பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 23 novembre 2011

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். இன்று பொது அறிவு என்பது ஒரு மனிதனின் இன்றியமையாத தேவை ஆகிவிடுகிறது. அண்டை அயலாருடன் அன்போடு ஒத்து வாழ்வதே,மனித நேயமும்  இரக்கமும் கொண்டு விட்டுக்கொடுத்து அனைவரும்
 இன்புறுவதே இலட்சியம் என்பது போய்,  போட்டி போட்டுக்கொண்டு  பிறரை அழித்தேனும் முன்னேறுவதும், சகிப்பற்றத் தன்மையும், இதயத்தில் கனிவு சுரக்காத வறட்டு கௌரவமும் பரவிக் கிடக்கும் இந்நாட்களில் விரல் நுனியில் உலகச் செய்திகளை அடுக்கி வைத்திருப்போர் பிறரை மலைக்கச் செய்கின்றனர்.

ஒரு சாமானியனுக்குக் கிட்டாத விபரங்களை, இந்தக் கணணி யுகத்தில் 
திரட்டுவதோ  அல்லது    அவற்றை நினைவில் நிறுத்தி சொல்வதோ மிகப் பெரியக் காரியமல்ல! ஆனால் அவை மானுட நோக்கில் பயன் தருவதாய்  நடை முறைக்கு ஒத்து வருவதாய் இருக்க வேண்டும்.  சொல்பவர் தான் சொல்வதைச செய்பவராய் இருக்க வேண்டும். ஏனெனில் பொது வாழ்வில் பிறரை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் மகத்தானப் பணியில் அவர்கள் இருக்கிறார்கள்.

திரு ஈ.வே.ரா. ஒரு சிறுவனுக்கு இனிப்பு அதிகம் சாப்பிடக் கூடாது என்று அறிவுரை சொல்லுமுன், தான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்திவிட்டுப் பிறகு சொன்னதாக அறிகிறோம்.  திரு தமிழருவி மணியம் கடந்த கம்பன் விழாவில் "பார்த்து, படித்து அறிவதால்" மட்டுமே வாழ்வது வாழ்வல்ல - உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டாலும் கண் அழுவது போல பிறர் துன்பம் கண்டு உருகும் மனம் பெற வேண்டும் என்ற அரிய கருத்தைக் கூறினார்கள்.

இன்றைய வன்முறைக்கும், அமைதி இல்லா வாழ்க்கைக்கும் பொருளாதாரம், மதம் தாண்டிய இந்த வறண்ட மனம்தான் காரணமாகிறது. காந்தி எல்லார் இதயத்திலும் நிலை பெற்றது, அவர் வக்கீல் என்பதாலோ அல்லது வெளிநாடுகளில் வசித்து அனுபவம் பெற்றவர் என்பதாலோ அல்ல. " ஒரு இந்திய ஏழையின் உடல் முழுதாக மூடப்படும் நாள் வரை எனக்கு அவனைப் போல வாழ்வதே தர்மம்" என்று முடிவெடுத்த அவரது ஆண்மையும், அதற்கு அடிப்படையான அவர் மன விசாலமுமே அவரை மகாத்மா ஆக்கியது.

தற்போதைய உலகில் முன்னேற அறிவைப் பெருக்குவது அவசியம். அதைவிட, மனிதப் பண்பாட்டைக் காக்க, இன்னும் சொல்லப்போனால் "மனிதனாக" வாழ அன்பும், அறனும் அதைவிட அவசியம்.

திருமதி சிமோன்

இன்றைய அறிமுகம் - ரோசா பார்க்ஸ்

அதிகமாக கேள்விப்படாத பெயர்!  ஆனால் பெண்ணினம் முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய மனோதிடமும், உண்மை, நீதியின்பால் தாகமும் கொண்டவர்.

ரோசா லூயிஸ் மெக்காலே
1913  ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் தேதி பிறந்தார்.  மத்தியத்தரக் குடும்பம்.  திருமணத்திற்குப் பின் ரோசா பார்க்ஸ் ஆன அவர் 1955 இல் கைதானபோதுதான் உலக கவனத்தைக் கவர்ந்தார்.

பெண்ணுக்கும், கரு நிறத்திற்கும் மதிப்பில்லாதக் காலம்!  தென்னாப்பிரிக்க ரயிலில் காந்திக்கு ஏற்பட்ட அதே அனுபவம்!  அமெரிக்க அலபமா நகரில் பேருந்து ஒன்றில் பணியாற்றச் சென்ற ரோசாவை ஒரு வெள்ளைக்காரர் எழச் சொன்னபோது, மறுத்து, 'காசு கொடுத்து பயணச் சீட்டு வாங்கியுள்ளேன்' என வாதாடினார்.  உடனே அந்த வெள்ளைக்காரர் போலீசிடம் புகார் கொடுக்க கைது செய்யப்பட்டார்! கோர்ட்டில் ரோசா மீது குற்றம் சுமத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.


இச்செய்தி கருப்பர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்த,  வீரம் மிகுந்த ஓர் இளைஞன் தலைமை ஏற்க, நீதி கிடைக்கும் வரை மாநகரப் பேருந்தில் ஏறுவதில்லை, பணிகளுக்கும் செல்வதில்லையென அவர்கள் முடிவு செய்தார்கள்.  பின் நாளில் கறுப்பினத் தலைவரான மார்டின் லூதர் கிங் தான் அந்த வீர இளைஞன்! அந்தப் புறக்கணிப்புப் போராட்டம்
381  நாட்கள் நடந்தன!

இடையே ரோசா தன் வழக்கை மிரட்டல்களுக்கும்,  தாக்குதல் முயற்சிகளுக்கும் நடுவே சுப்ரீம் கோர்ட் வரை கொண்டு சென்றார்!
1956  நவம்பர் பதிமூன்றாம் தேதி 'ரோசாவுக்கு இழைக்கப்பட்டது அநீதிதான்' என்ற தீர்ப்பு வழங்கப்படும்வரை பஸ் போராட்டம் தொடர்ந்தது.

ரோசா பொறுமையாகத் தொடர்ந்து போராடியதன் விளைவாக, சிவில் உரிமைச் சட்டங்கள் இயற்றப்பட்டன.  இன்றும் அவர் "சிவில் உரிமைகளின் தாய்" என அழைக்கப்படுகிறார்!

2005  அக்டோபர் இருபத்தி நான்காம் தேதி ரோசா  இறந்தபோது கருப்பு இனத்தவர் ஒருமிக்கக் கூறியது:

"அன்று அவர் எழ மறுத்ததால்தான், இன்று நாங்கள் எழுந்து நிற்கவும், தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது".  ஒரு சாதாரணப் பெண் நினைத்தால், சரித்திரத்தையே மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறார் ரோசா பார்க்ஸ்!


திருமதி சிமோன்

பொது அறிவைப் புதுப்பிக்கும் தகவல்கள்

மருத்துவம்:

மூன்றாம் மாதக் கருவில் ஆண்மைக்குரிய 'testostiraan'  என்ற ஹோர்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இனப்பெருக்க உறுப்பை வளர வைப்பது இது.  ஒரு கரு xy குரோமோசோமும் பெற்று, இதுவும் சுரந்து ஆனால் சரியாக வேலை செய்யாமல் போனால் அது பெண்ணாய்ப்  பிறக்கும். கருப்பை இருக்காது. இது ஒரு வகை ஊனம். இவர்கள் அரவாணிகள் அல்ல. அரவாணிகள் ஆணாகப் பிறந்து தன்னைப் பெண்ணாக உணர்ந்து அல்லது பெண்ணாகப் பிறந்து ஆணாகத் தன்னை உணர்ந்து மாறுகிறவர்கள். ஆணின் உயிர் அணு 'xy'  பெண்ணின் உயிரணு 'xx'


பெரும் சத்தம் மனோரீதியாக பிரச்சனை ஏற்படுத்தக்கூடியது. வயிற்றுப்புண், அஜீரணம், உயர் ரத்த அழுத்தம் மட்டுமின்றி கண் பார்வை கூட பாதிக்கப்படலாம். 'பாவை' (pupil) குறுகச் செய்யும். வண்ணங்களை பிரித்தறிவதில் சிரமம், மாலைக்கண் நோய் ஏற்படலாம். உச்சக் கட்டமாக தற்கொலை, கொலை வெறி ஏற்படலாம். கருவைக்கூட சத்தம் பாதிக்கும்.


சமையல்:

அரிசி மங்கலாக இருந்தால் நீருடன் சிறிது மோர் கலந்து உலை வைத்தால் சோறு வெள்ளையாக இருக்கும்.

செம்பில் ரசம் வைத்தால் அதன் வாய் குறுகலாக உள்ளாதால் கொதிக்கிறபோது அதன் மணம், சுவை அப்படியே தங்கி நிற்கும்.


அறிவதில் அவசரத் தேவை:

கணணி திரை பார்வையின் கீழ்க் கோணத்தில் இருப்பது நல்லது.

வேலை இன்றி உட்கார்ந்து இருப்பதில் ஐந்து வருட ஆயுள் குறைகிறது.     

கியு வரிசையில் நிற்பதன் மூலம் ஆயுளில் இரண்டு வருடங்களை வீணடிக்கிறோம்    

ஆன்மிகம்:

பால்-நீர் போல் உலக பந்தத்தில் இணைந்து கலக்கிறோம். ஆன்மிக அனுபவங்களுக்குப்பிறகுவெண்ணெய்போல் அதிலிருந்து தனிப்படுகிறோம்.

குளம் என்பது உலகம். நீராடுதல் வாழ்க்கை. ஆடை அஞ்ஞான மறைப்பு. கோபியர் ஜீவாத்மா. கரை ஏறுதல் என்பது உலக பந்தத்தை விடுதல். வீடு என்பது மோட்சம்.  மறைப்புக்களை நீக்கி, ஞானம் வழங்கி, கரையேற வழி செய்கிறான் கண்ணன். ஆண்டவன் ஒருவனே அனைத்து ஜீவாத்மாக்களையும் தன்னோடு இணைக்கும் பரமாத்மா!


அறிஞர் கருத்துகள்:

நம் தேசத்தில் தாயின் கருவறை கூட பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. - அப்துல் கலாம்

நாம் ஒருவரிடம் காட்டும் அன்பும், காதலும் ஆழமானதாகவோ, மகத்தானதாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! ஆனால்
தொடர்ந்து சோர்வில்லாமல் அதைச் செய்வதில்தான் அதன் முழுமையும் வெற்றியும் அடங்கி இருக்கிறது. - அன்னை தெரேசா.


சரித்திரம்:

பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டையத் தேசப்படங்களில் 'மட்ரா' எனக் காணப்படுவதும், ஆங்கிலத்தில் 'மதுரா' எனச் சொல்லப்படுவதும், கிரேக்கரால் 'மெதோரா' எனக் குறிப்பிடப்படுவதும் இத்தமிழ் மதுரையே!

உ.வே.சா.வின் தமிழ்ப் பணியை ராமநாதபுரம் சேதுபதி மன்னர் வியந்து ஒரு கிராமத்தையே நன்கொடையாக அளிக்க முன் வந்தார். அதைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும்; தமிழ்ப்பணி தடைப்படும் என்று அதைப் பெற மறுத்து விட்டார் உ.வே.சா.

உடல் நலம்:

சிறு குழந்தைகளுக்கு 'கற்பதில் குறைபாடு' என்ற பிரச்சனை ஏற்படுவதுண்டு. எழுத்துக்களை மாற்றி வாசிப்பது, எண்களை  மாற்றிச் சொல்வது போன்ற தடுமாற்றம்.

டிஸ்லெக்ஸியா - எழுதுவது, வாசிப்பதிலுள்ள குறைபாடு.
டிஸ்கால்குலியா -  எண்களை எழுதுவதில் , படிப்பதில் உள்ள குறை.
disgrafia - எழுதுவதில் மட்டும் உள்ள பிரச்சனை.
disprakcia - திட்டமிடுவதில் ஏற்படும் சிக்கல். இது உள்ள குழந்தை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிலையாக இருக்க மாட்டார்கள்.

செல்போனில் பேசுவது போலப் பொது இடங்களில் பெண்கள் பாவனை செய்வது, தனக்குத் தானே புதுச் சூழலில் துணிச்சல்  ஏற்படுத்திக் கொள்வதற்கும், பார்க்கிறவர்களுக்கு "நான் தனியாக இல்லை" என்று அறிவிக்கவுமான தன்னிச்சைச் செயலாக வளர்ந்து வருவதாக ஒரு மனோதத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.


கவிதை சொல்லும் உண்மைகள்:

என்னை - இடிக்கத்தான் - வருகிறார்கள்!
யாரும் - கட்டுவதற்கு - வரவில்லை!   (முதிர் கன்னி-பாபர் மசூதி)

அனாதைக் குழந்தைகள் - கடவுளின் குழந்தைகள் - என்றால் -
கடவுளுக்கே செய்ய வேண்டும் - குடும்பக் கட்டுப்பாடு!

மகா பாரதம் - இதிகாசமானது. பகவத் கீதை - வேதமானது.
கண்ணன், அர்ச்சுனன் - கடவுளானார்கள்.
வெட்டிக்கொண்டும், குத்திக்கொண்டும் செத்துப்போன
சிப்பாய்கள் என்ன ஆனார்கள்?


உலுக்கும் உண்மைகள்:

குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் உலக அளவில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது.

இந்தியாவில் நான்கு வருடத்திற்கு முந்தைய கணக்குப்படி
32 ,௦௦௦ கொலைகளும், 22 ,௦௦௦ கொலை முயற்சிகளும் நடந்துள்ளன. ஆனால் ஆறு சதவிகித குற்றவாளிகளே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்!
உலக முழுவதும் அறுநூறு கோடி கனரக ஆயுதங்கள் உள்ளன.  அதனால் 12  பேரில் ஒருவரிடம் துப்பாக்கி இருக்க, நிமிடத்திற்கு ஒருவர் வீதம் கொல்லப்படுகிறார்.


தொகுப்பு : திருமதி சிமோன்




பயனுள்ள செய்திகள்


பெயற் காரணம்

  •  ஆங்கிலத்தில் புலியை ‘டைகர்’ என்று அழைக்கிறோம். டைகர் என்ற பாரசீகச் சொல்லுக்கு அம்பு என்று அர்த்தம்.

  • நாவல் என்பது இத்தாலிய மொழிச் சொல். அம்மொழியில் நாவல் என்றால் கதை என்று பொருள்.
  • குடைக்கு ஆங்கிலத்தில் ‘அம்ப்ரெல்லா’ என்கிறோம். இலத்தீன் மொழியில் அம்ப்ரா என்றால் நிழல் தரும் என்று பொருள்.
  • வீடியோ என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் நான் பார்க்கிறேன் என்பதாகும்.

மரங்களின் வயது

மரங்களின் வயதை கண்டறிய ஒரு எளிய முறையைக் கையாளுகின்றனர். பொதுவாக ஒரு மரத்தின் அடிப்பாகப் பகுதியை குறுக்காக வெட்டினால் அதன் நடுப்பகுதியில் இருந்து வெளி வட்டம் வரை அடுக்கடுக்காக பல வளையங்கள் காணப்படும். இந்த வளையங்களை வைத்து அந்த மரத்தின் வயதை கணக்கிடுகின்றனர்.
மரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் வளையங்களைக் கொண்டு அதன் வயதைக் கணக்கிட உதவும் படிப்பின் பெயர்,’டெண்ட்ரோகுரோனாலஜி’.
வளர்ச்சி வளையங்கள்எனப்படும் அவை ஒவ்வோர் ஆண்டும் உருவாகின்றன. செழுமையான ஆண்டுகளில் அந்த வளையங்கள் சற்று பட்டையாகவும், வறட்சியான ஆண்டுகளில் அவை மெலிதாகவும் காணப்படும். எனவே அந்த வளையங்கள் மரங்களின் வயதை கண்டுபிடிக்க மட்டுமன்றி, குறிப்பிட்ட பகுதியில் ஓவ்வொரு பருவமும் எப்படி அமைந்திருந்தது என அறியவும் உதவுகின்றன. ‘டெண்ட்ரோகுரோனாலஜிபடிப்பை உருவாக்கியவர் ஏ..டக்ளஸ் என்ற விஞ்ஞானி ஆவார்.

இளம் சாதனையாளர்கள்

  • வில்லியம் மிட் என்பவர் தனது 14-வது வயதில் அரசியல் கலந்த அருமையான நாடகம் எழுதி புகழ் பெற்றார்.
  • விக்டர் ஹியூகோ தனது 15-வது வயதில் பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு சிந்தனைகள் பொதிந்த கவிதைகள் எழுதி அனுப்பினார்.
  • மாவீரன் அலெக்சாண்டர் 16 வயதிலேயே தனது தந்தையின் போர்ப் படையில் தளபதியானார்.
  • விஞ்ஞானி கலிலியோ தனது 17-வது வயதில் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்திலுள்ள விளக்கு இப்படியும், அப்படியும் ஊசலாடுவது ஏன்? என்பது குறித்து ஆராய்ந்தார்.
  • பீதோவன் தனது 21-வது வயதில் இசை உலகில் தன் பெயரை நிலை நாட்டினார்.


செயற்கை "கண்"

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது கண். இதிலுள்ள “கார்னியா” எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின்போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. உலகம் முழுவதும் சுமார் 4.9 மில்லியன் பேர் கார்னியா குறைபாடு உடையவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு உதவும் விதமாக பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை கார்னியாவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.
ஜெர்மனியில் உள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோச்சிம் ஸ்டோர்ஸ்பெர்க் என்பவர், இந்த செயற்கை கார்னியாவை வடிவமைத்துள்ளார். ஹைட்ரோபோபிக் பாலிமர் என்ற பொருள்மூலம் இந்த கார்னியா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளானது கண் மருத்துவத்தில் நீண்ட காலத்திற்கு செயலாற்றக்கூடியது.
முதலில் பல்வேறு வகையான சிறப்பு பாலிமார்கள் செயற்கை கார்னியாவில் பூசப்படுகின்றன. பின்னர் அதன்மேல் சிறப்பு புரோட்டீன்கள் பூசப்படுகின்றன. இந்த புரோட்டீன்கள் கார்னியாவைச் சுற்றி உள்ள செல்களைத்தூண்டி, பார்வையை ஏற்படுத்துகின்றன. இந்தக் கார்னியாவை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்க இன்னும் 3 ஆண்டுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்துள்ளனர். 

முறுக்கலாம்.. வளைக்கலாம் ஸ்லிம்மோ ஸ்லிம் செல்போன்!


மிகமிக ஸ்லிம்மான செல்போனை சாம்சங் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. ‘அமோலெட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போனை பேப்பர் போல முறுக்க, வளைக்க முடியும். சுத்தியலால் அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர, உடையாது என்பது இதன் சிறப்பம்சம். தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் புதுப்புது வசதிகளுடன் கூடிய செல்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. வளைத்தாலும் ஒன்றும் ஆகாத செல்போனை 2012-ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இதுபற்றி சாம்சங் இன்ஜினியர்கள் கூறியதாவது:
வளைத்தாலும் பாதிக்கப்படாத ‘பிளெக்சிபிள்’ செல்போனை உருவாக்க வேண்டும் என்பது சாம்சங் நிறுவனத்தின் நீண்ட கால கனவு திட்டம். அதன் வடிமைப்பு பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ‘அமோலெட்’ என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் நாலரை இஞ்ச் நீளம் இருக்கும்.  செல்போனின் தடிமன் வெறும் 0.3 மி.மீ. மட்டுமே இருக்கும். 1 ஜிபி ராம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் திறன் கொண்டது. 8 மெகாபிக்சல் கேமரா வசதியும் உள்ளது. கிராபீன் கார்பன் பயன்படுத்தி ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது. சுத்தியலால் அடித்தாலும் உடையாது. இவ்வாறு சாம்சங் இன்ஜினியர்கள் கூறினர்.

 தொகுப்பு: லூசியா லெபோ  

பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா

வருணனை : ‘புதுவை எழில்’

கம்பன் கழகம் – பிரான்சு :
எத்தனை வேதனைகள்! எத்தனை வாதனைகள்!! எவ்வளவு இடுக்கண்கள்!  எவ்வளவு துன்பங்கள்!
அத்தனையையும் தாண்டிப் பத்தாம் ஆண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.சொந்தப் பணத்தைத் தொட்டுப் பந்தக் கால் நட்டு இந்தக் கம்பன் கழகத்தைத் தொடங்கியவர் கவிஞர் கி. பாரதிதாசன். தோழர்கள் நாங்கள் தோள் கொடுத்தோம். ஐரோப்பாவில் முதல் முதலாகக் கம்பனுக்கு விழா எடுத்தோம்.

ஆண்டு தோறும் – துண்டு விழுந்தாலும் துவண்டு விழாமல் உழைத்தோம்!கம்பனில் தோய்ந்தவர்களையும் ஆய்ந்தவர்களையும் அழைத்தோம்!ஆண்டுகொரு முறை விழா கொண்டாடிவிட்டுக் கும்பகர்ணனாக மாறிமீண்டும் மீண்டும் கொட்டாவி விடவில்லை நாங்கள் !திங்கள் தோறும் இறுதி ஞாயிறு அன்று ஒருங்குக் கூடி நெருங்கினோம்.கம்பன் காவியத்தின் சுவை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினோம்-  முற்றோதல் என்ற பெயரில்!
முற்றோதல் முற்றுப்பெற்றாலும் கற்றோர்க்குக் களிப்பருளும் களிப்பாம் திருக்குறளை ஓதத் தலைப்பட்டோம் மாதந்தோறும் ஓதி வருகின்றோம்  காலப் போக்கில்,கம்பன் மகளிரணி உருவானது ; கம்பன் இளையோரணி கருவானது!இந்த இரண்டு அணியினரும் எங்களோடு கைகோர்க்க விழா இனிதே நடைபெற்றது!
விழா வருணனை :
முதல் நாள் நிகழ்வுகள் : சனிக் கிழமை 12 .11 .2011 .பிற்பகல் 3 மணி.
திருமிகு ஆதிலட்சுமி வேணுகோபால் இணையர்  மங்கல விளக்குகளுக்கு ஒளியூட்டியபின்,  கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலர் பேரா. பெஞ்சமின் லெபோ, பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் ஆகிய மூவரும் கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் கம்பன் வாழ்த்தை முழங்கினர்.
ஆறு காண்டங்களின் கடவுள் வணக்கப் பாடல்களையும் அழகாகப் பாடினார் மகளிரணி உறுப்பினர் கவிஞர் சரோசா தேவராசு.பாடிடும் பச்சைக் கிளிகளைப் போலப் பச்சைப் புடவை அணிந்து நீடிய அரங்கேறிய மகளிரணி உறுப்பினர்கள்,’வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்று பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளில் தமிழ்த் தாயை வாழ்த்திப் பாடினர்.(இப்பாடல்தான் புதுவை அரசு ஒப்புதல் அளித்த தமிழ்த்தாய்ப் பாடலாகும்)
நாட்டியகலாசோதி செல்வி சாரநாயகி கோபாலகிருட்டிணன் அளித்த பரத நடன விருந்துடன் விழா சிறப்பாகத்தொடங்கியது.பின்னொருமுறை பாரதியாரின் ,’ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்தார், அனைவர் நெஞ்சிலும் இடம் பிடித்தார் இவர்.
பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி பாரதிதாசன் நகையும் சுவையுமாக வரவேற்புரை வழங்கினார்.புதுச்சேரி அரசில் சமூகத் துறை, சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராசவேலு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.
புதுவையில் இருந்து வந்திருந்த முதுபெரும் புலவர் (அகவை 92!)  தமிழ் மாமணி, பாவலர்மணி சித்தன் ஐயா  வழங்கிய வாழ்த்தில் கம்பன் கழகம் குளிர்ந்தது ; தமிழ் ஒளிர்ந்தது!
பத்தாம் ஆண்டுக் கம்பன் மலரை, புதுவைக் கம்பன் கழக இணைச் செயலர், நல்லாசிரியர் கி. கலியாணசுந்தரம் வெளியிட்டார். வண்ண வண்ணப் படங்களுடன் திண்ணமான கட்டுரைகள் கவிதைகளுடன் மலர் பொலிந்தது. பாவலர் மு.பாலசுப்பிரமணியன் படைப்பான ‘சிட்டு குருவி’ என்ற சிறுவர் இலக்கியத்தை வெளியிட்டவர் : புதுவையின் சாதனைச் சிகரம் வே. பொ. சிவக்கொழுந்து அவர்கள்.
அடுத்துச் சிறப்புரை தொடர்ந்தது.உருகிவரும் பனிமலை அருவி எனத் தமிழ் மழை பொழிய எழுந்தார் திருமிகு தமிழருவி மணியன் அவர்கள்.
தலைப்பு : ‘கம்பனில் பண்பாடு.’ ’பண்பாடு’ என்ற சொல்லைப் பண்போடு உருவாக்கித் தந்த ரசிக மணி டி.கே சியைப் பாங்காக நினவு கூர்ந்த அவர், பண்பாடு என்ன என்பதை அழகாக விளக்கினர் ; தமிழ்ப் பண்பாடுகளை எல்லாம் கம்பன் எப்படித் தன் காவியத்தில் பதிந்து வைத்திருக்கிறான், பொதிந்து வைத்திருக்கிறான் எனப் பல எடுத்துக்காட்டுகளைக் காட்டிக் கொடுத்த விளக்கத்தில் மக்கள் தம்மை மறந்தனர்.‘அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் ..’ என்று இராமனுக்கு ஆயிரம் அடைமொழி கொடுத்து வருணித்த கம்பன் ’அவளும்’ என்ற ஒரே சொல்லுக்குள் சீதையை அடக்கி விடுகிறான்.  ஏன் தெரியுமா? இதனைச் சொல்பவன் ‘குகன்’ – காட்டு வாசி. இராமனைக் கண்டவுடன் காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கி’அவன் அழகை எல்லாம் அள்ளிப் பருகியவன்.அவன்,  இராமனை வருணித்துச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை.  ஆனால், அவன் அப்படிச் சீதையை வருணிக்கலாமா ? வருணிக்க விடுவானா கம்பன்! அதனால்தான் ‘அவளும்’ என்ற ஒரு சொல்லுக்குள் தமிழ்ப் பண்பாட்டை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தான்,  ‘சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கி வைத்த புலவன்’ கம்பன் எனத் தமிழருவி மணியன் உணர்ச்சியோடு உரைத்தபோது மக்களின் கரவொலி எப்பக்கமும் எதிரொலித்தது. ஈழத் தமிழர்களின் இன்னல், தமிழர்களின் தமிழுணர்வு இன்மை… போன்றவற்றையும் அவர் தம் பேச்சில் குறிப்பிடத் தவறவில்லை.
இடையே -தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகத்தின் சார்பில், அதன் இணைச் செயலர் நல்லாசிரியர் கி.கலியாணசுந்தரம் அவர்கள் வழக்கம் போல், பிரான்சு கம்பன் கழகச் செயற்குழு உறுப்பினர்களுக்கும் மகளிரணி செயற்குழு உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள். புதுவையில் இருந்து வந்திருந்த கவிஞர் வே. முத்தையன், பிரான்சு கம்பன் கழகத்தைச் சேர்ந்த கவிஞர் திருமதி சரோசா தேவராசு இருவரும் ,’கம்பனுக்குப் பாமாலை’ என்ற தலைப்பில் கவி மலர் அளித்தார்கள்.
பங்குகொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு, கழகப் பெயர் அச்சிட்ட துவாலைத் துண்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன.  மாலை ஐந்தரை மணி அளவில், இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் அவர்கள் தம் உரையைத் தொடங்கினார்.தலைப்பு : ‘தெய்வக் கவியில் தெய்வப் புலவன்’. தெய்வமாக் கவி கம்பனின் காவியத்தில் திருவள்ளுவரின் குறளமுதம் எப்படி எல்லாம் நிறைந்துள்ளது, எங்கெல்லாம் கரைந்துள்ளது, எவ்வாறெல்லாம் மறைந்துள்ளது எனக் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையோடு அவர் ஆற்றிய உரையில் அனைவரும் உறைந்து போனார்கள்.
  பிரான்சு கம்பன் கழகத்தைச் சேர்ந்த கவிஞர் திரு தேவராசு அவர்களும் புதுவையிலிருந்து வந்திருந்த கவிஞர் திருமதி வைத்தி கத்துரி அவர்களும்  கவி மலர் அளித்தார்கள்.
தொடர்ந்து , நகைச்சுவைத் தென்றல் திருவாரூர் இரே. சண்முகவடிவேல் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் தொடங்கியது.
தலைப்பு : ‘இன்றைய வாழ்வுக்குப் பெரிதும் வழிகாட்டுபவன்… கும்பகருணனா ? வீடணனா?’வீடணன்தான் என்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா. துபாயில் , ‘தமிழ்ப் புயல்’  என்று பட்டம் வாங்கி வந்த இப்புயல் இங்கே,  பிரான்சில் மையம் கொண்டது.கம்பனே கூட வீடணனுக்காக அப்படி வாதாடி இருப்பானா என்பது ஐயமே! புயலாகச் சுழன்றடித்துப் பூகம்பமாய் அதிர்ந்து தம் வாதங்களை முன் வைத்தார் பேராசிரியர் பர்வீன் சுல்தானா.

புயலுக்குப் பின் அமைதிதானே! அந்த அமைதியின் வடிவாகத் தென்றலாகத் தவழ்ந்து வந்தார் திருமதி லூசியா லெபோ.காட்டிக் கொடுத்த கயவன் வீடணனை விட ஊட்டிக் கொடுத்த உணவுக்காகத் தன் உயிரையே கொடுத்த தியாகி கும்பகருணனே இன்றைய வாழ்வுக்கு வழி காட்டக் கூடியவன் என்று தொடங்கித் தன் தரப்பு வாதங்களை,  அதிராமல், பதறாமல், அழகாக அடுக்கித் தந்தார் அவர்.
பின் கவிஞர் பாரீசு பார்த்தசாரதி, திருமதி சுகுணா சமரசம் இருவரும் அறத்தின் பக்கம் நின்றவன் வீடணன்தான் என்று வாதாடினர். திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால், கவிஞர் அருணா செல்வம் இருவரும் கும்பகருணனைத் தாங்கிப் பிடித்தனர்.நகைச் சுவையையே தன் பலமாகவும் ஆயுதமாகவும் கொண்ட நகைச்சுவைத் தென்றல், சிரிப்பு வெடிகள் சிலவற்றைக் கொளுத்திப் போட்ட பிறகு, ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வினாலும் தருமம் மறுபடி வெல்லும்’.அந்தத் தருமத்தின் முழு வடிவே இராமன்தான். அவன் பக்கம் சென்றவன், அவனைச் சேர்ந்தவன் வீடணனே!இந்த அதரும உலகில் நாம் தருமத்தின் பக்கமே நிற்கவேண்டும்,  தருமத்தின் வழியில்தான் செல்லவேண்டும் என்று இன்றைய வாழ்வுக்கு நல்ல வழி காட்டுபவன் வீடணனே எனத்திருமிகு இரெ .சண்முகவடிவேல் அவர்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்க பட்டிமன்றம் இனிதாக நிறைவு உற்றது.முதல் நாள் விழாவும் முடிவு பெற்றது.
பொதிய மலைத் தென்றலாய்த் தமிழ் மணங்கமழ எதுகையும் மோனையுமாய்த் தமிழமுதை அள்ளி வழங்கி நிகழ்ச்சிகளை நகையும் சுவையுமாகத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, ’இன்று போய் நாளை வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார் ;மக்கள் உணவுப் பக்கம் படை எடுத்தார் (கள்).
ஞாயிறு, 13.11.2011 காலை 11 மணி.
கவிமணி விசயரத்தினம் ராசலட்சுமி இணையர்  மங்கல விளக்குகளுக்கு ஒளியூட்டியபின் கம்பன் கழகக் கவிஞர் சரோசா தேவராசு இறைவணக்கம் பாட,கம்பன் இளையோரணி தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர்.இவர்கள் எவரும் உரோமன் எழுத்துகளில் தமிழை எழுதிவைத்துப் பாடவில்லை.பாடலை மனப் பாடமாகவே பாடினர்.
பரி நகரின் புறநகராம் மோ’ நகரின் ‘பூக்கள் கழக’ மாணவியர், பாவேந்தரின் ‘சங்கே முழங்கு’ பாடலுக்கு ஏற்றவாறு பாவங்களோடு நாட்டிய விருந்து வழங்கினர். வந்தாரை வரவேற்கும் செந்தமிழர் மரபுக்கேற்பக் கம்பன் கழகச் செயலர், பேரா.பெஞ்சமின் லெபோ வந்திருந்தோர் அனைவரையும் செந்தமிழில் வரவேற்றார்.
புதுச்சேரியின் சாதனைச் சிகரம் வே.பொ.. சிவக்கொழுந்து தொடக்க உரை நிகழ்த்தினார் : “ரேஷன் கார்டு வைத்திருந்தால்தான் அந்த அந்த நகரத்தார் ; இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருந்தால்தான் இந்தியர் ; அது போல் நம்மிடம் தமிழ் இருந்தால்தான் நாம் தமிழர் ஆவோம். எனவே நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தமிழ் வைத்திருக்கவேண்டும் ; தமிழில் பேசிப் பழகவேண்டும்” என்னும் கருத்து முத்தை எடுத்து வைத்தார்.
விழாவுக்குத் தலைமை தாங்கியவர் புதுவை கல்விச் செம்மல் முனைவர் வீ . முத்து அவர்கள்.பலபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்.  புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கூட.கம்பன் புனைந்த கவிதைகள் இத்தனை, கம்பன் வரைந்த சந்தங்கள் இத்தனை… என்று கம்பனைப் பற்றித் துள்ளி விழும் தமிழில் அள்ளி இறைத்த புள்ளி விவரங்களைக் கேட்டு மக்கள் அசந்து விட்டனர்.
புதுவைக் கவிஞர்கள் சிவ இளங்கோ, மு. பாலசுப்பிரமணியன் இருவரும் வாழ்த்துக் கவிதை வழங்கினர்.முன்னவர் புதுவையின் புகழ் பெற்ற கவிஞர் சிவம் அவர்களின் திருமகனார் ; பின்னவர் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலர். கமபன் விழாவில் கலந்துகொள்ளவே இவர்கள் இங்கு வந்திருந்தனர்.
அடுத்து நடை பெற்ற தேனுரைக்குத் தலைமை தாங்கினார் பேராசிரியர் கலியன் எதிராசன் அவர்கள்.  பொறி இயல் துறை அறிஞரான இவர் பரோடா நகர்த் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 26 ஆண்டுகள் பணியாற்றியவர்.பல பொறி இயல் நிறுவனங்களில் தலைமைப் பதவி வகித்தவர். திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ’Thiruppaavai, an Introduction’  என்ற தலைப்பில் நூல் எழுதியவர். இதனை , ‘Bhavans Journal’ வெளியிட்டுள்ளது. பெண்மையை எப்படி எல்லாம் கம்பன் ஏற்றிப் புகழ்ந்து போற்றி உள்ளான் என விரிவாகத் தம் தலைமை உரையில் எடுத்துரைத்தார்.
தேனுரை அளிக்க வந்திருந்த முனைவர் பர்வின் சுல்தானா,  ’கம்பனில் பெண்மை’ என்னும் தலைப்பில் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையோடு உரையாற்றினார். “பெண்களைக் கேலி பேசும் ஆண்கள்,பெண்கள் மனத்தில் மாறா வடுக்களை ஏற்படுத்தி விடுகிறார்கள் ;  அப்படித்தான், மண்ணுருண்டையால் அடித்த இராமன்,  கூனி மனத்தில் மாறா வடுவை ஏற்படுத்திவிட்டான் ; விளைவாக, மண்ணே இராமனுக்குக் கிடைக்காமல் காட்டுக்குக் காவடி எடுக்க வைத்துவிட்டாள் கூனி ; எனவே ஆண்களே, பெண்களைக் கேலியாகப் பார்க்காதீர்கள், பேசாதீர்கள்..” என்று சாடினார்.
கூனி, கைகேயி, தாடகை … முதல் சீதை நடுவாக மண்டோதரி ஈறாகக் கம்பனில் உலா வரும் பெண்கள் வெறும் கண்கவர் பொம்மைகள் அல்லர் ; ஒவ்வொரு பாத்திரமும் கதையை அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்துகிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கிக் காட்டினார் பர்வின் சுல்தானா.’நின் பிரிவினும் சுடுமோ பெருங் காடு’ என்ற சீதையின் வாயில் இருந்து ‘சுடு’ என்னும் சொல்எங்கெல்லாம், எப்படி எல்லாம் வெளி வந்து என்னவெல்லாம் நிகழ்த்திற்று என்று விளக்கிய அவர், இறுதியாக அந்தத் தீக் கடவுளையே தீய்த்த சீதையின் கற்புத் திண்மை கம்பன் காட்டிய பெண்மையின் உச்சக் கட்டம் என்பதே உண்மை என முடித்தபோது மகளிர் மட்டுமல்ல ஆடவரும் கூட பலத்த கைதட்டிப் பாராட்டினர். ”பாத்திரங்களைப் பெண்கள் புளி போட்டு விளக்குவார்கள் ; இங்கே பர்வின் சுல்தானா அவர்கள், கம்பன் பத்திரங்களைக் கம்பன் பாத் திறத்தால் தம் நாத்திறத்தால்  பளபளபாக்கிப் பளிச்சிட வைத்துவிட்டார்” எனத் தொகுப்பாளர் பேரா. பெஞ்சமின் லெபோ கூற மறுபடி கைதட்டல்.

மதிய உணவு,  வயிற்றுக்கு விருந்து ; ‘சர்வதேச உயர்கல்வி நிலைய’ ‘நாட்டிய கலாசோதி’ சிவலிங்கநாதன் சர்மலியின் மாணவியர் வழங்கியதோ  கண்ணுக்கு விருந்து!
தொடர்ந்து காதுக்கு விருந்து தரத் தள்ளாடித் தள்ளாடி மேடை ஏறினார் முதுபெருங் கவிஞர் கண. கபிலனார் -தள்ளாதவர், ஆம்,   தமிழைத் தள்ளாதவர்! எள்ளளவும் இளைப்போ களைப்போ கொள்ளாதவர், கம்பன் கழகத்தின் பிதாமகனார் ;வண்ண மலர்ச் சொல்லெடுத்துத் தம் எண்ணத்தைக் குழைத்துக் கம்பனுக்குப் பாமாலை சூட்டினார் இவர்.

அடுத்து வந்த கம்பன் கழகக் கவிஞர் பாமல்லன் (கம்பன் கழகத் தலைவர் கவிஞர் பாரதிதாசனிடம் யாப்புப் பாடம் கேட்டவர் இவர்!)ஒருபா, இருபா தருவார் எனப் பார்த்தால், அப்பப்பா எத்தனை, எத்தனைப் பா,  எத்தனை வகைப்பா,  வகையாய் வகையாய்ப் பாடி அவையை அசத்திவிட்டார்!
பிற்பகல் 3 .00 மணி :
இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் தலைமையில் ; தொடங்கியது சுழலும் சொற் போர்.
தலைப்பு :
‘கம்பனைக் கற்போர் நெஞ்சத்தில் களிநடம் புரிவது – நீதியின் மேன்மையா ? தமிழின் இனிமையா?  காக்கும் இறைமையா? சகோதரப் பெருமையா?
‘நீதியின் மேன்மையே’ என வாதிட வந்தார் முனைவர் பர்வின் சுல்தானா. நீதி வேறு,  நேர்மை வேறு என்று பிரித்து அலசியவர் கதைகள் இரண்டு சொல்லித் தம் கருத்தை நிறுவினார்.”கம்பனைக் கற்போர் நெஞ்சில் களிநடம் புரிவது நீதியின் மேன்மையே ” என்று அடித்துப் பேசி அமர்ந்தார் இவர்.
தமிழில் இனிமை தவிர வேறில்லை எனக் கனிவுடன் தம் பேச்சை தொடங்கிய பேரா. பெஞ்சமின் லெபோ, அவையினரைத்  ’தமிழ், தமிழ், தமிழ் ‘  என மெல்லச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தி வேகமெடுத்த நிலையில் சட்டென்று நிறுத்தச் சொல்ல,  சொல்லியவர்கள் வாயில் இருந்து அமிழ்து என்ற ஒலி வரச் செய்தார்.

“பெயரைச் சொல்லும் போதே அமுது ஊறும் ஒரே மொழி நம் தமிழ்தான். எனவே,  தமிழ் = அமிழ்து= இனிமை ஆகவே தமிழ் என்றாலே இனிமைதான் ; இந்த இனிமை,  தமிழின் இயல்பான ஒலிகளால் வருவது ; இந்த இனிய ஒலிப்பு அடிபடையில் எழுவன எதுகை மோனைகள் ; இவற்றின் அடிப்படையில் எழுவன பல வகை சந்தங்கள் ; இந்தப் பலவகை சந்தங்களைக் கம்பன் காவியத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை கேட்கலாம்.எனவே கம்பனின் காவிய மாளிகையுள் நுழைந்தது முதல் இறுதிக் கவிதை வரை இழையோடிக் கிடப்பது தமிழின் இனிமையே ; நீதியின் மேன்மை, காக்கும் இறைமை, சகோதரப் பெருமை எல்லாம் அவ்வப் போது வந்து தலைகாட்டிச் செல்லும் .ஆனால் தமிழின் இனிமையே காவியம் முழுமையும் ஊடுருவிக் கம்பனைக் கற்போர் நெஞ்சில் களிநடம் புரிகிறது” எனச் சொல்லித் தம் வாதத்தை நிறைவு செய்தார் அவர்.
‘காக்கும் இறைமைக்’குக் கொடியும் குடையும் பிடிக்க எழுந்தார் நகைச்சுவைத் தென்றல் இரே. சண்முகவடிவேல்.  வழக்கம் போல் சிரிப்பு வெடிகள் இரண்டைக் கொளுத்திப் போட்டார். ”மனித இராமனைத் தெய்வமாக்கியவன் கம்பன். கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாக அமைபவன் இராமன், எனவே,”கம்பனைக்  கற்போர் நெஞ்சில் களிநடம் புரிவது ‘காக்கும் இறைமையான’  காகுத்தனே! ” என்று முடித்து அமர்ந்தது நகைச்சுவைத் தென்றல்.

‘சகோதரப் பெருமையே’  எனப் பாசத்தோடு பேச வந்தார் கவிஞர் சரோசா தேவராசு. ”இராம இலக்குவன, பரத சத்ருக்கன சகோதரர்கள், சடாயு சம்பாதி சகோதரர்கள்,  வாலி சுக்கிரீவன் சகோதரர்கள், இராவணன், கும்பகன்னன், வீடணன் சகோதரர்கள் எனப் பலபடியாகச் சகோதர பாசத்தைக் கம்பன் காட்டுகிறான்.  உடன் பிறவாச் சகோதரர்களாகவும் பலரை ஏற்றுக் கொள்கிறான் இராமன். இப்படிச் சகோதரப் பாசத்தை காவியம் நெடுக வைத்திருப்பதால் கம்பனைக் கற்போர் நெஞ்சில் களிநடம் புரிவது சகோதரப் பெருமையே” என்று சொல்லி முடித்தார் சகோதரி சரோசா தேவராசு.
இரண்டாம் சுற்றும் முடிந்த நிலையில், தீர்ப்பு சொல்லுமுன், ’ நீதியின் மேன்மை’  எப்படிக் கம்பனில் விளங்குகிறது, ‘தமிழின் இனிமை’  எப்படிக் காவியத்தில் தவழுகிறது,’காக்கும் இறைமை’ யைக் கம்பன் எப்படிக் காட்டுகிறான், ‘சகோதரப் பெருமை’யைக் கம்பன் எப்படித் தீட்டுகிறான் என்பனவற்றை சிறப்பாகச் சொல்லி முடித்தார் இராமலிங்கம்.
“இவை நான்குமே கம்பனில் இருந்தாலும், இவற்றுள் எது ஒரு சத வீதம் அதிகமாக இருக்கிறது? தொடர் வண்டித் தொடரில் வண்டிகளைக் கோர்த்தாலும், முதல் வண்டிதானே பிற வண்டிகள் அத்தனையையும் இழுத்துச் செல்கிறது!அதைப் போல,  ’ நீதியின் மேன்மை’,  ’காக்கும் இறைமை’, ‘சகோதரப் பெருமை’…ஆகிய வண்டிகளை இழுத்துச் செல்வது தமிழின் இனிமைதான்” என்று சொல்லி நல்லதொரு தீர்ப்பை வழங்கித் தாம் என்றுமே இலக்கியச்  சுடர்தான் என்று மீண்டும் நிறுவினார் இராமலிங்கம்.
பின், கவிஞர்கள் அருணா செல்வம், லினோதினி சண்முகநாதன், எழில் துசியந்தி மூவரும் கம்பனுக்குக் கவிமலர் சூட்டினர்.நாட்டியக் கலைமாமணி செலினா மகேசுவரனின் மாணவியர் மூவர் பரத நடன விருந்து தந்தனர்.பரதத்தில் கற்றுத் துறை போகியவர்கள் மட்டுமே தரக் கூடியது ‘வர்ணம்’ .கதைப் போக்கில் அமைந்த நீளமான பாடலுக்கு ஏற்ற விதங்களில் பலவித முத்திரைகள் பதித்துப் பாவங்கள் காட்டி ஆடுவது இந்த நடனத்தின் சிறப்புகள்.  இந்த நடனத்தை மிகச் சிறப்பாக ஆடி , பாராட்டுப் பெற்றனர் இச்செல்வியர் மூவரும்.
இந்தியத் தூதரகத்தின் அதிகாரி திருமிகு கன்யலால் அவர்கள் தமிழில் வணக்கம்’ சொல்லி ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் உரையைத் தமிழில் மொழி பெயர்த்தவர் : பேரா பெஞ்சமின் லெபோ..  இங்குள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் செய்து வரும் சேவைகளை விளக்கிய அவர், தமிழர்களின் கலை பண்பாட்டு நிகழ்சிகளுக்கு இந்தியத் தூதரகம் துணை நிற்பதை அறிவித்தார். இறுதியில் ‘நன்றி வணக்கம்’ எனத் தமிழில் சொல்லி விடை பெற்றார்.
2011 -ஆம் ஆண்டின் கம்பன் பட்டயம் , பாவலர்கள் மு .பாலசுப்பிரமணியன் , வைத்தி. கச்தூரி, சிவ இளங்கோ, வே .முத்தையன் ஆகிய நால்வருக்கு வழங்கப்பட்டது .இந்த ஆண்டுக் கம்பன் விருது, தமிழ்மாமணி ந, கோவிந்தசாமி முதலியார், தமிழ்மாமணி பாவலர்மணி சித்தன், கல்விச் செம்மல் முனைவர் வீ. முத்து, கலைமாமணி கவிஞர் தே. சனார்த்தனன் (கவிஞர் பாரதிதாசனின் தந்தையார்), பேராசிரியர் கலியன் எதிராசன், திருமிகு வெ. பொ. இராமலிங்கம், திருமிகு சு.ந. குப்புசாமி முதலியார், அருட்செல்வர் சுகுமாரன் முருகையன், திருமிகு செயராசசிங்கம், திருமிகு சக்கரவர்த்தி பாபு எனப் பத்துப் பேருக்கு வழங்கப்பட்டது.
இறுதி நிகழ்ச்சியாக வழக்காடு மன்றம் நடைபெற்றது. திருமிகு தமிழருவி மணியன் நடுவராக அமர்ந்தார். ‘மக்கள் சார்பாக மன்னர்கள் மீது வழக்கு’ தொடுத்தவர் இலக்கியச் சுடர் இராமலிங்கம். தசரதன் , வாலி,  இராவணன் ஆகிய முடி மன்னர் மூவரும் தம் தவறுகளால் மக்கள் நலன்களுக்கு ஊறு விளைவித்தனர். இதுவே வழக்கின் அடிப்படை. “இவர்கள் மூவருமே அக்கால மன்னர்கள் இயல்புப்படியே அரசாண்டனர் ; ஆகவே அவர்கள் மீது குற்றம் சாற்ற முடியாது” என வழக்கை மறுத்தார் நகைச்சுவைத் தென்றல் இரே.சண்முகவடிவேல்.மேலும்,  ”அவர்களால் மக்கள் பாதிக்கப் பட்டிருந்தால் மக்கள்  புரட்சி செய்திருப்பார்கள்.  இம்மன்னர்கள் காலத்தில் எந்த மக்களும் புரட்சியில் ஈடுபடவில்ல. ஆகவே, ” மன்னர்கள் குற்றம் அற்றவர்கள்” என நகையும் சுவையுமாக எதிர் வாதம் செய்து மன்னர்களுக்காக வாதாடினார் சண்முகவடிவேல்.
இறுதியில் தீர்ப்பு வழங்க எழுந்த திருமிகு தமிழருவி மணியன், அரிஸ்டாட்டில், பிளாடோ, தாமஸ் மூர் …போன்ற மேனாட்டுச் சிந்தனையாளர்களின் அரசியல் கோட்பாடுகளை மேற்கோள் காட்டிக் கம்பனின் அரசியல் கொள்கைகளைச் சுட்டிக் காட்டி,  ”முடி மன்னர்கள் தவறுகளால் மக்கள் பாதிக்கப் பட்டதால்,அவர்கள் குற்றவாளிகளே” என்று தீர்ப்பு வழங்கினார். கம்பன் கழகப் பொருளாளர் திருமிகு சமரசம் தணிகா அவர்கள் நன்றி கூற இனிதே விழா நிறைவுற்றது. இரவு உணவாக வழங்கப்பட்ட சிற்றுண்டியை மக்கள் அருந்தி மகிழ்ந்து விடை பெற்றுச் சென்றனர்.
இவ்விழாவில் பங்கு கொண்ட பேச்சாளர்கள், கவிஞர்கள், நடன மணிகள், மேடை அலங்காரம், ஒலிஒளி அமைப்பாளர்… எனப் பலருக்கும் கம்பன் கழகப் பெயர் பொறித்த துண்டு, நினைவுப் பரிசு, சான்றிதழ் தந்து கம்பன் கழகம் பெருமைபடுத்தியது. கம்பன் கழகத்தலைவர் கவிஞர் கி பாரதிதாசன் , அவர் துணைவியார் திருமதி குணசுந்தரி பாரதிதாசன், கம்பன் கழக, மகளிரணி, இளையோரணி செயற்குழு உறுப்பினர்கள், விழா சிறப்புற நடை பெற உதவிய அன்பர்கள்,  நண்பர்கள் என்று பலரும் கண் துஞ்சாது, பசிநோக்காது , எவ்வெவ்வருமையும் பாராது கருமமே கண்ணாகி உழைத்தனர். அத்தனை பேருக்கும், விழா அழைப்பிதழ், வர்ணனை வெளியிட்ட ‘வல்லமை’ இணையதள இதழுக்கும்,  செய்தி வெளியிட்ட ஏனைய பத்திரிக்கைகளுக்கும்பிரான்சு கம்பன் கழகம் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.

 படங்கள் : திருமதி லூசியா லெபோ, திருமிகு பால்ராசு தேவராசு.

வேண்டியது வேண்டும் பொழுது…! (தொடர் கதை)



    'ஆயா.. இந்த பொறிகடலை பாக்கெட் எவ்வுளோ..?”
    'பன்னன்டு ரூவா..” என்று சொல்லிவிட்டு அந்தக் கிழவி இவளை உற்றுப் பார்த்தாள்.
    'ஏ புள்ள.. நீ மீன்கட அந்தோணி பொண்டாட்டி சகாயந்தானே..?”
    கேள்வியைக் கேட்டதும் சகாயம் நிமிர்ந்து  அந்தக் கிழவியைப் பார்த்தாள்.
    வேளாங்கன்னித் தெருவில் கிழங்கு மல்லாட்டை சோளம் என நேரத்திற்கு தகுந்தார்  போல் வேகவைத்ததைக் கூடையில் விற்கும் செல்லாயிக் கிழவிதான் அவள்! இப்பொழுது கோவில் தெருவில் கடைவைத்து பொறிகடலை பேரீச்சம்பழம் என பாக்கெட் போட்டு விற்கிறாள்.
    சுனாமி பலபேரின் உயிரையும் உடமையையும் கொண்டு சென்றாலும் சில பேரைச் செல்வந்தராகவும் ஆக்கிவிட்டுத் தான் சென்றிருக்கிறது. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அன்றாடம்  போராடும் கிழவி இன்று கடை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிறாள்! காது மூக்கு கழுத்தில் தங்கம் பளபளத்தது.
    ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெற முடியுமாம்! இந்தக்கிழவி எதைஎதை எல்லாம் இழந்த பிறகு இவைகளைப் பெற்றாளோ!!
    'ஏண்டி .. கேக்குறேன் இல்ல.. சகாயந்தானே? ஆமா.. ஒம்புருஸன் சுனாமியில செத்துப்போயி நாலு அஞ்சி வருஸமாவுது. நீ புள்ளதாச்சியா இருக்க? வேற கண்ணாலம் கட்டிக்கிட்டியா..?”
    கிழவியின் குரல் ஆறுதலாக ஒலித்தாலும் கண்கள் சகாயத்தின் வெற்றுக் கழுத்தை யோசனையுடன் பார்த்தப்படி  இருந்தது.
    சகாயம் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கையில் இருந்தச் சில்லரையை எண்ணிப் பலகையின் மேல் வைத்துவிட்டு ஒரு பாக்கெட் பொறியை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
    செல்லாயிக் கிழவி குழப்பத்துடன் கேள்வியாக அவள் போவதையே பார்த்தபடி  நின்றாள்.


    கோவில் தெரு! புதியதாக முளைத்தக் கடைகளில் உள்ளவர்களுக்குத்  தன்னை அடையாளம் தெரியாது என்றாலும் செல்லாயிக் கிழவிப்போல் சுனாமியில் தப்பிப் பிழைத்தவர்கள்  கண்களில் விழுந்துவிடக் கூடாது என்று முந்தானையை முக்காடாக இட்டுக்கொண்டு நடந்தாள்.!
    அந்தத் தெரு முழுவதும் அவள் பழகியத் தெரு!  அவள் கணவன் அந்தோணி வியாபாரம் செய்தத்தெரு! அந்தத் தெருவில் உள்ள ஓட்டல்கள் மீன் கடைகளுக்கு அவள் கணவன் அந்தோணி தான் மீன் சப்ளை செய்வது வழக்கம். அவனைத் தெரியாதவர்கள்  வேளாங்கன்னி நகரில் இல்லை என்றே சொல்லலாம்! அந்த அளவுக்கு அவன் அங்கு பிரபலமானவன்.
    சகாயத்திற்கு  அந்தோணியைக் கட்டிக்கொண்ட போது பெருமிதமாகத்தான் இருந்தது. அவனும் நல்லவன் தான். ஆனால் ஒன்றே ஒன்று…
   ஆசையாகக் கட்டிவந்தவள் ஐந்து வருடம் ஆகியும் மலடியாகவே இருக்கிறாளே… ஒரு பிள்ளையைப் பெத்துக் கொடுக்க வக்கில்லாமல் இருக்கிறாளே…
   அதனால் அவன் ஆண்மைக்கு அல்லவா இழுக்கு!! இது இவளுக்குத் தெரியவில்லையே என்று மனத்தில் இருந்தக் கோபத்தைக் குடித்துவிட்டு வந்து அவளை அடிப்பதிலும் உதைப்பதிலும் காட்டுவான். கோழை அவன்! குடிக்காமல் அவளை அடித்ததில்லை.
   ஒருமுறை அல்ல. இருமுறை அல்ல. எப்பொழுதெல்லாம் குடிக்கின்றானோ… அப்பொழுதெல்லாம் அவன் ஆண்மையை நிருபிக்க ஒரு வாரிசு இல்லையே என்று இவளை வதைப்பான்.
   மருத்துவரிடம் போனாள். அவர்  சோதித்து..
   ‘அம்மா உனக்கு எந்த பிரட்சனையும் இல்லை. உனக்குக் குழந்தையைப் பெற்றுக்கொள்ள எல்லா தகுதியும் இருக்கிறது. வேண்டுமானால் உன் கணவரை நல்ல மருத்துவரிடம் போய் பார்க்கச்  சொல்லு.’ என்று சொல்லிவிட்டார;.
   இதை எப்படி கணவனிடம் சொல்வது? சான் பிள்ளையென்றாலும் ஆண்பிள்ளை நான் என்று மீசையை முறுக்கும் கணவனிடம் ‘உனக்கு ஆண்மை இருக்கிறதா என்று ஒரு நல்ல மருத்துவரிடம் சோதிக்க சொன்னார் ’ என்பதை எப்படி சொல்ல முடியும்?
   இருந்தாலும் இதை எவ்வளவு நாள் தான் மூடி மறைக்க முடியும்?
   நீறு பூத்த  நெருப்பாயிற்றே! சற்று ஊதினாலும் பற்றிக் கொள்ளுமே..!
   ஒருநாள் அவன் குடித்துவிட்டு இவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து நெற்றியைச் சுவரில் மோத வலி பொருக்க முடியாமல் கத்தினாள்…. ‘ஒனக்குத்தான் கொழந்த பெத்துக்க தகுதி இல்லைன்னு டாக்டர் சொன்னார் … எனக்கொன்னும் பிரட்சனை இல்லையாம்… ஒம்மேல தப்பவச்சிக்கினு என்னைப் போட்டு அடிக்கிறியே….’ முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
   உண்மை எப்பொழுதும் சுடும் தான்! ஆனால் இந்த உண்மை  எறிகிறத் தீயில் எண்ணை வார்த்ததுப்  போலாக்கி விட்டது அவனுக்கு. கொதித்தெழுந்தான்!!

                                    (தொடரும்)

அருணா செல்வம்