பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 19 décembre 2011

பெண் எழுத்தாளர்கள்



சமுதாய நலனுக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் உரம் ஊட்டக்கூடிய கருத்துக்களை நாவல்களாகவும் சிறு கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பெண்  எழுத்தாளர்கள் பலர் படைத்துள்ளனர். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இவர்கள் பங்கு, தொடக்கம் முதல் இருந்து வருகிறது. காந்தியம், தேசியம், விதவை மறுமணம், பாலிய  திருமணக் கொடுமைகள், தேவதாசி கொடுமைகள் போன்ற அக்காலத்திய பிரச்சினைகளைக் கு.ப.சேது அம்மாள், கமலா விருத்தாசலம், விசாலாட்சி அம்மாள், கோதை நாயகி அம்மாள், சாவித்திரி அம்மாள் - இவர்கள் எழுத்துகள்  பிரதிபலித்தன. 1960 -க்கு பிறகு  சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றோர் எழுத்துகளில் காதல், காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தை இன்மை போன்றவை கருக்களாக அமைந்தன.
இதற்கு அடுத்த காலக் கட்டத்தில் குடும்ப உறவுகள், குடும்பச் சிக்கல்களை வைத்து லட்சுமி, அனுத்தமா, சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், சரோஜா ராமமூர்த்தி போன்றோர்களால் எழுதப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றன. பின் பெண் விடுதலை, பெண் உரிமை, சமூகப் பிரச்சனைகள் பற்றியும்  எழுதினர்.
தற்பொழுது பெண்களின்  எழுத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பெண் கல்வி, பொருளாதார சுயச்சார்பு, வேலை வாய்ப்புகள், வெளியுலகத் தொடர்பு இவை காரணமாக இல்லம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து விரிந்து பரந்ததாகக் கதைக்களம் உள்ளது.   நவீன தொழில் நுட்பங்களால் உண்டாகும் பாதிப்பு, பெண் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகள், இரட்டைச் சுமை, பாலியல் பலாத்காரம், பெண் சிசு கருவழிப்பு, சுற்றுச் சூழலால் ஏற்படும் பாதிப்பு போன்ற கருத்துகளைப் பற்றிப்  பல துறைகளிலும் இருக்கும் பெண்களும் எழுதுகின்றனர் .  அம்பை, காவேரி, பாமா, திலகவதி, சிவகாமி, தமயந்தி, உஷா சுப்ரமணியம் , உமா மகேஸ்வரி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சிவகாமி, பாமா - இருவரும் தலித் பெண்ணியக் கதைகளைப் படைத்துள்ளனர். தவிரக் கவிதைகள் படைத்த கவிதாயினிகள் பலருண்டு.

சில எழுத்தாளர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்:


 ராஜம் கிருஷ்ணன்:
 கடந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முக்கியமானவர்களுள் ஒருவர். தன் கதை, கட்டுரைகளால் வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். "வேருக்கு நீர்" என்ற நாவலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.(1973).
இவர் பெற்ற ஏனைய விருதுகள்:
1950 - நியுயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
1953- கலைமகள் விருது
1975 - சோவியத் லாந்து நேரு விருது
1991 - திரு.வி.க.விருது. 
"அன்னிக்கு என் பேச்சைக் கேக்க ஆயிரம் பேர் இருந்தாங்க இன்னிக்குப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லை" என்று வருத்தப்படும் இவர்,  தற்போது சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் உள்ளார்.இவரின் 80 க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன . இவரின் 59 தொகுதிகள் அமெரிக்கக் காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.1970 -ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள் ' என்ற நாவலை எழுதினார். பிகார் கொள்ளைக்கூட்டத் தலைவனின் சந்திப்பு 'முள்ளும் மலரும்' என்ற நாவல் எழுத இவர்களைத் தூண்டியது.   மேலும் பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியுள்ளார்.           

அனுராத ரமணன்:
சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 1977 முதல் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் என இவர் படைப்புகள் ஆயிரத்துக்கும் மேலே எனலாம். இவருடைய படைப்புகள்   'பாசம்', புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள்   ஆகிய தொலைகாட்சித் தொடர்களாகவும்,   சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய திரைப்படங்களாகவும் வெளிவந்தன.   இவர் சிறந்த ஓவியர்.சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் முறையாக ஓவியம் பயின்றவர். இந்தியன் ஹவுஸ் ஒய்ப், மங்கையர் மலர், அதன் இந்தி பதிப்பு  போன்ற இதழ்களுக்கு "லேஅவுட் ஓவியராக இவர் பணியாற்றிருக்கிறார் .  மேலும் நேரடி கவுன்சிலிங் என்ற - பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கித் தீர்வுகாணும் பணியும் செய்துள்ளார்.
தினமலர் வாரமலர் இதழில் 15 ஆண்டுகளாக "அன்புடன் அந்தரங்கம்" என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் பலதரப்பட்ட வாசகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 
உடல் நலக்குறைவால் இவர் தனது 62 -ஆம் வயதில் ( மே 17, 2010) இறையடி சேர்ந்தார் .

அம்பை:

பத்திரிகை உலகில்    பிரபலமாக அறியப்பட்ட அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. 1960 -இல் எழுதத் தொடங்கினார்.தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம்  - ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர். பெண்களின் வாழ்க்கையைக் குறிப்பாகச் சுய சிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளைக் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவற்றையும் கிண்டலான தொனியில் கலாப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். 
அந்திமாலை, சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, காட்டில் ஓர் மான், வற்றும் ஏரியின் மீன்கள் - இவருடையப் படைப்புகளாகும்.    சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெண்கள், தலித் எழுத்தாளர்கள் பற்றிய வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளைச் சொல்லாத கதைகள் எனத் தொகுத்துள்ளார்.
 பயணப்படாத பாதைகள் என்ற தன் படைப்பில்  ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களைப் பற்றிய வாய்மொழியாக கூறப்பட்ட செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.
'தங்கராஜ் எங்கே' என்ற சிறுவர் திரைப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.'முதல் அத்தியாயம்' - சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.இவர் SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பின் இயக்குனராக உள்ளார். தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.
படைப்பு மற்றும் தான் மேற்கொண்ட சமூகப் பணிகளுக்குக் குழந்தைகள் தடையாக இருக்கும் என்று கருதியதால் குழந்தை  பெற்றுக்கொள்ளவில்லை.

தொகுப்பு: லூசியா லெபோ