பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 juillet 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                                  

அன்புடையீர்,

வணக்கம். மேலே இருக்கும் படமே எழுத வருவது என்ன என்பதை விளக்கி இருக்கும் . அந்த இருவர் காதலர், அல்லது கணவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை! நண்பர், உறவினர், ஒன்றாக வேலைச் செய்பவர், ஏன்  வெறுமனே தெரிந்த இரண்டு பேராகக் கூட இருக்கலாம். எது, ஏன் இப்படி அவர்களை முகம் திருப்ப வைக்கிறது என்பதுதான் தற்போதைய வாழ்க்கைப் புதிர். இவர்கள் இப்படி இருப்பது அவர்களையே மனதால்பாதித்து, அவர்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கிறது என்பது இன்றைய காலச் சூழல்!

முன்பும் ஒருவருக்கொருவர் கருத்து பேதம் கொள்வது இல்லாமல் இருந்திருக்க முடியாது. இருந்திருக்கவில்லை! ஆனால் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாத் தன்னடக்கமும் இருந்தது. பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது என்கிற நாகரிகம் இருந்தது. எடுத்தெறிந்து பேசினால் உறவு கெட்டுப் போகும் என்ற விவேகம் இருந்தது. எதிராளி தவறாகவே பேசினாலும் பொறுத்துக் கொள்ளும் பொறுமை இருந்தது. விட்டுக் கொடுக்கும் தன்மை இருந்தது. மன்னிக்கும் பக்குவம் இருந்தது. எல்லாவற்றையும் விட உண்மையாகவே இருந்தாலும் சிலவற்றை வெளியிடக் கூடாது என்ற பண்பும்,  சில உண்மைகள் சுடும்-அவற்றை வெளியிட்டால் எல்லோராலும் அதைத் தாங்க முடியாது என்ற அறிவும் இருந்தது.

ஏதோ இப்போது உள்ளவர்களெல்லாம் சிந்திக்கும் திறனற்றுப் போய் விட்டார்கள் என்று ஒட்டு மொத்தமாகக் குறை சொல்ல வரவில்லை. இன்றைய உலகு    படிப்பாலும், பணத்தாலும், பதவியாலும், புகழாலும் வெற்றிகொள்வதை முன்னிறுத்தி செயல்படுகிறது. அதற்காக அலைவதையே வாழ்க்கையாக்கி இருக்கிறது. இந்த ஓட்டத்தில் நின்று நிதானித்து, தன்னையே எடை போடக் கூட ஒருவருக்கும் நேரமில்லை. தன் குறையே தனக்குத் தெரியாத போது, தன் புற வாழ்வின் வெற்றியையே தானாக எண்ணி, தான் செய்வது தவறாகுமா என்ற மிதப்பில் செயல்படுகிறார்கள். ஒவ்வொருவரின் இந்தப் பொறுப்பற்றத் தன்மையும் சேர்ந்துதான் சிக்கலை உண்டாக்குகின்றன. உறவுகளைக் கெடுக்கின்றன.

இந்தத் தன் முனைப்பு (Ego), செருக்கு, பிறரிடம் நியாயம் இருக்கும் என்ற எண்ணத்தைக் கூட இவர்களிடம் அழித்து விடுகிறது. அந்த நியாயத்தைக் காது கொடுத்துக் கேட்க இவர்களுக்கு மனமில்லை. தன்  குறையாகப் பிறர் சுட்டுவதை, அலசும் பொறுமையோ, அது உண்மையானால் ஏற்கும் மனத் திண்மையோ, அதற்காக வருந்தக் கூடிய பெருந்தன்மையோ இல்லாததால்-தனக்கு மாறாக  யார் என்ன சொன்னாலும், செய்தாலும் அதற்கானக் காரணத்தை விட்டுவிட்டு, அவர்களையே எதிரிகளாக எண்ணத் தலைப்பட்டு விடுகிறார்கள். உண்மை வாய்மூடிப் போக, மற்றவர்களால் அமைதியாக விலகத்தான் முடியும். எப்படி இருந்தாலும்  பந்தம் அங்கே அறுந்து போகிறது. பாசம் விலகிப் போகிறது. இதில் பரிதாபம் என்னவென்றால் எதை இழந்தோம் என்று கூட இவர்கள் உணர்வதில்லை. காலம் மாறி உணர நேர்ந்தால், அது மிக மிகத் தாமதமானதாய் இருக்கும்!

திருமதி சிமோன்

சிதையும் வாழ்வு

                                                       

மன பேதங்கள் உள்ள மகிழ்ச்சியை மட்டும் போக்குவதில்லை. சில வேளைகளில் முழு  வாழ்க்கையையும் போக்கி விடுகிறது. அது அழிந்து போவதில் யாருக்கும் சம்மதமில்லை. யாருக்கும் லாபமில்லை.

சென்ற வருடம் இந்தியாவில் 1,35,585 தற்கொலைகளை தேசிய குற்றப் பதிவேடு வெளியிட்டுள்ளது. தமிழகம் இதில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டுத் தற்கொலை எண்ணிக்கை: 15,963.

இத்தனைப் பேரும் உண்மையிலேயே வாழ இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார்களா அல்லது சடுதியில் கண்ட அவசர முடிவா?

இதில் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக 24.3% பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிலைக்கு எது கொண்டு போயிருக்கும்?

மனம் வெறுமையுற்று, வாழ்க்கைப் பொருளற்றுப் போகும்போது தற்கொலை எண்ணம் எழலாம். தயவு செய்து நீங்கள் மிகவும் நேசிப்பவரிடமோ அல்லது உங்கள் மீது அன்பு கொண்டவரிடமோ , குறைந்தபட்சம் யாரோ ஒருவரிடமோ  அந்த எண்ணத்தைப்  பகிர்ந்து கொள்ளுங்கள்.  அவர்கள் மூலம் ஒரு புதுப் பாதையும், அதில் செல்வதற்கான வெளிச்சமும், பற்றுக்கோலும் கிடைக்கக் கூடும். இயற்கை அற்புதமானது. மனிதம் இனிமையானது. அதில் ஒரு சிலரால் அல்லது சிலச் சூழ்நிலைகளால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக, அதையே இழப்பது பேதைமை. அந்த நேரத்தில் மட்டும் மன உறுதியோடு அந்த எண்ணத்திலிருந்து மீண்டு விட்டால், வேறோர் வடிவில் ஓர் இன்ப உலகம் உங்களுக்காகக் காத்திருக்கக் கூடும்!

வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களுக்கு  வேறு வகையில்உயிரின் இருப்பை  அர்த்தமுள்ளதாக்கலாம் என்று எடுத்துணர்த்த வேண்டியக் கடமை அப்படிப் பட்டவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு இருக்கிறது. ஒருவருக்குள் இருக்கும் எண்ணம் மற்றவருக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் ஒருவரின் நடத்தையில் இருக்கும்  மாற்றம், விரக்தி, பற்றற்றத் தன்மை தெரியாதிருக்க வாய்ப்பில்லை. உடன் செயலாற்ற வேண்டியப் பொறுப்புடன் நட்பும், சுற்றமும் நடந்து கொண்டால், தற்கொலைகளை நிச்சயம் குறைக்க முடியும்! தள்ளி நிற்காமல் குறைந்த பட்சம் உன் வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள நானிருக்கிறேன் என்ற புரிதலையும், நம்பிக்கையையும் கொடுப்போம். எந்த உயிரும் வாழ்வை வெறுத்ததல்ல.

அடுத்தபடி குடும்பத்தை ஆட்டம் காண வைப்பது விவாகரத்து. கணவனுக்கும், மனைவிக்கும் இடையே மற்றவர்களைக் காட்டிலும், முரண்படவும், கோபம் கொள்ளவும், சண்டையிடவும் இங்கே போதுமான ரகசியக் காரணங்கள் வேறு இருக்கும்.

2010இல் திருத்தப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில், 'சேர்ந்து வாழ முடியாதத் திருமணம்', 'சேரவே முடியாதத் திருமணம்' என்று வகைப் படுத்தி இருக்கிறார்களாம்! தகவல் தொழிற் நுட்பத்துறையில்தான் அதிக விவாகரத்துகள் நடைபெறுகின்றனவாம். படித்து, தன்  அறிவை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தத் தெரிந்தவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் தோற்றுப் போவது எங்ஙனம்?

அவர்கள் அத்தனைப் பேருமே சந்தர்ப்ப வசத்தால் பொருந்தா இடத்தில் சிக்கிக் கொண்டார்கள் என்று எண்ண முடியவில்லை. அல்லது அத்தனை பேருமே துணையைப் பொறுக்க முடியாத அளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்றும் நினைக்கத் தோன்றவில்லை. அந்த எல்லைக்கா மனிதத் தன்மை தொலைந்து விட்டது? பின் ஏன் இந்த நிலை?

இத்தனைக்கும் பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணங்கள் மிகவும் குறைந்து விட்டன. அதிலாவது, தன் செயலுக்கானக் காரணத்தை அவர்கள் தலையில் போட்டு விட வசதி இருந்தது. பல நாட்கள் பழகி, தன் உயிரே அவள் அல்லது அவன் தான் என்பது போல தன்னை இழந்து,  இணைந்து வாழ்நாள் முழுதும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று எடுத்த முடிவு நாளடைவில் தேய்ந்து போக என்ன காரணம்?

வாழ்க்கை மலர்கள் மட்டுமே நிறைந்த சோலை அல்ல. அங்கே முட்களும் உண்டு. தனக்குள்ள சோர்வும், பலவீனமும், கோப தாபங்களும், ஏமாற்றங்களும்  தன்  துணைக்கும் உண்டு என்பதை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியுமா?

எந்நிலை வரினும் சேர்ந்தே பயணம் செய்ய வேண்டும் என்ற மன உறுதி ஒவ்வொருவருக்கும் வேண்டும். நாமே தேர்ந்தெடுத்த வாழ்வு, இதில் தோற்றால் எனக்கே அதில் பெருமை இல்லை என்ற உணர்வு வேண்டும். சோதனை நேரத்தை மனதிலிருந்து ஒதுக்கி, இதே உறவு தந்த இன்பத்தையும், இதைப் பெற ஏங்கியதையும், போராடியதையும் நினைவில் கொண்டால், எப்பாடு பட்டேனும் இந்த உறவைக் காப்பாற்றியே தீருவேன் என்ற வெறி வரும். அதற்கான முனைப்பு வரும். குழந்தைகள் இருந்தால், அவர்கள் பொருட்டு செய்யும் எத்தனையோ தியாகங்களில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே! பிரிந்து போய் விடுவதால் மட்டும் உள்ளத்திலிருந்து அவ்வுறவு துடைக்கப்பட்டு விடுமா? முதலில் கொண்டக் காதல் உண்மையானதாக இருந்தால் நிச்சயம் அது இந்தச் சலசலப்புகளை வென்று வாழும், வாழ வைக்கும்! காதல் உண்மையானதல்ல என்றே வைத்துக் கொண்டாலும், கடமை என்ற ஒன்று இருக்கிறதல்லவா? எல்லோருக்கும் காதல் வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. வாழ்நாள் முழுதும் யாரிடமும் அந்த உணர்வு வராவிட்டால் அவர்களுக்கு வாழ உரிமை இல்லையா என்ன!

கானலைத் தேடி அலைந்த வண்ணம் கிடைத்த வாழ்வைப் பாழாக்கிக் கொள்வதை விடுத்து, இருப்பதை செம்மையாக்கினால் என்ன! அதுவே இப்பிறவியின் சாதனையாக இருக்கட்டுமே! ஒரு இனியக் குடும்பத்தை விட இந்த உலகில் மகிழ்ச்சி  தருவதாக எது இருக்கிறது? பிரிபவர்களும் அது இனிமையாக இல்லை என்று தானே பிரிகிறார்கள்? இருவர் முனைந்து அதை இனிமையாக மாற்ற முடியவில்லை என்றால், அந்த இருவரும் வாழ்க்கையில் வேறு எதைத்தான் சாதிக்கப் போகிறார்கள்? 

தன்னைக் கண்டவுடன் இயல்பு நிலை மாறி மனைவியும், குழந்தைகளும் ஒதுங்கித் தங்களுக்குள் அமிழ்ந்து போக வைப்பது ஆணுக்கு வெற்றியும் அல்ல; கணவன் வீட்டையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள தானே குடும்பத்தலைவி என்று இறுமாந்து போவது பெண்ணுக்கு வெற்றியும் அல்ல!

திருமதி சிமோன்


உறவுகள் உண்டாக்கும் உற்சாகம்

                                                         

உலகில் நாம் உற்சாகமாக வாழ ஒரு உயிரின் துணை இருந்தால் போதும். அது இல்லறத் துணையாகவோ, நட்புறாகவோ அன்றி ஒரு மாசற்றக் குழந்தையின் பாசமாகவோ கூட இருக்கலாம். ஏன், முற்றும் துறந்தவர்கள் கடவுளின் பந்தத்தில் உலகையே வெல்ல வில்லையா? சில வேளைகளில் காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக இசையும், கவிதையும், பூவின் மணமும், தென்றலும், நிலவும் கூட இதமளிக்கின்றன. நாம் எந்த நேரத்தில் எதைப் பற்றிக்கொண்டு நம் மனதைத் தேற்றிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நம் நேரங்களின் தன்மை நிர்ணயிக்கப் படுகிறது.

பற்றிக் கொள்ளச் சில ஊன்று கோல்கள்:

"ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளி விடாதே! தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார். யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார். எனவே, தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்து. தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்து. நீ நேர்மையான பாதையில் நடந்து செல். அப்போது ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்".-திருமறை

"மனம் அடக்க முடியாதது. அலைபாயக் கூடியது என்பதில் ஐயமிலை. ஆனால் பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் அதை வசப்படுத்தி விடலாம்."-கீதை

"நான்தான் எனும் மயக்கம் நண்ணுங்கால்,
       என் ஆணை வான்தான்
எனநிறைய மாட்டாய் நீ; ஊன்றாமல்
        வைத்த மவுனத்தாலே
மாயை மனம் இறந்து துய்த்துவிடும்
         ஞான சுகம்"-தாயுமானவர்

"பேய்போல் திரிந்து,
      பிணம்போல் கிடந்து
 பெண்ணைத் தாய்போல் நினைத்துத்
      தவ முடிப்பது எக்காலம்?"-பத்திரக்கிரியார்

"இல்லற வாழ்வில் இவ்வாறு ஏற்படவே செய்கிறது-சில சமயம் உயர்ந்த நிலை, சில சமயங்களில் தாழ்ந்த நிலை. சில வேளைகளில் நல்ல பக்தி. சில வேளைகளில் காமத்தில் மனம் உழலுகிறது. ஈயைப்போல சில வேளைகளில் இனிப்பின் மீது அமர்கிறது. சில வேளைகளில் அழுகிய புண்ணில், மலத்தில் கூட உட்கார்கிறது".- ஸ்ரீ ராமகிருஷ்ணர்


அலுத்துப் போனவனுக்குக் கடவுள் கல்லைத் தலையணை ஆக்குகிறார்-ஜெர்மன் பழமொழி 
கடவுள் என்ன கொடுக்கிறார் என்று புரிந்து கொள்வதே சிலருடைய பேறு-லத்தின் 
என் குற்றங்களைச் சொல்லவே கடவுள் ஒரு நண்பனை அனுப்புகிறார்-ஆங்கிலம் 
நாம் விரும்புவதைக் கடவுள் கொடுக்கவில்லை என்றாலும், நமக்குத் தேவையானதை அளிக்கிறார்-ஜெர்மன் 

காதல் இதயத்தில் இருந்தால் அழகு ஓர் பொருட்டல்ல. தூங்கும்போது தலையணை தேவையில்லை-பாஷ்டோ 
இன்பமில்லாதக் காதல் தாகமில்லாமல் அருந்தும் நீர், பசியில்லாமல் உண்ணும் உணவு-ஜெர்மன் 
உண்மையாக நீ காதலிக்கும் வரை உலகில் உன்னை எதுவும் வருத்தமுறச் செய்யாது-ஹங்கேரி 
குழந்தையைக் கையில் தூக்குபவன், தாயை இதயத்தில் ஏந்துகிறான்-செர்பியன் 

சிலர் உணர்ந்தவை:

நீ என்னருகில் இல்லை என்ற உணர்வில் 
நான் என்னிடம் இல்லை என்பதை 
நான் உணரக் கூட முடிவதில்லை! - ஜென்னி கார்ல் மார்க்ஸ் 

விதியில் எனக்கு நம்பிக்கையில்லை 
விழியில் உன்னைக் காணும்வரை 
நட்பில் எனக்கு நம்பிக்கையில்லை 
எனக்காக உன் விழிகள் கண்ணீர் சிந்தும்வரை 
உறவில் எனக்கு நம்பிக்கையில்லை 
நீ என் கைகளைப் பற்றும்வரை 
காதலில் இன்றுவரை நம்பிக்கையில்லை 
நீ என்ன செய்யப் போகிறாய் 
எனக்கு நம்பிக்கை வருவதற்கு!? - சின்னத்திரைத் தொடர் ஒன்றில் 

தற்கொலை - ஒரு பார்வை

தற்கொலை தொடர்பான பண்பாட்டுப் பார்வைகள் பலவாறாக உள்ளன. மதங்கள் தற்கொலையைக்  கடவுளுக்கு எதிரான செயலாகவும் மரியாதை அற்றதாகவும்  கருதுகின்றன.  தோற்பதனை விடத் தற்கொலை செய்வது ஜப்பானிய சாமுராய்  மரபில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  கணவனை இழந்த பெண்கள் கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம் இந்தியாவில்இருந்தது. இதனை  உடன்கட்டை ஏறுதல் என்பர்.  தன் கழுத்தை தானே அறுத்துப்  பலியிட்டுக்  கொள்ளும்   மரபு தமிழகத்தில் தொன்மையாக இருந்து வந்திருக்கிறது. இதற்குப் பெயர் : நவகண்டம் .
பொதுவாக, பழங்குடியினர் சமுதாயங்களில் தற்கொலைகள் மிகக் குறைவாகவே நிகழ்கின்றனவாம்.தங்களுடைய பிழைப்புக்கே அவர்கள்  கஷ்டப்படும் போது, வாழ்க்கையை முடித்துக் கொள்வது எப்படி என்று சிந்திக்க நேரமேது.

தன் நாட்டிற்காகவோ  விடுதலைக்காகவோ  தன் உயிரைத் தானே ஒருவன் விருப்புடன் அர்ப்பணிப்பதைத்  "தற்கொலை" என்று கூறாமல் "தற்கொடை" என்று குறிப்பிடுவது பொருத்தமானது என்று வாதிடுபவர்களும் உண்டு.
சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய, வீரமங்கை வேலு நாச்சியாரிடம் பணிப்பெண்ணாக இருந்த  குயிலி என்பவரும், அதை ஒட்டிய கால கட்டத்தில், நெல்லைச் சீமையில் கட்டபொம்மனிடம் தளபதியாகயிருந்த  வீரன் சுந்தரலிங்கம் என்பவரும் நாட்டின் விடுதலைப் போரில் தம்மையே உயிர்த்  தியாகம் செய்தவர்கள். 
பல இலட்ச மனித உயிர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட இறுதியில் தோல்வியைத்  தாங்கமுடியாமல் மனம் உடைந்து உணவுக் கிடங்கில் தூக்கு போட்டுத்  தற்கொலை செய்து கொண்டதாகச்  சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது.

தற்கொலை என்பது உலகத்தில் பொதுவாகக்  காணப்படுகின்ற  மிகவும்  குறைவாக மதிப்பிடப்பட்ட சமூக நலப் பிரச்சனையாகும்.  பிற பிரச்சனைகள் போல இதற்கு  முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.  நோய், விபத்துக்கள்,போர்கள் இவற்றால்  இறப்பவர்களுக்குச் சமனாக அல்லது அதற்கும் அதிகமாகத்   தற்கொலையினால் தற்பொழுது இறப்பவர்களின் எண்ணிக்கை இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இதயநோய், சர்க்கரை வியாதி, எய்ட்ஸ் - போன்ற நோய்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க உலக அளவில் ஒரு நாளைத்  தேர்ந்தெடுத்து இருப்பதுப்போல ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் நாள் World Suicide Prevention Day (WSPD)  தற்கொலை தடுப்பு நாள் கொண்டாடப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு துவங்கி ஒவ்வொரு ஆண்டும் "தற்கொலையைத்  தடுப்போம்"," நம்பிக்கையை விதைத்து உயிர்களைக் காப்போம்","விரிவாகச்  சிந்திப்போம், நாட்டளவில்  திட்டமிடுவோம், ஊர்களில் செயல்படுத்துவோம் ", "பலதரப்பட்ட கலாச்சாரங்களில் தற்கொலை தடுப்பு", "குடும்பங்கள், அமைப்புகள், தற்கொலைகள் "," உலகளாவிய  அளவில் நம்பிக்கை ஒளி ஏற்றி தற்காப்புகளை பலப்படுத்துவோம்" போன்ற பலபல தலைப்புகளில் கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தற்கொலை தடுப்பு அகில உலக அமைப்பு.  

மனிதனுக்கு எங்கே இருந்து வருகிறது தற்கொலை எண்ணம்?
அதிகார நாட்டம், பேராசை, சுயநலம், பொறாமை, பொறுமையின்மை, சிந்தித்துச் செயல்படாமை, மூடநம்பிக்கை, உணர்ச்சி வசப்பட்டு செயல்படல்,  ஓய்வின்மை, தெளிவின்மை, இலக்கின்மை,  சரியான வழிகாட்டலும் அறிவுறுத்தலும் இன்மை, தன்னம்பிக்கை யின்மை, உள்ள உறுதியின்மை, தோல்வியில் துவளல், சோதனைகளை எதிர்கொள்ளும் திடமின்மை, விடாமுயற்சியின்மை, விமர்சனங்களுக்கு அஞ்சுவது, இழப்பைத் தாங்கும் உறுதியின்மை போன்றவை ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்.உயிரை மாய்த்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா? இவர்கள் நினைக்கின்றார்கள் பிரச்சினைகள் தனக்கு மட்டும்தான் வருகிறது என்று .  பிரச்சினைக்குத்  தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில் ஒருவரும் உயிர்வாழ முடியாது  ஏழைக்குப்  பணப்பிரச்சினை என்றால் பணக்காரருக்கு உடல் பிரச்சினை.  பெற்ற மக்களால்  சிலருக்குப் பிரச்சினை ; மக்களைப்  பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள் சிலருக்கு .ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கின்றது.நமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாகச்  சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. Imipramine receptors  என்பவை செரடோனின் சுரக்கும் இடங்கள். தற்கொலை செய்துகொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தபோது இவை குறைவாக இருப்பது  தெரியவந்துள்ளது. செரடோனின் சுரத்தலைத்  தூண்டிவிடும் மருந்துகள் கொடுப்பதால் தற்கொலை எண்ணத்தைக்  குறைக்கலாமாம்.உலகத்  தற்கொலை எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு,  பத்தில் ஒரு பங்கு ஆகும்.இந்தியச்  சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளி விவரத்தின்படி இந்தியாவில்  ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு நிகழ்கிறது, அதாவது ஒரு நாளைக்குச் சராசரியாக 240 இறப்பு தற்கொலையாய் நிகழ்கின்றன. தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் பெரும்பாலும் 35 வயதுக்குக் குறைவானவர்கள் -    அதிகமானோர் பெண்கள். ஆனால் உயிர் நீப்போர் அதிகமானோர் ஆண்கள். குடும்ப, சமுதாய, பொருளாதார காரணங்களால் வயது வந்தவர்கள்கூட இம்முடிவை எடுப்பது வேதனை அளிக்கிறது.

இன்றைக்கு ஆரம்பள்ளி மாணவர்கள் தொடங்கி ஐ.ஐ.டியில் எம்.டெக் படிக்கும் மாணவர்கள் வரை  தற்கொலை முடிவை நாடத் தொடங்கியுள்ளனர்.  காதல் தோல்வியோ தேர்வில் தோல்வியோ  மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மரணத்தைத்தான்.மதிப்பெண் குறித்த கண்ணோட்டத்துடனேதான் மாணவர்கள் பார்க்கப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் வாங்கினால்தான் மதிப்பு என்று பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம். நூறு சதவிகித தேர்ச்சிக்காகப்  பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் அனைத்தும் சேர்ந்துதான் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன .கல்விக் கூடங்களில் தோல்வியைத்  தைரியமாக எதிர்கொள்வது குறித்த  எதார்த்தத்தைக்  கற்றுக்கொடுக்காமல் விடுவதே இதற்குக்  காரணம்.கல்விக் கூடங்களில் சூழ்நிலை மாறினாலே மாணவர்களின் நிலை மாறும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
வறுமை, பெரும் கடன் சுமைகளின் காரணமாகத்  தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகிகொண்டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாகத்  தலையீடு செய்து, தொடரும் இந்த அவல நிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
பாலியல் வன்முறையால் இந்த முடிவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கூடிவரும் இந்த நாளில் தக்க பாதுகாப்பு அவர்களுக்குத்  தரவேண்டியது சமூகத்தின் கடமையாகும்.
தற்கொலை முயற்சி செய்பவர்கள் எல்லோரும் மன வளர்ச்சி குறைந்தவர்கள் அல்ல.நல்ல மன நலம் உள்ளவர்களும் கூட, தாங்கள் அனுபவித்து வரும் துக்கத்திலிருந்து, அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற தற்கொலையை எளிமையான வழி என்று நினைக்கிறார்கள்.இது கொடுமையான மூர்க்கத்தனமான செயலாகும்.இது சுய நலத்தின் உச்சம்.தற்கொலை முடிவு என்பது நொடிப்பொழுது உணர்ச்சி உந்தலின் விளைவாகும். புரிய அவகாசம் கொடுக்காத இடத்தில் தான் விரக்தி ஏற்படுகிறது. விரக்தி தான் மேலும் சிந்திக்க விடாது மரணப் பள்ளத்துள்  தள்ளுகிறது. இது கோழைத்தனமான முடிவு என்று சொல்கிறோம். ஆனால் தற்கொலை செய்துகொள்ள தைரியம் வேண்டும்.

தற்கொலைக்கு முயல்பவர்கள் கட்டாயமாக அது பற்றித்  தன் நெருங்கிய தோழர்களிடம் கோடி காட்டுகிறார்கள்  -  “நான் இறந்திருக்கலாம்” என்றோ “நான் போன பிறகுதான் என் அருமை புரியும்” என்பது போலவோ இவர்கள் பேசத் துவங்குகிறார்கள் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.  மன வலியிலிருந்து மீள வேறு வழி இருப்பது தெரிந்தால் தற்கொலை முயற்சி செய்யும் ஒவ்வொருவரும் வாழவே விரும்புவார்கள் என்பதே உண்மை.
தற்கொலை முயற்சி செய்யும் ஒருவருக்கு நாம்  எப்படி உதவலாம்?
  • அவர்கள் தங்கள் துக்கத்தையோ ஏமாற்றத்தையோ வெளியிடும் போது விமரிசனம் செய்யாமல் முழுக் கவனத்துடன் காது கொடுத்துக் கேளுங்கள். அவர்களது உணர்வுகளை மதியுங்கள்.தனக்கென ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு தற்கொலை முயற்சியில் இருந்து ஒருவரை மீட்கும்.

  • அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை காப்பாற்றுங்கள்.  அவரது ரகசியம் உங்கள் மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படாது என்றும்  எந்தச் சூழ்நிலையிலும் உங்களது நட்பு மாறாது என்றும் நம்பிக்கையும் உத்திரவாதமும்  கொடுங்கள்.
  • அவரிடம் நீங்கள் எத்தனை அன்பும் அக்கறையும் உடையவர் என்பதை வெளிப் படுத்துங்கள். உங்கள் கனிவும் கருணையும் நிறைந்த சொற்கள் அவரது மனப் புண்ணுக்கு ஆறுதல் அளிக்கட்டும்.
  • முடிந்து போனவற்றைக் கிளறாதீர்கள். முடிந்தவை முடிந்தவைகளாகவே இருக்கட்டும்.புதிய கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்க அவருக்கு உதவுங்கள்.
ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மனித நேயம் வேறு ஏதாவது உண்டா?இது போன்றவைகளின்  வாயிலாக நிகழவிருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம். 
மேற்கூறிய முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றால் கவுன்சிலிங் தரும் அமைப்புகளை நாடுங்கள்.
சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற   ஊடகங்கள் தற்கொலை நிகழ்வுகளை  வெளிச்சம் போட்டு காட்டாமல் மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக உதவ வேண்டும்.

தற்கொலையில் வெற்றிபெறாமல் காப்பாற்றப் பட்டவர்களின் நிலை, முந்தியதைக்காடிலும் பரிதாபமானது - சமூகத்திலும் குடும்பத்திலும், மற்றவரைச் சார்ந்தே இருக்க வேண்டிய அவலம்.
தற்கொலை இல்லாத  சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான வேலைதான்.“அரிது அரிது மானிடரைப் பிறத்தல் அரிது”.இயற்கையில் மலர்வதும் உதிர்வதும் யதார்த்தமென்றால்  பிறப்பதும் இறப்பதும் இயற்கையாகவே  நிகழவேண்டுமல்லவா? இறப்பு அது வரும்போது வரட்டும். அதுவரை வாழ்ந்துக்கொண்டிருப்போம்.
தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, சுயநலம், என தனது எனும் இடத்திலுள்ள அத்தனையயும் கொன்றுவிட்டு  மற்ற மனிதர்களோடு இணங்கி, அவர்களையும் நம்மைப்போலவே எண்ணி, மதித்து, மற்றவர்களையும் வாழ்வித்து நாமும் வாழ்வோம்.வாழ்வது ஒரு முறைதான். வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்.
அகில உலக  தற்கொலை தடுப்பு அமைப்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப  செப்டம்பர் 10 2013 அன்று இரவு 8  மணிக்கு உங்கள் வீட்டின் ஜன்னலில் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து அவர்களுக்கு உங்கள் ஆதரவை காட்டுங்கள்.
தொகுப்பு: லூசியா லெபோ.
.