பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 30 septembre 2014

எண்ணப் பரிமாற்றம்

http://2.bp.blogspot.com/-ylTfAzPzPuE/UYSFAusKF9I/AAAAAAAADuk/_G-I-4dmrqA/s1600/213FFB2B-7FF3-41BB-98B1-42B0FCCEF4C1.JPG


அன்புடையீர்,

வணக்கம். மனிதன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற அறிவும், புரிதலும் இல்லாமல் வாழ முடியாது. ஏனெனில் அவை அவனது தனி வாழ்வைப் பாதிக்கக்கூடியவை. அப்படி நடக்கும் நிகழ்வுகளின் தாக்கம் அவனை இன்புறுத்தவோ, சங்கடப்படுத்தவோ, கோபமூட்டவோ செய்யலாம். அதற்கான அவனது பதில் செயல்பாடு எப்படி அமைகிறது என்பது முக்கியம். பலரது ஒருமித்த ஒரே மாதிரியான எதிரொலி சமூகத்தையே புரட்டிப்போடும் வல்லமை கொண்டதாகலாம். அது சாத்வீகமானதாய், அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டதாய் இருந்தால் பலனும் சிறப்பானதாய், வரவேற்கக் கூடியதாய் அமையும். மாறாகக் கனலும் நெருப்பானால், அது பெருந்தீயை மூட்டி விடலாம். அது மனித இனத்தை அழிக்கவே உதவும்.

எந்தவொரு பிரச்சனையும் உண்டாக்கும் உணர்வு சில நேரமே அதே அளவில் இருக்கும். பின்னர் மெல்ல அடங்கவே செய்யும். அந்நேரத்தில் அறிவு அந்த இடத்தை ஆக்கிரமித்து புது வழி காண்பது இயல்பு. அதற்கிடமளிக்காமல் எடுத்தவுடன் உணர்வு வழி செல்வதோ அல்லது அதே உணர்வை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதோ நம் கையில்தான் உள்ளது.

துரதிர்ஷ்டவசமாக இயேசு, காந்தி போன்ற மகான்களைத் தவிர மக்களுக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் ஆண்மை எல்லாருக்கும் இருப்பதில்லை. நீதியை நிலைநாட்ட, நியாயம் கிடைக்கத் துணிவோடு தவறைத் தவறென்று சுட்ட மனோபலம் வேண்டும். திருத்தவும், குற்றமிழைத்தோருக்கு மாற்றான பிரச்சனைத் தீர்வும் கொண்டிருக்க வேண்டும். அதை தார்மீக உணர்வோடு செயல்படுத்தத் தெரிய வேண்டும். சிந்தியாமல் வெறும் உணர்ச்சி மயமான முடிவுகளை எடுத்தால் அது செயல்படுவோரையும் அழித்து, எண்ணற்றோர் துன்புறவுமே வழி வகுக்கும். இந்தத் தெளிவின்மையால்தான் பல நெருக்கடிகளை மனிதன் போராட்டம், கலகம், தீவிரவாதம், வன்முறை, பயங்கர வாதம் என்கிற பல பெயர்களில் உண்டாக்கிக் கொள்கிறான்.

இதிலும் பல படிகள் உண்டு. ஆயுத பலத்தை மட்டுமே நம்பி களமிரங்குவோர் பெரிதாக சாதிப்பது ஒன்றுமில்லை. ஒரு சில ஊர்திகளை எரித்து, சில பொது உடமைகளை உடைத்து, சிலரைக் காயப்படுத்தி, பலரை பயமுறுத்தி விட்டால் அவர்கள் பெரிய வீரர்களாகி விடுவார்களா? அல்லது அவர்களுக்கு எல்லாரும் பணிந்து விடுவார்களா? அல்லது அந்தப் பிரச்சனைதான் தீர்ந்து போகுமா! அவர்களுடைய வரையற்ற ஆத்திரம் குறையலாமே தவிர தங்கள் மூடத்தனம் பின்னர் அவர்களுடைய மனச்சான்றால் புரிந்து, வருந்த நேரும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் வாழ்விலேயே அவர்கள் தவறை உணர்த்தும் அனுபவங்களை காலம் அவர்களுக்குத் தராமலா போகும்?!

பின்னர் மனம் குமைந்து, தனக்குள் மறுகுவதைக் காட்டிலும், செயல்படுமுன் அறிவை உபயோகித்தால் பிறருக்கு ஏற்படும் துன்பங்களும் இல்லாதொழியும். நாடும் அமைதியாகத் திகழும்!

திருமதி சிமோன்

அமைதிக்கு ஆன்றோர் அளித்த அறநெறிகள் .


 • வெற்றி என்பது தோல்விகளுக்கிடையேதான் இருக்கிறது.
 - அப்துல் கலாம்

 • பிழையைச் சரிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதில் அவமானம் இல்லை. - ராஜாஜி

 • சில சமயங்களில் வாய்திறந்து பேசுவதை விடப் பேசாமல் இருப்பதே மிக்க
 பயன் அளிப்பதாகும்.
 - டாக்டர் இராதாகிருஷ்ணன்

 • உண்மையாக நாணயமாக  நடப்பவனுக்கு மக்கள் நெஞ்சத்தில் ஓர் சிறந்த இடம் உண்டு.
 - பெரியார்

 • அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்
 - அண்ணா

 • புகழ்தான் நம்மைத் தேடி வர வேண்டும்; நாம் அதைத் தேடிப் போகக்கூடாது.
 - எம்.ஜி.ஆர்.

 • நம்முடைய உண்மையான தேவைகளைக் கடவுள் மட்டுமே அறிவார்.
 - அன்னை தெரசா

 • நிம்மதியைத் தேடி அலைவதில்  பயனில்லை. அது உங்கள் நெஞ்சுக்குள்ளே இருக்கிறது.
 - பாரதிதாசன்

 • கோபம் வந்துவிட்டால் நியாயங்கள் குழம்பிப் போவது வழக்கம்.
 - நாமக்கல் கவிஞர்

 • படிப்பால் அறிவு வளருமே தவிர,  ஒழுக்கம் வந்து விடாது.
 - மு.வரதராசனார்

வெற்றி வந்தால் பணிவு அவசியம்.
தோல்வி வந்தால் பொறுமை  அவசியம்.
எதிர்ப்பு வந்தால் துணிவு  அவசியம்.
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்

வாழ்வியல் பதிற்றந்தாதி



பாடலின் இறுதியில் (அந்தம்) வரும் வார்த்தையே முதலில் (ஆதி) வருவது போன்று எழுதும் கவிதை முறைக்கு "அந்தாதி" என்று பெயர். பத்துக் கவிதைகள் சேர்ந்தது "பதிற்றந்தாதி". இங்கு ஒவ்வொரு கவிதையின் இறுதிச் சொல்லும், அடுத்தக் கவிதையின் ஆரம்பமாகவும் உள்ளது.

  
உலகெலாம் வாழ்த்தும் உயிரெலாம் போற்றும்
நிலமெலாம் சாற்றுமந் நீரும் - நிலவின்
கதிரெலாம் காட்டும் களமெலாம் நின்றே
பதியுமாம் ஈசன் பதம்!


பதந்தனை நாடிடும் பண்புடை மாந்தர்
இதந்தனை நல்கும் இறைவன் - சதமே!
நலமதை நாளும் நமக்கெனக் கொள்ளார்
பலர் பெறக் காண்பார்  பலன்!


பலன்தரும் வாழையே பற்றி அவர்தம்
குலமோர்  பெருமையே கொள்ளும் - மலரின்
மணமாய்ப் பயனுற வாழ்வார்  தமையே
வணங்கும் இகமே மகிழ்ந்து!


மகிழும் எளிய மனமொரு கோவில்
முகியா அருளின் முடிவாய் - அகிலம்
இடையில் களித்திட ஈங்கவர் செப்பும்
கொடையே அன்பெனக் கூறு!


கூற்றும் செயலுமே கொண்டவர் ஒன்றென
ஏற்றம் பெறுவரே என்றுமக் - கூற்றுவன்
தோற்க நயம்படும் தோழமை கண்டவர்
ஏற்கும் அறமே இயைபு!


இயைபும் உறவை இசைந்திட உள்ளம்
தயையினை நல்கும் தகைமை - இணையிலா
மாண்பும் அதுவாம் மனுக்குலம் காத்திடும்
கேண்மையும் அஃதெனக் கேள்!


கேள்புலன் ஞானமும் கேடிலா தன்மையும்
மீள்வகை யாகிட வீணிலே - மூள்கிறக்
கோபமே சூழும் கொடுமை மாறவே
தீபமெனக் கூட்டும் சுடர்!


சுடர்விடும் அன்பு, துளிர்விடும் இன்பம்
தடமெனக் கல்விச் சரமும் - இடரிலா
ஆற்றலும் இல்லாள் அரும்பேர் மழலையென
வற்றிடா தூறும் வளம்!


வளம்பெறும் பூமி , மணந்தரும் சோலை
கிளர்ந்தெழும் தென்றல், கிளைக்கும்; - இளமை
கவிதைத் தமிழதன் காதல் அடடா
செவிபெறும் இன்பமே தேன்!


தேன்தரும் உண்ணத் தெவிட்டாச் சுவையென
வான் புகழ் பெறவே வாழ்வில் - சான்றோர்
செயலென மாந்தரும் தெள்ளியப்  பிணைப்பால்
 உயர்ந்திட  உய்யும் உலகு!

மற்றுமொரு முயற்சியாக ஒவ்வொரு வரிக்குப் பின்னும் முதல் வரி இணைந்து பொருள் தருகிறது.

யாதுமாகி நின்றாய்!

யாதுமாகி நின்றாய் வாழ்வில்!
     யானெனது எண்ணும்  மண்ணில்
சூதுணரா(து) ஈயும் அன்பில்
     சுகந்தனையே தந்த போதில்
தூதுவிடும் கண்கள் தன்னில்
     துலங்குமொரு பாச ஈர்ப்பில்
ஏதுமிலா ஏழை நெஞ்சில்
     இயங்குமொரு உயிரின் மூச்சில்!

திருமதி சிமோன்

ஈரமற்ற நெஞ்சின் ஈனச் செயல்கள்

  
 பிறருக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவோ, எச்சரிக்கவோ அன்றி அவர்களை அச்சுறுத்தவோ, பின் வரும் செயல்களில் ஈடுபடுவோரை தங்கள் உறவுகளை, அன்புக்குரியவர்களை, கடவுள் நம்பிக்கை இருந்தால் அவரை, தங்கள் மனசாட்சியை நினைத்துக் கொண்டு பின் செயல்பட இறைஞ்சுகிறோம்:

  1. 1993 பாம்பே குண்டு வெடிப்பு – 13 தொடர் குண்டுகள் – இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான தீவிரவாத தாக்குதல். – 350 பேர் படுகொலை. 1200 பேர் காயம். 
  1. 1998 கோவை குண்டு வெடிப்பு – 58 பேர் படுகொலை – 200 பேர் காயம்.  12 குண்டுகள் 11 இடங்களில் வைக்கப்பட்டன. 

    1. ஜம்மு காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல் – 338 பேர் படுகொலை. 

    1. டில்லி செங்கோட்டை மீதான 2000 தாக்குதல். – பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முறியடிக்க.

    1. மும்பை வெடி குண்டுத் தாக்குதல் – 54 பேர் படுகொலை  – 244 பேர் காயம்.
    1. 2005 டில்லி வெடி குண்டு தாக்குதல். – 62 பேர் படுகொலை. 210 பேர் காயம்.
    1. வாரணாசி வெடி குண்டு தாக்குதல். – 28 பேர் படுகொலை. 101 பேர் படுகாயம்.
    1. 2006 மும்பை ரயில் வெடிகுண்டு வெடிப்பு – 209 பேர் படுகொலை – 700 பேர் காயம்.
    1. 2008 – ஜெய்ப்பூர் வெடி குண்டு தாக்குதல். 63 பேர் படுகொலை. – 216 பேர் காயம்.
    1. 2008 பெங்களூர் – தொடர் குண்டு வெடிப்பு – 2 பேர் படுகொலை, 20 காயம்.
    1. 2008 அகமதாபாத் வெடி குண்டு தாக்குதல் – 21 வெடி குண்டுகள் – 56 படுகொலை – 200 பேர் காயம்.

    1. 2008 டில்லி வெடி குண்டு தாக்குதல் – 30 படுகொலை – 100 படு காயம்.

    1. 2008 மும்பை தாக்குதல். 164 பேர் படுகொலை. சுமார் 300 பேர் காயம்.
    1. 2010 புனே தாக்குதல். 17 பேர் படுகொலை. சுமார் 60 பேர் காயம்.
    1. 2010 வாரணாசி தாக்குதல். கோயிலில் தாயின் மடியில் அமர்ந்து கொண்டிருந்த 2 வயதுகுழந்தை படுகொலை. அந்தத் தாய் உட்பட 38 பேர் படு காயம்.
    1. 2011 மும்பை தாக்குதல். 26 பேர் படுகொலை. 130  பேர் படு காயம்.
    1. 2011 டில்லி தாக்குதல். 17 பேர் படுகொலை. 76 38 பேர் படு காயம்.
    1. 2013 ஹைதராபாத் தாக்குதல். 17 பேர் படுகொலை. 119 பேர் படு காயம்.
    1. 2013 பாட்னா  வெடிகுண்டு தாக்குதல். 6 பேர் படுகொலை. 85 பேர் படு காயம்.