அன்புடையீர்,
வணக்கம். நாம் எப்பொழுதோ கேட்டு மறக்காத ஒரு கதை. முருகன் மயிலேறி உலகைச் சுற்றப் போய்விட, விநாயகர் பெற்றோரைச் சுற்றி வந்து, பரிசாக மாம்பழத்தைப் பெற்றக் கதை. இது பொதுவாக, உலகை விடப் பெற்றோர் உயர்ந்தவர் என்ற உயரிய நோக்கில் சொல்லப்படுவது. நன்றாக யோசித்துப் பார்த்தால், நடைமுறை வேறாக இருந்தாலும், இந்த உலகில் 'தான்' வாழ கடவுளுக்கு அடுத்தபடி காரணமாய் இருந்த அந்த இருவரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கச் சொல்லும் அற்புதமானக் கதை. ஆனால் சமீபத்தில் இதை வேறோர் கோணத்தில் ஒருவர் கண்டதை அறிய வாய்ப்பேற்பட்டது.
முருகனைப் பொறுத்த மட்டில் அனுபவம் பெறுவது அவரது உலகம் என்றால், வீட்டில் அமைதியான முறையில் சுற்றத்தோடு வாழ்வது விநாயகரின் உலகம் என அவர் விளக்கினார். இதுவும் பார்க்க வேண்டிய ஒரு கோணமே! அதுவும் இன்றையச் சூழலில் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகவும் படுகிறது.
ஒவ்வொருவருடைய ருசியும், ஆசையும், தரமும், லட்சியமும் வெவ்வேறாக உள்ளன. ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ளவோ ஏற்காவிடில் புரிய வைக்கவோ யாருக்கும் பொழுதில்லாத இக்காலக் கட்டத்தில் 'இது என் உலகம்' இதை நான் மதிக்கிறேன்; விரும்புகிறேன். அதே போல் நீ விரும்பும் உன் உலகத்தில் நீ வாழ்ந்து கொள். அதை நான் தடுக்க மாட்டேன்' என வாழ்வது எத்தனை இலகுவாகப் பிரச்சனைகளை எளிதாக்கும்?
'தான்' வாழும் முறைதான் சிறந்தது; தன் மதம் தான் உயர்ந்தது; தன்னை விடச் சிறந்தவன் வேறு யாருமில்லை என்ற மனோபாவம்தான் சிக்கலையே உண்டாக்குகிறது. பிறரை சகித்துக் கொள்ள விடமாட்டேன் என்கிறது. தனித் தீவாக வாழ்ந்தாலும் பரவாயில்லை. பிறருக்கு கெடுதல் செய்யாமல் இருந்தால் போதும் பாராட்டுவோம் என்று நினைக்கும் நிலைக்கு மனித இனம் வந்து விட்டது.
விஞ்ஞானம் இன்னொரு பிரபஞ்சத்தையே இன்னும் சிறிது நாட்களில் நிரூபித்து விடுமாம். அப்படிப்பட்ட பிரம்மாண்டத்தின் ஓர் அணுவான உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் உள்ள ஏதோ ஒரு சிறிய ஊரின் ஒரு சின்னஞ்சிறு தெருவின் சிறுவீட்டில் சிலரின் நடுவே வாழும் வெறும் ஆறடி உயர மனிதனின் சிறுமையைச் சற்றே சிந்தித்தால் 'தான்' என்னும் எண்ணமே அழிந்து போகும்!
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire