பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 31 octobre 2013

மறை(ற )ந்து போன அடையாளங்கள் :

சுமை தாங்கி :

பண்டைய காலத்தில் பெரும் வணிகர்கள் குதிரை , மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வந்தனர் . சிறு வணிகர்கள் தலையில் பொருட்களை சுமந்து கொண்டு நடை பயணமாகவே செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர் . இப்படி நடை பயணம் செல்லும் வணிகர்களுக்கு , பொது மக்களுக்காக தமிழ் மண்ணில் மக்களால் உதவும் வகையில் அமைக்கப்பட்டதுதான் சுமைதாங்கி கல் .

செங்குத்தாக தரையில் இருந்து 4 அல்லது 5 அடி இடைவெளியில் நிற்குமாறு ஊனப்படுகிறது .நிற்கும் ரெண்டு கற்களுக்கு மேலே தரைக்கு இணையாக ஒரு கல் வைக்கப்படுகிறது .இதுதான் சுமை தாங்கி கல். 




இதன் பயன் என்ன என்று பாத்தால் நடை பயணிகள் ஒரு ஊரில்இருந்து மற்றும் ஒரு ஊருக்கு செல்லும்போது எந்த நேரத்தில் சென்று அடைவோம் என்று தெரியாது . இந்த மாதிரி நேரங்களில் இடையில் ஓய்வு எடுப்பதற்காக இந்த சுமை தாங்கி கற்கள் உதவுகின்றன . யாருடைய உதவியும் இல்லாமல் இந்த சுமை தாங்கி கல்லின் மீது சுமைகள் இறக்கி வைத்து ஓய்வு எடுத்து விட்டு பின்பு சுமைகள் எடுத்து கொண்டு பயணத்தை தொடரலாம் .

மருத்துவ வசதி விருத்தி அடையாத அந்த நாள்களில் பிரசவத்தின் போது கர்ப்பிணித் தாய்மார் மரணிப்பது பொதுவான வேதனையான விடயமாக இருந்தது. இவ்வாறு மரணித்த தாய்மார்களின் ஞாபகங்களாக சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக இருந்தது. இது சுமைதாங்கிபோடுதல் எனப்பட்டது. அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் நீங்கியது  என்பது அர்த்தம் .

வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன.காலமாற்றத்தால் காணாமல் போன அடையாளங்களில் சுமைதாங்கியும் ஒன்று. பிறர் பொருளுக்கு ஆசைப்படத் தயங்காத இந்தக் காலத்தில் சுமை தாங்கிகளைக் கூட திருடிச் சென்று விடுவதாகக் கேள்வி.

பல உறுப்பினர்கள் உள்ள ஒரு பெரிய குடும்பத்தில் ஒருவரே பொருள் ஈட்டுபவராகஇருந்து எல்லோருடைய தேவைகளையும் அவரே கவனித்துக்கொண்டிருந்தால்அவரை அந்தக் குடும்பத்தின் எல்லா சுமைகளையும் தாங்கிக்கொள்ளும் 'சுமைதாங்கி'என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவதும் உண்டு.இத்தகைய வாழும் சுமைதாங்கிகளுக்கு விடிவு-  காலம்தான் சொல்ல வேண்டும் .

திண்ணை:

திண்ணை என்பது, மரபுவழி வீடுகள் கிராமத்து வீடுகளில்  வாயில் கதவுக்கு அருகிலோ அல்லது அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்பாகும்.அங்கு ஒரு ஆள் முதல் பல பேர் உறங்கலாம்.


முன் திண்ணையைத் தாங்கிக் கொண்டு நிற்கும் தேக்கு மரத் தூண்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.


வழவழப்பான தூண்களூம் சிவப்பு சிமெண்ட் தரையும் மரவேலைப்பாடுகளுமாய் உள்ள திண்ணையாகட்டும்.. சிறு மூங்கில் கழி வைத்து கூரையைத் தாங்க செய்து சாணி மெழுகிய திண்ணையாகட்டும்.. அதற்கு ஒரு கவர்ச்சி இருந்தது.. சுவற்றில் சின்ன மாடமும் எப்போதும் ஒரு பானைத்தண்ணீரும் வைத்திருக்கும் வீடுகள் கூட உண்டு.


தாத்தா பாட்டிகளுக்கு வீட்டுக்குள் அடைஞ்சு கிடப்பது பிடிக்காது.திண்ணைதான் அவங்க உலகம்.கிராமங்களில்  வீட்டு திண்ணையில்  தோழிகள் உட்கார்ந்து  தாயம், ஏழாங்கல் விளையாடும் காட்சியையும் பார்க்கலாம்.

 சாலைகளை அண்டியுள்ள வீடுகளின் திண்ணைகள் பொதுவாகச் சாலைகளுக்குத் திறந்தே இருப்பது வழக்கமாதலால் பழங்காலத்தில் தூரப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய இடமாகவும் இவை பயன்பட்டன. திண்ணைங்கறது தனிக் குடும்ப உபயோகம் தவிர்த்து பல சமுதாய நலக் காரணிகளைக் கொண்டு இருந்தக் காலம் அவை. வழிப்போக்கர்களும் தங்கி செல்ல ஓரிடத்தை ஒதுக்கிய பழந்தமிழர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் ....! பழந் தமிழ் இலக்கியங்களில் இதற்கான சான்றுகளைப் பரவலாகக் காணமுடியும்.


இப்படி மற்றவர்களை பற்றியும் யோசித்து அவர்களுக்கான வசதிகள் செய்து தந்து வாழ்ந்த நம்  சமூகம் இன்று மனதிற்கும் உடமைகளுக்கும் சுவர் எழுப்பி குறுகி போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் திண்ணை இருக்கும் பகுதியையும் தடுத்து ஒண்டுகுடித்தனங்களாக  ஆக்கி பணம் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

முற்றம்:

  நாற்சார் வீடு என்பது, நடுவில் கூரையிடப்படாத திறந்த வெளியைச் சுற்றி அறைகளும், கூடங்களும் அமைத்துக் கட்டப்படும் வீடுகளாகும். நடுவிலுள்ள இத் திறந்த வெளி முற்றம்  என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நடுவில் முற்றம் அமையக் கட்டப்படுகின்ற வீடுகள் உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. எனினும் அவற்றிடையே பல விதமான வேறுபாடுகள் உள்ளன. உள் நோக்கிய வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்களிலேயே இத்தகைய வீடுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

முற்றம் - வீட்டின் நடுப்பகுதியில், வெளிச்சமும் காற்றும் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வீட்டின் எல்லா அறைகளையும் இணைப்பதாக இருக்கும். மேற்கூரையை நம் விருப்பத்திற்கேற்ப கம்பிகள் போட்டோ, திறந்த வெளியாகவோ, கண்ணாடி பொருத்தியோ வைத்துக் கொள்ளலாம். கூரை, சாய்வாக இருப்பது நல்லது. வீட்டின் தலைவாசலும், முற்றத்தின் வாயிலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். முற்றத்தில் நடுவில் துளசிமாடம் இருக்கும்.பெரும்பாலும் காரைக்குடி செட்டிநாடு வீடுகளில் விசாலமான முற்றம்,இருக்கும். வீட்டு முற்றம் தான் பிள்ளைகளின் விளையாட்டு மைதானம்.  

                                                                 

தொகுப்பு: லூசியா லெபோ    

         


Aucun commentaire:

Enregistrer un commentaire