பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 31 mai 2015

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். படத்தைப் பார்த்ததுமே எதைப் பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளப்போகிறோம் என்று புரிந்திருக்கும். 

முதலில் அழகு என்பது எது என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் நல்லது. பார்க்கும் கண்களை விட, உணரும் மனமே அழகை ரசிக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதனால்தான் எந்த ஒரு உயிருக்கும் ஏதோ ஒரு கவர்ச்சியும், அதை ஆழ்ந்து அனுபவிக்கும் ரசனை இன்னொரு உயிருக்கும் உண்டாகி ஒன்றையொன்று ஈர்க்கிறது.

மனிதத் தேவைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது பசியும், உணவும். சாதாரண வயிற்று, உடற் பசிக்கு மேலாய் மனிதனை மட்டும் பணம், பதவி, புகழ் என்கிறப் பசிகள் ஆட்டிப் படைக்கின்றன. அவற்றுக்குத் தீனி போட எதையும் செய்ய முன்வருவான் அவன்.  மற்றவர்களை மட்டுமல்ல, தன்னையே கூட அதற்காக வருத்திக்கொள்ளத் தயங்க மாட்டான். 

பிறர் முன் தனக்கென ஓரிடம் குறிப்பிட்டுச் சொல்லும்படி தேவை என முயல்வது தவறில்லை. அது அறிவாலா, ஆற்றலாலா, குணத்தாலா, பண்பாலா அல்லது வெறும் அழகுத் தோற்றத்தாலா என்பதைப் பொறுத்தே அத்தனி மனிதனின் தரம் நிர்ணயிக்கப்படும். எந்தத் தகுதியும் அவன் 'உள்ளிருந்து' வெளிப்படும்போது அது அழியாததாய், பிறருக்கு பயன்படுவதாய், எல்லோரையும் மகிழ்விப்பதாய் அமையும். மற்றவர் மனதில் நீங்கா இடத்தையும் பெற்றுத் தரும். ஓர் மகாத்மா,  வள்ளலார், அன்னை தெரெசா என அகத்தால் வென்றவர்கள் பலர். 

புற அழகுக்கு என்றும் ஓர் மதிப்புண்டு. அதை மறுப்பதற்கில்லை. புறக்கணிப்பதற்கும் இல்லை. இருக்கும் அழகை கண்ணுக்கிதமாய் வெளிக்காட்டுவதும், அதற்கான சில முயற்சிகளை மேற்கொள்வதும் தொன்றுதொட்டு கலையாகப் பேணப்பட்டும் வருகிறது. ஆனால் அதன் எல்லையை வரையறுத்துக் கொண்டால் நல்லது என்பதை உணரும் தருணத்தில் நாம் உள்ளோம் என்று தோன்றுகின்றது. 

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் வளர்ச்சி என்பது நின்று போய் நாம் உண்ணும் உணவின் சக்தி அதிகமாகவும் செலவழிக்கும் சக்தி குறைவாகவும் ஆகும்போது இடுப்பு, வயிற்றுப் பகுதிகளில் சதை போடுவது தவிர்க்க இயலாதது. பல வருடங்களாக உண்டு வந்த உணவளவைக் குறைப்பதோ, சூழ்நிலைகளாலோ அன்றி இயலாமையாலோ போதுமான அளவு உடற்பயிற்சி செய்வதோ எல்லோராலும் முடிவதில்லை. எனினும் ஓரளவு கவனமும், கட்டுப்பாடும் கடைப்பிடித்தாலே நிலைமையைக் கைமீறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இளைய தலைமுறை ஒடிந்து விழுவதைப் போன்ற உடலழகை விரும்பி மேற்கொள்ளும் செயல்பாடுகள் பின்னர் தங்களையே, தங்கள் உடல் நலத்தையே பாதிக்கக் கூடும் என்பதை அறிந்து அவற்றை செய்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. கட்டுப்பாடு என்ற பேரில் மிகக் குறைந்த அளவு உண்ணும் பெண்களால் பிறகு விரும்பினாலும் சரியான அளவை உண்ண  முடிவதில்லையாம்! வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைத் தாண்டி மீளப் போதிய சக்தியை காலம் கடந்து எங்கிருந்து பெற முடியும்?

இன்னொரு மாயை 'சிக்ஸ் பாக்'. அருந்த வேண்டிய நீரின் அளவைக் குறைத்து, சர்க்கரை, உப்பையும் குறைத்து,  அதிக புரதத்தை மட்டும் ஏற்பதால் கல்லீரல், சிறுநீரக பாதிப்புக்குள்ளாகும் நிலையை வருந்தித் தானே வரவேற்க வேண்டுமா? பாதியில் இம்முயற்சியைக் கைவிடுபவர்கள் நிச்சயம் பாதிப்புக்குள்ளாவார்களாம்! அதிக உடற்பயிற்சி காரணமாக வலி நிரந்தரமாக வழியுண்டாம். மாவுச்சத்து, பால் போன்றவற்றைத் தவிர்ப்பதால் உணவின் விகிதம் மாறுதலுக்குட்பட்டு பிரச்சனைகள் தோன்றுமாம். அழகின் பெயரால் இந்த அழிவை உடலுக்குத் தர வேண்டுமா?!

அளவான சத்துள்ள உணவு, வயதுக்கேற்ற உடல் உழைப்பு, ஆரோக்கியமான மன நிலை, தெளிந்த எண்ணங்கள், புன்னகை ததும்பும் இனிய பேச்சு இவையே இனிய தோற்றத்துக்கான  அடிப்படை. இவற்றை  வெல்ல எந்த நவீன கண்டுபிடிப்பும் உலகில் இல்லை!

திருமதி சிமோன் 

அழகும், ஆபத்தும்!

அழகை மிகைப்படுத்த வேண்டும் என்றக்  காரணத்துக்காகச் செய்யும் செயல்கள் பல உடலுக்குக் கேட்டையே தருகின்றன.

வருடக்கணக்கில் நாம் பரம்பரை பரம்பரையாக நமது நாட்டுச் சூழலுக்கும் பழக்கத்துக்கும் உரியதான ஓர் உணவு முறையைப் பின்பற்றி வரும்போது, அதை மாற்றினால் நமது உடலே தன் எதிர்ப்புணர்ச்சியை சிறு சிறு முறைகளில் வெளிப்படுத்துகிறது (வயிறு கனத்துப் போதல், சிறு நமைச்சல், பொருட்படுத்தக் கூடிய வலி, வயிறு போகுதல் இப்படி). என்றாவது ஒரு நாள் இது போன்று நடந்தால் தவறில்லை. ஆனால் தொடர்ந்து வயிற்றை சோதித்தால், அதன் விளைவுகள் எதுவாகவும் இருக்கலாம்.

தமிழனுக்கு அரிசி உணவு பழகிப்போன ஒன்று. 'விரைவு உணவு' (பாஸ்ட் புட்) என்னும் பேரால், குறைந்த அளவு-உடலை இளைக்க வைக்கும் என்ற கற்பனையில் தொடரும்போது சிறுநீரகங்களை நாமே செயலிழக்க வைக்கிறோம். இதே போல் தான் தண்ணீருக்குப்  பதில் குளிர் பானங்கள் பருகுவதும். அவற்றில் சக்தியைக் காட்டிலும்,  ரசாயனங்களே  அதிகம்.இதில் உடலைப் பளபளக்க வைக்கும் என்ற நம்பிக்கை வேறு! 'சிகரெட் உயிருக்குக் கேடு' என்று குறித்து விற்பனைக்கு வருவது போல அமெரிக்காவில் ஹாம்புர்கேர் பல விரும்பத்தகாத விளைவுகளைத் தரலாம் என்று போர்டே மாட்டியுள்ளார்களாம்!

முக அலங்காரத்திற்கென விற்கப்படும் கிரீம்களும், தலைக்குக் கருமை தரும் சாதனமும் தோல் எரிச்சல், சிவப்பு, தடிப்பாதல், முகம் பிறகு சிறிது சிறிதாக உடலில் கொப்பளங்கள் தோன்றுதல் என வெளிப்படுகின்றன. வெளி அடையாளங்களே இவ்விதம் என்றால் ரத்தத்தில் அவை என்னென்ன மாற்றங்களைத் தருமோ, அவை எப்போது எப்படி எதிரொலிக்குமோ! சில முகப் பவுடர்கள் கூட தோலின் இயற்கைத் தன்மையைப் பாழாக்குகின்றன.

பெண்களின் மார்புக் கச்சைகள் மிக இறுக்கமாக இருந்தால் சீரணக் கோளாறு, மூச்சு விடுதலில் சிரமம் முதற்கொண்டு கான்சர் வரை ஏற்படுத்தும்.

இறுக்கமான ஜீன்ஸ் உடைகள் பெண்களுக்கு உராய்வை ஏற்படுத்தி புண்ணாக்கியும், ஆண்களுக்கு அளவுக்கு அதிகமான பிடிப்பால் ஆண்மையைக் குறைத்தும் செயல்படுகின்றன. (அந்தக் காலத்தில் நிலக்கரி சுரங்க வேலையில் அழுக்கு பட்டாலும் தெரியாது, உழைக்கும் என்பதற்காகக் கண்டு பிடித்ததைப் போட்டுக் கொண்டு வலம் வந்தால் ஏன் இதெல்லாம் ஏற்படாது?)

இல்லாத உயரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் 'ஹை ஹீல்ஸ்' பெண்களின் இடுப்பு எலும்பு, முழங்கால், கணுக்கால் எலும்புகளை நாளடைவில் பாதிக்கும்.

மேற்கண்டவற்றை உபயோகிக்கும் பிரபலங்களை, சினிமா நட்சத்திரங்களைக் கண்டு நாமும் பின்பற்ற விரும்பி அவர்களைப் போல் ஆக விழைகிறோம். ஆனால் அந்த நட்சத்திரங்கள் ஒளி  இழந்த பிறகு எந்த நிலையில் உள்ளார்கள் என்று நமக்குத் தெரியப் போவதில்லை; தெரிந்துகொள்ள ஆர்வமுமில்லை.  அப்படியே நம்மையும் நாம் விட்டு விட முடியாதல்லவா? நமது வருங்காலம், முக்கியமாக 40க்கு மேல் ஆரோக்கியமாக விளங்குவது நம்மைப் பொறுத்தமட்டில் அத்தியாவசியமானது அல்லவா!  

திருமதி சிமோன்