பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 janvier 2011

எண்ணப் பரிமாற்றம்



பொங்கல் என்பது அறுவடை விழா. புது அரிசியைப் புது பானையில் இட்டுப் பொங்கல் பொங்கும் விழா. நிலத்தின் விளைச்சலுக்கு உறுதுணையாக நின்ற  மாபரனுக்கு முதலிலும் அடுத்ததாக இயற்கைக்கும் மற்றும் கால் நடைகளுக்கும் பாமரன் கை எடுத்துக் கும்பிட்டுத் தன் நன்றியைத் தெரிவிக்கும் நன்னாள்.
உழவர்களின் உழைப்பால் கிடைத்த அரிசியை உண்டு மகிழும் நாம், அவர்களின் தியாகத்துக்கும் வியர்வைக்கும் அங்கீகாரமளித்து, மதித்து அவர்களைப் பெருமைப்படுத்தி அவர்களுக்கு நம் நன்றியைக் கூறும் பொன்னான நாள்.
எந்தப் புராணக் கதைகளின் அடிப்படையிலும் அமையாமல் மத, இன, மொழி பாகுபாடின்றி எல்லோராலும் கொண்டாடப்படும் கருத்தானவிழா இது.
பொங்கலுக்கு அடுத்தநாள் திருவள்ளுவர்நாள் எனக் கொண்டாடப்படுகிறது. அன்றே தமிழர் புத்தாண்டு தொடக்கம்.

புதிதாகப் பூ த்த மலர், பிறந்த குழந்தை  இவை நமக்கு எப்போதும் புத்துணர்ச்சியையும் புதுப்பொலிவையும் உண்டாக்கும். அதுபோல மலர்ந்துள்ள புத்தாண்டில் நல்ல செயல்களில் நம்மை ஈடுபடுத்தி வீறுநடை போட்டு  வெற்றிவாகை சூடி  மகிழ்வோம். 

புத்தாண்டு பிறந்ததும் சிலர் பலபல உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வதுண்டு. இவை நீரின் மேலெழுதிய எழுத்தாக இராமல் கல்லில் செதுக்கியதுபோல அழியாது இருக்கட்டும்.  தம்மை அகழ்வாரைத் தாங்கும் பூமியை ப்போல நம்மை இகழ்வாரையும் மன்னித்து அன்பு செய்யும்  மனித நேயத்தை நம்மிலும் இல்லத்திலும் பயிரிட்டு வளர்த்திட உறுதி எடுத்துச் செயல்படுத்துவோம். பொங்கலுக்கு முன் உழவர்கள் நெற்கதிர்களை சேர்த்து எடுப்பதுபோல இவ்வாண்டின் இறுதியில் நம் உள்ள மெனும் களஞ்சியத்தில் சேர்க்க என்ன இருந்தது என்பதை நாமும் பார்க்க முடியும்.

பால் பொங்கட்டும்
உள்ளங்களில் மகிழ்ச்சி பெருகட்டும்
இல்லங்களில் வளம் கூடட்டும்
எல்லார் மனங்களும்  இறையருளால் பூரி க்கட்டும்
அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

லூசியா  லெபோ

தமிழர் புத்தாண்டு வளர்க! தமிழர் வாழ்க!

என்னினப் பொங்கலை எண்ணும் பொழுதெல்லாம்
பொன்மனப் பூங்கவிதை பூத்தாடும்! - வன்றமிழர்
பன்னலம் காண்க! படித்தாய்க! பைந்தமிழின்
முன்னலம் காண்க முனைந்து!

திருவள்ளுவர் ஆண்டென்று உரக்கச் சொன்னால்
    திகைத்திங்குத் தமிழர் பலர் விழிக்கக் கூடும்!
இரும்..வள்ளுவர் யார்என்று இயம்பக் கூடும்!
    இயக்குநரா? புதுவரவா? எழுதக் கூடும்!
அரும்வள்ளுவர் அந்தமிழின் ஞானி! இந்த
    அகிலத்தின் முதலாசான்! அறத்தின் தந்தை!
பெரும்வள்ளுவர் அலைதவழ் பேற்றைச் சொன்னால்
    பிடிப்பின்றிக் கேட்டிடுவார்! தமிழர் வாழ்க!

தம்நிலையை ஒருநொடியும் எண்ணா! அன்னைத்
    தமிழ்நிலையும் ஒருநொடியும் எண்ணா! மின்னும்
நம்கலையை, நன்னெறியை எண்ணா! போற்றும்
    நல்லாரின் நட்புறவை எண்ணா! அந்தக்
கும்மிருட்டை மிஞ்சுகின்ற இதயம் கொண்டு
    கொழுகொழுத்துத் தந்நலத்தை மட்டும் எண்ணிச்
செம்மணியைச், செல்வத்தை நிலத்தை எல்லாம்
    சேர்த்திடவே அலைந்திடுவார்! தமிழர் வாழ்க!

பள்ளியென்றும், பறையென்றும், ஈனர் என்றும்
    பழித்திடுவார்! அழுத்திடுவார்! மேடை யேறி
அல்லியென்றும், அழகென்றும், அன்பே என்றும்
    அமுதூறப் பேசிடுவார்! பின்னே நின்று
தள்ளியென்றும் சிரித்திடுவார்! எளியோர் வாழ்வைக்
    கிள்ளியென்றும் குலைத்திடுவார்! பிறப்பில் மேல்..கீழ்
புள்ளியென்றும் வைத்திடுவார்! போதும் போதும்
    புடைநற்றப் புளுகெல்லாம்! தமிழர் வாழ்க!

உனக்குள்ளே இருக்கின்ற ஒளியை ஏற்றி
    உண்மையினை உணர்ந்திடுக பணத்தை நெஞ்சக்
கணக்குள்ளே வைத்தோர்தம் கால்கள் தொட்டுக்
    கழுவுவதும், வணங்குவதும் ஏனோ? சின்ன
மனத்துள்ளே பெருங்குப்பை! கழிநீர்  தேக்கம்!
    மலையேறி வணங்குவதால் பயனும் உண்டோ?
இனத்துள்ளே மதம்பேசிப் பிரிந்து நின்றால்
    இழந்திடுவாய்ப்  புகழ்வாழ்வை! தமிழர்  வாழ்க!

சொல்லொன்றும், செயலொன்றும், ஆகா என்றும்
    சொந்தமென இவ்வுலகைச் சுருட்டப் பார்ப்பார்!
உள்ளொன்றும் வெளியொன்றும் வைத்துக் கொண்டே
    உடனிருந்து சதிசெய்வார்! ஆட்சி மன்றில்
சில்லென்று அமர்ந்திடுவார்!  தம்மின் இல்லம்
    செழித்திடவே வழிசமைப்பார்!  போகும் பாதை
கல்லென்றும் முள்ளென்றும் தெரிந்த பின்னும்
    கண்மூடிப் பயணிப்பார்!  தமிழர்  வாழ்க!

கவிஞர்  கி. பாரதிதாசன்
10 01 2011

பொங்க வேண்டும் புகழுடனே!

தங்கத் தமிழைத்  தலைசூடித்
தழைக்கும் வாழ்வைப் பெற்றிடலாம்!
சிங்கத் தமிழர் நாமென்றே
சிலிர்க்கும் உள்ளம் உற்றிடலாம்!
வங்கக் கடலின் வளத்தைப்போல்
வற்றா இன்பம் ஏற்றிடலாம்!
பொங்கும் இந்த நன்னாளில்
புதுமைப் பொங்கல் பொங்கிடலாம்!

கட்டுக் கடங்கா ஆசைகளைக்
காலுக் கடியில் தாம்போட்டுச்
சிட்டுக் குருவி போல்நாமும்
சிறகு விரித்துப் பறந்திடலாம்!
விட்டுக் கொடுத்து வாழ்வதைநாம்
விரும்பி மனத்தில் ஏற்பதனால்
முட்டும் துன்பம் ஏதுமின்றி
முத்தாய்ப் பொங்கல் பொங்கிடலாம்!

நல்லோர் மொழியை நம்மொழியில்
நன்றே அழகாய் மாற்றிவிட்டால்
பல்லோர் கருத்தைப் பண்புடனே
பசுமைத் தமிழில் அறிந்திடலாம்!
வல்லோர்  என்போர் வாழ்வுயர்ந்து
வளரும் வழியைக் காட்டிடுவார்!
இல்லார் என்போர் யாருமின்றி
இனிய பொங்கல் பொங்கிடலாம்!

திறமை பொங்க வேண்டும்! நல்
தெளிவு பொங்க வேண்டும்! சீர்
பெருமை பொங்க வேண்டும்! நற்
பேரும் பொங்க வேண்டும்! உள்
கருமை களைய வேண்டும்! பல்
கலைகள் வளர வேண்டும்! நற்
பொறுமை காக்க வேண்டும்! தைப்
பொங்க வேண்டும் புகழுடனே!

அருணா செல்வம் 03.01.2011

பொங்கலோ பொங்கல்

பெருத்த வருத்தம் பச்சரிசிக்கு! வாசல் தோறும் மாக்கோலமாய் மணந்த காலம் மலை ஏறிவிட்டதே! அதுமட்டுமல்ல, பின்னே? உலை நீரில் உளைந்து கொதி நீரில் குழைந்தாலும் தனக்கெனத் தனிச்சுவை இல்லையே! கூடவே இன்னொரு ஆதங்கம் : புனிதர்களாக வாழாவிடினும்; மனிதர்களாகவாவது வாழக் கூடாதோ, மக்கள்? வீட்டுக்கு வீடு ஏசல், வீதிக்கு வீதி பூசல், நாட்டுக்கு நாடு கலகம். இதுவே இன்றைய உலகம்! இவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தால் என்ன?

மந்திரியாய் வழி சொல்ல முன் வந்தது முந்திரிப் பருப்பு. 'பச்சரிசி அண்ணே, கவலை வேண்டாம்! நல்ல மனம் படைத்தோர் நம்மிடையே உண்டு. அவர்களோடு சேர்ந்து நீயும் நானும் ஒன்று படுவோம், ஒத்துழைப்போம். நம் அனைவரின் தியாகத்தால் உன் குறை தீரும், உனக்குத் தனிச்சுவை கிடைக்கும், தனி மணமும் நீ பெறுவாய். உலகிற்கும் இது நல்ல பாடம்.”

பச்சரிசி முகத்தில் இப்போது மகிழ்ச்சிப் பூக்கள்
முந்திரிப் பருப்பு அனைவரையும் அழைத்தது. நோக்கத்தை உரைத்தது. அவ்வளவுதான், அங்கே  கம,கம வாசத்தோடு எழுவது யார்? அட நம்ம ஏலக்காயேதான்! கனியாத காயானாலும் கனிவோடு அது சொன்னது :
'என்னையே நான் தருகிறேன். இதழ் இதழாய் என்னைக் கிள்ளுங்கள், இழுத்து வைத்து நசுக்குங்கள், பொடியாக்கிக் கொள்ளுங்கள். ஆனாலும் இனிய மணம் எப்போதும் தருவது என் பிறவிக்குணம்”

கேட்டிருந்த பச்சைக் கற்பூரம், ஏலத்தின் மணத்துக்குத் தான் ஈடாகுமா என ஓலமிடவில்லை. பொறாமையே பெறாத வெள்ளை உள்ளம் அல்லவா அதற்கு!
'வெள்ளையான எனக்குப் போய்ப் பச்சை முத்திரை குத்திவிட்டனர். பாதகம் இல்லை. என்னை இடித்துப் பொடியாக்கித் தூவுங்கள். ஏலமுடன் கைகோர்த்து ஏ ஒன் வாசனையைப் பாசமுடன் வீசி வருவேன்” என்று பகர்ந்தது.

'வெள்ளை உடலும் உள்ளமும் கற்பூரத்துக்கு மட்டுமல்ல சொந்தம், எனக்குந்தான்... ”  எதிர்ப்புக் குரல் கேட்டு அனைவருக்கும் திகைப்பு. ஆனால் தான் இல்லாமல் எந்த உணவும் சுவைப்பதே இல்லை எனத் தம்பட்டம் அடிக்காமல் அடக்கியே வாசித்தது உப்பு.
'நண்பர்களே, ஒப்புக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே உரைக்கிறேன். அடியேனையும் சிறிது கலந்துகொள்ளுங்கள். அதிகச் சுவை பயக்க வைப்பேன்”. உப்புக்குப் பலத்த ஆமோதிப்பு.

சுருங்கிய முகத்துடன் நெருங்கி வந்தது உலர்ந்த திராட்சை. குரலில் ஒரு சோகம்.
'என் தளதளப்பும் பளபளப்பும் மறைந்தே போய்விட்டன. ஒட்டி உலர்ந்த உடல் இப்போது எனக்கு. என்னால் பயனேதும் உண்டோ?”

சூதுவாது இல்லாத திராட்சையின் சோகத்துக்கு ஆறுதலாய் முந்திரியின் குரல்.
'அன்பரே, வருத்தம் வேண்டாம்! இறைவனின் படைப்பில் பயனிலாப் பொருளே இல்லை. நீர் மட்டும் என்னோடு சேர்ந்து சிறிதே தியாகம் செய்தால், உம் உடலைச் சற்றே வருத்திக்கொள்ள இசைந்தால்... வாரும் நண்பரே. நீரும் நானும் பசு நெய்யிலே வறுபடுவோம்,  பொன்னிறக் கோலம் நான் பூ ணுவேன், உம் தியாகம் தரும் மகிழ்ச்சியால் உம்முடைய உடல் பூ ரிக்கும்.” உடல் உலர்ந்த திராட்சை முகம் மலர்ந்தது .

கலகலவென்ற சிரிப்பு - வெள்ளைப் பல் தெரிய வெகுளியாய்ச் சிரிக்கும் தேங்காய்தான்.
'தியாகத்துக்கு எப்போதுமே நான் தயார்! துண்டு துண்டாக நறுக்கினாலும் கிறுகிறுவெனத் துருவினாலும் அரைத்துப் பிழிந்தாலும் முகஞ் சுளிக்கவே மாட்டேன். முழுதாகச் சுவை கூட்டும் முப்பாலும் நான் தருவேன்.”

பால் என்ற பெயர் கேட்டுப் பொங்கி எழுந்தது பசும் பால். 'பாலாகவும் பயன் தருவேன். தயிர், மோராகி மத்தினால் மொத்துப் பட்டாலும் மனம் மறுகாமல்  வெண்ணையாக மணம் தருவேன். அந்த வெண்ணையை உருக்கி வைத்தாலும் நெய்யாக நான் மணப்பேன். ஆகவே, உங்களுக்குப் பயன்பட எனக்குச் சம்மதமே.”

'இத்தனை இருந்தும் போதாதே! இனிப்புக்கு இனி என் செய்வோம்” - முந்திரியின் கவலை சந்திக்கு வருமுன்னர், 'யாமிருக்க பயமேன்” எனக் குரல் ஒன்று இனிப்பாக எழுந்தது.

'ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் இனிய சாறாகிப் பயன் தந்தவர் என் தாத்தா செங்கரும்பே. அத் தியாக உள்ளத்தின் வழி வந்த நான், நீங்கள் விரும்பும் அளவு சுவை தர மறுப்பேனா? இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்னை, வேண்டும் அளவும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். என் கடன் இனிய சுவை செய்து கிடப்பதே” வெண்பட்டுச் சர்க்கரையின் பேச்சுக்குப் பலத்த கைதட்டல்.
புது மணமகளாய் மெதுவாகத் தவழ்ந்து வந்த புதுப்பானைக்குள்  இருந்த நீர் களுக்கென நகைத்தது. பின் மெல்லக் கூறியது :
'எனக்கென ஓர் உருவம் இல்லை, தனிச் சுவையும் இல்லை. சார்ந்ததின் வண்ணம் ஆதல் என் இயல்பு. உங்களோடு நான் சேர்வேன், உங்கள் அனைவரையம் ஒன்று சேர்ப்பேன். ஒன்றாகிப் போகலாம், ஓடி வாருங்கள்” என அன்புடன் அழைத்தது. அவற்றைத் தன்னுள் ஈர்த்தது, அரவணைத்தது, கரைத்தது.

அன்பு என்னும் தீக்குள் பானை அகப்பட்டபோது ...
அங்கே, புதுப் பானைக்கு மெல்லச் சூ டேறியது. பச்சரிசிக்குப் புல்லரிப்பு. மெல்ல உளைந்தது. நேரம் செல்லச் செல்லக் குழைந்தது. பொன்னிற முந்திரியும் ஒரு சுற்றுப் பெருத்த திராட்சையும் கைகோர்த்து ஆடி மகிழ்ந்தன. அங்கும் இங்கும் திரிந்தன. தன்னிலை இழந்த சர்க்கரையும் உப்பும் பசும்பாலும் தேங்காய்ப் பாலும் நெய் மணத்தோடு எங்கும் நீக்கமற நிறைந்தன. ஏலமும் கற்பு+ரமும் தம்மை இழந்து கரைந்து  புதுமணம் பரப்பின.
இறுதியாகப்
பானையின் வயிற்றுக்குள் பேதம் மறைந்தது, புதிய மணம் கமழ்ந்தது, புதுச் சுவை நிறைந்தது! நெஞ்சு கொள்ளாமல் பானை நெகிழ்ந்து பொங்கியது! இப்போது தனக்கெனத் தனிச் சுவை கொண்டுவிட்ட பச்சரிசியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை :
'ஒத்துழைப்பும் தியாகமும் இவ்வளவு சுவை தருமா, என்ன?”
தரும் என்பதை ஆமோதிப்பதைப் போலச் சர்க்கரைப்; பொங்கலின் வெண்சிரிப்பு!

'என்னங்க, முழங்கை நெய் வாரச் சர்க்கரைப் பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு மலைத்துப் போயிட்டீங்க...” - அத் 'தை' மகளின் - இல்லை, இல்லை - என் அத்தை மகளின் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்.

'மனிதர்கள் நடுவிலும் இத்தகைய ஒற்றுமை, தியாகம், ஒத்துழைப்பு அமைந்துவிட்டால்... அடடா, உலகமே சர்க்கரைப் பொங்கலாய் இனிக்குமே!”

என் உளறல் அத்தை மகளுக்குப் புரியவில்லை -
உங்களுக்கு?
புதுவை எழில்

சொல் விளையாட்டு

ஒரு சொல் பல பொருள்

பிரெஞ்சு  மொழியில் ஒரே உச்சரிப்புக் கொண்ட பல சொற்கள் உண்டு. உதாரணமாக வேர்   (vert ) ) என்னும் உச்சரிப்புடைய இந்த சொல் பச்சை நிறத்தை குறிக்கும்; இதே உச்சரிப்பை உடைய verre  - கண்ணாடி, vers - திசையில், செய்யுள், ver - புழு என பல பொருட்களை குறித்து நிற்கும். இம்மொழியை கற்கும்போது இதைப் பற்றி விபரமாகச் சொல்லித் தருவார்கள். இதை அறிந்திருந்தால்தான் டிக்டேஷன் எனப்படும் சொல்வது எழுதும்  தேர்வில்  கவனமாக இருக்க முடியும். இதைவிடச் சிறப்பு நம் தமிழில் உண்டு. ஒரே சொல்  பல பொருள் தருவதைப் பற்றி அறிந்து  இருப்பீர்கள். எடுத்துக் காட்டாக 'கல்” என்னும் சொல் மைல்கல் எனப் பெயர் சொல்லாகவும் இளமையில் கல் என்ற இடத்தில் கற்றல் என்னும் வினையாகவும் வந்திருக்கிறது.
'கால்” - உடலின் உறுப்பு, காலாண்டு, கால் பாகம் என அளவையையும் இது  குறிக்கும். இதுபோல உங்களுக்கு தெரிந்த ஒரு சொல் பல பொருள்தரும் சொற்களை எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்களேன். அதனை எங்கள் வலைப்பூவில் (blog) ல்  வெளியிடுகிறோம்.

லெயா  

இணையமெனும் இனியவலை

இ மெயில் - மின்னஞ்சல்

அன்பான விசாரிப்புகளுக்காக,  செய்திகளைப் பரிமாறிக் கொள்ளக்  கடிதங்கள் எழுதப்பட்டன. கடிதம் எழுதுவதே தனிக்கலையாக இருந்த காலம் மாறி நினைத்தவுடன் உறவினருக்கோ நண்பர்களுக்கோ  அனுப்ப வேண்டிய செய்திகள்  சில நொடிகளில் சென்று சேரத்  தற்பொழுது மின்னஞ்சல்  இ-மெயில் பயன்படுகிறது. மின்னஞ்சல் என்பது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். இதன் வழியாகத் தகவல்களை அனுப்புவது எளிதாகிறது. வீட்டில்,  அலுவலகம்,வெளியூர் , வெளிநாடு என்று எங்கிருந்தும் கணிணியில்  பார்க்கவோ பதில் கொடுக்கவோ விளக்கம் பெறவோ  ஏதுவான இலவசமான  ஒரே போஸ்ட்  மின்னஞ்சல்.  எனவே இமெயில் எனப்படும் மின்னஞ்சல் வசதியினைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். வீட்டு விலாசத்தைவிட இ மெயில் முகவரியைக் கொடுப்பவர்கள்தான் அதிகம். இதனால் தனிநபர் உறவு வலுப்படுகிறது, காலவிரயம் தவிர்க்கப்படுகிறது.

வீட்டிற்குள்ளேய குடும்ப உறுப்பினர்கள்  தங்கள் எண்ணப்ரிமாற்றங்களை மின்னஞ்சல் வழியாக நடத்துகிறார்கள் என்றால் வியப்பாகவில்லை!  கணவரின் பிறந்த நாளுக்கு விருந்து தயாரிக்கும் அன்பு மனைவியரே (மின்னஞ்சல் அனுப்ப நீங்கள் அறிந்திருந்தால்) வீட்டைவிட்டு நகராமலே  இணையத்தின் வழியாக அழகிய வாழ்த்து அட்டைகளைத் தேர்ந்தெடுத்து உங்கள் கணவருக்கு அனுப்பி உறவின் பிணைப்பை வலுபடுத்திக் கொள்ளலாம். photo shop  பயன்படுத்த தெரிந்தவர்கள் உங்கள் கற்பனையில் வாழ்த்து தயாரித்துத் தமிழிலேயே மின்னஞ்சல் வழி வாழ்த்து அனுப்பி ஆச்சாரிய ஷாக் கொடுக்கலாம்.

வேறெதற்கெல்லாம் மின்னஞ்சல் பயன்படுகிறது என்ற உங்கள் ஐயம் எனக்குப் புரிகிறது.

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் நண்பர்கள் கிடைப்பார்கள். (முகமறியாத) மின்னஞ்சல்வழி நட்பு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்ட நாங்கள் பிரான்ஸ், சென்னை, சிங்கப்பூர் ,  மலேசியா, துபாய்,  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என்ற பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அனைவரும் நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கோவை செந்தமிழ் மாநாட்டில் கிட்டியது மகிழ்ச்சியான செய்தி.

அலுவலக சம்பந்தமான சுற்றரிக்கைகள் போன்று ஒரே செய்தியைப் பலருக்கும் அனுப்பும் முறையை இது எளிமை படுத்துகிறது. இதனால் கால, பொருள் விரயம் தவிர்க்கப்படுகிறது

பிறந்தநாள், திருமணம்  போன்ற வைபவங்களுக்கு முன் கூட்டியே நமக்கு நேரம் கிடைக்கும்போதே வாழ்த்து தயாரித்துக் குறிப்பிட்ட நாளில் அவரவருக்குச் சேரும்படி அனுப்பும் வசதியும் இதில் உண்டு.

அலுவலகக் கோப்புகள், உங்கள் படைப்புகள், ஒளிப்படங்கள், போன்றவற்றைப் பெறவும் அனுப்பவும் எளிமையான ஆனால் துரிதமான வழி இது.

கருத்துக்  கணிப்பு - மின்னஞ்சல் கையெழுத்து வேட்டை - ஒருவருக்கோ ஒரு கருத்துக்கோ ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவும் பயன்படுத்தபடுகிறது. எடுத்துக்காட்டாக  மதுரைக் கோவிலை உலக அதிசயத்தில் ஒன்றாகச் சேர்த்தல் பற்றி, மாவீரர்களுக்கு மதிப்பளிப்பது உண்மையானால் ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் போன்ற விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்காகத் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி உருவாக்கியுள்ளது தமிழக அரசு. இதனால்  தற்போது 234 சட்ட மன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை முறையிடவும், விளக்கங்களைப் பெறவும் முடிகிறது.

மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்துதல் - என்பது  வணிக ரீதியான அல்லது நிதி திரட்டும் நோக்கங்களுக்காக மக்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு நேரடி சந்தைப்படுத்துதல் முறைமையாகும்.
  ஒரு வணிகர் தமது வாடிக்கையாளர்களுடனான தமது உறவை மேம்படுத்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களைத் தேடுவது, பெறுவது, தங்கள் தொழிலுக்கு விளம்பரம் போடுவது போன்றவையும்  இதில் அடங்கும்.  
இணையம் வழியாக பொருட்களை வாங்க, விற்கவும் மின்னஞ்சல் சேவை இன்றியமையாதது.

இ மெயில் அனுப்ப என்ன தேவை?

அஞ்சல் என்றாலே  அனுப்புபவர், பெறுபவர் முகவரி மிகவும் அவசியம். தகவல் பரிமாற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும்  மின்னஞ்சல் கணக்கு ஒன்று கட்டாயம் தேவை. ஜிமெயில் - gmail,    யாகூமெயில் - yahoo> `hl;nkapy;> AIM மெயில் முதலியன ஊடாக மின்னஞ்சலை அனுப்புதல், பெறுதல் மிகப்பெருமளவில் நடைபெறுகிறது. எனவே இவற்றில் ஏதேனும் ஒன்றிலோ   பலவற்றிலோ நம் மின்னஞ்சல் கணக்கைத் திறந்து கொள்ள வேண்டும். மின்னஞ்சல்கள் தற்போது  உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் ஒருங்குறி (யுனிக்கோட்) முறையைப் பயன்படுத்துகின்றன.
    
மின்னஞ்சல் இரு பாகங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று மின்னஞ்சல் தலைப்பு மற்றது மின்னஞ்சல் உள்ளடக்கம். மின்னஞ்சல் தலைப்பில் கட்டுப்பாட்டுத் தகவல்கள் (அனுப்புபவரின் முகவரி, பெறுபவரின் முகவரி, செய்தியைப் பற்றிய தலைப்பு, கோப்பு சேர்க்கப்பட்டுள்ளதா போன்ற செய்திகள்) உள்ளடங்கியுள்ளன. உள்ளடக்கத்தில் செய்திகள் அடங்கும்.

எப்படிக் கடவுச் சொல்லை  (mot de passe)  தேர்ந்தெடுப்பது? 
 இமெயிலுக்கான கடவுச் சொல்லை (mot de passe)   அடுத்தவர் ஊகிக்க முடியாத வண்ணம் அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பெயர்,  பிறந்த நாள், உங்கள் பட்டப் பெயர், குழந்தைகளின் பெயர்கள், அவர்களின் பிறந்த நாள்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். மேல் நிலை, கீழ் நிலை (majescule, minscule)  எழுத்துகளையும் எண்களையும்  கலந்து அமைத்துக்கொள்ளலாம்.. குறைந்த பட்சம் 8 caractères  இருப்பது அவசியம். அதற்கு மேலும் இருந்தால் நல்லது. கடவுச்சொல் திருடர்களைத் திணறடிக்க இது உதவும். நினைவில் நிற்கக் கூடிய வகையில் கடவுச் சொல்லை அமைப்பது மிகவும் முக்கியம். அப்படியே மறந்துவிட்டால் கூட அதனை மீட்டெடுக்கும்  உதவிகளை உங்களுக்கு  மின்னஞ்சல் திறந்தவர்களைக் கேட்டுப் பெறும் வசதிகளும் உண்டு. கூடுமான வரை ஒவ்வொரு கணக்குக்கும் தனித்தனி கடவுச் சொல் வைத்திருப்பது நல்லது. நல்ல ஞாபகச் சக்தி கொண்டவர்களுக்கே இது சாத்தியம். நிறைய கடவுச் சொல் வைத்திருந்தால் எந்த கணக்குக்கு எந்த  கடவுச் சொல் எனத் தெரியாமல் குழம்பும் நிலை ஏறபடக்கூடும். எனவே விழிப்பாக இருங்கள்.

ஜிமெயில் மின்னஞ்சல் இப்போது தமிழில்!
முன்பெல்லாம் எ-கலப்பை, vd;.n`r;.எம். ரைட்டர் போன்ற மென்பொருட்களின் உதவியுடன்தான் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். ஆனால் தற்பொழுது மேற்குறிப்பிட்ட மென்பொருள்களின் உதவியின்றி   ஜிமெயிலில் மின்னஞ்சல்களை நாம் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பலாம். இதுபோன்று இந்திய மொழிகளான  ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஜிமெயில் வழங்கி வரும்  நல்ல சேவைகளில் இது குறிப்பிட தக்கது.
வளர்ந்துவரும் கணிணி தொழில் நுட்பத்தால் தற்போது  செல்பேசிகளிலும்  மின்னஞ்சலை பார்க்கும், அனுப்பும்; வசதியுள்ளது.

மின்னஞ்சல் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை, ஜிமெயிலில் தமிழில் மின்னஞ்சல் தட்டச்சு செய்வது எப்படி என்பவற்றை அடுத்தமுறை சொல்கிறேன். அதற்குள் மின்னஞ்சல் கணக்கு  இல்லாதவர்கள் உங்கள் கணக்கை ஆரம்பித்துக் கொள்வதுடன் உங்கள் நண்பர்கள் சிலரின் முகவரியையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

லூசியா லெபோ