நகைச்சுவை என்பது சிரிக்க வைத்து சிரித்தவனை சிந்திக்கவும் வைக்கவேண்டும்.

கூட்டத்தைச் சிரிக்க வைக்க காமராஜர் எப்போதும் முயன்றதில்லை.
அதற்காக நகைச்சுவை உணர்வே இல்லாதவர் என்று நினைக்க வேண்டாம். நாட்டு எண்ணமும் நாடு பற்றிய சிந்தனையுமாகவே இருந்ததால், கூட்டத்தை நகைச்சுவையால் ருசிப்படுத்த வேண்டும் என்ற நாட்டமே இல்லாமல் இருந்தார் எனலாம்.அவரது நகைச்சுவை சிந்தனை முடிச்சாக இருக்கும்.சொல்லும்போது சிரிக்க வைத்துச்சொல்லி முடிந்ததும் சிந்திக்க வைக்கும் செய்திகள் அதற்குள் அடங்கியிருக்கும்.

ஒரு முறை காமராஜர் அவர்கள் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத் தலைவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர்.வந்தவர்கள்  ஐயா எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்லப் பாதை அமைத்துத் தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள்.உடனே தலைவர் சிரித்துக் கொண்டே ” நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை தேடுகிறீர்களே?” என்றார். அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

தொகுப்பு: லூசியா லெபோ.

வெட்டி வேலை

                                                   

1. எல்லா ஆண்களும் வேலை மிக்கவர்கள்.
2. எனினும் பெண்களுக்கு நேரம் ஒதுக்குவார்கள்.
3. நேரம் ஒதுக்கினாலும் சரியாகக் கவனிக்க மாட்டார்கள்.
4. கவனிக்கா விட்டாலும் ஒரு பெண் கிடைப்பாள்.
5. கிடைத்தாலும் வேறு பெண்ணைத் தேடுவார்கள்.
6. தேடினாலும் அவள் விலகிப் போவாள்.
7. விலகினாலும் தேடுவதை நிறுத்த மாட்டார்கள்!

1. பெண்கள் சேமிப்பை விரும்புவார்கள்.
2. ஆனாலும் சேலை வாங்கிக் குவிப்பார்கள்.
3. குவித்தாலும் உடை போதாமல் திண்டாடுவார்கள்.
4. திண்டாடினாலும் அழகாக அணிவார்கள்.
5. அணிந்தாலும் பழையத் துணி போலவே பாவிப்பார்கள்.
6. பழசாகப் பாவித்தாலும் பாராட்டை விரும்புவார்கள்.
7. பாராட்டும்போது  நம்ப மாட்டார்கள்.    -   நெட்டிசன்  


ஒரு ஆடு 25 ரூபாய் வீதம் இரண்டு ஆடுகளை ஒருவர் விற்றார். பிறகு ஐந்து ரூபாயை ஆடு வாங்கியவர்களிடமே கொடுத்து விடும்படி வேலைக்காரனை அனுப்பினார்.   அவன் தான் இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு மீதியை அவர்களிடம் கொடுத்தான். அவர்களும் தலைக்கு ஒன்றரை ரூபாய் எடுத்துக் கொண்டார்கள். மேலெழுந்த விதமாக இதில் குழப்பம் ஏதுமில்லை. ஆனால் கீழ்க்கண்டபடி கணக்கிட்டுப் பாருங்கள்:

ஆட்டுக்குக் கொடுத்தப் பணம் = 25.00
பிறகு பெற்றுக் கொண்டது        =   1.50
எனவே ஒரு ஆட்டின் விலை   = 25.00 - 1.50 = 23.50
இரண்டு ஆடுகள் விலை            = 23.50+23.50 = 47.00
வேலைக்காரன் எடுத்தது          = 47.00 + 2.00 = 49.00
அப்படியானால் மீதி ஒரு ரூபாய் எங்கே போயிற்று?

A to Z:

'A brown fox jumped over the lazy dogs quickly'

ஒருவர் 200 தேங்காய்களை இரு மூட்டையில் சாக்குக்கு 100 வீதம் கட்டினார். வழியிலுள்ள  100 சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு சாவடியிலும் மூட்டைக்கு ஒரு தேங்காய் வீதம் கொடுத்துவிட வேண்டும். அப்படி இருந்தும் வீட்டுக்கு 50 காய்களுடன்  சென்றார். எப்படி?

(50 சாவடிகளைக் கடந்த பின் ஒரே மூட்டை ஆக்கி விட்டால் முடியும்)


ஒரு கிலோ பஞ்சு 100 ரூபாய்க்கு வாங்கி நூத்து 50 ரூபாய்க்கு வித்தால் லாபமா, நஷ்டமா?

நஷ்டம் தான். 100 ரூபாய்க்கு பஞ்சு வாங்கி நூத்து (நூற்று) அதை 50 ரூபாய்க்கு விற்றால் நஷ்டம்தானே!

  



மறை(ற )ந்து போன அடையாளங்கள் :

சுமை தாங்கி :

பண்டைய காலத்தில் பெரும் வணிகர்கள் குதிரை , மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வந்தனர் . சிறு வணிகர்கள் தலையில் பொருட்களை சுமந்து கொண்டு நடை பயணமாகவே செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர் . இப்படி நடை பயணம் செல்லும் வணிகர்களுக்கு , பொது மக்களுக்காக தமிழ் மண்ணில் மக்களால் உதவும் வகையில் அமைக்கப்பட்டதுதான் சுமைதாங்கி கல் .

செங்குத்தாக தரையில் இருந்து 4 அல்லது 5 அடி இடைவெளியில் நிற்குமாறு ஊனப்படுகிறது .நிற்கும் ரெண்டு கற்களுக்கு மேலே தரைக்கு இணையாக ஒரு கல் வைக்கப்படுகிறது .இதுதான் சுமை தாங்கி கல். 




இதன் பயன் என்ன என்று பாத்தால் நடை பயணிகள் ஒரு ஊரில்இருந்து மற்றும் ஒரு ஊருக்கு செல்லும்போது எந்த நேரத்தில் சென்று அடைவோம் என்று தெரியாது . இந்த மாதிரி நேரங்களில் இடையில் ஓய்வு எடுப்பதற்காக இந்த சுமை தாங்கி கற்கள் உதவுகின்றன . யாருடைய உதவியும் இல்லாமல் இந்த சுமை தாங்கி கல்லின் மீது சுமைகள் இறக்கி வைத்து ஓய்வு எடுத்து விட்டு பின்பு சுமைகள் எடுத்து கொண்டு பயணத்தை தொடரலாம் .

மருத்துவ வசதி விருத்தி அடையாத அந்த நாள்களில் பிரசவத்தின் போது கர்ப்பிணித் தாய்மார் மரணிப்பது பொதுவான வேதனையான விடயமாக இருந்தது. இவ்வாறு மரணித்த தாய்மார்களின் ஞாபகங்களாக சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் நீங்கியது  என்பது அர்த்தம் .

வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன.காலமாற்றத்தால் காணாமல் போன அடையாளங்களில் சுமைதாங்கியும் ஒன்று. பிறர் பொருளுக்கு ஆசைப்படத் தயங்காத இந்தக் காலத்தில் சுமை தாங்கிகளைக் கூட திருடிச் சென்று விடுவதாகக் கேள்வி.

பல உறுப்பினர்கள் உள்ள ஒரு பெரிய குடும்பத்தில் ஒருவரே பொருள் ஈட்டுபவராகஇருந்து எல்லோருடைய தேவைகளையும் அவரே கவனித்துக்கொண்டிருந்தால்அவரை அந்தக் குடும்பத்தின் எல்லா சுமைகளையும் தாங்கிக்கொள்ளும் 'சுமைதாங்கி'என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவதும் உண்டு.இத்தகைய வாழும் சுமைதாங்கிகளுக்கு விடிவு-  காலம்தான் சொல்ல வேண்டும் .

திண்ணை:

திண்ணை என்பது, மரபுவழி வீடுகள் கிராமத்து வீடுகளில்  வாயில் கதவுக்கு அருகிலோ அல்லது அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்பாகும்.அங்கு ஒரு ஆள் முதல் பல பேர் உறங்கலாம்.


முன் திண்ணையைத் தாங்கிக் கொண்டு நிற்கும் தேக்கு மரத் தூண்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.


வழவழப்பான தூண்களூம் சிவப்பு சிமெண்ட் தரையும் மரவேலைப்பாடுகளுமாய் உள்ள திண்ணையாகட்டும்.. சிறு மூங்கில் கழி வைத்து கூரையைத் தாங்க செய்து சாணி மெழுகிய திண்ணையாகட்டும்.. அதற்கு ஒரு கவர்ச்சி இருந்தது.. சுவற்றில் சின்ன மாடமும் எப்போதும் ஒரு பானைத்தண்ணீரும் வைத்திருக்கும் வீடுகள் கூட உண்டு.


தாத்தா பாட்டிகளுக்கு வீட்டுக்குள் அடைஞ்சு கிடப்பது பிடிக்காது.திண்ணைதான் அவங்க உலகம்.கிராமங்களில்  வீட்டு திண்ணையில்  தோழிகள் உட்கார்ந்து  தாயம், ஏழாங்கல் விளையாடும் காட்சியையும் பார்க்கலாம்.

 சாலைகளை அண்டியுள்ள வீடுகளின் திண்ணைகள் பொதுவாகச் சாலைகளுக்குத் திறந்தே இருப்பது வழக்கமாதலால் பழங்காலத்தில் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டன. திண்ணைங்கறது தனிக் குடும்ப உபயோகம் தவிர்த்து பல சமுதாய நலக் காரணிகளைக் கொண்டு இருந்தக் காலம் அவை. வழிப்போக்கர்களும் தங்கி செல்ல ஓரிடத்தை ஒதுக்கிய பழந்தமிழர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் ....! பழந் தமிழ் இலக்கியங்களில் இதற்கான சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும்.


இப்படி மற்றவர்களை பற்றியும் யோசித்து அவர்களுக்கான வசதிகள் செய்து தந்து வாழ்ந்த நம்  சமூகம் இன்று மனதிற்கும் உடமைகளுக்கும் சுவர் எழுப்பி குறுகி போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் திண்ணை இருக்கும் பகுதியையும் தடுத்து ஒண்டுகுடித்தனங்களாக  ஆக்கி பணம் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

முற்றம்:

  நாற்சார் வீடு என்பது, நடுவில் கூரையிடப்படாத திறந்த வெளியைச் சுற்றி அறைகளும், கூடங்களும் அமைத்துக் கட்டப்படும் வீடுகளாகும். நடுவிலுள்ள இத் திறந்த வெளி முற்றம்  என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நடுவில் முற்றம் அமையக் கட்டப்படுகின்ற வீடுகள் உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. எனினும் அவற்றிடையே பல விதமான வேறுபாடுகள் உள்ளன. உள் நோக்கிய வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்களிலேயே இத்தகைய வீடுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

முற்றம் - வீட்டின் நடுப்பகுதியில், வெளிச்சமும் காற்றும் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வீட்டின் எல்லா அறைகளையும் இணைப்பதாக இருக்கும். மேற்கூரையை நம் விருப்பத்திற்கேற்ப கம்பிகள் போட்டோ, திறந்த வெளியாகவோ, கண்ணாடி பொருத்தியோ வைத்துக் கொள்ளலாம். கூரை, சாய்வாக இருப்பது நல்லது. வீட்டின் தலைவாசலும், முற்றத்தின் வாயிலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். முற்றத்தில் நடுவில் துளசிமாடம் இருக்கும்.பெரும்பாலும் காரைக்குடி செட்டிநாடு வீடுகளில் விசாலமான முற்றம்,இருக்கும். வீட்டு முற்றம் தான் பிள்ளைகளின் விளையாட்டு மைதானம்.  

                                                                 

தொகுப்பு: லூசியா லெபோ    

         


samedi 26 octobre 2013

வகுப்பறை சிரிப்புகள்






சிரிப்புகளுக்குப் பஞ்சம் இல்லாத இடம் வகுப்பறைகள் என்பது என் சொந்த அனுபவம். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போதும் சரி கல்லூரிகளில் பாடம் நடத்திய போதும் சரி ஏற்பட்ட சிரிப்பு அனுபவம் ஏராளம். அவற்றில் இருந்து ஒரு சில உங்கள் பார்வைக்கு :
 அப்போது எல்லாம்  புகுமுக வகுப்பு இருந்தது. (இதனைச் சிலர் புதுமுக வகுப்பு எனத் தவறாகச் சொல்லுவதும் உண்டு! ; Pre-University class - P.U.C என்று அழைப்பர்). இங்கு எல்லாப் பாடங்களும்  ஆங்கிலத்தில்தான் இருக்கும். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் விளக்கம் தருவார்கள். மெட்ரிகுலேசன் படித்த மாணவர்களுக்குச் சிக்கல் இல்லை ; ஆனால், பாவம் தமிழ் வழி படித்து வந்தவர்கள் சமாளிக்க முடியாமல் திணறிப் போவார்கள்! எங்களில் சிலர் அவர்களுக்குத்  தமிழில்  விளக்கம் சொல்லி உதவி செய்வோம்.

ஒரு முறை நடந்த சம்பவம் இது : Physics பேராசியரியர் திரு சிதம்பரம் (பாலக்காட்டு ஐயர்) மும்முரமாகப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். மாணவர்கள் இருவர் பாடத்தைக் கவனிக்காமல் பேசிக்கொண்டு இருந்தனர்.சினங் கொண்ட பேராசிரியர்
'stand up ' என்று கர்ச்சித்தார். அவர்களுக்குப் புரியாததால் எழுந்து நிற்கவில்லை. அருகில் இருந்த நான் நிமிண்டிவிட்டு 'எந்திரிச்சி நிக்கச் சொல்றாருடா' என்றேன். பிறகுதான் எழுந்து நின்றார்கள். சினம் தலைக்கேறிய அவர் அரைமணி நேரம் மிகக் கடுமையாக விளாசித் தள்ளிவிட்டார். எல்லாம் ஆங்கிலத்தில்தான். இவர்கள் இருவரும் திருதிருவென்று விழித்துக்கொண்டு அவ்வப்போது என்னை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்! முத்தாய்ப்பாகப் பேராசிரியர் 'you understand? ' என்று கடுமையாகக் கேட்டார் . அதற்கும் இவர்கள் முழிக்கவே, தமிழுக்கு மாறிய அவர் 'என்ன, புரிந்ததா?' என்று கேட்டதும் அவர்களுள் ஒருவன்  போட்டானே ஒரு போடு."ஒண்ணுமே புரியல சார்" என்று. அனைவரும் குப்பென்று சிரித்துவிட்டோம். பேராசிரியருக்கும் சிரிப்பு தாளவில்லை. கோபம் அடங்கிய அவர், 'அடப் பாவிங்களா, தொண்ட வறள அரை மணி நேரம் கத்தி இருக்கென் ; இனியும் கத்த தெம்பு இல்லை உக்காருங்கடா " என்று கூற மறுபடி சிரிப்பலை!

இலயோலா கல்லூரியில் எங்களுக்கு 'Heat' பாடம் நடத்திகொண்டு இருந்த  விரிவுரையாளர் திரு ஜோசெப், மாணவர் ஒருவரை விளித்துத்  துறைக்குச் சென்று 'drawer' இல் தான் வைத்திருக்கும் 'duster' - எடுத்துவரப்  பணித்தார். திரும்பி வந்த அவன் "sir, your drawer is locked' என்றான். அவர், "no, no ,I always   keep my drawers open!' என்றார். உடனே நான் அடித்த கமெண்ட் : 'put up your buttons and be civilised , sir!"அவ்வவுதான் வகுப்பு முழுக்க சிரிப்பலைகமெண்ட் அடித்தவன் நான்தான் என்று இன்றுவரை அவருக்குத் தெரியாது.
கல்லூரிக் காலத்தில் விடுதியில் தங்கிப் படித்து வந்ததால் பல நண்பர்கள் எனக்கு இருந்தனர். அவர்களோடு சேர்ந்து (ஆங்கிலத் ) திரைப்படங்கள், மெரினா கடற்கரை எனச் செல்வது உண்டு.  பேருந்துக்குக் காத்திருக்கும் சமயங்களில் ... அங்கு நிற்கும் இளம் பெண்களைப் பார்த்து எங்களுக்குள் சில பரிபாசைகளில் கமெண்ட் பறி மாறிக் கொள்வது வழக்கம் (இளமை ஊஞ்சலாடிய காலங்க அது!). ஒருமுறை மிகவும் குண்டான பெண்ணைப் பார்க்க நேர்ந்தது. அப்போது என்னை சுற்றி இருந்த நண்பர்கள் biology மாணவர்கள். எனவே அவர்களுக்கு மட்டும் புரியும் வகையில் 'டேய் பக்கத்துல பாத்தீங்களா, 'cuccurbita maximaa''நிக்குதுடா! நல்லாத்தான் இருக்கு குண்டா இருந்தாலும்' அப்படின்னு நான்  சொன்ன உடனே பட்டென்று வந்து தாக்கியது அவள் பதில் : "போங்கடா 'moringa oleiferra ' பசங்களா" என்று. ( 'cuccurbita maximaa'  = பூசணிக்காய்  ; 'moringa oleiferra'  = முருங்கக்காய்)  அப்போது எல்லாம் நாங்கள் ஒல்லியாக இருப்போம்! பாவி அவளும்  biology  மாணவி போலும். அப்புறம் ஏன் அங்கே  நிற்கிறோம், அடுத்த stop நோக்கி நகர்ந்து விட்டோம்.

பேராசிரியராகப் பணியாற்றிய காலம் என் வாழ்வின் பொற்காலம் ; என் வகுப்பில் என்றுமே சிரிப்புக்குப் பஞ்சம்  இராது. எங்கள் துறையிலும் அப்படித்தான். எங்கள் தமிழ்த் துறையில் கடைநிலை ஊழியராக இருந்தவர் பெயர் பாவாடைசாமி. பாவாடை என்றுதான் இவரை அனைவரும் அழைப்போம். இதனாலேயே பல சமயம் சிரிப்பலைகள் எழும். எங்கள் கல்லூரி இருபாலாரும் பயிலும் கல்லூரி. மாணவ மாணவிகள் தத்தமக்குப் பிடித்த பேராசிரியர்கள் மேசையைச் சுற்றி நின்று  அளவளாவுவது வழக்கம். அன்றைக்கு ஒரு நாள் என்னைச் சுற்றிப் பாவாடை தாவணிகளின் கூட்டம். கல்லூரி முதல்வருக்கு அவசரமாகக் கடிதம் ஒன்று அனுப்புவதற்காகக் கடைநிலை ஊழியரைத் தேடிய துறைத் தலைவர், "பாவாடை எங்கே, பாவாடை எங்கே? பாவாடையைப் பாத்தீங்களா? " என்று உரத்த குரலில் கூவியவாறே வந்தார். வாயைப் பொத்திக்கொண்டு மாணவிகள் சிரிக்கிறார்கள் அவரோ, "பெஞ்சமின்பாவாடை எங்கே இருந்தாலும் தேடிக்  கண்டுபிடிங்க" என்று உத்தரவு போட்டுவிட்டு நகர எனக்கோ சிரிப்பு தாங்க வில்லைபாவாடையாலே விளைந்த சிரிப்புகள் பல உள .. அவை நாகரிகம் கருதி அவற்றை இங்குக் கூறாமல் விடுக்கிறேன்.
ஒருமுறைகட்டுரை தொடர்பாகப் பேச  மாணவி ஒருவரைத்  துறைக்கு வரச்சொல்லி இருந்தேன். அவர்  தன்  தோழியர்  இருவருடன் வந்து சேர்ந்தார். அவரிடம் கட்டுரை தொடர்பாகச் சொல்ல வேண்டியவற்றைச் சொன்ன பின் "வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடை பெறுவது போல் தோன்றுகிறதே .." என்றேன்.

முதலில் நாணிக்  கோணினாலும் 'ஆமாம்' என்று ஒப்புக்கொண்டார். உடனே தோழியர் அவர் மேல் பாய்ந்தனர்: "ஏண்டி எங்களுக்குக் கூடச் சொல்லலை ; சாருக்கு மட்டும் சொன்னியாக்கும்" என்று. 'அய்யய்யோ, நான் சொல்லலை..." என்று அப்பெண் மறுத்தார். இப்போது அவர்கள் என் மீது பாய்ந்தார்கள், "உங்களுக்கு எப்படி சார் தெரிந்தது?" என்று. "கட்டுரைச் சுவடியில் எழுதி இருந்தார்களே" என்றேன் நான். அவர்களுக்குப் புரியவில்லை. அப்பெண்ணின் கட்டுரைச் சுவடியை எடுத்துக்  காட்டினேன்.
"அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல" என்று சரியாகத் தானே சார் எழுதி இருக்கா! என்று சொன்னார்கள்.
" பெண்களாமறுபடி சரியா கவனிச்சுப் பாருங்க :
"
அறத்தான் வருவதே இன்பம் " என்பதில் 'கரத்தைக் காணோமே ...என்று சொன்னேன். மறுபடி கவனித்த அவர்கள் ஆமாம் சார் 'அத்தான் வருவதே இன்பம்'ன்னு எழுதி இருக்கா! என்று சொல்லி அப்பெண்ணைக் கிண்டல் செய்ய ஒரே நகையொலிதான்.

இப்படி ஒரேழுத்துப் பேதத்தால்  விளைந்த சிரிப்பை மாணவன் ஒருவனின் தேர்வுத் தாளில் கண்டேன். 'தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்'  என்ற பாரதிதாசனின் வரியை அவன் இப்படி எழுதி இருந்தான் :
'தமிழைப் படித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்' என்று!
கட்டுரைச் சுவடிகளில் ஏராளமான நகைச்சுவை முத்துகளைக் காணலாம். மொழிபெயர்ப்பிலும் அப்படியே : 'small irrigational project' என்பதை மாணவன் எப்படி மொழி பெயர்த்து இருந்தான் தெரியுமோ ; இப்படிதான் : 'சிறுநீர் பாசனத் திட்டம்' என்று!
'கெடுக சிந்தை கடிதிவள் துணிவேஎன்னும் ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல், பல்கலைக் கழகப்  பாடத் திட்டத்தில் அமைந்திருந்தது. அக்காலத்தில் கலைஞர் மு  கருணாநிதி அவர்கள் இப்பாடலின் கருத்தை வசன கவிதை வடிவில் உணர்ச்சி மிக்க துடிப்பான  வசனங்களில் எழுதி இருந்தார் ; அதனை நடிகர் திலகம் சிவாசி கணேசன் அவர்கள் தம் சிம்மக் குரலில் ஏற்றம் இறக்கம் நிறைந்த தொனியில் பேசிய காட்சி ஏதோ ஒரு படத்தில் வெளி வந்தது. இவற்றைப் பற்றி எல்லாம் வகுப்பில் விரிவாகக் குறிப்பிட்டு இப்பாடலை மாணவர்களுக்கு விளக்கி இருந்தேன். (இப்பாடலை அறியாதவர்களுக்காகச்  சிறு விளக்கம் : முதல் நாள் போரில் தந்தையைப் பறிகொடுத்த பெண் ஒருத்தி இரண்டாம் நாள்  போரில் கணவனையும் இழந்தாள் ; இன்றைய போருக்கு அனுப்ப வீட்டில் யாரும் இல்லை அவள் வீட்டில் ; அதனால் கவலையுற்ற  அவள்அரச மரத்தடி ஆசானிடம் பாடம் கேட்கச் சென்றிருந்த பாலகனான தன்  ஒரே மகனை அழைத்து வருகிறாள் ; அவனுக்குப் புத்தாடை உடுத்தித்  தலை  வாரி வீர வாளைக் கையிலே கொடுத்துப் "போர்க்  களம் நோக்கிப் போ" என அனுப்பிவைத்தாளாம் ! ).
தேர்விலே மாணவன் என்ன எழுதி இருந்தான் தெரியுமா? சொன்னால் வெட்கக் கேடு ; இருந்தாலும் வேதனையோடு சொல்கிறேன் : அவன் எழுதியதை அப்படியே தருகிறேன். ஆண்டுகள் பல கடந்தாலும் நெஞ்சில் கல்வெட்டடாய்ப்   பதிந்து விட்டதே.

"
முன் நாள் போரில் கணவனை இழந்தபின் தான் பெற்ற மகனை இழுத்து வந்து வாளை எடுத்து தலையைச் சீவிக் கையிலே  கொடுத்து போர்க்களம் போ என்று சொன்னாளாம்! "
இது எப்படி இருக்கு!
அந்த மாணவனை அன்றைக்கு நிற்க வைத்து - கணவனை இழந்த பின் எப்படி அப்பா அவள் பிள்ளை பெற முடியும்! அவள் ஒழுக்கத்துக்கு இழுக்கு தருகிறதே உன் எழுத்து! வாளை எடுத்துத் தலையைச் சீவிய பிறகு பையனைப் போர்க் களத்துக்கு அனுப்புவது எப்படி? -  என வாங்கு வாங்கு என்று வாங்கினேன்- வார்த்தைகளால்தான்.  
அக்காலத்தில் கற்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் தன் பத்திரிகையில் இப்படி எழுதினார் : 'ஒரு நாள் விட்டு ஒருநாள் பிள்ளை பெற்ற பெண்ணுக்கு கீரை கொடுப்பது நல்லது'. அது எப்படி பெண் ஒருத்தி 'ஒரு நாள் விட்டு ஒருநாள் பிள்ளை பெற முடியும் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை. 'பிள்ளை பெற்ற பெண்ணுக்கு'ஒரு நாள் விட்டு ஒருநாள் கீரை கொடுப்பது நல்லது' என எழுதி இருக்க வேண்டும்!
ஆனால் இன்றைக்கும் தாளிகைத் தமிழில் ஊடகத் தமிழில், இணையதளத் தமிழில், ஏன் பேசும் போது கூட இப்படித் தாறுமாறாக எழுதுகிறார்களே, பேசுகிறார்களே, பெரிய எழுத்தளர்கள் உட்பட! அவர்களை எப்படிச் சாடுவது?
வகுப்பறை சிரிப்புகள் அனுமார் வால் போல
நீண்டுகொண்டேதான் போகும்!

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ