பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 31 juillet 2014

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம்.

கடந்த மாதம் 29/06/14 அன்று நடைபெற்று, உழைப்புக்கேற்ற நிறைவு தந்து, மகிழ்வளித்த "மகளிர் விழா"வில் ஓர் கருத்தரங்கு 'சான்றோர் காட்டிய சமூக நெறி'களை நினைவு கூர்ந்தது.

சமுதாயம் தரத்தில் முன்னேறவும், மனித இனம் முழுமையுறவும், தெய்வீக நிலைக்கு உயரவும் எத்தனையோ மகான்கள் எவ்வளவோ வழிகளைக் காட்டியுள்ளனர். தாங்கள் வாழ்ந்தும், அறிவுரை கூறியும், கண்டித்தும், கதை சொல்லியும் புரிய வைக்க முயன்ற வாழ்க்கை ரகசியத்தை, அதன் நுணுக்கத்தை சற்றே சிந்தித்து, அதை விடக் குறைவாகப் பின்பற்றினாலே மனிதம் புனிதமடைந்து விடும்.

ஆனால் நாம் அந்தப் புனிதர்களின் கொள்கைகளைப் பறக்க விட்டுவிட்டு, அவர்கள் பெயரால் குழுக்களாகப் பிரிந்தும், தாங்களே உயர்ந்தவர் என்று இறுமாந்தும், பிறரைத் துன்புறுத்தியேனும் தன்பாலிழுத்தும், மறுப்போரை விரோதித்தும் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறோம். துரதிர்ஷ்ட வசமாக அவர்கள் சொன்னவற்றைச் சம்பிரதாயமாய் மாற்றி, கருத்தை மறந்து, காரியங்களை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

இதில் பரிதாபம் என்னவென்றால் நாம் கொண்டாடுகிற அத்தனை மகான்களுமே  "அன்பு" என்பதைத்தவிர வேறெதையும் கற்பிக்கவில்லை! அதைப் புரியவைக்கவே அவர்கள் நாளெல்லாம் பாடுபட்டார்கள்; மனதால் வதைப்பட்டார்கள். 

எல்லாரும்,  எப்போதும் இந்த "அன்பு" பற்றிப் பேசுகிறோம். அது எல்லாரையும் சமமாக்கும்;  அனைவரையும் மகிழ்விக்கும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிகிறது. பின் ஏன் அதைக் கடைப்பிடிப்பது மட்டும் "மகான்கள்" தரமாகி விடுகிறது? உண்மையிலேயே "அன்பு" செலுத்துவது என்பது அவ்வளவு கடினமானதா? அதைச் செலுத்தவிடாமல் தடுப்பது எது?

திறந்த மனதோடு யோசித்தால், இதன் காரணம் விளங்கி விடும்.  நம்மிடம் இருக்கும் 'சுயநலம்' தான் சாத்தானாகி நம்மைத் தடுக்கிறது.பிறருக்கு உண்டாகும் மேன்மைகளை, சிறப்புகளை, செழிப்பை நாமும் விரும்புவதில் தவறேதுமில்லை. அவற்றை அடைய முயல்வதில் தான் வாழ்வு சிறக்கவும் முடியும். ஆனால் அவற்றைக் கண்டு மனம் வெதும்பியோ,சுணங்கியோ அசூயை கொள்ளும்போது நமது மனச்சான்று அங்கே விழித்து வேலை செய்ய வேண்டும். அவர்கள் அடையும் இன்பம் நம்மை ஏன் துன்பத்திற்காளாக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். நமது நிலை என்ன, நம்மால் எது செய்ய முடியும், எது முடியாது, நியாயமான முறையில் எதை அடைய  என்ன வழி  என்ற யதார்த்த உண்மையை உள் மனதுக்கு புரிய வைத்துவிட்டால் அதன் சலசலப்பு நின்றுவிடும். நமக்கு இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவோம். அந்த நிறைவு ஏற்பட்டு விட்டால் பிறர் எது செய்தாலும் அது நம்மைப் பாதிக்காது. 

உலக இன்பங்களோ, கொள்கைகளோ, இலட்சியங்களோ  எதுவாக இருப்பினும் நம்மைப் பொறுத்தமட்டில் வரைமுறையுடன் ஸ்திரப்பட்டு விட்டால், அதிலிருந்து நழுவாமல் அவற்றைக் காப்பதில்தான் கவனம் செல்லுமே ஒழிய, பிறரை அவர்களது செயல்களை எடைபோடத் தோன்றாது. எதிர்க்கவோ, அழிக்கவோ துணிய மாட்டோம். காழ்ப்புணர்ச்சி மறைந்து விட்டால், அவர்களையும் வாழ விட்டு, நாமும் வாழும் நிலை உண்டாகும். இதுவே அன்பின் அடித்தளம்.  நாளடைவில் நமக்கிருக்கும் நிறைவு, நம்மிலும் தாழ்ந்தவருக்கு கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தையும், அவர்களும் அதை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தையும் உண்டாக்கும்.  இப்பரந்த நினவு நாளடைவில் தன்னிலும் உயர்ந்தவரைக் காணும் போதும் கிளர்க்கும். இதுவே 'பிறரன்பு'.

"பிறரன்பு" வளர வளர அதற்காக எதையும் தியாகம் செய்யும் மனநிலையை உருவாக்கும். சமூகத்துக்காகத் தன்னையே இழந்த அத்தனைப் பேரும் இப்படித்தான் உயர்ந்தார்கள். இப்படி உயரத்தான் அழைத்தார்கள்!


திருமதி சிமோன்  

பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்?

மரபுக் கவிதையை ரசிப்போர் குறைந்து வருவதும், அதைப் புரிந்து கொள்வோர் அருகி வருவதும் கண்கூடு. தொன்று தொட்டு வரும் கவி அரங்கம் அல்லது கவி மலர் என்கிற பாணியில் மக்களைச் சலிப்புற வைப்பதற்கு பதிலாக அவர்கள் ஊன்றி கவனிக்கும் வகையில் அவற்றை அளித்தால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடே கடந்த இரு வருட மகளிர் விழாவில் முன் வைத்தக் கவிதைகள். சென்ற வருடம் "கேள்வி-பதில்" முறையில் ஒரு கவிஞர் கேட்கவும், மற்றொருவர் விடையளிக்கவும் வைத்த உத்தி நல்ல பயனளித்தது. மக்கள் ஆர்வத்துடன் தாங்களும் பதிலைக் கண்டுபிடிக்கும் சிரத்தையில் கவிதைகளைக் கவனித்தனர். எனவே இவ்வருடம் ஓர் "கவிதைச் சம்பவம்" என பெற்றோர் உறங்கும் மகனை பள்ளி செல்ல எழுப்புவதாக, "பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்?" என அளித்தோம். வழக்கமான அறிவு வளர, பண்பு வெளிப்பட என்கிற காரணங்கள் அன்றி, புதுமை படைத்ததால் கவிதைகள் வரவேற்பு பெற்றன. தந்தை-மகன்-தாய் என்கிற வரிசையில் படிக்கப்பட்டக் கவிதைகள் கீழே:




ஒளியில் உலகம் விழித்தெழுந்தே 
   ஓடி யாடும் வேளையிலே, 
குளித்து, துலங்கும் முகத்தோடு
   கூடும் அறிவின் திறத்தோடு,
எளிய மலரின் அழகோடு 
   ஏற்கும் வாழ்வை வெறுக்கின்றாய்!
துளியும் விரும்பா சோர்வதனால், 
   தூக்கம் தழுவித் தொலைக்கின்றாய்!


உழைப்பின் பயனை உணர்ந்தாலும்,
   ஓய்ந்தே நாளைக் கழிக்கின்றாய்! 
விழைந்தே செயலை ஆற்றாது, 
   வீணில் சோம்பித் திரிகின்றாய்! 
பிழைத்தல் மட்டும் வாழ்வல்ல, 
   பீடை பிடிக்கும் எழுந்து விடு! 
தழைக்கும் மனித குலத்துக்கு, 
   தாயாய் மாறி உழைத்து விடு!

விதைக்கும் காலம் உறங்கிவிட்டால்,
   வதைக்கும் காலம் ஒன்றுவரும்! 
சிதைக்கும் உறுதி தனைக்களைந்து, 
   தீதாம் உறக்கம் கலைத்துவிடு! 
உதைக்கும் வயது கடந்ததனால், 
   உண்மை இங்கே உரைக்கின்றேன். 
பதைக்கும் மனதைப் புரிந்துகொண்டு, 
   பாங்காய் நடந்து மகிழவிடு!

தலைவன் எனவே நீநடந்தால், 
   தொலையும் மக்கள் துன்பமெல்லாம்! 
அலைபோல் ஆடும் வாழ்வினிலே, 
   ஆளும் வழியைக் காட்டிடவே
நிலையாய்  நின்று செயலாற்றும்  
   நீண்ட கடமை உனக்குண்டு! 
விலையாய் நீயும் உன்தூக்கம், 
   விட்டே ஒழித்து புறப்படுக!

                                      - திருமதி சிமோன் 



உனதுத் தூக்கம் சிதறியதால்

     உலகம் தூங்கக் கூடாதா ?

எனதுத் தூக்கம் கெடுத்ததினால்

 என்னப்  பயனை நீர்பெற்றீர் ?

மனது முழுதும் துயர்க்காடு !

 மனித வாழ்வு பெரும்பாடு !

தினமும் மாறும் வாழ்வினிலே

    திறமை மட்டும் போதாது !


உலகம் முழுதும் பார்ப்போமால்

   உண்மை வாழ்வு புரிந்துவிடும் !

நிலவும் உலகில் அமைதியில்லை !

 நிறைய உழைத்தும் பயனில்லை !

அலையும் வாழ்வில் தூக்கமில்லை !

   ஆழ்ந்துப் படித்தால் வேலையில்லை !

எளிதாய் வாழ்ந்து மகிழ்வடைய

    எதற்குத் தேவை சுறுசுறுப்பு ?


வாழும் உலகில் காண்பதெல்லாம்

     வாழும் மனிதர் மேற்தோற்றம் !

பாழும்  நோயில்  வீழ்பவரில்

 பலத்தைக் காட்டும் வீரனுண்டு !

சூழும் வறுமை நிலைக்கோட்டில்

     துடிக்கும் மேதை பலருண்டு !

தாழும் நிலைமை அடைந்தவரில்

      தரத்தால் சிறந்த மனிதருண்டு !


நாட்டில் ஆளும் அமைச்சர்கள்

      நன்றாய் தூங்கி  வாழ்கின்றர் !

காட்டில் வாழும் விலங்கினமும் 

   கவலை யின்றி தூங்குதப்பா ! 

கூட்டில் வாழும் கிளிகூட

    குழந்தைப் போல வாழுதப்பா !

வீட்டில்  வாழும்  எந்நிலைமை …

      விடியும் முன்பே சுப்ரபாதம் ….


 உறக்கம் என்றால் கேவலமா ?

    உரசிப் பார்ப்பீர் நின்தலையை !

பிறக்கும் குழந்தைத் தூங்கிவிட்டால்

  பெரிதாய் மகிழ்வீர் முகம்விரிய !

மறக்கும் நினைவை உடையவரே !

   மறந்துப் போச்சா நின்தூக்கம் ?

அரக்கன் போல மாறிடுவீர் !

   அயர்ந்து நானோத் தூங்கிவிட்டால்.


உருத்திடும் கண்கள் சிவந்திட

    உருவமோ எலும்பாய் மாறிட

வருத்திடும்  வலியில் துடித்திட

 வாவென நோயை அழைக்கவா ?

மருத்துவ மனைக்குச் செல்லவா ?

  மாத்திரை நின்போல் உண்ணவா ?

கருத்துடன்  கேளும் யோசனை !

    காலையில் என்போல் தூங்குவீர் ! 


                                               - திரு சமரசம் 






கல்வியாம் செல்வம் பெற்று , 
   கற்றவன் எனும்பேர் கொண்டாய்! 
வல்வினை மாற்றும் மாய
   வழியினை பிறர்க்குச் சொல்லும்
துல்லிய பொருள் கண்டு, 
   தூய்மையாய் அருள் விளக்கும்
நல்லறி வூட்டும் உன்னை, 
   நற்பயன் ஆகப் பெற்றேன்!


சிரித்திடும் மழலைச் செல்வம், 
   சீர்பெற உந்தன் சேவை
விரித்திடும்  வான எல்லை 
 வரிக்கவோர் துணையும் நீயே! 
பரிந்திடும் அன்பால் போற்றி, 
   பணித்திடு அவர்தம் வேலை! 
தரித்திடும் வருமோர் காலம், 
   தக்கதோர் தலைமை என்றே!

பண்புண்டு, பகிரும் உன்பால் 
   பாசமுண்டு, துடைக்கும் துன்ப 
உண்மையுண்டு, உழைக்கும் மாறா 
   உரமுண்டு! களையாய் உன்னில் 
தண்மதியின், கறைபோல் சோம்பல் 
   தளையுண்டு! அதனை விட்டால் 
கண்மணியே, உன்போல் சுட்டிக் 
   காட்டிடவே யாருண் டிங்கே!


வீணிது கடத்தும் நேரம்,
   விழித்திடு தூக்கம் போதும்!
காண்பது கனவும் அல்ல,
   கேட்பது முறையும் அன்று!
நாணின்று  அம்பே போல,
   நடந்திட விரைந்து செல்க!
மாண்புறு வகையில் பள்ளி
   முதல்வனும் நீயே அன்றோ!


                                  - திருமதி சிமோன் 

பிரெஞ்சு மொழியில் பாரதியின் கண்ணம்மா



  Kannamma - Ma Chérie

Mon tendre oiseau, Kannamma
Mon petit trésor,
En ce monde, tu élèves mon âme
Et me libère de mon sort.


Mon exquise douceur, Kannamma
Aussi vive qu'une peinture à l'or,
Viens à moi,
Que je me délecte de ce miel fort.


Quand tu accours vers moi, Kannamma,
Mon coeur se réjouit,
Quand tu papillonnes ça et là,
Jubile mon esprit.


Quand j'embraase ton front d'ange,
Une fierté m'envahit
Quand les gens font tes louanges,
Mon orgeuil en frémit.


un baiser sur la joue suffit à
Embaumer mon être d'un nectar.
Quand je te serre dans mes bras,
La folie de moi s'empare.


Quand tu cèdes à la tristesse,
Mon coeur se fond dans le souci,
Quand ton front se couvre de plis,
Mon esprit cède à la détresse.


Quand tes larmes jaillissent,
pleines de sang, mes veines surgissent,
Kannamma, prunelle de mes yeux,
Sans toi, je suis aux cieux.


Tes mots enfantins,
Dissippent mes chagrins,
Telle la fleur de jasmin,
A ma rage, mettent fin.


Plus loquace que les écrits,
Les pages ne disent-elles pas 'fin'?
De ton amour tu me nourris,
Et lance un défi au divin.


Je ne connais de pierre précieuse,
Qui ne se porte comme toi,
Et pour mener une vie heureuse,
Je ne possède rien d'autre que toi.


               -Kumutha sowrirajan


இன்றைய அறிமுகம்


கோ. நம்மாழ்வார்


(10 மே 1938 - 30 டிசம்பர் 2013)

தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள இளங்காடுதான் நம்மாழ்வார் பிறந்த ஊர். திருவாளர் கோவிந்தசாமி-திருவாட்டி ரெங்கநாயகி இணையோருக்குப் பிறந்தவர். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம்.
இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றுப்  பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் ஆய்வு உதவியாளராகப்  பணியில் சேர்ந்தார். ஆய்வகங்களில் செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராகக்  குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார்.
பசுமைப் புரட்சி என்றப் பெயரால் வேதியியல் வேளாண்மை தொடங்கபட்ட காலம் அது.. வேளாண்மை வெளி இடுபொருள்களைச் சார்ந்து அதிக செலவு பிடிக்கும் தொழிலாக மாற்றப்பட்டதையும் , வேளாண் நிலம் வேதி உப்புகளை க் கொட்டும் களமாக மாற்றப்பட்டதையும் கண்ட நம்மாழ்வார் இந்த அழிவுப் பணியில் தாமும் பங்குதாரராக இருக்க விரும்பாமல் அப்பணியிலிருந்து வெளியேறினார்.
 இயற்கையோடு இயைந்த, வெளி இடுபொருள்கள் சாராத தற்சார்பான  வேளாண்மையே மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் என்று உணர்ந்த  நம்மாழ்வார், இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வைப்  பரப்பும் பணிக்குத்  தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
சிறந்த ஆளுமை, மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி, தமிழ் மற்றும் ஆங்கிலப்  புலமை, இறுதி வரை நல்ல ஞாபக சக்தி, தான் படித்தவற்றை மற்றவருக்கு எளிதாக விளக்கும் திறமை, தலைமைப்  பண்பு, பகுத்தறிவு இவை அனைத்தும் வாய்க்கப் பெற்றவர். இறுதி வரை மக்களுக்காக வாழ்ந்த உத்தமர்.ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான்.  தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார்.
 இயற்கையோடு இயைந்த உற்பத்திமுறை ,உணவு முறை, வாழ்வியல் முறை ஆகியவை குறித்து நம்மாழ்வார் சிறார்களிடம் உரையாடுகிற முறையே தனிச் சிறப்பானது. சிறார்களுடன் உரையாடுகிற போது மிகச்  சிக்கலான அறிவியல் செய்திகளை மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் அழகுற அவர் சொல்லும் பாங்கு அவருக்கே உரிய தனிச் சிறப்பான ஒன்று. அப்போது அக்குழந்தைகளுக்கு இடையே தாடிவைத்த மூத்த குழந்தை ஒன்றை நாம் பார்க்க முடியும்.
காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.
நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும். வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செலவிட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் எனப்  பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார்.
லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம் குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே. இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றித்  தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.
இரசாயனம்  இல்லா விவசாயம், மருந்தில்லாத மருத்துவம், சுவரில்லாத கல்வி – இவைதான் மாற்றுலகை நிர்ணயிக்க அவர் சொன்ன சூத்திரம்.

நம்மாழ்வார் தன்னைப்பற்றி கூறிய சில செய்திகள்:
"நான் படிப்பு மூலமாக் கத்துக்கிட்டது குறைச்சல். வாசிப்புதான் எனக்கு எல்லாத்தையும் கத்துக்கொடுத்துச்சு. வேலை இல்லாத நேரம்னா என்னைப் புத்தகம் இல்லாம பார்க்க முடியாது.என் வாழ்க்கையை மாத்தின புஸ்தகம்னா ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி,  (Masanabu Fukuoka) மசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ’.என்னைக்  கவர்ந்தவர்கள் சின்ன வயசுல பெரியார், அப்புறம் நான் நானாகக் காரணமான என்னோட குரு பெர்னார்ட், எப்பவும் மகாத்மா காந்தி."

தன் குடும்பத்தை பற்றி மனம் திறந்த பொழுது:
"என் மனைவி சாவித்ரி என்னை முழுமையாப் புரிஞ்சு நிறைவா நடந்துகிட்டவங்க. வாழ்க்கையைத் தொடங்குன கொஞ்ச நாள்லேயே என் போக்கு அவங்களுக்குப் புலப்பட்டுருச்சு. என்னோட வேலைகளும் பாதிக்காம,வீடும் பாதிக்காம இருக்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுத்தோம். வீட்டு நிர்வாகத்தை – அதாவது நெலபுல நிர்வாகத்தையும் சேர்த்துச் சொல்றேன் – அவங்க கையில ஒப்படைச்சுட்டேன். தனிப்பட்ட முறையில எனக்கு இருந்த ஒரே சுமை அதுதான். அதையும் அவங்க சுமந்ததாலதான் என்னால ஓட முடியுது".

நம்மாழ்வார் எதிர்த்துப்  போராடியவை:
  • பூச்சி கொல்லிகள் 
  • யூரியா போன்ற உரங்கள் -நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் - மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று  நிரூபித்துக்காட்டியவர்
  • மீத்தேன் வாயு திட்டம் - இந்தியா
  • மரபணு சோதனைகளும் மாற்றங்களும் - பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவரல்ல. பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் அறிந்தவர். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார்.
  • பி.டி கத்தரிக்காய்க்கு அனுமதி - பி.டி. கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு தன்  நண்பர்களுடன் எதிர்ப்பு தெரிவித்ததுமல்லாமல் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றார்..
  • வெளிநாடுகளிலிருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
  • விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்

  உருவாக்கிய அமைப்புகள்:

  • 1979 ஆம் ஆண்டு “குடும்பம்’’ என்ற தொண்டு அமைப்பை நிறுவினார்.
  •  1990 லிசா – LEISA -Low External Input Sustainable Agriculture  -வெளி இடுபொருள் குறைவாக இருந்தால் உழவாண்மை நிலைத்து நிற்கும் என்பது இதன் பொருள். வளமிழந்த நிலத்திற்கு முதலில் வளத்தை ஏற்படுத்த வேண்டும். பிறகு கால்நடைகளுக்குத்  தேவையானவற்றை அந்த நிலத்தில் உற்பத்தி செய்ய வேண்டும். அப்போது, கால்நடைகளின் உழைப்பும் சாணமும் நிலத்திற்குச் சேரும்.அடுத்து  மனிதனுக்கு தேவையானவற்றை அங்கு உற்பத்தி செய்ய வேண்டும். அதற்குமேல் தான் சந்தைக்கானதை உற்பத்தி செய்ய வேண்டும். இந்த அமைப்பு இப்பொழுது பெரும் அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.
  • 1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
  • இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
  • நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
  • "வானகம்" - இது ஒரு தன்ன்னர்வ மாதிரிப் பண்ணை.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின் பேரில் இயற்கை விவசாயத்தின் இணையில்லா மகத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகத் தொடங்கப்பட்டது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்திருக்கும் இந்தப் பண்ணை சில  வருடங்களுக்கு முன்பு வரை பாறை பூமியாய் தண்ணீர் வளமின்றி வறண்ட பிரதேசமாக இருந்துள்ளது.ஆனால் இயற்கை வழி விவசாய முறை இந்தப் பாறை நிலத்தைப் பல்லுயிர் வாழும் பெரும் கானகமாக மாற்றியுள்ளது.இயற்கை நமக்கு அளிக்கும் எல்லையில்லா வளத்தைச் சரியான முறையில் சேமித்தால் விளையும் அற்புத மாற்றங்களை நம் கண் முன்னே விளக்கிக்  காட்டுகிறது இந்த வானகம்.
  • ‘தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் அனைத்துக்கும் சென்று கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தார்.
  • 60 க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களைத்  தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு மாவட்டத்தில் நிறுவியுள்ளார்.
மேற்கொண்ட நடைபயணங்கள் :
  • 1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக நடைபயணம் மேற்கொண்டார்.       
  • 2002 -இயற்கை உழவாண்மைகாக  ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.       
  • 2003 - பூம்புகார் முதல் கல்லணை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்துப்  பிரச்சாரம்

படைப்புகள்:

  • தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
  • உழவுக்கும் உண்டு வரலாறு - விகடன் வெளியீடு
  • தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
  • நெல்லைக் காப்போம்
  • வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
  • இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
  • நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
  • எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
  • பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
  •  மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
  • களை எடு - கிழக்கு பதிப்பகம்
  • தமிழகப் பத்திரிகைகளில் தொடர்ந்து  எழுதி வந்தவர்.
  • ‘பேரிகை' என்ற இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழையும் அவர் நடத்திவந்தார்.

  பெற்ற விருதுகள்:

  • 2004 இல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இவருக்குச் ’சுற்றுச் சூழல் சுடரொளி' விருது வழங்கி கவுரவித்தது.
  •   2007ல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் கௌரவ முனைவர் பட்டம் தந்தது. 

  • கபித்தலம் தமிழர் பண்பாட்டுப் பொங்கல் விழா விருது ,ஈரோட்டில் மக்கள் சிந்தனையாளர் விருது, பாரதியார் விருது என்று பல விருதுகளைப் பெற்றவர்.
மற்ற பணிகள்:
  • காலம் காலமாக மனிதர்களுக்கு மருந்தாகவும், வேளாண்மையில் பூச்சி விரட்டியாகவும் இன்னும் பல முனைகளில் பயன்படும் பொருளாகவும்  விளங்கிவந்த வேம்பு, கிரேஸ் என்ற வட அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தால் காப்புரிமை என்ற பெயரால் கிரேஸ் நீம் என்று பெயர் சூட்டப்பட்டு அந் நிறுவனத்தின் தனிச் சொத்தாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு அவரவர் தோட்டத்தில் நிற்கும் வேப்பமரம் கூட கிரேஸ் நீம் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட சொத்தாக மாறியது. அதன் இலையையோ பழத்தையோ, கொட்டையையோ, மரப்பட்டையையோ, வேப்ப எண்ணெய்யையோ எதைப் பயன்படுத்தினாலும் கிரேஸ் நிறுவனத்தாருக்கு காப்புத்தொகை கட்ட வேண்டிய சட்ட நிலைமை ஏற்பட்டது.இதனைக் கண்டு நம்மாழ்வாரும் வடநாட்டில் வந்தனாசிவா அம்மையாரும் கொதிதெழுந்தார்கள். நாடெங்கும் இந்த அநீதியை எதிர்க்க மக்களை அணிதிரட்டுவதில் பெருமுயற்சி மேற்கொண்டார்கள்.உலக வர்த்தக அமைப்பு மாநாடு 1998 மே மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற போது அம்மாநாட்டு அரங்கத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து இந்தியக் கொடியை கையிலேந்திக் கொண்டு நம்மாழ் வாரும் வந்தனா சிவாவும் நடத்திய ஆர்ப்பாட்டம் உலகின் கவனத்தை இச்சிக்கலில் ஈர்த்தது. வந்தனா சிவா தொடுத்த வழக்கின் காரணமாக வேம்பு தொடர்பான காப்புரிமை  இரத்து செய்யப்பட்டது.
  • டிசம்பர் 25 2004 - சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்களை  சீரமைக்கும் பணியில்  முக்கிய பங்கேற்றார். 2006 ம் ஆண்டு இந்தனேசியா சென்று சுனாமியினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சீரமைப்பதற்கான பணிகளைச் செய்ய உதவி செய்தார்.
  • பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார்.  மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். இவருடைய ஆலோசனைகளையும் விஞ்ஞானிகளின் கோரிக்கைகளையும்  புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார்.
  • பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்ற நமது பாரம்பரியப் பழங்களையே  பயிரிடுமாறு விவசாயிகளை ஊக்குவிப்பார். தானும் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதை இயன்றவரை தவிர்த்தே வந்தார். நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார். இவரது வழிகாட்டுதலில் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி அந்தோணிசாமி.
  • ஆப்பிரிக்காவின் ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் நெல் நடவு 1960-களில்  உலக அளவில் பிரபலமானது.  ஆனால், விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார்.
  • நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல... மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார். ஈஷா - தனது  குருவாக ஏற்றுக்கொண்டவர் - மரம் நடுதலுக்கு ஆதரவு காட்டியவர். 
  •  1990-களில் ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தது. அப்போது இத்தாலி நாட்டில் நடந்த துரித உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார், இங்கு ஆரம்பித்ததுதான் ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு, பளபளக்கும் பல்பொருள் அங்காடிகளில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியத் தானியங்களான சாமையும் கம்பும் போட்டிபோட முடிகின்றன என்றால், அதற்குக் காரணம் நம்மாழ்வாரே!
  • காவிரிப் பாசனப் பகுதியை பாலைவனமாக்கும் மீத்தேன் எடுக் கும் திட்டத்தைக் கண்டித்து கிராமம் கிராமமாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் கிராமக் குழுக்களை உருவாக்கினார்.
கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.

இயற்கை வேளாண்மைக்கான விதையை தமிழகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் விதைத்து, இன்றைக்கு அவையெல்லாம் இயற்கை வேளாண்மைக்கான பயிற்சிப் பட்டறைகளாக மிளிர்வதுதான் இவரது வாழ்க்கை அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள வெற்றி! -

30.12.2013 - மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்காக பட்டுக்கோட்டை சென்றிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.அவருக்கு வயது 75.

நம்மாழ்வாரின் இறுதிச்சடங்கில் மண்ணை நேசிக்கும் விவசாயிகளின் கண்ணீர் மட்டும் நிறைந்திருக்கவில்லை. ஏராளமான இளைஞர் கூட்டம் தங்கள் ஆசானை இழந்த அழுகுரலுடன் அங்கே நிரம்பியிருந்தது. “எதையாவது செய்யணும், இந்த மண்ணை நேசித்து, சூழலைக் காக்கும் இயக்கத்தில் என் பங்கை நான் எப்படியாவது ஆற்ற வேண்டும்” என அந்த இளைஞர் கூட்டம் அங்கு சூளுரைத்தது.

தொகுப்பு: லூசியா லெபோ

நன்றி: இணையதளம், வலைபூக்கள்

குறிப்பு:
'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப்பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி - பசுமை விகடன் இதழ்தோறும் பேசுகிறார்கள்.படித்துப்  பயன்பெறவும்.


மயக்கும் கள்ளும், முயங்கும் வாழ்வும்

மயக்கம் என்பது என்றுமே மனிதனின் உழைப்பின் வலி மிகுந்த அல்லது வாழ்வின் சுமை நிறைந்த நேரத்தில் தேவைப்படும் ஓர் வடிகாலாக விளங்குகிறது. ஆனால் அந்த மயக்கம் எதனால் ஏற்படுத்தப்படுகிறது என்பதில்தான் மனிதனின் தரமும் நிர்ணயிக்கப்படுகிறது.'கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி' என்றான் பாரதி! சிலருக்கு அவன் பாடலே மயக்கம் தரும். இசையும், இலக்கியமும், ஆடலும், கூடலும் என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மயக்கம்! இவை வாழ்வின் சுவையைக் கூட்டுகின்றன என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை!ஆனால் தற்போது எங்கும் நீக்கமற நிறைந்து வரும் 'மது' மயக்கம் சுவைக்கு பதில் சுமையைக் கூட்டுவதாகவே உள்ளது. 'கள் என்னும் நஞ்சை உண்பவர், தூங்குகிறவர், இறந்தவர்களைப் போன்றவர்களே!' என்கிறார் வள்ளுவர். (துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் கள்உண் பவர்) 

ஒரு சில விபரங்களைக் கண்டால் இதன் கொடுமை நெஞ்சைப் பதற வைக்கிறது: (ஐந்து வருடங்களுக்கு முந்தைய புள்ளிவிவரங்கள்)

 1. 'உலக நல வாழ்வு அமைப்பு' குடிகாரர்களுக்கு 60 வகையான நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது.

2. உலக அளவிலான மரணங்களில் 4% மது அருந்துவதால் வருகிறது.

3. உலகின் மொத்த நோய்க் காரணங்களில் மதுவின் பங்கு 4.5%

4. இந்தியாவில் விபத்தில் காயமடைபவர்களில் 21% குடித்தவர்களாக இருக்கின்றனர்.

5. சென்னையில் மட்டும் தற்கொலை செய்து கொள்பவர்களில் 34% போதையில் இருப்பவர்கள்.

இவற்றை விட வேலை பாதிப்பு, வருமான இழப்பு, வன்முறை, பலாத்காரம் போன்ற இன்ன பிற மதுவால் ஏற்படும் இன்னல்கள் குடும்பங்களையும், சமூகத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. இதனால் குடிப்பவரை விட, அவரைச் சுற்றியுள்ளவர் படும் துன்பமே அதிகம்.

ஒருவருக்கு தன் நலத்தைக் கெடுத்துக் கொள்ள உரிமை இருக்கலாம். ஆனால் ஓர் மகனாக, கணவனாக, ஒரு சமுதாய உறுப்பினராக பிறர் வாழ்வைக் கெடுக்க நிச்சயம் உரிமை இல்லை!

திருமதி சிமோன்