பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 janvier 2011

பொங்கலோ பொங்கல்

பெருத்த வருத்தம் பச்சரிசிக்கு! வாசல் தோறும் மாக்கோலமாய் மணந்த காலம் மலை ஏறிவிட்டதே! அதுமட்டுமல்ல, பின்னே? உலை நீரில் உளைந்து கொதி நீரில் குழைந்தாலும் தனக்கெனத் தனிச்சுவை இல்லையே! கூடவே இன்னொரு ஆதங்கம் : புனிதர்களாக வாழாவிடினும்; மனிதர்களாகவாவது வாழக் கூடாதோ, மக்கள்? வீட்டுக்கு வீடு ஏசல், வீதிக்கு வீதி பூசல், நாட்டுக்கு நாடு கலகம். இதுவே இன்றைய உலகம்! இவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தால் என்ன?

மந்திரியாய் வழி சொல்ல முன் வந்தது முந்திரிப் பருப்பு. 'பச்சரிசி அண்ணே, கவலை வேண்டாம்! நல்ல மனம் படைத்தோர் நம்மிடையே உண்டு. அவர்களோடு சேர்ந்து நீயும் நானும் ஒன்று படுவோம், ஒத்துழைப்போம். நம் அனைவரின் தியாகத்தால் உன் குறை தீரும், உனக்குத் தனிச்சுவை கிடைக்கும், தனி மணமும் நீ பெறுவாய். உலகிற்கும் இது நல்ல பாடம்.”

பச்சரிசி முகத்தில் இப்போது மகிழ்ச்சிப் பூக்கள்
முந்திரிப் பருப்பு அனைவரையும் அழைத்தது. நோக்கத்தை உரைத்தது. அவ்வளவுதான், அங்கே  கம,கம வாசத்தோடு எழுவது யார்? அட நம்ம ஏலக்காயேதான்! கனியாத காயானாலும் கனிவோடு அது சொன்னது :
'என்னையே நான் தருகிறேன். இதழ் இதழாய் என்னைக் கிள்ளுங்கள், இழுத்து வைத்து நசுக்குங்கள், பொடியாக்கிக் கொள்ளுங்கள். ஆனாலும் இனிய மணம் எப்போதும் தருவது என் பிறவிக்குணம்”

கேட்டிருந்த பச்சைக் கற்பூரம், ஏலத்தின் மணத்துக்குத் தான் ஈடாகுமா என ஓலமிடவில்லை. பொறாமையே பெறாத வெள்ளை உள்ளம் அல்லவா அதற்கு!
'வெள்ளையான எனக்குப் போய்ப் பச்சை முத்திரை குத்திவிட்டனர். பாதகம் இல்லை. என்னை இடித்துப் பொடியாக்கித் தூவுங்கள். ஏலமுடன் கைகோர்த்து ஏ ஒன் வாசனையைப் பாசமுடன் வீசி வருவேன்” என்று பகர்ந்தது.

'வெள்ளை உடலும் உள்ளமும் கற்பூரத்துக்கு மட்டுமல்ல சொந்தம், எனக்குந்தான்... ”  எதிர்ப்புக் குரல் கேட்டு அனைவருக்கும் திகைப்பு. ஆனால் தான் இல்லாமல் எந்த உணவும் சுவைப்பதே இல்லை எனத் தம்பட்டம் அடிக்காமல் அடக்கியே வாசித்தது உப்பு.
'நண்பர்களே, ஒப்புக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே உரைக்கிறேன். அடியேனையும் சிறிது கலந்துகொள்ளுங்கள். அதிகச் சுவை பயக்க வைப்பேன்”. உப்புக்குப் பலத்த ஆமோதிப்பு.

சுருங்கிய முகத்துடன் நெருங்கி வந்தது உலர்ந்த திராட்சை. குரலில் ஒரு சோகம்.
'என் தளதளப்பும் பளபளப்பும் மறைந்தே போய்விட்டன. ஒட்டி உலர்ந்த உடல் இப்போது எனக்கு. என்னால் பயனேதும் உண்டோ?”

சூதுவாது இல்லாத திராட்சையின் சோகத்துக்கு ஆறுதலாய் முந்திரியின் குரல்.
'அன்பரே, வருத்தம் வேண்டாம்! இறைவனின் படைப்பில் பயனிலாப் பொருளே இல்லை. நீர் மட்டும் என்னோடு சேர்ந்து சிறிதே தியாகம் செய்தால், உம் உடலைச் சற்றே வருத்திக்கொள்ள இசைந்தால்... வாரும் நண்பரே. நீரும் நானும் பசு நெய்யிலே வறுபடுவோம்,  பொன்னிறக் கோலம் நான் பூ ணுவேன், உம் தியாகம் தரும் மகிழ்ச்சியால் உம்முடைய உடல் பூ ரிக்கும்.” உடல் உலர்ந்த திராட்சை முகம் மலர்ந்தது .

கலகலவென்ற சிரிப்பு - வெள்ளைப் பல் தெரிய வெகுளியாய்ச் சிரிக்கும் தேங்காய்தான்.
'தியாகத்துக்கு எப்போதுமே நான் தயார்! துண்டு துண்டாக நறுக்கினாலும் கிறுகிறுவெனத் துருவினாலும் அரைத்துப் பிழிந்தாலும் முகஞ் சுளிக்கவே மாட்டேன். முழுதாகச் சுவை கூட்டும் முப்பாலும் நான் தருவேன்.”

பால் என்ற பெயர் கேட்டுப் பொங்கி எழுந்தது பசும் பால். 'பாலாகவும் பயன் தருவேன். தயிர், மோராகி மத்தினால் மொத்துப் பட்டாலும் மனம் மறுகாமல்  வெண்ணையாக மணம் தருவேன். அந்த வெண்ணையை உருக்கி வைத்தாலும் நெய்யாக நான் மணப்பேன். ஆகவே, உங்களுக்குப் பயன்பட எனக்குச் சம்மதமே.”

'இத்தனை இருந்தும் போதாதே! இனிப்புக்கு இனி என் செய்வோம்” - முந்திரியின் கவலை சந்திக்கு வருமுன்னர், 'யாமிருக்க பயமேன்” எனக் குரல் ஒன்று இனிப்பாக எழுந்தது.

'ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் இனிய சாறாகிப் பயன் தந்தவர் என் தாத்தா செங்கரும்பே. அத் தியாக உள்ளத்தின் வழி வந்த நான், நீங்கள் விரும்பும் அளவு சுவை தர மறுப்பேனா? இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்னை, வேண்டும் அளவும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். என் கடன் இனிய சுவை செய்து கிடப்பதே” வெண்பட்டுச் சர்க்கரையின் பேச்சுக்குப் பலத்த கைதட்டல்.
புது மணமகளாய் மெதுவாகத் தவழ்ந்து வந்த புதுப்பானைக்குள்  இருந்த நீர் களுக்கென நகைத்தது. பின் மெல்லக் கூறியது :
'எனக்கென ஓர் உருவம் இல்லை, தனிச் சுவையும் இல்லை. சார்ந்ததின் வண்ணம் ஆதல் என் இயல்பு. உங்களோடு நான் சேர்வேன், உங்கள் அனைவரையம் ஒன்று சேர்ப்பேன். ஒன்றாகிப் போகலாம், ஓடி வாருங்கள்” என அன்புடன் அழைத்தது. அவற்றைத் தன்னுள் ஈர்த்தது, அரவணைத்தது, கரைத்தது.

அன்பு என்னும் தீக்குள் பானை அகப்பட்டபோது ...
அங்கே, புதுப் பானைக்கு மெல்லச் சூ டேறியது. பச்சரிசிக்குப் புல்லரிப்பு. மெல்ல உளைந்தது. நேரம் செல்லச் செல்லக் குழைந்தது. பொன்னிற முந்திரியும் ஒரு சுற்றுப் பெருத்த திராட்சையும் கைகோர்த்து ஆடி மகிழ்ந்தன. அங்கும் இங்கும் திரிந்தன. தன்னிலை இழந்த சர்க்கரையும் உப்பும் பசும்பாலும் தேங்காய்ப் பாலும் நெய் மணத்தோடு எங்கும் நீக்கமற நிறைந்தன. ஏலமும் கற்பு+ரமும் தம்மை இழந்து கரைந்து  புதுமணம் பரப்பின.
இறுதியாகப்
பானையின் வயிற்றுக்குள் பேதம் மறைந்தது, புதிய மணம் கமழ்ந்தது, புதுச் சுவை நிறைந்தது! நெஞ்சு கொள்ளாமல் பானை நெகிழ்ந்து பொங்கியது! இப்போது தனக்கெனத் தனிச் சுவை கொண்டுவிட்ட பச்சரிசியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை :
'ஒத்துழைப்பும் தியாகமும் இவ்வளவு சுவை தருமா, என்ன?”
தரும் என்பதை ஆமோதிப்பதைப் போலச் சர்க்கரைப்; பொங்கலின் வெண்சிரிப்பு!

'என்னங்க, முழங்கை நெய் வாரச் சர்க்கரைப் பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு மலைத்துப் போயிட்டீங்க...” - அத் 'தை' மகளின் - இல்லை, இல்லை - என் அத்தை மகளின் குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்.

'மனிதர்கள் நடுவிலும் இத்தகைய ஒற்றுமை, தியாகம், ஒத்துழைப்பு அமைந்துவிட்டால்... அடடா, உலகமே சர்க்கரைப் பொங்கலாய் இனிக்குமே!”

என் உளறல் அத்தை மகளுக்குப் புரியவில்லை -
உங்களுக்கு?
புதுவை எழில்