பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 27 janvier 2013

எண்ணப்பரிமாற்றம்

                                                                


அன்புடையீர்,

வணக்கம். உள்ளத்து உணர்வுகளையும், எண்ணச் சிதறல்களையும், கற்பனை வளங்களையும் எடுத்தியம்பாமல் மனிதப் பிறவியால் அமைதி காண முடியாது. அது இயலுமென்றால் உலகில் பேதங்களோ, முரண்பாடுகளோ, வன்மமோ அல்லது சண்டையோ இருக்காது. அவரவருக்குத் தோன்றுவதை வெளிப்படுத்துவதாலேயே பிரச்சனைகள் தோன்றுகின்றன. ஆனால் அதற்காக மனித குலம் மவுனம் சாதித்தால், ஒரு வகையில் உலகம் இருண்டு விடும். பேதங்களே வாழ்வுக்குச் சுவை கூட்டுகின்றன.

வெளிப்படுத்துவதிலும் மனிதன் கண்ட வகைகள் தன்னிகரற்றவை. இசையோ, நாட்டியமோ,சிற்பமோ,ஓவியமோ அதில் தானும் கரைந்து, நம்மையும் அதில் பிணைத்து விடுவது அவன் திறமைக்குச் சிகரமாக அமைந்து விடுகின்றது. இதில்  கண்ணால் காண்பதை உணர்வுடன் ஒன்றி காணும் வகை  ஆக்குவது ஓவியம். வரைந்தவனது கருத்து, அதில் அவன் பெற்ற உணர்வு, ஆழ்ந்து அதை ரசிக்கும் மனிதனையும் தொற்றிக்கொண்டு விடுகிறது.

தீட்டியவன் யாரென்றே தெரியாதபோதிலும், ஓர் அழகிய கவிதையில் மெய் மறந்துபோவதைப் போல சித்திரங்கள் நம் இதயத்தை ஆட்கொள்கின்றன. உலகத்து முன் உடல் மறைந்தாலும், தான் தீட்டிய ஓவியத்தின் வழி அவன் சிரஞ்சீவி ஆகிறான். தன்னில் ஒரு பாகத்தை, ஏன், தன்  முழுமையை பதிவு செய்துவிட்டே மறைகிறான்.

வான் வெளியில் ஒளிரும் அத்தனை மீன்களையும் இனம் காண இயலாதெனினும், மிளிரும் ஒருசில கண்கவர் சுடர்களைக் கண்டு களிப்போம்!

திருமதி சிமோன் 

ஓவியப் பரிணாமம்


     முதல்     வரை              பிரெஞ்சுக் குகை ஓவியம்                                                            பிக்காசோ ஓவியம் "ஒவ்வு" எனும் வினையடி கொண்ட ஓவு, ஓவம், ஓவியம் கண்ணால் காணும் அற்புதங்களை, கற்பனையில் களிக்கும் விசித்திரங்களை காட்சியாக்கிக் காட்டும் ஓர் ஒப்பற்றக் கலை. முற்காலத்தில் ஓவியத்தொழில் 'வட்டிகைச் செய்தி' எனப்பட்டது. (வட்டிகை-துகிலிகை-brush) நிறம் தீட்டா ஓவியம், 'புனையா ஓவியம்' (outline) என்றழைக்கப்பட்டது.

இந்தியாவில் பல்லவ ஓவியங்கள் மிகப் பழமை வாய்ந்தவை. பொதுவாக இந்திய ஓவியங்கள் கடவுள், அரசர் என புராணங்களை அடிப்படையாகக் கொண்டவை.  'பீம்பேத்கா' பாறை வாழிடங்களில் வரையப்பட்டவை கி.மு. 5,500 என்றும், அஜந்தா 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. 'மதுபானி,ராஜ புதன, முகலாய, தஞ்சாவூர், வங்காள, சென்னை பாணி' என ஓவியப் பாணிகள் பல உண்டு. பாரசீக பாணியும் உண்டு. இவை கிழக்கு 'நாலந்தா'வில் வளர்ச்சிக் கண்டவை. 'நைடதம்', 'நெடுநல் வாடை', 'சிந்தாமணி', 'பதிற்றுப்பத்து', 'கம்பராமாயணம்', 'மணிமேகலை' போன்றவை ஓவியம் பற்றிப் பேசுகின்றன.

சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் ஓவியங்கள் 'வனப்பெழுத்து' (calligraphy), 'அச்சடிப்பு' (print making) கொண்டவை. கம்யுனிசம், தாவோயிசம், புத்த மதம் ஆகியவை ஓவிய வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தன. 12 ஆம் நூற்றாண்டு 'சலவை செய்யும் பிக்குகள்' ஓவியம் பவுத்த எண்ணங்களைச் சீன மரபில் வெளிப்படுத்துகிறது.   


பிரான்சிலுள்ள குகை ஓவியம் (Grotte Chauvet):  உலகின் மிகப் பழமையான ஓவியம் என்றப் புகழைப் பெற்றுள்ளது. கி.மு. 32,000 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டுள்ள இதில் மிருகங்கள் கொண்ட வேட்டைக் காட்சிகளே உள்ளன. அக்கால மனிதர் அதைப் பிரதிபலிக்க, தகவல் பரிமாற, வணங்க அல்லது அவற்றின் ஆவியைப் பிடிக்க வரைந்திருக்கலாம் எனப் பல கருத்துகள் உலவினாலும், இயல்பான கண்டுஉணர்வின்  வெளிப்பாடாகவும் கொள்ளலாம். கலர் கற்கள், தோல்கள், உலோகங்கள், மரக்கரி இவற்றைப் பொடியாக்கி,  நீரில் குழைத்துக் கூராக்கிய கற்கள் மூலம்  தீட்டிய இந்த ஓவியங்கள் ஆதி மக்களின் திறமையையும், அழகுணர்ச்சியையும் இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.


                 
                                                      
                                                          எகிப்திய ஓவியம்


எகிப்தியர்கள் தமது ஓவியங்களை கணிதசூத்திரத்தைக் கொண்டு வரைந்தார்கள். இவை இருபரிமாண முறையில் வரையப்பட்ட ஓவியங்களாகும்.தமது ஓவியங்களில் வாழ்க்கை போக்கைக் காட்டினார்கள்.  ஆலயச் சுவர்களிலும்,  கல்லறைகளிலும் தாம் வாழ்ந்த அன்றாட நிகழ்ச்சிகளை - அனுதினமும் செய்யும் உணவு தயாரிப்புகள், வாணிபங்கள், மீன் பிடிப்பு, படகோட்டல், கப்பல் மிதப்பு, குடும்பச் சந்திப்பு தம்மிடம் வளரும் விலங்கினங்கள் ஆகியவற்றை   வரைந்தார்கள்.

எகிப்திய ஓவியங்களில் காணப்படும்    உருவங்களின் அமைப்புகள் தனித்துவ அம்சங்களைக் காட்டின. சுவர், தூண் ஓவிய வடிவங்கள் அசையாமல் நேராக நின்றன. அல்லது நடந்தன. ஓவிய மாந்தரின் முகங்கள் ஒரு கண் தெரியும்படிக் பக்க வாட்டில் வரையப் பட்டுள்ளன. மாந்தரின் கை, கால்கள் முழுவதும் காட்டப் பட்டன. மனித வடிவத்தின் நடுவுடல் எப்போதும் முன்நோக்கியே இருந்தது.எல்லோரின் முகங்களும் அந்தஸ்து, பால் வேறுபாடின்றி ஒரே விதமாகவே காணப்படுகின்றன.ஃபாரோ மன்னரின் உடம்பைக் காட்டும் போது, அவரது தெய்வீக அம்சத்தையும், உன்னத நிலையைப் போற்றவும் மற்ற நாட்டு மாந்தரைவிட ஓவியத்தில் பெரிதாகக் காட்டினார்கள்.
நார் நாரான மரக் குச்சிகளின் முனை தூரிகையாகக் கலைஞனுக்கு உபயோக மானது. சுவர்கள் முதலில் மண்ணில் கட்டப்பட்டுப் பிறகு சுண்ணத்தால் பூசப்பட்டவை. ஃபாரோ மன்னர் காலத்திய ஓவியர்கள் வண்ண அலைகளை வரைந்து, அடுக்கடுக்கான விளைவுகளைக் காட்டினர். மேலும் சுவர் ஓவியங்களைப் பாதுகாக்க எகிப்தியர் ஒருவித வர்ணக் காப்பு ஆயிலைப் [Varvish] உபயோகித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அது எதிலிருந்து உண்டானது அல்லது எப்பண்டங்கள் சேர்ந்து கலக்கப் பட்டது என்பது அறிய முடியாமல் ஒரு புதிராகவே உள்ளது!

எகிப்தியர் ஒரு தனித்துவக் கலவை நிறங்களைப் பயன்படுத்தினர். அவரது ஒவ்வொரு வண்ணமும், மாந்தரின் வெவ்வேறு பண்பைச் சுட்டிக் காட்டியது!  பண்டை எகிப்தியர் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருமை, வெண்மை ஆகிய ஆறு நிறங்களைப் பயன்படுத்தினர். அவற்றின் குறிப்பிடத் தக்க சிறப்பு என்னவென்றால் அவ்வண்ணத் திரவங்கள் யாவும் உலோகவியத் தாதுக் கலவைகளிலிருந்து [Mineral Compounds] எடுக்கப் பட்டவை! அதனால்தான்  ஓவியங்கள் இன்னும் பழுதடையாமல், அழிந்து போகாமல் 3000 ஆண்டுகளாக நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கின்றன! பச்சை நிறம் பசுமை, செழுமை, வளர்ச்சி, பயிரினம் ஆகியவற்றைக் காட்டின. மரணக் கடவுளான ஓஸிரிஸ் [Osiris, God of the Dead] பச்சை நிற மேனி கொண்டதாக வரையப் பட்டிருந்தது! சிவப்பு நிறம் ஆற்றலை வலியுறுத்தும். ஆதிக்கம், ஆணவம், ஆங்காரம், வெற்றி, தீக்கனல் ஆகியவற்றைக் காட்டவும் செந்நிறம் கையாளப் பட்டது! படைப்புக் கடவுளாகக் கருதப்படும் எகிப்திய பிரம்மா, அமுன் [God Amun, The Creator] நீல நிற முகத்துடன் உள்ளதாக வரையப் பட்டிருக்கிறார். மஞ்சள் வண்ணத்தில் காட்டப் பட்ட அத்தனையும் அழிவற்ற நிரந்தர நிலையுறும் சிறப்பு பெற்றவை!  கடவுளாகக் கருதப்படும் ஃபாரோ மன்னர்கள் மஞ்சள் நிறத்தில் வரையப் பட்டனர். மரணத்தின் நிறம் கருமை. இரவைக் குறிக்கவும், அடித்தளப் பூமியைக் காட்டவும் கருமை நிறம் பயன்படுத்தப் பட்டது.  வெண்மை நிறம் புனிதம், தூய்மை, புண்ணிய பணிகள், தெய்வாம்சம் ஆகியற்றைக் காட்டியது. ஆலயப் பூசாரிகள் பயன்படுத்தும் பண்டங்கள், கருவிகள் வெள்ளை நிறத்தில் வரையப் பட்டன.                                                                
                                                                   கிரேக்க ஓவியம்


எகிப்தியர்களை அடியொற்றி ஓவியத்தினுள் நுழைந்தவர்கள் கிரேக்கர்கள் ஆவார்கள். இவர்கள் தமது  கண்களால் உள்வாங்கியதை தம் ஆத்மாவுக்குள் செருகி உயிரோட்டமுள்ளதாகவும், ஒளிமயமானதாகவுமுள்ள ஓவியங்களை வரைந்தார்கள்.ஓவியத்திற்கான விதி, எடை, சமனிலை என்பவற்றை நிர்ணயித்து அழகான ஓவியங்கள் பிறப்பெடுக்க கிரேக்கர்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியது. இவர்களது ஓவியங்கள் முப்பரிமாணத்தைக் காட்டி நின்றன. இங்கு நரம்பு, தசையமைப்புக்கள் வெளிப்படுத்தப்படுவதால் உயிர்ப்புத்தன்மையை நாம் காணலாம் .


                                                           
                                                                      எல்லோரா


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் அஜந்தா  எனும் ஊரில் உள்ள  குகைகளில் வரைந்த ஓவியங்களே அஜந்தா ஓவியங்களாகும். இவை கிமு 200 முதல் கிபி 650 வரையான பல்வேறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை. இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்குகைகளில் பாறைகளில் மட்டுமல்லாமல், கூரைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.அஜந்தா குகை ஓவியங்களில் ஹீனயானம், மஹாயானம் என்னும் புத்த மதத்தின் இரு பிரிவுகளின் ஓவியங்களும் உள்ளன. புத்தரின் வாழ்க்கையும் ஜாதகக் கதைகள் என்று குறிப்பிடப்படும் அவரது முந்தைய பிறவிகளின் வாழ்க்கையும்தான் அவற்றில் கருப்பொருளாக உள்ளன.

 குகையின் கற்சுவர்மேல் களிமண்ணும் சாணியும் கலந்த கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச்சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பலவண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக்கொண்டு வரையப்பட்டவை. சுண்ணாம்புச்சாந்து இறுகுவதற்குள் வரையப்பட்டுவிடுவதனால் கூழாங்கல்சாந்து உறுதியாகவே ஒட்டிக்கொள்கிறது. இவை தாவர வண்ணங்கள் அல்ல. ஆகவேதான் இரண்டாயிரம் வருடங்களாகியும் வண்ணம் மங்காமலிருக்கின்றன. பல இடங்களில் ஓவியங்கள் மனித நடவடிக்கைகளாலும் கால ஓட்டத்தினாலும் சிதிலமடைந்துள்ளன.இதை 1983 ஆம் ஆண்டில் உலகப்பண்பாட்டுச் சின்னமாக  யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

அஜந்தா ஒவியங்கள் உருவான காலத்திலேயே படைக்கப்பட்ட சுவர் ஓவியங்களில் மிஞ்சியவை பிதல்கோரா, எல்லோரா போன்ற இடங்களில் உள்ள பல குகைமண்டபங்களில் இன்றும் உள்ளன.                                                        
                                                               சித்தன்னவாசல்


சித்தன்னவாசல்குடவரை ஒவியங்கள்  இந்திய ஓவியக்கலைப் பாரம்பரியத்தில் தமிழகத்தின் பங்கினை பறைசாற்றுபவை.புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் அருகில் உள்ள மலையில் உள்ளது. குடைவரைக் கோவிலின்  முன்மண்டபம், புறமண்டபம்  ஆகியவற்றில் தொழில் நுட்பம் மிக்க ஒவியங்கள் காணப்படுகின்றன.இங்குள்ள ஒவியங்கள் பாண்டியர் காலத்தைச் சார்ந்தவை என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் வழியாக அறிகிறோம்.

சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடி முன்மண்டபத்தின் விதானத்தில் தீட்டப்பட்டுள்ள தாமரைத் தடாகமாகும்.  பசுமையான இலைகளுடன் தாமரையும் அல்லியும் மொட்டாகவும் இதழ் விரித்தும்  பூத்துக் குலுங்குகின்றன, பலவிதமான மீன்கள் நீந்தி விளையாடுகின்றன, யானைகள் நீரைக் கலக்கி களித்திருக்கின்றன , சுற்று சூழலை மறந்து எருமை மாடுகள் அசைபோட்டு இருக்கின்றன,  அன்னம், வாத்து போன்ற பறவைகள் தங்கள் பெடைகள்  குஞ்சுகளுடன் குலாவிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு நடுவில் பவ்யர்கள் என்னும் கந்தர்வ புருஷர்கள் நீராடி வழிபாட்டிற்கு பூக்களை பறித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக எங்கும் உயிரோட்டம் நிறைந்த மனதிற்கினிய இந்த ஓவியம் பல வண்ணங்களில்  அமைந்து இருப்பது கண்கொள்ளா காட்சியாகும்.

தூண்களின் முகப்பில் நடனமாடும் கணிகையர் இருவரின் எழில்மிகு தோற்றம் தீட்டப்பட்டுள்ளது.அங்க அசைவுகள், ஓளி பொருந்திய கண்கள், புன்முறுவல், சிகை அலங்காரம், கழுத்தில் காதுகளில் அணிந்துள்ள ஆபரணங்கள்  போன்றவை தத்ரூபமாக வண்ணங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.கருப்புக்கு கரிப்பொடி, நீல நிறத்துக்கு  நீலக்கல், மஞ்சளுக்கு காவிகற்கள் பிறவண்ணங்களுக்கு  இந்த வண்ணங்களின் கலப்பு- இயற்கை வண்ணங்களே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்தாமரை தடாக  ஓவியமும் நாட்டிய மகளிரின் ஆடல் காட்சியும் சமணர்களின் சொர்க்கத்துக்கு  செல்லும் வழியில் அமைந்த காதிகா பூமியைக் குறிக்கும் என்று  ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.                                                      
                                         தஞ்சைக் காதலர்


தஞ்சாவூர் பாணி: சோழர் ஆட்சிகாலத்தில்  தஞ்சாவூர் ஒவியங்கள் தோற்றம் பெற்றன. 16 முதல் 18 நூற்றாண்டு வரை மராத்திய மன்னர்கள், விஜய பேரரசை ஆண்ட நாயக்கர்கள், தஞ்சாவூரின் ராஜாக்கள்  சமுதாயத்தினர் ஆகியோரின் ஆதரவில் நன்கு வளர்ச்சியுற்றது.இவை பெரும்பாலும் அரண்மனையின் உட்பகுதிகளை அலங்கரித்தன.இந்த ஓவியங்களின் கருப்பொருள் இந்துமதம் சார்ந்ததாகவே இருந்தது. கடவுளரின் உருவங்கள், புராணக்கதை மாந்தர்களின் உருவங்கள்   வரையப்பட்டன. இத்தகைய ஒவியங்கள் செதுக்கல் வேலைப்பாடுகள் கொண்ட மரச்சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும். சட்டமும் ஓவியத்தின் ஒரு பகுதியாக கருதப்படும். சில உருவங்கள் உருண்டு திரண்ட பருமனான உடல் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் இவற்றில் பெண்மை சாயல் மேலோங்கி இருக்கும்.கரும் பச்சை, அடர் நீலம், ஒளிர் சிவப்பு ஆகிய நிறங்களில் பின்புலம் அமைய, நீலம், மஞ்சள், பச்சை, வெள்ளை நிறங்களில் உருவங்கள் தீட்டப்பட்டிருக்கும்.இலை, தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல் , கடுக்காய், நவச்சாரம், மஞ்சள், சங்கு ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரிக்கப்பட்டன.இந்த பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும்  கலந்தது. எனவே ஒவியங்களில்  கற்கள்  பதித்தல், தங்க இழை வேலைப்பாடுகள் என பிற்காலத்தில் பல மாற்றங்களைக் கண்டுள்ளது.


                                                     
                                                          முகலாயக்  காதலர் 


நாடு கடத்தப்பட்ட முகலாய மன்னர் ஹுமாயுன் இந்தியா  திரும்பியபொழுது  மிர் சயித் அலி, அப்து  உஸ் சமாத்  என்ற இரண்டு பாரசிக ஓவியர்களை தன்னுடன்அழைத்து வந்தார். அக்காலத்து பாணியுடன் இணைந்து முகலாய பாணி உருவானது.அதனால் இந்திய, பாரசிக, இஸ்லாமிய பாணிகளின் கலவை இது எனலாம்.16 - 18 ஆம் நூற்றாண்டுகளில் முகலாயர்  மன்னர்களால்  வளர்க்கப்பட்டது.போர், வரவேற்பு,வேட்டையாடுதல், மரபுவழி கதைகள், மன்னர்கள் சபை,தனி உருவங்கள், இவற்றைக்  கருப்  பொருளாக வைத்து ஒவியங்கள் தீட்டப்பட்டன .மன்னர் ஔரங்கசீப் காலத்தில் அவருடைய ஆதரவு இன்மையால் இதன்  மதிப்பு குறைய ஆரம்பித்தது. மன்னர் இரண்டாம் ஷா ஆலம்(1759 - 1806) காலத்தில் இந்தப்  பாணி சில மாற்றங்களுடன் இராஜபுதன ஓவியப் பாணியாக மாறியது.
                                                             
                                                                இராஜபுதன ஓவியம் 
18 ஆம் நூற்றாண்டில் இராஜபுதனத்து அரசவைகளில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது.ராமாயணம், மகாபாரதம் போன்ற  இதிகாசங்கள் சார்ந்த நிகழ்வுகள், கண்ணனுடைய வாழ்க்கை, அழகிய நிலத்தோற்றங்கள்,   மனிதர் போன்ற கருப்பொருட்கள் தீட்டப்படுகின்றன. இவ்வகை ஓவியங்களுக்குப்  பெரிதும்   விரும்பப்பட்ட ஊடகமாக சிற்றோவியங்கள்  (miniature) விளங்கின.அரண்மனை, கோட்டை சுவர்களில் இவ்வகை ஒவியங்கள் வரையப்பட்டன. பல நூல்களின் கையெழுத்து பிரதிகளிலும் காணப்படுகின்றன.இவற்றிக்கு பயன்படுத்தப்படும் நிறங்கள் தாவரங்கள், கனிமங்கள், சிப்பியின் ஓடுகள் இவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டவையாகும்.கற்கள் , பொன், வெள்ளி போன்றவையும் பயன்படுத்தப்பட்டன.இந்த பாணியில் பல பிரிவுகள் உண்டு.

                                                     

                                                      
                                         மக்களை வழி நடத்தும் சுதந்திரத் தேவி


Eugène Delacroix: (1798-1863) பிரெஞ்சுக்காரரான இவர் 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஓவியர். சரித்திர நிகழ்வுகளுக்கு உயிர் கொடுத்தவர். 1830 இல் 260 x 325 cm பரப்பளவில் இவர் வரைந்த ஆயில் பெய்ண்டிங் "La Liberté guidant le peuple" பிரான்சின் "Louvre" அருங்காட்சியகத்தில்  உள்ளது. சிறந்த ஓவியங்களில் முதன்மையாகத் திகழும் இதில், சுதந்திரத் தேவி முன்னின்று எதிரிகளை அழித்து, படைகளை நடத்துவதோடு இளையத் தலைமுறையையும் நாட்டு நலனுக்காகப் பொங்கி எழச் செய்கிறாள்.
                                                       


வின்சென்ட் வான் கோ: (1853-1890) நெதெர்லாந்துக்காரரான இவரது ஓவியங்கள் உலகின் மிக அறியப்பட்ட, விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டவை ஆகும். நவீனபாணிக்கு முதன்மையானவராகக் கருதப்படுகிறார். கலைப்பொருள் விற்பனையாளராகவும், ஆசிரியராகவும் வேலை செய்தவர், சுரங்கப் பகுதியில் சமயத் தொண்டு புரிகையில், அங்குள்ள மக்களை வரைய ஆரம்பித்தார். தன் வாழ்நாளின் கடைசி இரண்டு ஆண்டுகளே அவர் வரைந்தார். உயிருடன் இருந்த போது  அவரது கைத்திறன் பாராட்டப்படவில்லை! தன் ஓவியம் ஒன்றை மட்டுமே அவரால் விற்க முடிந்தது. மன நோயால் பாதிக்கப்பட்டு இறக்குமுன் அவர் சொன்ன வார்த்தைகள்: "துயரம் என்றும் தொடரும்"                                                            
                                                                  ஹூசெய்ன்


எம்.எப். ஹுசெய்ன்: (1915-2011) இந்திய நவீன பாணி ஓவியர். எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற தகுதிகளும் கொண்டவர். அமெரிக்க, ஐரோப்பியப் புகழ் பெற்றவர். 'போர்பஸ்' இதழ் "இந்திய பிகாசோ" எனப் புகழ்ந்துள்ளது. 'ஓர் ஓவியர் பார்வை' என்ற இவரது படம், 'பெர்லின் திரைப்பட விழா'வில் "தங்கக் கரடி" பரிசு பெற்றது. இந்திய அரசு "பத்ம ஸ்ரீ"(1955), "பத்ம பூஷண்" (1973), "பத்ம விபூஷன்"(1991) பட்டங்களை அளித்து பெருமைபடுத்தியது.'பாரத ரத்னா'வுக்கும் பரிந்துரைக்கப் பட்டது. இவரது ஓவியங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டன. 'கிறிஸ்டி' ஏல நிறுவனம், இவர் ஓவியம் ஒன்றை $1.4 மில்லியனுக்கு விற்றது.

இந்துக் கடவுளரை நிர்வாணமாக வரைந்தார், மும்பை குண்டு வெடிப்பின்போது (Rape of India) பாரத மாதா கற்பழிக்கப் பட்டதாக தீட்டினார் என்றக் குற்றச்சாட்டுகளால் 2006இல் துபாய் சென்று, 2010இல் கத்தார் குடியுரிமை பெற்றார்.                                                      
                                                                 சீன ஓவியம்


சீன ஓவியம் தனித்தன்மை கொண்டது. கற்கால மண்பாண்ட ஓவியங்கள் சுருள் வடிவங்களையும், நெளிவுகளையும், புள்ளிகளையும், விலங்குகளையும் கொண்டுள்ளது. கி.மு.403-221லிருந்துதான் பொருட்களும், நிகழ்வுகளும் இடம் பெற ஆரம்பித்தன. தூரிகைக் கொண்டு, கருப்பு அல்லது நிற மைகளைத் தொட்டு, காகிதம் அல்லது பட்டில் வரையப்படுகிறது. சீன மொழியில் "குவோ உவா" என்றழைக்கப்படும் இதற்கு 'தேசியம்' அல்லது 'உள்ளூர் ஓவியம்' என்று பெயர்.                                                  


பாப்லோ பிகாசோ : (1881-1973) 20ஆம் நூற்றாண்டின் முக்கியக் கலைஞர். ஓவியர் , சிற்பி. கியூபிசம் என்னும் கலைப்பாணி மூலம் புகழ் பெற்றார். ஸ்பெயின் நாட்டுக்காரரான இவர் 50,000 படைப்புகளுக்குச் சொந்தக்காரர். அவற்றுள் 8,000 ஓவியங்கள் உள்ளடக்கம்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில், ஓவியம் மற்றும் சிற்பக்கலைத் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது கியூபிசமாகும். இது பிக்காசோவும், பிராக்கும் இணைந்து உண்டாக்கிய ஓவியப் பாணி.பிராக் வரைந்த ஓவியம் ஒன்றைப்  பார்த்த பிரான்ஸ் நாட்டு கலை விமர்சகரான லூயிஸ் வோசெல்ஸ்  ( Louis Vauxcelles) என்பவர், .ஓவியம் சிறிய கனக்  குற்றிகளினால் ஆனது என்பதை கண்டறிந்தார்.எனவே "full of little cubes" என வர்ணித்தார். 1908 முதல் இத்தகைய ஓவியப்பாணி கியூபிசம் என அழைக்கப்படுகிறது.பொருட்களின் பலகோணப்  பார்வைகளை வெளிப்படுத்திப் பொருட்களை முழுமையாகக் காட்டும் முயற்சியே கியூபிசத்தின் அடிப்படையாகும்.இத்தகைய படைப்புகளில் தளப்பரப்புகள், அவற்றின் பின்ணணி தளங்கள் ஒன்றையொன்று பல்வேறு கோணங்களில் வெட்டுகின்ற தோற்றத்தைக் காணமுடியும்.


                                     கேலிச் சித்திரம்


                                        
             இலட்சுமன்                                                                            மதன்


Caricature and cartoon: கிரேக்க-ரோமன் கால உத்தியாயினும், இப்போதும் வித்தியாசமான முறையில் கேலிக்குரிய வகையில் எல்லாவற்றையும், முக்கியமாக மனிதர்களை வரைதல். 19ஆம்  நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரபலமடைந்தது. பஞ்ச் (1841-1992), Fun (1861-1901), ஜூடி (1867-1907) என்ற பத்திரிக்கைகள் இதை வளர்த்தன. Honoré Daumier என்ற பிரெஞ்சுக்காரர் இதில் பெயர் பெற்றவர். தமிழ் நாட்டில் லக்ஷ்மண், மதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

நகையைத் தூண்டும் இக்கலை ஒரு தலையங்கம் உணர்த்தாதக் கருத்தைப்  புரிய வைக்கக் கூடியது. தடித்தக் காகிதம் எனப் பொருள் தரும் இத்தாலி வார்த்தை. பிரிட்டன் பாராளுமன்றச் சுவர்களை அலங்கரிக்க ஓர் ஓவியப்போட்டி நடத்தினார்கள். அதில் நிராகரிக்கப்பட்ட ஓவியங்களை பஞ்ச்  பத்திரிகை 'பஞ்ச்  கார்டூன்' என வெளியிட, இப்புதுப் பெயர் நிலைத்தது. பாரதி முதன் முதலில் ஆங்கில ஆட்சியின் குறைகளை "இந்தியா" வில் கார்டூனாக வெளியிட்டார்.


ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண் என்ற ஆர். கே. லட்சுமண்.

கார்ட்டூன் வரைபவர்களுக்கு தனி மரியாதையை ஏற்படுத்தி தந்தவர். கார்ட்டூன் மூலமாக நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அறியப்பட்டவர். ஆரம்ப காலகட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளில் கார்டூனிஸ்ட்ஆக பணி புரிந்து இருந்தாலும்இவர் உருவாக்கிய மிஸ்டர் பொது ஜனம் என்கிற பாத்திரமும் அதன் மூலம் இவர் சொன்ன விஷயங்களும் இவருக்கு மிகுந்த புகழை ஏற்படுத்தி தந்தன. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் இவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பணி புரிந்தார்.இவரின் சகோதரர் புகழ் பெற்ற எழுத்தாளரான ஆர்.கே நாராயண்.

மதன் - மாடபூசி கிருஷ்ணசுவாமி கோவிந்தகுமார், 1970 இல் ஆனந்தவிகடனில் கார்டூனிஸ்ட்ஆக பணியில் சேர்ந்தவர், தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்டு கார்ட்டூன் வரைவதில் மிக திறமைசாலி,எழுத்தாளராக இவர்  எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள் 'வரலாற்று தொடரின் மூலமாக மொகலாய மன்னர்களை நம் அண்டை வீட்டுக்காரர்கள் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியவர், எழுத்தாளர், சினிமா விமர்சகர், என்று பன்முக திறமை கொண்டு தனது தனி திறமையால் மிளிர்கிறார்.


ஓவியம் பற்றி ஒரு சில:

இடையுறாத தேடுதலும் எளிய மக்களோடு கூடிய வாழ்வும் இயற்கையை புரிந்து கொள்ளும் விதமும் கட்டுபாடற்ற கற்பனையுமே ஒருவனை ஒவியனாக்குகின்றன என்கிறார் காகின்.


“A picture is worth a thousand words” (யார் சொன்னது??)

"Art is lie that makes us realize the truth" - Pablo Picasso.


பெரும்பாலும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஓவியர்கள் வரையும் படமே பிரெஞ்சு ஓபன் போஸ்டராக அறிவிக்கபடும். ஆனால் 2010  ஆம் ஆண்டு ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தை மீறி வெற்றி பெற்றுள்ளார் நளினி.இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்கு போஸ்டர் வரைந்த முதல் இந்தியர் மற்றும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.மும்பையைச் சேர்ந்த நளினி (64) பாகிஸ்தானில் பிறந்தவர். வண்ணத்துப் பூச்சிகளுக்கு நடுவே பெண் வீராங்கனை டென்னிஸ் விளையாடுவது போலவும், மற்றொரு வீராங்கனை தரையில் விழுந்து எழுவதுபோலவும் அவர் வரைந்த படம், 2010-ம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி போஸ்டராக தேர்ந்தெடுக்கப்பட்டது.


ஓவியத்தில் இறைமை     இறைச்சங்கமம்                             
 இறைவனும் மனிதனும்                                                            கண்ணனும்கோபியரும்  
    (மைக்கலாஞ்சலோ)


இறைவன் மனிதனைப் படைப்பதும், காப்பதும் பெரிதல்ல. ஏனெனில் மாயையில் உழலும் மனிதனுக்கு அது புரியப் போவதில்லை! தன்  மயமாகச் சிந்தித்து, தானே எல்லாமாய் நினைத்து, தன்னிலேயே நிறைவு காணும் அவனுக்கு இறைவனே உண்மையை உணர்த்தினாலன்றி, தான் ஒரு கைப்பாவை என்பது புரிய வழியில்லை. அது புரிந்தபின் தான் தன்னைப்பற்றிய உணர்வை ஒழித்து, தன்னை இயக்கும் சக்தியைப் பற்றி எண்ணி, புரிந்து,அனுபவித்து,ஏற்று,இணைய விரும்பி தன்னையே இழப்பான்! அந்தச் சங்கமத்திற்காகவே, உலக இன்பங்களில் மூழ்கிக் கிடப்பவனுக்கு இறைவன் கை கொடுக்கிறான். நீக்கமற நிறைந்து ஆட்கொள்கிறான்.

அந்த சுகானுபவத்தை வார்த்தைகளை விட ஓவியங்கள் அற்புதமாக வெளிப்படுத்துகின்றன. தந்தையும், தாயுமாகி அணைப்பது மட்டுமல்லாமல் இங்கு வாழும் வரை நீயும் ஆணென்றும், பெண்ணென்றும் பேதம் கண்டு மயங்காதே என்றுணர்த்தும் இறைமையை மனிதனோடு இணைக்க மதங்களும், உண்மையும் போராடுகின்றன.                                                          
                                                                     சிவன் பார்வதி
                                                                (அர்த்தநாரீஸ்வரர்)


சிவனின் திருவிளையாடல்களும், கண்ணனின் லீலைகளும், ராமனின் ஏகபத்தினி விரதமும், உயிர்களிடத்துக் கொண்ட அன்பும் நாம் இங்கு வாழும் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணங்களே அன்றி வேறென்ன?                                                          
                                                                       ராமர் சீதை
                                                               மணியம்  செல்வன்  


பூமியில் இருக்கும் வரை, தன்னைப் போலவே பிறரையும் எண்ணும் பக்குவம் வேண்டும், தன்னிடம் உள்ளதை பிறருக்கீயும் மனித நேயம் வேண்டும், தன்னையே இழக்கவும் துணியும் தியாக உள்ளம் வேண்டும் என்பதை இயேசுவின் வாழ்க்கை தெள்ளத்தெளிய உணர்த்துகிறது. மனிதர்களுக்காகத் துறக்கும் மனநிலையே பின்னர் கடவுளுக்காக உலகைத் துறக்கும் திடத்தை அளிக்கிறது.                                                          
                                                      இயேசுவின் கடைசி உணவு


இறைவனைப் பற்றும் மனம் அடுத்து எதையும் எதிர்கொள்ளும் திடத்தைப் பெறுகிறது.புறநோக்கில் இன்பமோ-துன்பமோ, ஏற்றமோ-தாழ்வோ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை முற்றிலும் கையளித்தபின் எல்லாமே சமமாகிறது. ஒரு கன்னி, தாயாகச் சம்மதிக்கும் மன நிலையும் இதையே குறிக்கிறது.                                                           
                                                                     கன்னித்தாய்


மைக்கலாஞ்சலோ: 1475-1564இல் வாழ்ந்த இத்தாலிக்காரரான இவர் ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர். கடிதம், வரைபடம், நினைவுக் குறிப்புகள் என்று ஏராளமாக எழுதியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டின் சரித்திரத்தில் முதன்மை இடம் பெற்றவர். வாழும் காலத்திலேயே இவர் வாழ்க்கை வரலாறு இரண்டு முறை எழுதப்பட்டது. 23ஆ வது வயதில் இவர் செதுக்கிய 'பியெட்டா' (இறந்த இயேசுவின் உடலை ஏந்தித் துயருடன் விளங்கும் மாதா) சிற்பம் 180 ச.மீ. உள்ள புகழ் பெற்று சாதனை படைத்தது. இன்னும் தாவீது, மோசேஸ் சிலைகளும் இவர் புகழை உலகில் நிலை நிறுத்துகின்றன.Sistine Chepel விதானத்தில் அவர் ஓவியங்கள் வரைய 4 ஆண்டுகள் பிடித்தன.  செயின்ட் பீட்டர் பசிலிக்கா கவிமாடம் (dome) வடிவமைக்கப்பட்டதும் இவரால்தான். ஆனால் அது முடிக்கப்படுமுன் அவர் மரணமடைந்தார்.


லியோனார் தே வைன்சி:இயேசுவின் கடைசி விருந்து, மோனலிசா போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்தவர். 1452-1519 இல் இத்தாலியில்  வாழ்ந்த இவர், ஒரு மேதை. இவருக்கில்லாத திறமை ஒன்றுமில்லை எனலாம். ஓவியர், விஞ்ஞானி, சிற்பி, இசை,கட்டிட, தோட்ட வல்லுநர், கவிஞர், வேதாந்தி, எழுத்தாளர், புதுமை விரும்பி என இவரது சிறப்புகள் ஏராளமானவை. பொறியியல், வேதியல்,உடலியல்,உலோக வேலை, தோல் வேலை,தச்சு வேலை என்று பல துறைகளில் கால்பதித்திருக்கிறார். விமானம்,நீர் மூழ்கிக் கப்பல்,சண்டைத் தளவாடங்கள் பற்றிய முன் சிந்தனைச் சிற்பி. இவ்வளவிருந்தும், லத்தீன், கணிதம் பற்றிய முறையான கல்வியின்மையால், சம கால அறிஞர்களால் புறக்கணிக்கப் பட்டார். இவர் வரைந்த ஓவியங்களில் 17 மட்டுமே தப்பி உள்ளன.                                                         


மணியம்-செல்வன்: தி.வி.சுப்பிரமணியம் (1924-1968) 'கல்கி' பத்திரிக் கை கிருஷ்ணமூர்த்தி மூலம் உலகுக்கு அறிமுகமானார். கல்கியின் தொடர்களான 'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்' அவரை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. கல்கி எடுத்த 'பார்த்திபன் கனவு' திரைப்படத்தின் ஆர்ட் டைரெக்டர் அவரே. சில திரைப்படங்களுக்கு உடை வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தார். ஒரே மகனான மணியம் செல்வன் (1950-) தந்தையைக் குருவாகக் கொண்டு, அவர் அடியொற்றியே அவர் பாணியிலேயே புகழ் பெற்றுள்ளார்.ஆனந்த விகடன் இதழில் வைரமுத்து எழுதிய'கருவாச்சி காவியத்திற்காக' இவர் தீட்டிய ஓவியங்கள், இவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்று தந்தன.


ஓவியப் பதுமைகள்

        
மேற்கும்-கிழக்கும்    

                                                   அஜந்தா மகளிர்                          

மோனலிசா


இயற்கையின் அழகுப் பெட்டகம் பெண்மை என்றால் மிகையாகாது. எந்தக் கலையும் அவளைத் தவிர்த்து நிறைவுறுவதில்லை . வாழ்க்கையில் எப்படியோ,  கலைஞன் என்ற நிலையில் மனிதனால் அவளை விடுத்து சிந்திக்க வேறு கருப்பொருள் இல்லை! தன் அன்பாலும், பண்பாலும், கனிவாலும் அவன் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றப் பெண்ணின் உறவை, உருவை அவனறியாமல் தன் படைப்பில் நிரந்தரமாக்கி விடுகிறான். அங்கு நிறமோ, உயர்-தாழ் நிலையோ பொருட்படுத்தப் படுவதில்லை. அழகு ஆராதிக்கப்படுகிறது.


இத்தாலி நாட்டினரான லியனார்டோ டாவின்சிக்கு  புகழைத்தேடித்தந்த ஓவியம் மோனலிசா .  நான்கு ஆண்டுகள் (1502 - 1506) ஆயிற்றாம் இந்த ஓவியத்தை வரைய.போப்ளார் பலகையில் வரையப்பட்ட எண்ணெய்  வண்ண ஓவியம் இது. மறுமலர்ச்சி காலத்தில் முதலாம் பிரான்சுவா என்ற பிரெஞ்சு மன்னனுக்கு இந்த ஓவியம் விற்கப்பட்டது.பல நூற்றாண்டுகளாக பிரெஞ்சு அரசின் Royal collection -  ன் கீழ் உள்ளது.தற்பொழுது பிரான்ஸ் நாட்டில், பாரிஸ் நகரிலுள்ள உலக புகழ் மிக்க லூவ்ர் அருங்காட்சியகத்தில்  வையக்கப்பட்டுள்ளது.எந்த திசையிலிருந்து பார்த்தாலும் அதிலுள்ள முகம் நம்மையே பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற மனக்காட்சியை ஊட்டக்கூடியது.  மந்திரப் புன்னகையுடன் காட்சி அளிக்கும் அப்பெண்ணின் ஓவியத்தில் புருவங்களோ கண் இமைகளோ இன்றி வரையப்பட்டு இருக்கும். இப்பெண்ணின் சோகம் கலந்த புன்னகையின் மர்மம் என்னவோ?  இப்பெண்ணின் உண்மை பெயர். Lisa del Giocondo. இத்தாலி மொழியில் மோனா  என்றால்    மேடம் என்று ஆங்கிலத்தில் அழைப்பதைப் போன்ற மரியாதையான சொல்.அவருடைய உண்மையான பெயருடன் சேர்ந்து மோனலிசா ஆனது. இந்த ஓவியம் பற்றி  சுவாரசியமான பல  தகவல்கள் உண்டு.இந்த ஓவியம் திருடு போனதாகவும் பிறகு கண்டெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்வர். இது ஒரிஜினல் இல்லை. நகல்தான் என்று சொல்பவர்களும் உண்டு.


                                                                   
                                                                             
                                                                 ரவி வர்மா


ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848- அக்டோபர் 2, 1906):  நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்  பாணி ஓவியக்கலைக்குள்  புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.நம் இதிகாசங்களில் உள்ள பல நிகழ்ச்சிகளையும் அவர் ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம்  ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன்  அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய்  வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868  இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன.

1873  இல் வியன்னாவில்  நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். நவம்பர் 24 2002 இல் டில்லியில்  நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு  ஏலம் போனது.


                                                                                                                            
                                                                   
                                            உலக சமாதானம் வேண்டுகிற முஸ்லிம் பெண் 
                                                                          (அதிக விற்பனை)                                                                                                                                                                                                     
 ராஜஸ்தான் அழகி                                                                                     தஞ்சை அழகி


                                                             
                                                                 லேடி ஹாமில்டன்


                                                                                   
    நாணமும் நகையும்                                                                             கனியும்கன்னியும்


                                                                                    
      இன்றைய இளமை                                                                             நாளைய புதுமை 

தமிழ்த் தாயின் ஓவியப் புதல்வர்கள்


                                                       
                                                மாலி


ஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள்.

 உயிரும், உணர்ச்சியும் கொண்ட சித்திரங்களால் கர்நாடக சங்கீத வித்வான்களை    நம் கண்முன் நிறுத்தியவர் ‘விகடன்’  ஓவியர்  மாலி.
இவருக்கு முன் தமிழிதழ்களில் இத்தகைய சித்திரங்கள் வரவில்லை என்றே தோன்றுகிறது.

“ மாலி என்றழைக்கப்படும் மகாலிங்கம் விகடனில் ஒரு சகாப்தம். ஆனந்த விகடன் என்பது என்ன மாதிரியான பத்திரிகை, அதன் காரக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்று நம் கையில் தவழும் விகடனுக்கான அஸ்திவாரம் அமைத்தவர் மாலிதான்” என்கிறார் ‘கோபுலு’

 அவர் சித்திரம், அரசியல் கார்ட்டூன் மற்றும் போட்டோ (நிழற்படம்) நேர் காணல் என்று பல்வேறு துறைகளில் மிளிர்ந்தது . அவர்  புதிய இளம் சித் திரக்காரர்களை ஊக்குவித்தார் . அவர் காலத்தில் விகடனில் சாமா, ரவி, சேகர், ராஜு,தாணு, சித்ரலேகா மற்றும் கோபுலு என்று பலர்   வரைந்து வந்தனர்.                                                          
                                                                          சில்பி


இயற் பெயர் பி.எம்.சீனிவாசன்.  கும்பகோணம் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸிலிருந்து படிப்பை முடித்து வந்த இவரை ஆனந்த விகடனுக்கு அழைத்து வந்தவர் அப்போதைய புகழ் பெற்ற ஓவியர் மாலி. தேவன் அவர்களின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடருக்கு வரைந்ததின் மூலம் அந்த தொடருக்குத் தனி சிறப்பை ஏற்படுத்தியவர்.இவர் மிகுந்த கடவுள் பக்தி கொண்ட ஆசாரமான மனிதர்.குறிப்பாக கோவில்கள்,தெய்வத்திரு உருவங்களையும் வரைவதில் இவரை போன்றவர்களைப் பார்க்க முடியாத அளவு இவரின் ஓவியங்கள் தனிப்பட்ட அளவில் இருக்கும்.அதனாலேயே இவரின் ரசிகர்களால் ‘இறையருள் ஓவியர்’ என்று புகழப்பட்டார்.

                                                                           

                                                         
                                                                      கோபுலு


1924 இல் தஞ்சாவூரில் பிறந்த கோபாலன் என்கிற கோபுலு.இவர் 1930-1940 களில் பிரபலமாய் இருந்த கார்டூனிஸ்ட் மாலி யின் மூலமாக ஆனந்த விகடன் பத்திரிகையில் இணைந்தார்.

இவர் கார்டூனிஸ்ட் ஆக மட்டுமல்லாமல் கதாசிரியர்களின் பாத்திரங்களுக்கு இன்றும் உயிர் தரும் அளவுக்கு ஓவியங்கள் வரைந்துள்ளார். உதாரணமாக ஜெயகாந்தனின் சாரங்கன், கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானாமோகனாம்பாள்,மற்றும் சாவியின் வாஷிங்டனில் திருமணம். எல்லாவற்றிலும் தலைமுறைகளை கடந்து இவரின் ஓவியங்கள் நம் கண் முன்னே நிற்கின்றன.அந்தகால ஆனந்த விகடனின் அட்டைப்பட நகைச்சுவை துணுக்குகளுக்கு இவர் ஓவியங்கள் பெரிதும் துணை நின்றன.கோபுலு ஒரு மேதை என்பதற்கு,சுமார் 60 வருஷத்திற்கு முன்பு கல்லாடம் என்ற புத்தகத்திற்கு முன் பக்க,பின்பக்க அட்டைகளில் அவர் வரைந்திருந்த ஓவியம் சான்று. கணினி,போடோஷாப் என்ற எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் சிலையின் முன்பக்கம்,பின்பக்கப் படங்களை இவர் வரைந்த விதமே சொல்லும் கோபுலு அவர்களின் சிறப்பை. இவர் கலைமாமணி விருது (26/11/1991) உட்பட பல விருதுகள் பெற்று உள்ளார்.                                                       
                                                               ஆதிமூலம் 

                                                                          
ஆதிமூலம் (1938 - 2008) அவர்கள் ஓவியர் மட்டுமல்லாது சிறுபத்திரிக்கை வட்டாரத்திற்கும் ஒரு சிறந்த நண்பர் ஆவார். அறுபதுகள் முதல் அவர் தனது ஓவியங்களை சிறுபத்திரிக்கைகளுக்கும் பத்திரிக்கைகளின் அட்டைப் படத்திற்கும் வழங்கி வந்தார்.

கோட்டோவியம் என்பது இந்திய ஓவியத்திற்கான அடையாளம் என்றொரு கண்டுபிடிப்பை அறுபதுகளில் உணர்வதற்கு முன்னரே பேனாவும் மையும் கொண்டு 1953ம் ஆண்டு காந்தியை கோட்டோவியமாய் வரையத் தொடங்கியவர் . அதன் பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னரே அவர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து காந்தியை சிற்பமாகவும் ஓவியமாகவும் வரைந்த ராய் செளத்ரி, தனபால் போன்றோரிடத்தில் ஓவியம் பயின்றார். காந்தியின் சித்தாந்தம் மீதும் கொள்கைகளின் மீதும் அவர் மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தார்.

கோட்டோவியத்தின்பால் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று பிக்காஸோவின் ஓவியங்களின்பால் அவருக்கு இருந்த நாட்டம். தனது கட்டுரை ஒன்றில் தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்: ‘காந்தியை பல கலைஞர்கள் தனது படைப்புகளில் வெளியிட்டுள்ளனர். கார்ட்டியர் ப்ரஸான் புகைப்படத்திலும், மேற்கில் டாவிட் லோ தனது கார்ட்டூன் சித்திரங்களாலும், நந்தலால் போஸ், சந்தான ராஜ் போன்றவர்கள் தங்களது ஓவியங்களாலும் சித்தரித்த போதும்கூட ஓவியர் ஆதிமூலம் அளவிற்கு காந்தி என்ற ஒரு உருவத்தை ஒரு அடையாளக் குறியீடாகக் கொண்டு எண்ணற்ற ஓவியங்களை வரைந்தவர் எவரையும் எனக்குத் தெரியாது’.

கோட்டோவியத்தின் மூலம் மண்ணின் அடையாளங்களை வரைந்து மக்களை இன்புறச் செய்தவர் ஓவியர் ஆதிமூலம். மீசை, தாடி, வாள், தலைப்பாகையுடன் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அரசர்கள், ஐயனார் உருவங்கள், தாயும் சேயும் என அவரது கோடுகளின் வீச்சில் புதிய வெளிப்பாடு கொண்ட உருவங்கள் எண்ணிலடங்காதவை. தங்கு தடையின்றி பயணிக்கும் கோடுகள் அவரது ஓவியத்தின் முக்கிய அம்சம். அதன் ஓட்டத்தை தடைசெய்யாதிருக்கவேண்டி அவர் அவற்றை ஒரு நாளும் திருத்தி அமைத்தது கிடையாது. 1964 முதல் 1996 வரை அவர் வரைந்த கோட்டோவியங்கள் ‘Between the Lines’ என்ற பெயரில் 1997 ம் ஆண்டு புத்தமாக வெளிவந்தது. “The Art of Adimoolam” என்ற புத்தகம் 2007ல் வெளிவந்துள்ளது.
அவர் வரைந்த உருவமற்ற ஓவியங்கள் பல, சர்வதேச அளவில் புகழ் பெற்றவையாகும்.

இளம் ஓவியர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாது அவர்களது கண்காட்சியை தொடங்கி வைக்கச் சென்றபோதெல்லாம் ஒரு சிறிய தொகையை அவர்களை ஊக்குவிப்பதற்காக அளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டின் மூத்த ஓவியரான ஆதிமூலம் சனவரி 15ம் நாள் நம்மைவிட்டு மறைந்தார். இதுதமிழகத்துக்கும் ஓவியச் சமூகத்துக்கும் ஒரு மீளாத் துயர்தரும் சம்பவம். தமிழ் நாட்டு ஓவியர்களுக்குள் இருக்கும் குழுக்கள் பலவற்றிற்கும் இடையே ஒரே அளவு நட்பு பாராட்டியவர் என்ற பெருமையும் அவரைச் சாரும். தமிழக ஒவிய உலகின் அடையாளமாகவும், குரலாகவும் இருந்த அவரது இடத்தை நிரப்புவது கடினம்.                                                                   
                                                                    ஜெயராஜ் 


மாறிவரும் நவநாகரீக உலகத்திற்கு ஏற்ற முறையில் அதே சமயம் ஆபாசம் என்று முகம் சுளிக்க வைக்காத அளவிற்கு இளம் பெண்களை வரைந்து பெயர் பெற ஆரம்பித்தவர் ஓவியர் ஜெயராஜ். பிரபல எழுத்தாளரான குமுதம் முன்னாள் உதவி ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன், பாக்கியம் ராமஸ்வாமி (அவரது பெற்றோர் பெயரில்) எழுதிய சீதாப்பாட்டி - அப்புசாமி கதைக்கு, இவர் வரைந்த சீதாப்பாட்டி - அப்புசாமி உருவங்கள் தமிழ் பத்திரிகை உலகின் சாகாவரம் பெற்ற பாத்திரங்கள் என்றால் மிகை ஆகாது. சிறுகதை, தொடர்கதை, சித்திரக்கதை என்று எந்த வடிவில் இந்த கதை, எந்த பத்திரிகையில் வந்தாலும் அதற்கு ஜெயராஜ் மட்டுமே ஓவியம் வரைய வேண்டும் என்கிற ஒரு கட்டாயத்தை தன்னுடைய தனி திறமையால் ஏற்படுத்திக்கொண்டவர் ஜெயராஜ்.                                        
                                                   


CCF21012013_00006.jpg   
அரஸ் 
                  


1980களின் இறுதியான காலகட்டங்களில் இளம் தலைமுறையினரின் பிரதிபலிப்பாக ஓவிய உலகில் புயலென நுழைந்து புகழ் பெற்றவர் அரஸ்.ஒரு படத்தைப் பார்த்தால், அது இந்தத் தொடருக்கு வரைந்தது என்று கூறலாம். அந்த அளவுக்கு குறிப்பிட்ட தொடருடன் ஒன்றி இவரின் ஓவியங்கள் இருக்கும் உருவங்கள்,வண்ணங்கள் என்றில்லாமல், texture-லும் வித்தியாசம் காண்பித்தவர். குறிப்பாக ஆனந்த விகடனில் மதன் எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்' என்கிற சரித்திர தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் கூடுதல் சிறப்பு சேர்த்தன என்று சுஜாதா அவர்களே பாராட்டி உள்ளார் எனபது இவரின் திறமைக்கு ஒரு சான்று.