பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 23 novembre 2011

பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா

வருணனை : ‘புதுவை எழில்’

கம்பன் கழகம் – பிரான்சு :
எத்தனை வேதனைகள்! எத்தனை வாதனைகள்!! எவ்வளவு இடுக்கண்கள்!  எவ்வளவு துன்பங்கள்!
அத்தனையையும் தாண்டிப் பத்தாம் ஆண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.சொந்தப் பணத்தைத் தொட்டுப் பந்தக் கால் நட்டு இந்தக் கம்பன் கழகத்தைத் தொடங்கியவர் கவிஞர் கி. பாரதிதாசன். தோழர்கள் நாங்கள் தோள் கொடுத்தோம். ஐரோப்பாவில் முதல் முதலாகக் கம்பனுக்கு விழா எடுத்தோம்.

ஆண்டு தோறும் – துண்டு விழுந்தாலும் துவண்டு விழாமல் உழைத்தோம்!கம்பனில் தோய்ந்தவர்களையும் ஆய்ந்தவர்களையும் அழைத்தோம்!ஆண்டுகொரு முறை விழா கொண்டாடிவிட்டுக் கும்பகர்ணனாக மாறிமீண்டும் மீண்டும் கொட்டாவி விடவில்லை நாங்கள் !திங்கள் தோறும் இறுதி ஞாயிறு அன்று ஒருங்குக் கூடி நெருங்கினோம்.கம்பன் காவியத்தின் சுவை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினோம்-  முற்றோதல் என்ற பெயரில்!
முற்றோதல் முற்றுப்பெற்றாலும் கற்றோர்க்குக் களிப்பருளும் களிப்பாம் திருக்குறளை ஓதத் தலைப்பட்டோம் மாதந்தோறும் ஓதி வருகின்றோம்  காலப் போக்கில்,கம்பன் மகளிரணி உருவானது ; கம்பன் இளையோரணி கருவானது!இந்த இரண்டு அணியினரும் எங்களோடு கைகோர்க்க விழா இனிதே நடைபெற்றது!
விழா வருணனை :
முதல் நாள் நிகழ்வுகள் : சனிக் கிழமை 12 .11 .2011 .பிற்பகல் 3 மணி.
திருமிகு ஆதிலட்சுமி வேணுகோபால் இணையர்  மங்கல விளக்குகளுக்கு ஒளியூட்டியபின்,  கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலர் பேரா. பெஞ்சமின் லெபோ, பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் ஆகிய மூவரும் கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் கம்பன் வாழ்த்தை முழங்கினர்.
ஆறு காண்டங்களின் கடவுள் வணக்கப் பாடல்களையும் அழகாகப் பாடினார் மகளிரணி உறுப்பினர் கவிஞர் சரோசா தேவராசு.பாடிடும் பச்சைக் கிளிகளைப் போலப் பச்சைப் புடவை அணிந்து நீடிய அரங்கேறிய மகளிரணி உறுப்பினர்கள்,’வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்று பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளில் தமிழ்த் தாயை வாழ்த்திப் பாடினர்.(இப்பாடல்தான் புதுவை அரசு ஒப்புதல் அளித்த தமிழ்த்தாய்ப் பாடலாகும்)
நாட்டியகலாசோதி செல்வி சாரநாயகி கோபாலகிருட்டிணன் அளித்த பரத நடன விருந்துடன் விழா சிறப்பாகத்தொடங்கியது.பின்னொருமுறை பாரதியாரின் ,’ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்தார், அனைவர் நெஞ்சிலும் இடம் பிடித்தார் இவர்.
பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி பாரதிதாசன் நகையும் சுவையுமாக வரவேற்புரை வழங்கினார்.புதுச்சேரி அரசில் சமூகத் துறை, சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு பெ. இராசவேலு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.
புதுவையில் இருந்து வந்திருந்த முதுபெரும் புலவர் (அகவை 92!)  தமிழ் மாமணி, பாவலர்மணி சித்தன் ஐயா  வழங்கிய வாழ்த்தில் கம்பன் கழகம் குளிர்ந்தது ; தமிழ் ஒளிர்ந்தது!
பத்தாம் ஆண்டுக் கம்பன் மலரை, புதுவைக் கம்பன் கழக இணைச் செயலர், நல்லாசிரியர் கி. கலியாணசுந்தரம் வெளியிட்டார். வண்ண வண்ணப் படங்களுடன் திண்ணமான கட்டுரைகள் கவிதைகளுடன் மலர் பொலிந்தது. பாவலர் மு.பாலசுப்பிரமணியன் படைப்பான ‘சிட்டு குருவி’ என்ற சிறுவர் இலக்கியத்தை வெளியிட்டவர் : புதுவையின் சாதனைச் சிகரம் வே. பொ. சிவக்கொழுந்து அவர்கள்.
அடுத்துச் சிறப்புரை தொடர்ந்தது.உருகிவரும் பனிமலை அருவி எனத் தமிழ் மழை பொழிய எழுந்தார் திருமிகு தமிழருவி மணியன் அவர்கள்.
தலைப்பு : ‘கம்பனில் பண்பாடு.’ ’பண்பாடு’ என்ற சொல்லைப் பண்போடு உருவாக்கித் தந்த ரசிக மணி டி.கே சியைப் பாங்காக நினவு கூர்ந்த அவர், பண்பாடு என்ன என்பதை அழகாக விளக்கினர் ; தமிழ்ப் பண்பாடுகளை எல்லாம் கம்பன் எப்படித் தன் காவியத்தில் பதிந்து வைத்திருக்கிறான், பொதிந்து வைத்திருக்கிறான் எனப் பல எடுத்துக்காட்டுகளைக் காட்டிக் கொடுத்த விளக்கத்தில் மக்கள் தம்மை மறந்தனர்.‘அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் ..’ என்று இராமனுக்கு ஆயிரம் அடைமொழி கொடுத்து வருணித்த கம்பன் ’அவளும்’ என்ற ஒரே சொல்லுக்குள் சீதையை அடக்கி விடுகிறான்.  ஏன் தெரியுமா? இதனைச் சொல்பவன் ‘குகன்’ – காட்டு வாசி. இராமனைக் கண்டவுடன் காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கி’அவன் அழகை எல்லாம் அள்ளிப் பருகியவன்.அவன்,  இராமனை வருணித்துச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை.  ஆனால், அவன் அப்படிச் சீதையை வருணிக்கலாமா ? வருணிக்க விடுவானா கம்பன்! அதனால்தான் ‘அவளும்’ என்ற ஒரு சொல்லுக்குள் தமிழ்ப் பண்பாட்டை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தான்,  ‘சொல்லுக்குள் வாக்கியத்தைச் சுருக்கி வைத்த புலவன்’ கம்பன் எனத் தமிழருவி மணியன் உணர்ச்சியோடு உரைத்தபோது மக்களின் கரவொலி எப்பக்கமும் எதிரொலித்தது. ஈழத் தமிழர்களின் இன்னல், தமிழர்களின் தமிழுணர்வு இன்மை… போன்றவற்றையும் அவர் தம் பேச்சில் குறிப்பிடத் தவறவில்லை.
இடையே -தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகத்தின் சார்பில், அதன் இணைச் செயலர் நல்லாசிரியர் கி.கலியாணசுந்தரம் அவர்கள் வழக்கம் போல், பிரான்சு கம்பன் கழகச் செயற்குழு உறுப்பினர்களுக்கும் மகளிரணி செயற்குழு உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள். புதுவையில் இருந்து வந்திருந்த கவிஞர் வே. முத்தையன், பிரான்சு கம்பன் கழகத்தைச் சேர்ந்த கவிஞர் திருமதி சரோசா தேவராசு இருவரும் ,’கம்பனுக்குப் பாமாலை’ என்ற தலைப்பில் கவி மலர் அளித்தார்கள்.
பங்குகொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசு, கழகப் பெயர் அச்சிட்ட துவாலைத் துண்டு, சான்றிதழ் வழங்கப்பட்டன.  மாலை ஐந்தரை மணி அளவில், இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் அவர்கள் தம் உரையைத் தொடங்கினார்.தலைப்பு : ‘தெய்வக் கவியில் தெய்வப் புலவன்’. தெய்வமாக் கவி கம்பனின் காவியத்தில் திருவள்ளுவரின் குறளமுதம் எப்படி எல்லாம் நிறைந்துள்ளது, எங்கெல்லாம் கரைந்துள்ளது, எவ்வாறெல்லாம் மறைந்துள்ளது எனக் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையோடு அவர் ஆற்றிய உரையில் அனைவரும் உறைந்து போனார்கள்.
  பிரான்சு கம்பன் கழகத்தைச் சேர்ந்த கவிஞர் திரு தேவராசு அவர்களும் புதுவையிலிருந்து வந்திருந்த கவிஞர் திருமதி வைத்தி கத்துரி அவர்களும்  கவி மலர் அளித்தார்கள்.
தொடர்ந்து , நகைச்சுவைத் தென்றல் திருவாரூர் இரே. சண்முகவடிவேல் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் தொடங்கியது.
தலைப்பு : ‘இன்றைய வாழ்வுக்குப் பெரிதும் வழிகாட்டுபவன்… கும்பகருணனா ? வீடணனா?’வீடணன்தான் என்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா. துபாயில் , ‘தமிழ்ப் புயல்’  என்று பட்டம் வாங்கி வந்த இப்புயல் இங்கே,  பிரான்சில் மையம் கொண்டது.கம்பனே கூட வீடணனுக்காக அப்படி வாதாடி இருப்பானா என்பது ஐயமே! புயலாகச் சுழன்றடித்துப் பூகம்பமாய் அதிர்ந்து தம் வாதங்களை முன் வைத்தார் பேராசிரியர் பர்வீன் சுல்தானா.

புயலுக்குப் பின் அமைதிதானே! அந்த அமைதியின் வடிவாகத் தென்றலாகத் தவழ்ந்து வந்தார் திருமதி லூசியா லெபோ.காட்டிக் கொடுத்த கயவன் வீடணனை விட ஊட்டிக் கொடுத்த உணவுக்காகத் தன் உயிரையே கொடுத்த தியாகி கும்பகருணனே இன்றைய வாழ்வுக்கு வழி காட்டக் கூடியவன் என்று தொடங்கித் தன் தரப்பு வாதங்களை,  அதிராமல், பதறாமல், அழகாக அடுக்கித் தந்தார் அவர்.
பின் கவிஞர் பாரீசு பார்த்தசாரதி, திருமதி சுகுணா சமரசம் இருவரும் அறத்தின் பக்கம் நின்றவன் வீடணன்தான் என்று வாதாடினர். திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால், கவிஞர் அருணா செல்வம் இருவரும் கும்பகருணனைத் தாங்கிப் பிடித்தனர்.நகைச் சுவையையே தன் பலமாகவும் ஆயுதமாகவும் கொண்ட நகைச்சுவைத் தென்றல், சிரிப்பு வெடிகள் சிலவற்றைக் கொளுத்திப் போட்ட பிறகு, ‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வினாலும் தருமம் மறுபடி வெல்லும்’.அந்தத் தருமத்தின் முழு வடிவே இராமன்தான். அவன் பக்கம் சென்றவன், அவனைச் சேர்ந்தவன் வீடணனே!இந்த அதரும உலகில் நாம் தருமத்தின் பக்கமே நிற்கவேண்டும்,  தருமத்தின் வழியில்தான் செல்லவேண்டும் என்று இன்றைய வாழ்வுக்கு நல்ல வழி காட்டுபவன் வீடணனே எனத்திருமிகு இரெ .சண்முகவடிவேல் அவர்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்க பட்டிமன்றம் இனிதாக நிறைவு உற்றது.முதல் நாள் விழாவும் முடிவு பெற்றது.
பொதிய மலைத் தென்றலாய்த் தமிழ் மணங்கமழ எதுகையும் மோனையுமாய்த் தமிழமுதை அள்ளி வழங்கி நிகழ்ச்சிகளை நகையும் சுவையுமாகத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, ’இன்று போய் நாளை வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார் ;மக்கள் உணவுப் பக்கம் படை எடுத்தார் (கள்).
ஞாயிறு, 13.11.2011 காலை 11 மணி.
கவிமணி விசயரத்தினம் ராசலட்சுமி இணையர்  மங்கல விளக்குகளுக்கு ஒளியூட்டியபின் கம்பன் கழகக் கவிஞர் சரோசா தேவராசு இறைவணக்கம் பாட,கம்பன் இளையோரணி தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர்.இவர்கள் எவரும் உரோமன் எழுத்துகளில் தமிழை எழுதிவைத்துப் பாடவில்லை.பாடலை மனப் பாடமாகவே பாடினர்.
பரி நகரின் புறநகராம் மோ’ நகரின் ‘பூக்கள் கழக’ மாணவியர், பாவேந்தரின் ‘சங்கே முழங்கு’ பாடலுக்கு ஏற்றவாறு பாவங்களோடு நாட்டிய விருந்து வழங்கினர். வந்தாரை வரவேற்கும் செந்தமிழர் மரபுக்கேற்பக் கம்பன் கழகச் செயலர், பேரா.பெஞ்சமின் லெபோ வந்திருந்தோர் அனைவரையும் செந்தமிழில் வரவேற்றார்.
புதுச்சேரியின் சாதனைச் சிகரம் வே.பொ.. சிவக்கொழுந்து தொடக்க உரை நிகழ்த்தினார் : “ரேஷன் கார்டு வைத்திருந்தால்தான் அந்த அந்த நகரத்தார் ; இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருந்தால்தான் இந்தியர் ; அது போல் நம்மிடம் தமிழ் இருந்தால்தான் நாம் தமிழர் ஆவோம். எனவே நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தமிழ் வைத்திருக்கவேண்டும் ; தமிழில் பேசிப் பழகவேண்டும்” என்னும் கருத்து முத்தை எடுத்து வைத்தார்.
விழாவுக்குத் தலைமை தாங்கியவர் புதுவை கல்விச் செம்மல் முனைவர் வீ . முத்து அவர்கள்.பலபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்.  புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கூட.கம்பன் புனைந்த கவிதைகள் இத்தனை, கம்பன் வரைந்த சந்தங்கள் இத்தனை… என்று கம்பனைப் பற்றித் துள்ளி விழும் தமிழில் அள்ளி இறைத்த புள்ளி விவரங்களைக் கேட்டு மக்கள் அசந்து விட்டனர்.
புதுவைக் கவிஞர்கள் சிவ இளங்கோ, மு. பாலசுப்பிரமணியன் இருவரும் வாழ்த்துக் கவிதை வழங்கினர்.முன்னவர் புதுவையின் புகழ் பெற்ற கவிஞர் சிவம் அவர்களின் திருமகனார் ; பின்னவர் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலர். கமபன் விழாவில் கலந்துகொள்ளவே இவர்கள் இங்கு வந்திருந்தனர்.
அடுத்து நடை பெற்ற தேனுரைக்குத் தலைமை தாங்கினார் பேராசிரியர் கலியன் எதிராசன் அவர்கள்.  பொறி இயல் துறை அறிஞரான இவர் பரோடா நகர்த் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 26 ஆண்டுகள் பணியாற்றியவர்.பல பொறி இயல் நிறுவனங்களில் தலைமைப் பதவி வகித்தவர். திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ’Thiruppaavai, an Introduction’  என்ற தலைப்பில் நூல் எழுதியவர். இதனை , ‘Bhavans Journal’ வெளியிட்டுள்ளது. பெண்மையை எப்படி எல்லாம் கம்பன் ஏற்றிப் புகழ்ந்து போற்றி உள்ளான் என விரிவாகத் தம் தலைமை உரையில் எடுத்துரைத்தார்.
தேனுரை அளிக்க வந்திருந்த முனைவர் பர்வின் சுல்தானா,  ’கம்பனில் பெண்மை’ என்னும் தலைப்பில் கேட்டார்ப் பிணிக்கும் தகைமையோடு உரையாற்றினார். “பெண்களைக் கேலி பேசும் ஆண்கள்,பெண்கள் மனத்தில் மாறா வடுக்களை ஏற்படுத்தி விடுகிறார்கள் ;  அப்படித்தான், மண்ணுருண்டையால் அடித்த இராமன்,  கூனி மனத்தில் மாறா வடுவை ஏற்படுத்திவிட்டான் ; விளைவாக, மண்ணே இராமனுக்குக் கிடைக்காமல் காட்டுக்குக் காவடி எடுக்க வைத்துவிட்டாள் கூனி ; எனவே ஆண்களே, பெண்களைக் கேலியாகப் பார்க்காதீர்கள், பேசாதீர்கள்..” என்று சாடினார்.
கூனி, கைகேயி, தாடகை … முதல் சீதை நடுவாக மண்டோதரி ஈறாகக் கம்பனில் உலா வரும் பெண்கள் வெறும் கண்கவர் பொம்மைகள் அல்லர் ; ஒவ்வொரு பாத்திரமும் கதையை அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்துகிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கிக் காட்டினார் பர்வின் சுல்தானா.’நின் பிரிவினும் சுடுமோ பெருங் காடு’ என்ற சீதையின் வாயில் இருந்து ‘சுடு’ என்னும் சொல்எங்கெல்லாம், எப்படி எல்லாம் வெளி வந்து என்னவெல்லாம் நிகழ்த்திற்று என்று விளக்கிய அவர், இறுதியாக அந்தத் தீக் கடவுளையே தீய்த்த சீதையின் கற்புத் திண்மை கம்பன் காட்டிய பெண்மையின் உச்சக் கட்டம் என்பதே உண்மை என முடித்தபோது மகளிர் மட்டுமல்ல ஆடவரும் கூட பலத்த கைதட்டிப் பாராட்டினர். ”பாத்திரங்களைப் பெண்கள் புளி போட்டு விளக்குவார்கள் ; இங்கே பர்வின் சுல்தானா அவர்கள், கம்பன் பத்திரங்களைக் கம்பன் பாத் திறத்தால் தம் நாத்திறத்தால்  பளபளபாக்கிப் பளிச்சிட வைத்துவிட்டார்” எனத் தொகுப்பாளர் பேரா. பெஞ்சமின் லெபோ கூற மறுபடி கைதட்டல்.

மதிய உணவு,  வயிற்றுக்கு விருந்து ; ‘சர்வதேச உயர்கல்வி நிலைய’ ‘நாட்டிய கலாசோதி’ சிவலிங்கநாதன் சர்மலியின் மாணவியர் வழங்கியதோ  கண்ணுக்கு விருந்து!
தொடர்ந்து காதுக்கு விருந்து தரத் தள்ளாடித் தள்ளாடி மேடை ஏறினார் முதுபெருங் கவிஞர் கண. கபிலனார் -தள்ளாதவர், ஆம்,   தமிழைத் தள்ளாதவர்! எள்ளளவும் இளைப்போ களைப்போ கொள்ளாதவர், கம்பன் கழகத்தின் பிதாமகனார் ;வண்ண மலர்ச் சொல்லெடுத்துத் தம் எண்ணத்தைக் குழைத்துக் கம்பனுக்குப் பாமாலை சூட்டினார் இவர்.

அடுத்து வந்த கம்பன் கழகக் கவிஞர் பாமல்லன் (கம்பன் கழகத் தலைவர் கவிஞர் பாரதிதாசனிடம் யாப்புப் பாடம் கேட்டவர் இவர்!)ஒருபா, இருபா தருவார் எனப் பார்த்தால், அப்பப்பா எத்தனை, எத்தனைப் பா,  எத்தனை வகைப்பா,  வகையாய் வகையாய்ப் பாடி அவையை அசத்திவிட்டார்!
பிற்பகல் 3 .00 மணி :
இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் தலைமையில் ; தொடங்கியது சுழலும் சொற் போர்.
தலைப்பு :
‘கம்பனைக் கற்போர் நெஞ்சத்தில் களிநடம் புரிவது – நீதியின் மேன்மையா ? தமிழின் இனிமையா?  காக்கும் இறைமையா? சகோதரப் பெருமையா?
‘நீதியின் மேன்மையே’ என வாதிட வந்தார் முனைவர் பர்வின் சுல்தானா. நீதி வேறு,  நேர்மை வேறு என்று பிரித்து அலசியவர் கதைகள் இரண்டு சொல்லித் தம் கருத்தை நிறுவினார்.”கம்பனைக் கற்போர் நெஞ்சில் களிநடம் புரிவது நீதியின் மேன்மையே ” என்று அடித்துப் பேசி அமர்ந்தார் இவர்.
தமிழில் இனிமை தவிர வேறில்லை எனக் கனிவுடன் தம் பேச்சை தொடங்கிய பேரா. பெஞ்சமின் லெபோ, அவையினரைத்  ’தமிழ், தமிழ், தமிழ் ‘  என மெல்லச் சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தி வேகமெடுத்த நிலையில் சட்டென்று நிறுத்தச் சொல்ல,  சொல்லியவர்கள் வாயில் இருந்து அமிழ்து என்ற ஒலி வரச் செய்தார்.

“பெயரைச் சொல்லும் போதே அமுது ஊறும் ஒரே மொழி நம் தமிழ்தான். எனவே,  தமிழ் = அமிழ்து= இனிமை ஆகவே தமிழ் என்றாலே இனிமைதான் ; இந்த இனிமை,  தமிழின் இயல்பான ஒலிகளால் வருவது ; இந்த இனிய ஒலிப்பு அடிபடையில் எழுவன எதுகை மோனைகள் ; இவற்றின் அடிப்படையில் எழுவன பல வகை சந்தங்கள் ; இந்தப் பலவகை சந்தங்களைக் கம்பன் காவியத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை கேட்கலாம்.எனவே கம்பனின் காவிய மாளிகையுள் நுழைந்தது முதல் இறுதிக் கவிதை வரை இழையோடிக் கிடப்பது தமிழின் இனிமையே ; நீதியின் மேன்மை, காக்கும் இறைமை, சகோதரப் பெருமை எல்லாம் அவ்வப் போது வந்து தலைகாட்டிச் செல்லும் .ஆனால் தமிழின் இனிமையே காவியம் முழுமையும் ஊடுருவிக் கம்பனைக் கற்போர் நெஞ்சில் களிநடம் புரிகிறது” எனச் சொல்லித் தம் வாதத்தை நிறைவு செய்தார் அவர்.
‘காக்கும் இறைமைக்’குக் கொடியும் குடையும் பிடிக்க எழுந்தார் நகைச்சுவைத் தென்றல் இரே. சண்முகவடிவேல்.  வழக்கம் போல் சிரிப்பு வெடிகள் இரண்டைக் கொளுத்திப் போட்டார். ”மனித இராமனைத் தெய்வமாக்கியவன் கம்பன். கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாக அமைபவன் இராமன், எனவே,”கம்பனைக்  கற்போர் நெஞ்சில் களிநடம் புரிவது ‘காக்கும் இறைமையான’  காகுத்தனே! ” என்று முடித்து அமர்ந்தது நகைச்சுவைத் தென்றல்.

‘சகோதரப் பெருமையே’  எனப் பாசத்தோடு பேச வந்தார் கவிஞர் சரோசா தேவராசு. ”இராம இலக்குவன, பரத சத்ருக்கன சகோதரர்கள், சடாயு சம்பாதி சகோதரர்கள்,  வாலி சுக்கிரீவன் சகோதரர்கள், இராவணன், கும்பகன்னன், வீடணன் சகோதரர்கள் எனப் பலபடியாகச் சகோதர பாசத்தைக் கம்பன் காட்டுகிறான்.  உடன் பிறவாச் சகோதரர்களாகவும் பலரை ஏற்றுக் கொள்கிறான் இராமன். இப்படிச் சகோதரப் பாசத்தை காவியம் நெடுக வைத்திருப்பதால் கம்பனைக் கற்போர் நெஞ்சில் களிநடம் புரிவது சகோதரப் பெருமையே” என்று சொல்லி முடித்தார் சகோதரி சரோசா தேவராசு.
இரண்டாம் சுற்றும் முடிந்த நிலையில், தீர்ப்பு சொல்லுமுன், ’ நீதியின் மேன்மை’  எப்படிக் கம்பனில் விளங்குகிறது, ‘தமிழின் இனிமை’  எப்படிக் காவியத்தில் தவழுகிறது,’காக்கும் இறைமை’ யைக் கம்பன் எப்படிக் காட்டுகிறான், ‘சகோதரப் பெருமை’யைக் கம்பன் எப்படித் தீட்டுகிறான் என்பனவற்றை சிறப்பாகச் சொல்லி முடித்தார் இராமலிங்கம்.
“இவை நான்குமே கம்பனில் இருந்தாலும், இவற்றுள் எது ஒரு சத வீதம் அதிகமாக இருக்கிறது? தொடர் வண்டித் தொடரில் வண்டிகளைக் கோர்த்தாலும், முதல் வண்டிதானே பிற வண்டிகள் அத்தனையையும் இழுத்துச் செல்கிறது!அதைப் போல,  ’ நீதியின் மேன்மை’,  ’காக்கும் இறைமை’, ‘சகோதரப் பெருமை’…ஆகிய வண்டிகளை இழுத்துச் செல்வது தமிழின் இனிமைதான்” என்று சொல்லி நல்லதொரு தீர்ப்பை வழங்கித் தாம் என்றுமே இலக்கியச்  சுடர்தான் என்று மீண்டும் நிறுவினார் இராமலிங்கம்.
பின், கவிஞர்கள் அருணா செல்வம், லினோதினி சண்முகநாதன், எழில் துசியந்தி மூவரும் கம்பனுக்குக் கவிமலர் சூட்டினர்.நாட்டியக் கலைமாமணி செலினா மகேசுவரனின் மாணவியர் மூவர் பரத நடன விருந்து தந்தனர்.பரதத்தில் கற்றுத் துறை போகியவர்கள் மட்டுமே தரக் கூடியது ‘வர்ணம்’ .கதைப் போக்கில் அமைந்த நீளமான பாடலுக்கு ஏற்ற விதங்களில் பலவித முத்திரைகள் பதித்துப் பாவங்கள் காட்டி ஆடுவது இந்த நடனத்தின் சிறப்புகள்.  இந்த நடனத்தை மிகச் சிறப்பாக ஆடி , பாராட்டுப் பெற்றனர் இச்செல்வியர் மூவரும்.
இந்தியத் தூதரகத்தின் அதிகாரி திருமிகு கன்யலால் அவர்கள் தமிழில் வணக்கம்’ சொல்லி ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் உரையைத் தமிழில் மொழி பெயர்த்தவர் : பேரா பெஞ்சமின் லெபோ..  இங்குள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் செய்து வரும் சேவைகளை விளக்கிய அவர், தமிழர்களின் கலை பண்பாட்டு நிகழ்சிகளுக்கு இந்தியத் தூதரகம் துணை நிற்பதை அறிவித்தார். இறுதியில் ‘நன்றி வணக்கம்’ எனத் தமிழில் சொல்லி விடை பெற்றார்.
2011 -ஆம் ஆண்டின் கம்பன் பட்டயம் , பாவலர்கள் மு .பாலசுப்பிரமணியன் , வைத்தி. கச்தூரி, சிவ இளங்கோ, வே .முத்தையன் ஆகிய நால்வருக்கு வழங்கப்பட்டது .இந்த ஆண்டுக் கம்பன் விருது, தமிழ்மாமணி ந, கோவிந்தசாமி முதலியார், தமிழ்மாமணி பாவலர்மணி சித்தன், கல்விச் செம்மல் முனைவர் வீ. முத்து, கலைமாமணி கவிஞர் தே. சனார்த்தனன் (கவிஞர் பாரதிதாசனின் தந்தையார்), பேராசிரியர் கலியன் எதிராசன், திருமிகு வெ. பொ. இராமலிங்கம், திருமிகு சு.ந. குப்புசாமி முதலியார், அருட்செல்வர் சுகுமாரன் முருகையன், திருமிகு செயராசசிங்கம், திருமிகு சக்கரவர்த்தி பாபு எனப் பத்துப் பேருக்கு வழங்கப்பட்டது.
இறுதி நிகழ்ச்சியாக வழக்காடு மன்றம் நடைபெற்றது. திருமிகு தமிழருவி மணியன் நடுவராக அமர்ந்தார். ‘மக்கள் சார்பாக மன்னர்கள் மீது வழக்கு’ தொடுத்தவர் இலக்கியச் சுடர் இராமலிங்கம். தசரதன் , வாலி,  இராவணன் ஆகிய முடி மன்னர் மூவரும் தம் தவறுகளால் மக்கள் நலன்களுக்கு ஊறு விளைவித்தனர். இதுவே வழக்கின் அடிப்படை. “இவர்கள் மூவருமே அக்கால மன்னர்கள் இயல்புப்படியே அரசாண்டனர் ; ஆகவே அவர்கள் மீது குற்றம் சாற்ற முடியாது” என வழக்கை மறுத்தார் நகைச்சுவைத் தென்றல் இரே.சண்முகவடிவேல்.மேலும்,  ”அவர்களால் மக்கள் பாதிக்கப் பட்டிருந்தால் மக்கள்  புரட்சி செய்திருப்பார்கள்.  இம்மன்னர்கள் காலத்தில் எந்த மக்களும் புரட்சியில் ஈடுபடவில்ல. ஆகவே, ” மன்னர்கள் குற்றம் அற்றவர்கள்” என நகையும் சுவையுமாக எதிர் வாதம் செய்து மன்னர்களுக்காக வாதாடினார் சண்முகவடிவேல்.
இறுதியில் தீர்ப்பு வழங்க எழுந்த திருமிகு தமிழருவி மணியன், அரிஸ்டாட்டில், பிளாடோ, தாமஸ் மூர் …போன்ற மேனாட்டுச் சிந்தனையாளர்களின் அரசியல் கோட்பாடுகளை மேற்கோள் காட்டிக் கம்பனின் அரசியல் கொள்கைகளைச் சுட்டிக் காட்டி,  ”முடி மன்னர்கள் தவறுகளால் மக்கள் பாதிக்கப் பட்டதால்,அவர்கள் குற்றவாளிகளே” என்று தீர்ப்பு வழங்கினார். கம்பன் கழகப் பொருளாளர் திருமிகு சமரசம் தணிகா அவர்கள் நன்றி கூற இனிதே விழா நிறைவுற்றது. இரவு உணவாக வழங்கப்பட்ட சிற்றுண்டியை மக்கள் அருந்தி மகிழ்ந்து விடை பெற்றுச் சென்றனர்.
இவ்விழாவில் பங்கு கொண்ட பேச்சாளர்கள், கவிஞர்கள், நடன மணிகள், மேடை அலங்காரம், ஒலிஒளி அமைப்பாளர்… எனப் பலருக்கும் கம்பன் கழகப் பெயர் பொறித்த துண்டு, நினைவுப் பரிசு, சான்றிதழ் தந்து கம்பன் கழகம் பெருமைபடுத்தியது. கம்பன் கழகத்தலைவர் கவிஞர் கி பாரதிதாசன் , அவர் துணைவியார் திருமதி குணசுந்தரி பாரதிதாசன், கம்பன் கழக, மகளிரணி, இளையோரணி செயற்குழு உறுப்பினர்கள், விழா சிறப்புற நடை பெற உதவிய அன்பர்கள்,  நண்பர்கள் என்று பலரும் கண் துஞ்சாது, பசிநோக்காது , எவ்வெவ்வருமையும் பாராது கருமமே கண்ணாகி உழைத்தனர். அத்தனை பேருக்கும், விழா அழைப்பிதழ், வர்ணனை வெளியிட்ட ‘வல்லமை’ இணையதள இதழுக்கும்,  செய்தி வெளியிட்ட ஏனைய பத்திரிக்கைகளுக்கும்பிரான்சு கம்பன் கழகம் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.

 படங்கள் : திருமதி லூசியா லெபோ, திருமிகு பால்ராசு தேவராசு.