பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 19 décembre 2011

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம்.  என்றுமே எழுத்து மனித நாகரிகத்தின் எடுத்துக் காட்டாக விளங்கி, வாழ்க்கையை அடுத்த சந்ததிக்குப் படம்பிடித்துக் காட்டுவதன் மூலம், மனிதன் தன்னைத் திருத்திக்கொள்ளவும், முன்னேறவும் வழி வகுக்கிறது.

அறிவார்ந்த எழுத்துக்கள் வழியே  இலட்சியங்களும், கனவுகளும் பரவுகின்றன. மனக் கொந்தளிப்புகளுக்கு மாற்றும், தத்துவார்த்த விளக்கங்களும் அமைதிப் பாதைக்கு வழி காட்டுகின்றன.புனையப்படும் இலக்கியங்கள்    ரசனையை வளர்த்து வாழ்க்கைக்கு சுவை ஊட்டுகின்றன.

எழுத்தாளர்கள் பல விதம்.  பல் வேறு துறைகளில் விமர்சனம் செய்கிறவர்கள்,  அத்துறைகள் சம்பந்தப்பட்டச் செய்திகளை மக்களிடம் எடுத்துச் சொல்பவர்கள்,  அவற்றைக் கண்டித்துத் திருத்த முயல்பவர்கள், முற்றிலும் மாறானக் கருத்துக்களை முன் வைத்து சமூகத்தை வழி நடத்திச் செல்பவர்கள் என எழுத்து ஒரு ஆயுதமாகி இன்றைய உலகின் அச்சாணியாக விளங்குகிறது.

எழுத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் ஜனநாயகம் செழித்து வளரும்.பல்வேறு தரப்பட்டக் கருத்துகள், ஒரு செயலைப் பற்றி எழுகையில் அதைப் பற்றியக் கண்ணோட்டம் விரிவாகி, தெளிவான பார்வை கிடைத்து, உரிய முடிவினை எடுப்பது இலகுவாகிறது.

தமிழர்கள் பெரும்பாலும் பழமை விரும்பிகள். என்னதான் பெருமைக்குரிய வரலாற்றையும்,  பண்பாட்டையும் கொண்டிருந்தாலும் தற்காலத்தில் தன்னைச் சுற்றி உள்ள உண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டியக் கட்டாயம் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. அது நமது வருங்காலத்தை செப்பனிடவும் உதவும்.

இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்கள் மூலம் கண்முன் நமது சமூக வாழ்வைப் பிரதிபலிப்பதை சற்றே கூர்ந்து கவனிப்போம்!

திருமதி சிமோன்




இன்றைய அறிமுகங்கள்


  ஜெயகாந்தன்:

கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக எழுத்துலகில் தனிப்பட்ட இடத்தில் இருப்பவர்.  இவர் எழுத்துகளில் உண்மை பேசும், ஆன்ம தரிசனம் கிடைக்கும். இப்படிச் சொல்வதன் மூலம் இவர் ஆன்மிக எழுத்தாளர் என்று பொருளல்ல. தன் பாத்திரப் படைப்புகளின் வழியே மனச்சான்றினைப் படம் பிடித்துக் காட்டுபவர்.  வாசகரின் விருப்பத்தினை மனதில் கொண்டு கதைப் புனையாமல், பாத்திர தர்மத்திற்கொப்ப எழுதுவதே இவருடைய பலம்.
13  சிறுகதைத் தொகுப்பு
38  நாவல், குறுநாவல்
10  கட்டுரைத் தொகுப்பு
  2  அரசியல், கலை உலக அனுபவம்  2 வாழ்க்கை வர்ணனைகள்எழுதியவர். 
"உன்னைப் போல் ஒருவன்" என்ற தன் கதையைத் திரைப்படமாகத் தானே இயக்கி எடுத்தார். அது "சிறந்த மாநிலப் படம்", "ஜனாதிபதியின்  வெண்கலப் பதக்கம்" போன்றப் பெருமைகளைப் பெற்றது.
சில கவிதைகளும் எழுதிஉள்ளார். "தென்னங்கீற்றுச் சோலையிலே" என்ற கவிதை திரைப்படமொன்றில் இடம் பெற்றுள்ளது.

இவரது "சில மணி நேரங்களில் சில மனிதர்கள்" சாகித்திய அகாடமி பரிசு பெற்றது.

இனி இவரது கை வண்ணத்தில்:

அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும் புதியதாய் மலர்ந்துள்ள ஒரு பூவின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று, நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு, சின்ன உருவமாய் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய்விடலாம் போலக் கூடத் தோன்றும்...

அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வந்து, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.....

வெளியே... வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது!

ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்!

காலத்தின்அலைகளால்எற்றுண்ட,மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து
ஓய்ந்த ஓர் ஆத்துமாவின்  கதை இது!




புதுமைப் பித்தன்:
பதினைந்து வருட குறுகிய காலத்தில் நூறு சிறுகதைகளும், அவற்றுக் கிணையான கட்டுரைகளும், பதினைந்து கவிதைகளும் எழுதிக் குவித்தவர்.
தமிழுக்குப் புதிய பார்வை இவர் மூலம் கிடைத்தது. "இலக்கியத்தில் ஒரு சிலவற்றைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்பது மரபாயிருக்கிறது. இராவணனையும், அவன் மன விகாரத்தையும் பற்றிப் பேசலாம் என்றால், நடைமுறையில் இருக்கும் ஒரு வேசியைப் பற்றி ஏன் பேசக்கூடாது? வேதாந்தியின் கைகளுக்கு அடங்காத கடவுள் போல்தான் நான் பிறப்பித்து விட்டவையும்!  உங்கள் அளவு கோலில் அவை அடைபடா விட்டால் நானோ அல்லது என் படைப்புக்களோ குற்றவாளிகளல்ல". என்று துணிவுடன் கூறியவர்.

தமிழ்ச் சினிமா வசனகர்த்தாவாகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும்
இருந்திருக்கிறார்.

இவருடைய "சாப விமோசனம்"  அகலிகையின் உயிர்ப்பினை மறு கோணத்தில்  பார்க்க வைத்தது. அவரது வார்த்தைகளில்:

சீதையும், ராமனும் தன்னைப் பார்க்க வருவார்கள் என்று அகலிகை உள்ளம் பூரித்தாள்....இராவணன் தூக்கிச் சென்றது, துன்பம், மீட்பு எல்லாவற்றையும் துன்பக் கறை படியாமல் சொன்னாள் சீதை. ராமனுடன் சேர்ந்துவிட்ட பிறகு துன்பத்திற்கு அவளிடம் இடம் ஏது? அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். "அவர் கேட்டாரா?...நீ என் செய்தாய்? என்று கேட்டாள் அகலிகை. "அவர் கேட்டார், நான் செய்தேன்" என்றாள் சீதை அமைதியாக!

அகலிகை மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவளுக்கு ஒரு நீதியா? சீதை அரண்மனைக்குப் போவதற்காக வெளியே வந்தாள். அகலிகை வரவில்லை!  இது ராமன் மனசைச் சுட்டது. காலில் படிந்த தூசி அவனைச் சுட்டது.

உள்ளே வந்த கோதமன் அகலிகையைத் தழுவினான். அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி! அகலிகை மீண்டும் கல்லானாள்!


 இந்திரா பார்த்தசாரதி:


குறு நாவல்கள் - மூன்று
 சிறுகதைகள் - ஐந்து
கட்டுரைகள் - இரண்டு
நாடகங்கள் - ஐந்து (தமிழ்நாடு அரசு பரிசு -அவ்ரங்கசீப்)
நாவல் - பதினான்கு
     வேதபுரத்து வியாபாரிகள் - பாரதீய பரிஷா பரிஷத் பரிசு
     குருதிப்புனல் -சாகித்ய அகாடமி பரிசு
      இயேசுவின் தோழர்கள் - ரங்கம்மாள் நினைவுப் பரிசு
      சுதந்திர பூமி - தமிழ் நாடு அரசு பரிசு


சிந்திக்கும் எழுத்தாளர்களில் ஒருவர்.  உயிரோட்டமாக எழுத்து இருக்கும்.
மனித மனங்களில் எழும் வெளிப்படுத்த இயலாத எண்ணங்களை, உணர்வுகளை மிகத் துல்லியமாகக் காட்டுபவர். வித்தியாசமான பார்வை கொண்டு இவர் எழுத்து இருக்கும்.

இவரது நோக்கில்:

காலத்தின் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கும்போது தான் வரலாற்றுப் பெரியார்கள், மனிதத் தன்மையோடு சம்பந்தப்படாமல் புகைப்படங்களாய்,
நிழல் சித்திரங்களாய், தெய்வச் சிலைகளாய் காட்சி தருகிறார்கள். அவர் காலத்தில் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் இப்பெரியார்களின் மன பலங்களும், பலவீனங்களும் புரிந்திருக்கும்.

ஏற்படுகின்ற ஏமாற்றத்தினால்மனம்ஒடிந்து செயலழிவது ஏமாற்றத்துக்கு
வெற்றி. மரணம் என்ற சத்தியத்தை நாம் சந்தித்தாக வேண்டுமென்ற
 நிர்பந்தத்தின் காரணமாகத்  தான் காலதேவனை நாம் உதாசீனம்செய்கிறோம். கவிஞர்கள் 'காலா என் காலருகே வா', 'நமனை அஞ்சோம்'என்றெல்லாம் பாடக் காரணமென்ன? எப்படியும் சாவது நிச்சயம்.இதற்காகப் பயந்து தினம் செத்துக் கொண்டிருக்க வேண்டுமா?


திருமதி சிமோன்



பெண் எழுத்தாளர்கள்



சமுதாய நலனுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் உரம் ஊட்டக்கூடிய கருத்துக்களை நாவல்களாகவும் சிறு கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பெண்  எழுத்தாளர்கள் பலர் படைத்துள்ளனர். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இவர்கள் பங்கு, தொடக்கம் முதல் இருந்து வருகிறது. காந்தியம், தேசியம், விதவை மறுமணம், பாலிய  திருமணக் கொடுமைகள், தேவதாசி கொடுமைகள் போன்ற அக்காலத்திய பிரச்சினைகளைக் கு.ப.சேது அம்மாள், கமலா விருத்தாசலம், விசாலாட்சி அம்மாள், கோதை நாயகி அம்மாள், சாவித்திரி அம்மாள் - இவர்கள் எழுத்துகள்  பிரதிபலித்தன. 1960 -க்கு பிறகு  சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றோர் எழுத்துகளில் காதல், காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தை இன்மை போன்றவை கருக்களாக அமைந்தன.
இதற்கு அடுத்த காலக் கட்டத்தில் குடும்ப உறவுகள், குடும்பச் சிக்கல்களை வைத்து லட்சுமி, அனுத்தமா, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், சரோஜா ராமமூர்த்தி போன்றோர்களால் எழுதப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றன. பின் பெண் விடுதலை, பெண் உரிமை, சமூகப் பிரச்சனைகள் பற்றியும்  எழுதினர்.
தற்பொழுது பெண்களின்  எழுத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பெண் கல்வி, பொருளாதார சுயச்சார்பு, வேலை வாய்ப்புகள், வெளியுலகத் தொடர்பு இவை காரணமாக இல்லம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து விரிந்து பரந்ததாகக் கதைக்களம் உள்ளது.   நவீன தொழில் நுட்பங்களால் உண்டாகும் பாதிப்பு, பெண் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகள், இரட்டைச் சுமை, பாலியல் பலாத்காரம், பெண் சிசு கருவழிப்பு, சுற்றுச் சூழலால் ஏற்படும் பாதிப்பு போன்ற கருத்துகளைப் பற்றிப்  பல துறைகளிலும் இருக்கும் பெண்களும் எழுதுகின்றனர் .  அம்பை, காவேரி, பாமா, திலகவதி, சிவகாமி, தமயந்தி, உஷா சுப்ரமணியம் , உமா மகேஸ்வரி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிவகாமி, பாமா - இருவரும் தலித் பெண்ணியக் கதைகளைப் படைத்துள்ளனர். தவிரக் கவிதைகள் படைத்த கவிதாயினிகள் பலருண்டு.

சில எழுத்தாளர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்:


 ராஜம் கிருஷ்ணன்:
 கடந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முக்கியமானவர்களுள் ஒருவர். தன் கதை, கட்டுரைகளால் வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். "வேருக்கு நீர்" என்ற நாவலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.(1973).
இவர் பெற்ற ஏனைய விருதுகள்:
1950 - நியுயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
1953- கலைமகள் விருது
1975 - சோவியத் லாந்து நேரு விருது
1991 - திரு.வி.க.விருது. 
"அன்னிக்கு என் பேச்சைக் கேக்க ஆயிரம் பேர் இருந்தாங்க இன்னிக்குப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லை" என்று வருத்தப்படும் இவர்,  தற்போது சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் உள்ளார்.இவரின் 80 க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன . இவரின் 59 தொகுதிகள் அமெரிக்கக் காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.1970 -ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள் ' என்ற நாவலை எழுதினார். பிகார் கொள்ளைக்கூட்டத் தலைவனின் சந்திப்பு 'முள்ளும் மலரும்' என்ற நாவல் எழுத இவர்களைத் தூண்டியது.   மேலும் பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியுள்ளார்.           

அனுராத ரமணன்:
சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 1977 முதல் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் என இவர் படைப்புகள் ஆயிரத்துக்கும் மேலே எனலாம். இவருடைய படைப்புகள்   'பாசம்', புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள்   ஆகிய தொலைகாட்சித் தொடர்களாகவும்,   சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய திரைப்படங்களாகவும் வெளிவந்தன.   இவர் சிறந்த ஓவியர்.சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றவர். இந்தியன் ஹவுஸ் ஒய்ப், மங்கையர் மலர், அதன் இந்தி பதிப்பு  போன்ற இதழ்களுக்கு "லேஅவுட் ஓவியராக இவர் பணியாற்றிருக்கிறார் .  மேலும் நேரடி கவுன்சிலிங் என்ற - பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கித் தீர்வுகாணும் பணியும் செய்துள்ளார்.
தினமலர் வாரமலர் இதழில் 15 ஆண்டுகளாக "அன்புடன் அந்தரங்கம்" என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பலதரப்பட்ட வாசகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 
உடல் நலக்குறைவால் இவர் தனது 62 -ஆம் வயதில் ( மே 17, 2010) இறையடி சேர்ந்தார் .

அம்பை:

பத்திரிகை உலகில்    பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. 1960 -இல் எழுதத் தொடங்கினார்.தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம்  - ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர். பெண்களின் வாழ்க்கையைக் குறிப்பாகச் சுய சிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளைக் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவற்றையும் கிண்டலான தொனியில் கலாப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். 
அந்திமாலை, சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, காட்டில் ஓர் மான், வற்றும் ஏரியின் மீன்கள் - இவருடையப் படைப்புகளாகும்.    சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெண்கள், தலித் எழுத்தாளர்கள் பற்றிய வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளைச் சொல்லாத கதைகள் எனத் தொகுத்துள்ளார்.
 பயணப்படாத பாதைகள் என்ற தன் படைப்பில்  ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களைப் பற்றிய வாய்மொழியாக கூறப்பட்ட செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.
'தங்கராஜ் எங்கே' என்ற சிறுவர் திரைப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.'முதல் அத்தியாயம்' - சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.இவர் SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பின் இயக்குனராக உள்ளார். தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
படைப்பு மற்றும் தான் மேற்கொண்ட சமூகப் பணிகளுக்குக் குழந்தைகள் தடையாக இருக்கும் என்று கருதியதால் குழந்தை  பெற்றுக்கொள்ளவில்லை.

தொகுப்பு: லூசியா லெபோ

   

கவிதை எழுத்து

பாரதியார்


அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,

     அகத்திலே அன்பினோர் வெள்ளம்,

பொறிகளின்மீது தனியர சாணை,

     பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே  நாட்டம்,  கரும யோகத்தில்

     நிலைத்திடல் என்றிவை யருளாய்

குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்

     குலவிடு தனிப்பரம் பொருளே!



பாரதிதாசன்


நிலவு வராதா எங்கும் உலவி வராதா!

நிலவு கண்டால் என்முகம் அவன் நினைப்பில் வராதா!

அவன் மறதி தீராதா!

மலர் விரியாதா அங்கு மணம் பரவாதா!

மணம் நுகர்ந்தால் என்குழல் அவன் மனதைத் தொடாதா!

மறதி கெடாதா!

குயிலும் கொஞ்சாதா அவன் செவியில்  விழாதா!

குரலால் என்மொழி நினைவு கொஞ்சம் வராதா!

காதற் பஞ்சம் தீராதா!

வெயில் தழுவாதா ஒளி இருள் கழுவாதா!

வெயில் கண்டால் என் புருவம் விருப்பம் தராதா!

காதற் கரிப்புத் தீராதா!

மின்னல் வராதா அவன் கண்ணில் படாதா!

மின்னல் கண்டால் என் இருப்பின் மென்மை நினைப்பான்!

வெப்பந்  தணிப்பான்!

கன்னல் ஓங்காதா அங்குக் காட்சி தராதா!

கன்னல் கண்டால் என் உதட்டுக் கதை மறப்பானா!

இங்கு வர மறுப்பானா!



கண்ணதாசன்


ஜனனம் தொடங்கி, தனிவழி நடந்து

கோடை வசந்தம் மழைபல கண்டு

ஆடைகள் திருத்தி ஆசைகள் மாற்றி

கோடி நினைத்துக் குறையவே முடித்து

உண்ணல்  உறங்கல்  ஊடல் கூடல்

எண்ணல் எழுதல் இவைதான் வாழ்வெனப்

பாதி வழிவரைப் பயணம் முடிந்தது

மீதி வழியிலோ வியப்பும் திகைப்பும்!

இலக்கியக் கால வகைப்பாடு

தமிழ் இரண்டாயிரம் ஆண்டு பரந்துவிரிந்த இலக்கியச்  செழிப்பினை உடையது.
96 இலக்கிய நூல் வகைகள் இதில் உண்டு. மு. வரதராசனார் தந்த தமிழ்  
 இலக்கியக் கால வகைப்பாடு பின் வருமாறு:

பழங்காலம்:
  • சங்கஇலக்கியம் -கி.மு. 300   முதல் கி.பி.300 வரை
  •  நீதி இலக்கியம்     - கி.பி.300 முதல் கி.பி. 500 வரை  
இடைக்காலம்:
  • பக்தி இலக்கியம் - கி.பி.700  முதல் கி.பி.900  வரை
                                                                                                                        
  • காப்பிய இலக்கியம் - கி.பி. 900 முதல் கி.பி 1200 வரை.                                                                             
  •  உரை நூல்கள் - கி.பி.1200  முதல் கி.பி.1500 வரை.
                                                                  
  • புராண இலக்கியம் - கி.பி. 1500  முதல்கி.பி.1800 வரை.
                                                                            
  • புராண-தல புராணங்கள் - கி.பி. 1800  முதல் கி.பி. 1900 வரை.
                                                                                       
  •   இஸ்லாமிய தமிழ் இலக்கியம்

இக்காலம்:  கி.பி. ஆயிரத்து தொள்ளாயிரம்
                        கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
                        புதினம்

                        கி.பி. இருபதாம் நூற்றாண்டு
                        கட்டுரை 
                        சிறுகதை 
                        புதுக்கவிதை 
                        ஆராய்ச்சிக் கட்டுரை


திருமதி சிமோன்
                          

எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம்


சாகித்ய அகாடமி:
 இந்திய அரசால் மார்ச் 12 1954 இல் துவக்கப்பட்ட அமைப்பு. இந்திய இலக்கியவாதிகளுக்கு ஊக்கம் ஊட்டவும் அவர்களின் ஆக்கம் பெருக்கவும் இந்த அமைப்பு  செயல்பட்டு வருகிறது. இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும் அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஓர் ஊடகமாகத்  திகழ்கிறது இது. இலக்கிய  கூட்டங்கள்,  பயிற்சி முகாம்கள் நடத்துவது , இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைப  பிற மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவது,தற்கால மாறுதல்களையும் புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது போன்ற பல அரிய சேவைகளை இவ்வமைப்பு ஆற்றிவருகிறது. சிறந்த  இலக்கியப் படைப்பாளிகளுக்குத் தேசிய அளவிலும் மாநில அளவிலும்  விருது வழங்கிப் பெருமை படுத்துகிறது.  இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கிய வரலாறு, இலக்கிய விமரிசனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நாஞ்சில் நாடன் அவர்களின் 'சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதை தொகுப்பு இவ்விருதுக்காகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது .
நாஞ்சில் நாடன், நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். இவர் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காகப் புகழ்பெற்றவர். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார எழுத்துநடை . 6 புதினங்கள், 9 சிறுகதை தொகுப்புகள், 2 கவிதைகள், 6 கட்டுரைகள் இலக்கிய உலகிற்குக் கொடுத்துள்ளார்.  தலைகீழ்  விகிதங்கள் என்ற இவரது நாவலை, இயக்குனர் தங்கர்பச்சன் சொல்லமறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.  கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு  கொண்டவர்.  இவரைப்பற்றிய வலைத்தளத்தில் உள்ள முகப்புக் குறிப்பு இவ்வாறு சொல்கிறது:
'எழுத்து என்பது எனக்குத் தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப்    புரிந்துக்கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி! எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம்; மாறுபடலாம் ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு"  

 பால  சாகித்ய புரஸ்கார் என அழைக்கப்படும் குழந்தை இலக்கியத்துக்கான விருது  இந்த ஆண்டு முதன் முறையாக அறிவிக்கப்பட்டது.    தமிழ் மொழிக்காக குழந்தைகள் எழுத்தாளர் கமலவேலன் விருதைப் பெற்றார். 'அந்தோணியின் ஆட்டுக்குட்டி" என்னும் குழந்தைகளுக்கான இவருடைய நாவலுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.இந்த விருதினைப் பெரும் முதல் தமிழ் படைப்பாளி என்னும் சிறப்பைப் பெறுகிறார் கமலவேலன் அவர்கள்.  
இவருடைய எழுத்துப்பணியில் 50 ஆம் ஆண்டினைத் துவங்கும்போது இந்த அங்கிகாரம் கிடைத்து இருக்கிறது.விருது பெற்ற 'அந்தோணியின் ஆட்டுக்குட்டி" என்ற புதினம் குழந்தைகளுக்குச் சாலைப் பாதுகாப்பு பற்றி மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் நல்ல கதை வழியாகச் சொல்கிறது.
நவம்பர் 15 2010 தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில், குழந்தைகளுக்காக எழுத வேண்டும் என்று தீர்மானித்த பிறகு வேறு எந்த வகையான இலக்கியத்தையும் தான் படிக்க முயன்றது இல்லை என்றும் வேறு எந்த வகையான படிப்பின் மீதும் ஆர்வம் காட்டவில்லை என்றும் தன்னுடைய  ஏற்புரையில் குறிப்பிட்டார்.குழந்தைகளுக்காகவே தன்னை அர்பணித்துள்ள  அவரது நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது இது.
தன்னம்பிக்கை தந்த பரிசு, நம்ப முடியாத நல்ல கதைகள், மரியாதை ராமன் கதைகள், கம்ப்யூட்டரை வென்ற காரிகை மற்றும் குழந்தை நாடகங்கள், பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் குழந்தைகளுக்காக எழுதி இருக்கிறார்.  

குழந்தை  இலக்கிய  விருதுக்கு  (2010), புதுச்சேரி எழுத்தாளர் லெனின் தங்கப்பா அவர்களின் 'சோளக்கொல்லை பொம்மை" என்ற நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது . 

"உண்மையான தகுதி மதிக்கப்பட வேண்டும். குழந்தைகளோடு பழகி, இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததன் வெளிப்பாடாகச் சோளக்கொல்லை பொம்மை நூலை எழுதினேன்.தகுதியான நூலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.
40 -உக்கும் மேற்பட்ட  நூல்களை  இவர்  எழுதியுள்ளார் . சிறந்த மொழிப்பெயர்ப்பாளரான தங்கப்பா தமிழக அரசின் பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

தமிழக  அரசும் புதுவை அரசும் தமிழ் எழுத்தாளர்களுக்கு கலைமணி, கலைமாமணி போன்ற விருதுகளையும் வழங்கிக் கவுரவிக்கிறது.

தொகுப்பு லூசியா லெபோ