பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 26 octobre 2013

வகுப்பறை சிரிப்புகள்






சிரிப்புகளுக்குப் பஞ்சம் இல்லாத இடம் வகுப்பறைகள் என்பது என் சொந்த அனுபவம். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போதும் சரி கல்லூரிகளில் பாடம் நடத்திய போதும் சரி ஏற்பட்ட சிரிப்பு அனுபவம் ஏராளம். அவற்றில் இருந்து ஒரு சில உங்கள் பார்வைக்கு :
 அப்போது எல்லாம்  புகுமுக வகுப்பு இருந்தது. (இதனைச் சிலர் புதுமுக வகுப்பு எனத் தவறாகச் சொல்லுவதும் உண்டு! ; Pre-University class - P.U.C என்று அழைப்பர்). இங்கு எல்லாப் பாடங்களும்  ஆங்கிலத்தில்தான் இருக்கும். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் விளக்கம் தருவார்கள். மெட்ரிகுலேசன் படித்த மாணவர்களுக்குச் சிக்கல் இல்லை ; ஆனால், பாவம் தமிழ் வழி படித்து வந்தவர்கள் சமாளிக்க முடியாமல் திணறிப் போவார்கள்! எங்களில் சிலர் அவர்களுக்குத்  தமிழில்  விளக்கம் சொல்லி உதவி செய்வோம்.

ஒரு முறை நடந்த சம்பவம் இது : Physics பேராசியரியர் திரு சிதம்பரம் (பாலக்காட்டு ஐயர்) மும்முரமாகப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். மாணவர்கள் இருவர் பாடத்தைக் கவனிக்காமல் பேசிக்கொண்டு இருந்தனர்.சினங் கொண்ட பேராசிரியர்
'stand up ' என்று கர்ச்சித்தார். அவர்களுக்குப் புரியாததால் எழுந்து நிற்கவில்லை. அருகில் இருந்த நான் நிமிண்டிவிட்டு 'எந்திரிச்சி நிக்கச் சொல்றாருடா' என்றேன். பிறகுதான் எழுந்து நின்றார்கள். சினம் தலைக்கேறிய அவர் அரைமணி நேரம் மிகக் கடுமையாக விளாசித் தள்ளிவிட்டார். எல்லாம் ஆங்கிலத்தில்தான். இவர்கள் இருவரும் திருதிருவென்று விழித்துக்கொண்டு அவ்வப்போது என்னை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்! முத்தாய்ப்பாகப் பேராசிரியர் 'you understand? ' என்று கடுமையாகக் கேட்டார் . அதற்கும் இவர்கள் முழிக்கவே, தமிழுக்கு மாறிய அவர் 'என்ன, புரிந்ததா?' என்று கேட்டதும் அவர்களுள் ஒருவன்  போட்டானே ஒரு போடு."ஒண்ணுமே புரியல சார்" என்று. அனைவரும் குப்பென்று சிரித்துவிட்டோம். பேராசிரியருக்கும் சிரிப்பு தாளவில்லை. கோபம் அடங்கிய அவர், 'அடப் பாவிங்களா, தொண்ட வறள அரை மணி நேரம் கத்தி இருக்கென் ; இனியும் கத்த தெம்பு இல்லை உக்காருங்கடா " என்று கூற மறுபடி சிரிப்பலை!

இலயோலா கல்லூரியில் எங்களுக்கு 'Heat' பாடம் நடத்திகொண்டு இருந்த  விரிவுரையாளர் திரு ஜோசெப், மாணவர் ஒருவரை விளித்துத்  துறைக்குச் சென்று 'drawer' இல் தான் வைத்திருக்கும் 'duster' - எடுத்துவரப்  பணித்தார். திரும்பி வந்த அவன் "sir, your drawer is locked' என்றான். அவர், "no, no ,I always   keep my drawers open!' என்றார். உடனே நான் அடித்த கமெண்ட் : 'put up your buttons and be civilised , sir!"அவ்வவுதான் வகுப்பு முழுக்க சிரிப்பலைகமெண்ட் அடித்தவன் நான்தான் என்று இன்றுவரை அவருக்குத் தெரியாது.
கல்லூரிக் காலத்தில் விடுதியில் தங்கிப் படித்து வந்ததால் பல நண்பர்கள் எனக்கு இருந்தனர். அவர்களோடு சேர்ந்து (ஆங்கிலத் ) திரைப்படங்கள், மெரினா கடற்கரை எனச் செல்வது உண்டு.  பேருந்துக்குக் காத்திருக்கும் சமயங்களில் ... அங்கு நிற்கும் இளம் பெண்களைப் பார்த்து எங்களுக்குள் சில பரிபாசைகளில் கமெண்ட் பறி மாறிக் கொள்வது வழக்கம் (இளமை ஊஞ்சலாடிய காலங்க அது!). ஒருமுறை மிகவும் குண்டான பெண்ணைப் பார்க்க நேர்ந்தது. அப்போது என்னை சுற்றி இருந்த நண்பர்கள் biology மாணவர்கள். எனவே அவர்களுக்கு மட்டும் புரியும் வகையில் 'டேய் பக்கத்துல பாத்தீங்களா, 'cuccurbita maximaa''நிக்குதுடா! நல்லாத்தான் இருக்கு குண்டா இருந்தாலும்' அப்படின்னு நான்  சொன்ன உடனே பட்டென்று வந்து தாக்கியது அவள் பதில் : "போங்கடா 'moringa oleiferra ' பசங்களா" என்று. ( 'cuccurbita maximaa'  = பூசணிக்காய்  ; 'moringa oleiferra'  = முருங்கக்காய்)  அப்போது எல்லாம் நாங்கள் ஒல்லியாக இருப்போம்! பாவி அவளும்  biology  மாணவி போலும். அப்புறம் ஏன் அங்கே  நிற்கிறோம், அடுத்த stop நோக்கி நகர்ந்து விட்டோம்.

பேராசிரியராகப் பணியாற்றிய காலம் என் வாழ்வின் பொற்காலம் ; என் வகுப்பில் என்றுமே சிரிப்புக்குப் பஞ்சம்  இராது. எங்கள் துறையிலும் அப்படித்தான். எங்கள் தமிழ்த் துறையில் கடைநிலை ஊழியராக இருந்தவர் பெயர் பாவாடைசாமி. பாவாடை என்றுதான் இவரை அனைவரும் அழைப்போம். இதனாலேயே பல சமயம் சிரிப்பலைகள் எழும். எங்கள் கல்லூரி இருபாலாரும் பயிலும் கல்லூரி. மாணவ மாணவிகள் தத்தமக்குப் பிடித்த பேராசிரியர்கள் மேசையைச் சுற்றி நின்று  அளவளாவுவது வழக்கம். அன்றைக்கு ஒரு நாள் என்னைச் சுற்றிப் பாவாடை தாவணிகளின் கூட்டம். கல்லூரி முதல்வருக்கு அவசரமாகக் கடிதம் ஒன்று அனுப்புவதற்காகக் கடைநிலை ஊழியரைத் தேடிய துறைத் தலைவர், "பாவாடை எங்கே, பாவாடை எங்கே? பாவாடையைப் பாத்தீங்களா? " என்று உரத்த குரலில் கூவியவாறே வந்தார். வாயைப் பொத்திக்கொண்டு மாணவிகள் சிரிக்கிறார்கள் அவரோ, "பெஞ்சமின்பாவாடை எங்கே இருந்தாலும் தேடிக்  கண்டுபிடிங்க" என்று உத்தரவு போட்டுவிட்டு நகர எனக்கோ சிரிப்பு தாங்க வில்லைபாவாடையாலே விளைந்த சிரிப்புகள் பல உள .. அவை நாகரிகம் கருதி அவற்றை இங்குக் கூறாமல் விடுக்கிறேன்.
ஒருமுறைகட்டுரை தொடர்பாகப் பேச  மாணவி ஒருவரைத்  துறைக்கு வரச்சொல்லி இருந்தேன். அவர்  தன்  தோழியர்  இருவருடன் வந்து சேர்ந்தார். அவரிடம் கட்டுரை தொடர்பாகச் சொல்ல வேண்டியவற்றைச் சொன்ன பின் "வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடை பெறுவது போல் தோன்றுகிறதே .." என்றேன்.

முதலில் நாணிக்  கோணினாலும் 'ஆமாம்' என்று ஒப்புக்கொண்டார். உடனே தோழியர் அவர் மேல் பாய்ந்தனர்: "ஏண்டி எங்களுக்குக் கூடச் சொல்லலை ; சாருக்கு மட்டும் சொன்னியாக்கும்" என்று. 'அய்யய்யோ, நான் சொல்லலை..." என்று அப்பெண் மறுத்தார். இப்போது அவர்கள் என் மீது பாய்ந்தார்கள், "உங்களுக்கு எப்படி சார் தெரிந்தது?" என்று. "கட்டுரைச் சுவடியில் எழுதி இருந்தார்களே" என்றேன் நான். அவர்களுக்குப் புரியவில்லை. அப்பெண்ணின் கட்டுரைச் சுவடியை எடுத்துக்  காட்டினேன்.
"அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல" என்று சரியாகத் தானே சார் எழுதி இருக்கா! என்று சொன்னார்கள்.
" பெண்களாமறுபடி சரியா கவனிச்சுப் பாருங்க :
"
அறத்தான் வருவதே இன்பம் " என்பதில் 'கரத்தைக் காணோமே ...என்று சொன்னேன். மறுபடி கவனித்த அவர்கள் ஆமாம் சார் 'அத்தான் வருவதே இன்பம்'ன்னு எழுதி இருக்கா! என்று சொல்லி அப்பெண்ணைக் கிண்டல் செய்ய ஒரே நகையொலிதான்.

இப்படி ஒரேழுத்துப் பேதத்தால்  விளைந்த சிரிப்பை மாணவன் ஒருவனின் தேர்வுத் தாளில் கண்டேன். 'தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்'  என்ற பாரதிதாசனின் வரியை அவன் இப்படி எழுதி இருந்தான் :
'தமிழைப் படித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்' என்று!
கட்டுரைச் சுவடிகளில் ஏராளமான நகைச்சுவை முத்துகளைக் காணலாம். மொழிபெயர்ப்பிலும் அப்படியே : 'small irrigational project' என்பதை மாணவன் எப்படி மொழி பெயர்த்து இருந்தான் தெரியுமோ ; இப்படிதான் : 'சிறுநீர் பாசனத் திட்டம்' என்று!
'கெடுக சிந்தை கடிதிவள் துணிவேஎன்னும் ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல், பல்கலைக் கழகப்  பாடத் திட்டத்தில் அமைந்திருந்தது. அக்காலத்தில் கலைஞர் மு  கருணாநிதி அவர்கள் இப்பாடலின் கருத்தை வசன கவிதை வடிவில் உணர்ச்சி மிக்க துடிப்பான  வசனங்களில் எழுதி இருந்தார் ; அதனை நடிகர் திலகம் சிவாசி கணேசன் அவர்கள் தம் சிம்மக் குரலில் ஏற்றம் இறக்கம் நிறைந்த தொனியில் பேசிய காட்சி ஏதோ ஒரு படத்தில் வெளி வந்தது. இவற்றைப் பற்றி எல்லாம் வகுப்பில் விரிவாகக் குறிப்பிட்டு இப்பாடலை மாணவர்களுக்கு விளக்கி இருந்தேன். (இப்பாடலை அறியாதவர்களுக்காகச்  சிறு விளக்கம் : முதல் நாள் போரில் தந்தையைப் பறிகொடுத்த பெண் ஒருத்தி இரண்டாம் நாள்  போரில் கணவனையும் இழந்தாள் ; இன்றைய போருக்கு அனுப்ப வீட்டில் யாரும் இல்லை அவள் வீட்டில் ; அதனால் கவலையுற்ற  அவள்அரச மரத்தடி ஆசானிடம் பாடம் கேட்கச் சென்றிருந்த பாலகனான தன்  ஒரே மகனை அழைத்து வருகிறாள் ; அவனுக்குப் புத்தாடை உடுத்தித்  தலை  வாரி வீர வாளைக் கையிலே கொடுத்துப் "போர்க்  களம் நோக்கிப் போ" என அனுப்பிவைத்தாளாம் ! ).
தேர்விலே மாணவன் என்ன எழுதி இருந்தான் தெரியுமா? சொன்னால் வெட்கக் கேடு ; இருந்தாலும் வேதனையோடு சொல்கிறேன் : அவன் எழுதியதை அப்படியே தருகிறேன். ஆண்டுகள் பல கடந்தாலும் நெஞ்சில் கல்வெட்டடாய்ப்   பதிந்து விட்டதே.

"
முன் நாள் போரில் கணவனை இழந்தபின் தான் பெற்ற மகனை இழுத்து வந்து வாளை எடுத்து தலையைச் சீவிக் கையிலே  கொடுத்து போர்க்களம் போ என்று சொன்னாளாம்! "
இது எப்படி இருக்கு!
அந்த மாணவனை அன்றைக்கு நிற்க வைத்து - கணவனை இழந்த பின் எப்படி அப்பா அவள் பிள்ளை பெற முடியும்! அவள் ஒழுக்கத்துக்கு இழுக்கு தருகிறதே உன் எழுத்து! வாளை எடுத்துத் தலையைச் சீவிய பிறகு பையனைப் போர்க் களத்துக்கு அனுப்புவது எப்படி? -  என வாங்கு வாங்கு என்று வாங்கினேன்- வார்த்தைகளால்தான்.  
அக்காலத்தில் கற்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் தன் பத்திரிகையில் இப்படி எழுதினார் : 'ஒரு நாள் விட்டு ஒருநாள் பிள்ளை பெற்ற பெண்ணுக்கு கீரை கொடுப்பது நல்லது'. அது எப்படி பெண் ஒருத்தி 'ஒரு நாள் விட்டு ஒருநாள் பிள்ளை பெற முடியும் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை. 'பிள்ளை பெற்ற பெண்ணுக்கு'ஒரு நாள் விட்டு ஒருநாள் கீரை கொடுப்பது நல்லது' என எழுதி இருக்க வேண்டும்!
ஆனால் இன்றைக்கும் தாளிகைத் தமிழில் ஊடகத் தமிழில், இணையதளத் தமிழில், ஏன் பேசும் போது கூட இப்படித் தாறுமாறாக எழுதுகிறார்களே, பேசுகிறார்களே, பெரிய எழுத்தளர்கள் உட்பட! அவர்களை எப்படிச் சாடுவது?
வகுப்பறை சிரிப்புகள் அனுமார் வால் போல
நீண்டுகொண்டேதான் போகும்!

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ






Aucun commentaire:

Enregistrer un commentaire