பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 septembre 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                      

அன்புடையீர்,

வணக்கம். மனித வாழ்வின் பெரும் சொத்தே 'நினைவுகள்' தான் என்று சொல்லலாம். இன்பமோ, துன்பமோ அவற்றை அசை போடுவது எந்நேரமும் மனதுக்குள் நடந்து கொண்டே இருக்கிறது.  நினைவுகள், அனுபவங்களின் அந்தந்த நேரத்து உணர்வுகளை மீண்டும் உணர வாய்ப்பளிப்பதால், அதே சுவையை இடம், காலம் கடந்து பெறுகிறோம்.

கற்பனைகள் இன்பந்தருபவைதான். எனினும் அவைகளை வளர்த்துக் கொள்ளும்போதே இது நடக்காமலும் போகலாம் என்ற ஐயத்திற்கு அங்கு இடமுண்டு. சில வேளைகளில் ஓர் அற்ப சுகத்திற்காக நடக்க முடியாததைக்கூட கற்பனை செய்து மகிழலாம். இதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதும். அந்த நிமிடம் தாண்டி அதற்குப்  பொருளுமில்லை, வேலையுமில்லை.

ஆனால் நினைவுகள் அப்படியல்ல. வாழ்வின் ஓர் உன்னத நிமிடத்தை, வினாடியை, அது உள்ளத்தில் ஏற்படுத்திய சிலிர்ப்பை, மகிழ்வை - அப்படியே தன்னை, தன் சூழ்நிலையை மறந்து மீண்டும் உணர்வில், கருத்தில் கொண்டு வந்து அதில்  மூழ்கடிக்கும் திறன் கொண்டது.

அதை இழப்பது என்பதை நினைத்துப் பார்க்கக் கூட பயமாக இருக்கிறது. எந்த நினைவும் இல்லாத ஒரு வெறுமை தவமாகப் போற்றப்படலாம். முற்றும் துறந்த ஞானிகளுக்கு அது எளிதில் வசப்படலாம். ஆனால் ஒரு சாமானியனுக்குத்  தனிமையில் துணை இருப்பது நினைவுகள்தான்.

அதனால்தான் மூளை வளர்ச்சிக் குறைந்தக் குழந்தைகளைக் காணும்போது மனம் பதைக்கிறது. அவர்கள் எதை, எவ்விதம் உணர்கிறார்கள், எதை நினைவில் நிறுத்துகிறார்கள், எது அவர்களைப் பாதிக்கிறது, எதை வெளியில் சொல்ல முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்  என்று புரிந்து கொள்ள முடியாமல் நமது நாகரிக உலகின் புற வளர்ச்சிகள் எல்லாம் தோற்றுப் போகின்றன.

அதை விடக் கொடுமை நன்கு வாழ்ந்து, பெரும் புகழும் பெற்று, சாதனைகள் பல படைத்து, சமூகத்தில் உயர் மட்டத்தில் நாலு பேரை வாழ வைத்தவர்களும், மூப்பென்ற செல்லரித்து, நினைவு மறந்து  நடைப் பிணமாய் உலவுவது!

விஞ்ஞானம் இக்குறைகளைப் போக்கப் போராடிக்கொண்டு தான் இருக்கிறது. மனிதனின் மிக அந்தரங்கமானதும், அத்தியாவசியமானதுமான இந்த மூளையைக்  காக்கும் அறிவியலுக்குத் துணை இருப்பது மனிதக் கடமை என்றே தோன்றுகிறது.

அதைவிட முக்கியம் நமது வட்டத்திற்குள் அவர்கள் இல்லை என்பதற்காக ஒதுக்கி விடாமல் அவர்களை அரவணைத்து, எப்போதும் போல் அன்பும், மதிப்பும் செலுத்துவது!

எப்போது அவர்கள் கவனத்தில்  நம் செயல்கள் பதிகின்றன என்று நாம் அறியாத போதிலும், அவர்களைப் புறக்கணிப்பது மனித நேயத்திற்கு அப்பாற்பட்டது. 

தற்கால உலகம் கல்வி எப்படி நமது அறிவை வளர்ப்பதோடு, மூளையின் செயல்பாட்டையும் காக்க உதவுகிறது என்பதை அறிவுறுத்தி விட்டது. சிந்தனை, வாழ்நாள் முழுதும் கற்பது இவைகள் எல்லாம் ஏதோ அறிவாளிகளுக்கானது என்று ஒதுங்காமல் உடலுக்கும், மனதுக்கும், நினைவுக்கும் வேண்டியவைகளைக் கற்று, கடைப்பிடித்து -  வாழும் வரை எடுத்தப் பிறவியை  பிறருக்குச் சுமையாகாது வாழ்ந்து முடிக்க முயல்வோம்!

  திருமதி சிமோன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire