பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 16 février 2010

எண்ணப் பரிமாற்றம்



அன்புடையீர், வணக்கம்.

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று இயற்கையை இரசித்து, உறவில் மகிழ்ந்து, பகிர்வில் நிறைவைக் காண வேண்டிய மனிதன் தன்னலம், பொறாமை எண்ணங்களைத் தன்னுள் வளா்த்து மனதில் கனலையும், நினைவில் தீயையும் கொண்ட பிழம்பாக  மாறிப்போகிறான்! வன்முறையின் வித்து அங்கே ஊன்றப்படுகிறது. ஆயுதம் ஏந்துவது மட்டுமே வன்முறையல்ல. வாய்மொழியும் ஒரு பார்வையுமே போதும் பிறரைக் காயப்படுத்த! தனிமனித மனம் மாறினால் சமூகமும், உலகமும் மாறும். அதற்கான முதற்படி ஆன்றோர் காட்டிய பாதையை அவ்வப்போது நினைவுறுதலே! ஏனெனில் நமது வாழ்வின் எல்லை எதுவென்று நாமே அறிவதில்லை.

மூப்பென்றும் முடமென்றும்
    முற்றிவிட்ட நோயென்றும்
        மூளும் தொல்லை
சாப்பிட்ட பத்தியமும்
    சாக்காட்டைத் தவிர்ப்பதில்லை
        சாவே எல்லை
காப்பாற்ற யாருமில்லை
    கடைசிவரை துணையுமில்லை
        காணும் உண்மை
கூப்பிட்டுக் கடவுளையே
    கேட்டாலும் பதிலில்லை
        கூடும் விந்தை!

                                                                                     இராசேசுவரி சிமோன்

france.kambane.magalirani@gmail.com






இன்றைய அறிமுகம் -- அரவிந்தர்



இலக்கியவாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், கல்லுாரி பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், பல மொழி அறிந்தவர், ஆன்மீகவாதி என பன்முகம் கொண்ட அரவிந்தர் அக்ராய்ட் கோஷ்  கல்கத்தாவில் 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்தார்.  இங்கிலாந்தில் படித்ததால் இருவேறு கலாச்சாரங்களை அறிந்தவராக இருந்தார்.  தாய்நாட்டின் மீது கொண்ட பற்றால், கேம்பிரிட்ஜ் இந்தியன் மஜ்லிஸ் என்ற அமைப்பில் சேர்ந்தார் (சுதந்திரம் பெற மிதவாதம் உதவாது என்ற கொள்கை உடையது).  இந்தியா திரும்பிய பின் வங்கப்பிரிவினை இந்து முஸ்லிம் பிரிவுக்கு வழி வகுக்கும் என அதை எதிர்த்தார். பிரிட்டிஷ் அரசு அலிப்புர் சிறையில் அடைத்த போது அவர் வாழ்க்கைப்பாதை திசை திரும்பியது.

மனப்பக்குவம் அடைந்த அவர், காணும் அனைத்தும் கண்ணன் உரு என உணர்ந்தார். இந்தியா விடுதலை அடைந்தே தீரும், ‘மனித குல விடுதலைக்கு நீ உழை’ என ஒரு குரல் ஒலிப்பதை கேட்டார். சாதாரண மனிதனை தெய்வமனிதனாக்குவதை இலட்சியமாக்கினார். விரிவானதொரு வேதாந்த இயக்கம் மூலமே புத்தெழுச்சி சாத்தியமாகும் என நம்பினார்.
யோகா மூலம் நமது உடல் உறுப்புகள் ஒன்று சேர்ந்து தெய்வீக உணர்வைக் கொண்டு உயர் நிலைக்கு வரும் என்றார்.

அவரது உயரிய கருத்துகளில் சில---
1. அகங்காரத்தைத் துறந்து வாழ்க்கையில் கடவுளை ஏற்பதே நமது யோகத்தின் போதனை. வேறு துறவு கிடையாது.
2. பக்தி மார்க்கத்தில் அளவு மீறிய உணர்ச்சிவசப்படுதல் அதன் அடிப்படையாகாது. பக்தி வேறு வகையானது. சமதையிலும், ஆத்ம சமர்ப்பணத்திலும் கால் கொண்டது அது.
3.ஆன்ம சமர்ப்பணத்திற்கு எதிர்ப்பு, பொறுமையின்மை கூடாது. இவை ஜீவனில் ஏதோ ஒரு பகுதி தன்னை கடவுளுக்கு அர்ப்பணிக்கவில்லை என்பதைக் காட்டும்.
4. போராட்டங்களிலிருந்து தப்பிச் செல்வதாக நமது வழி இருக்கக்கூடாது. இறைவனை, முழுமுதல்வனை அடையும் வழியாக அது இருக்கட்டும்.
5. இலட்சிய நிலைக்கு குறைந்தவர்களாக இருந்தபோதும் நமது குறிக்கோளுக்கு முழு மனதோடு நம்மைக் கொடுக்க வேண்டும்.
6. வாழ்வைத் துறப்பது வேறு. தனிமனித வாழ்வை தெய்வத்தன்மையடையச் செய்வது வேறு. உலகிலிருந்து முற்றாக நம்மை விலக்குவது தவத்தின் உயர்வான ஆனால் குறுகிய தனித்துறை வளர்ச்சியாகும். இறைவன் தனது முழுமையில் எல்லாவற்றையும் அணைப்பது போல நாமும் எல்லாம் தழுவியவர்கள் ஆக வேண்டும்.
7. இந்த உலகம் என்றும் அழியாத உண்மை சொருபத்தின் (தெய்வம்) வெளிப்பாடு ஆகும். இது சத் (வியாபித்திருத்தல்), சித் (சக்தி), ஆனந்தம் (அழியாத இன்பம்) என்ற மூன்றையும் கொண்டது. நம் ஆன்ம உண்மை நிலையினை முதலில் அறிய வேண்டும்.  இறைவனை நோக்கி ஆன்மீக மாற்றத்தை உண்டாக்க வேண்டும். இந்நிலையில் மனம் பரந்து, விரிவடைந்து எதையும் உணரக்கூடிய ஆற்றலைப் பெறுவோம். இவ்வாற்றல் தெய்வீகத் தன்மைக்கு இட்டுச்செல்லும்.

அரவிந்தருடைய படைப்புகளில் தலையானவை---
1. தெய்வீக வாழ்க்கை-தெய்வீக ஊற்றில் பிறந்த மனித வாழ்க்கை, அறியாமையில் நுழைந்து வேறுபட்ட மன உணர்வுகளைப் பெற்று மீண்டும் தெய்வ நிலைக்கு வரமுடியும் என்பதைக் காட்டும் வழிநுால்.
2. சாவித்திரி--சத்யவான் என்னும் தெய்வீக உண்மையைக் கொண்ட ஆத்மா அறியாமை என்னும் மரணத்தில் தள்ளப்பட்டபோது சாவித்திரி என்ற தெய்வீகம் மீண்டும் காத்ததை விளக்கும்.

அரவிந்தர் என்ற உயரிய ஆன்மா 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடலை விட்டு விண்ணுலகு எய்தியது.

1972 இல் அவரது  நுாற்றாண்டை கௌரவிக்கும் வகையில் இந்தியா தபால்தலை ஒன்றை வெளியிட்டது. அவர் புதுச்சேரி வந்து 100 ஆண்டுகள் நிறைவதை (ஏப்ரல் 4 ஆம் தேதி) சிறப்புத் தபால்தலை வெளியிட்டு சிறப்பிக்க உள்ளது.

பாரீஸில் பிறந்த அன்னை தன் தியானத்தில் கண்ட “கிருஷ்ண’ னைத் தேடி புதுவை வந்து அரவிந்தரைக் கண்டு, அவருடனேயே தங்கியிருந்து 1973 இல் சமாதியடைந்தார்.

1926இல் அரவிந்தர் ஆசிரமத்தைத் தொடங்கினார். 1968 இல் ஆரோவில் நகர் உலக சமாதானத்திற்காக தொடங்கப்பட்டது.

-- தணிகா சமரசம்

lundi 15 février 2010

நினைக்க மறந்தவை --


  1. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு வாழ்வு இருக்கிறது. வெறுப்போ அழிவுக்கு முன்னோடி.

  2. அன்பு கொடுப்பவரையும், பெறுபவரையும் மகிழச் செய்கிறது.

  3. விரயமாய்ப் போன அன்பு என்று ஏதுமில்லை. ஏனெனில், அன்பு என்றும் வீணானதில்லை.

  4. அன்பு குறைந்திருக்கும் போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன.

அறிய வேண்டியவை --

  • சிவானந்த போதம்
மனிதரிலும் பறவையுண்டு, விலங்குண்டு
    கல்லுண்டு, மரமுண்டு
மனிதரிலும் நீர் வாழும் சாதியுண்டு
    அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு, வானவரும்
    மனிதராய் வருவதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
    அருமையென வகுத்தார் முன்னோர்.


  • கம்ப ராமாயணம்
உடைந்தவர்க்கு உதவானாயின்
    உள்ளதொன்(று) ஈயான் ஆயின்
அடைந்தவர்க்(கு) அருளானாயின்
    அறம் என்னாம் ஆண்மை என்னாம்!


  • தயானந்த சரசுவதி சுவாமிகள்
அலைகள் அழிவதுபோல் தோன்றினாலும், கடலும் அலையும் உண்மையில் எப்படி ஒரே நீராகுமோ, அதே போல் உன்னிடத்தில் தான் அனைத்துலகமும் இருக்கிறது - அதைப் படைத்த இறைவனும் இருக்கிறான்.

இங்கு நடப்பதெல்லாம் பண்டமாற்றே! காலம், திறமை இவற்றைக் கொடுத்து பணம், பெருமை முதலியவற்றைப் பெறுகிறாய். கடவுளிடத்தில் உன்னைக் கொடுத்தால், அப்போது அகந்தை ஞான ஒளியைப் பெறுகிறது.


  • விவேகானந்தர்
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டு வரும்.



  • வலம்புரி ஜான்

பறவை பறக்கும் போது இறகுகள் ஆங்காங்கே உதிரத்தான் செய்யும். பறக்கிற பறவை உடனே கீழே இறங்கி, அவற்றைக் கொத்திச் சேகரித்துக் கொண்டு இருந்தால் பயணம் தடைப்பட்டுப் போகும். இழப்புகளைப் பற்றி எண்ணாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும். நதி தன் பாதையைத் தானே அமைத்துக் கொண்டு போகுமே தவிர, பாதை வெட்டுவதற்காக மண்வெட்டியும் கூடையும் கொண்டு போகாது. எனவே, எவ்வளவு திறமையோடும், வலிமையோடும் வாழ்க்கையில் நகர்கிறோம்  என்பதைப் பொறுத்துதான் வெற்றி கிடைக்கும்.


  • இரா. பன்னீர்ச்செல்வம்

பணக்காரர்களை உருவாக்கலாம்
பட்டதாரிகளை உருவாக்கலாம்
பதவியார்களை உருவாக்கலாம்
பகுத்தறிவாளர்களை பண்பாளர்களை
உருவாக்குதல் கடினம்!
சிந்தனையாளர்களை உருவாக்குவது
அதைவிடக் கடினம்!!

எழுதிப் பார்க்க --



  
இடமிருந்து வலம்                                                                               
1 விஞ்ஞானி, இந்தியக் குடியரசுத் தலைவர்                                   
3  பெண்ணின் பெயர்  
                                                                            
வலமிருந்து இடம்                                                          
6   யூத, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களின் பிதாப் பிதா          
7  நாடு விட்டு வந்து தஞ்சம் கேட்பவர்கள்                                        
8  மன்மதன் 
10  தெய்வப் புலவர்
13  சாமர்த்தியம்  

  மேலிருந்து கீழ்
 1 தமிழ் முனிவர்
 2 பன்னிரண்டு ராசிகளில் ஒன்று
 4  பெண்ணின் கை போன்ற மலர்
 8  இந்தியாவின் தந்தை
9 மக்கள்அரசுக்குசெலுத்தும் பணம்                       

கீழிருந்து மேல்  
4    எல்லாருக்கும் வரும்  உணர்வு
5    இந்தியப் பணக்காரர்களில் ஒருவர் 
6    முதல் மனிதன் 
9    ஜோசெப் (சூசை) மறு பெயர்
11   புண்ணியத்துக்கு எதிர்ப் பதம் 
12   இரும்பு ஈரமானால் வருவது 
13   ________ இரண்டொழிய வேறில்லை 
    
- லூசியா  லெபோ  

                                                             
விடை அடுத்த முறை காண்க!