பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 janvier 2011

எண்ணப் பரிமாற்றம்பொங்கல் என்பது அறுவடை விழா. புது அரிசியைப் புது பானையில் இட்டுப் பொங்கல் பொங்கும் விழா. நிலத்தின் விளைச்சலுக்கு உறுதுணையாக நின்ற  மாபரனுக்கு முதலிலும் அடுத்ததாக இயற்கைக்கும் மற்றும் கால் நடைகளுக்கும் பாமரன் கை எடுத்துக் கும்பிட்டுத் தன் நன்றியைத் தெரிவிக்கும் நன்னாள்.
உழவர்களின் உழைப்பால் கிடைத்த அரிசியை உண்டு மகிழும் நாம், அவர்களின் தியாகத்துக்கும் வியர்வைக்கும் அங்கீகாரமளித்து, மதித்து அவர்களைப் பெருமைப்படுத்தி அவர்களுக்கு நம் நன்றியைக் கூறும் பொன்னான நாள்.
எந்தப் புராணக் கதைகளின் அடிப்படையிலும் அமையாமல் மத, இன, மொழி பாகுபாடின்றி எல்லோராலும் கொண்டாடப்படும் கருத்தானவிழா இது.
பொங்கலுக்கு அடுத்தநாள் திருவள்ளுவர்நாள் எனக் கொண்டாடப்படுகிறது. அன்றே தமிழர் புத்தாண்டு தொடக்கம்.

புதிதாகப் பூ த்த மலர், பிறந்த குழந்தை  இவை நமக்கு எப்போதும் புத்துணர்ச்சியையும் புதுப்பொலிவையும் உண்டாக்கும். அதுபோல மலர்ந்துள்ள புத்தாண்டில் நல்ல செயல்களில் நம்மை ஈடுபடுத்தி வீறுநடை போட்டு  வெற்றிவாகை சூடி  மகிழ்வோம். 

புத்தாண்டு பிறந்ததும் சிலர் பலபல உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வதுண்டு. இவை நீரின் மேலெழுதிய எழுத்தாக இராமல் கல்லில் செதுக்கியதுபோல அழியாது இருக்கட்டும்.  தம்மை அகழ்வாரைத் தாங்கும் பூமியை ப்போல நம்மை இகழ்வாரையும் மன்னித்து அன்பு செய்யும்  மனித நேயத்தை நம்மிலும் இல்லத்திலும் பயிரிட்டு வளர்த்திட உறுதி எடுத்துச் செயல்படுத்துவோம். பொங்கலுக்கு முன் உழவர்கள் நெற்கதிர்களை சேர்த்து எடுப்பதுபோல இவ்வாண்டின் இறுதியில் நம் உள்ள மெனும் களஞ்சியத்தில் சேர்க்க என்ன இருந்தது என்பதை நாமும் பார்க்க முடியும்.

பால் பொங்கட்டும்
உள்ளங்களில் மகிழ்ச்சி பெருகட்டும்
இல்லங்களில் வளம் கூடட்டும்
எல்லார் மனங்களும்  இறையருளால் பூரி க்கட்டும்
அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

லூசியா  லெபோ