பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 29 juillet 2012

இராஜா பண்டிகை

                                                       

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். வாழ்க்கைப்பட்ட  இடமோ பாண்டிச்சேரி.என் கணவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தமிழர்.திருமணமான சில மாதங்களில் பாண்டிச்சேரியில்  இராஜா பண்டிகை வந்தது.காலையில் பாண்டு(band)  வாசிக்கப்பட்டு உள்ளூர் சொல்தாக்கள்(பிரெஞ்சு ராணுவத்தில் வேலை செய்தவர்கள் ) கடற்கரையில் அமைந்துள்ள சிப்பாய்கள் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை  செலுத்தினர்.பாண்டிச்சேரி பொது மருத்துவமனையின் அருகிலுள்ள பூங்கா   கடற்கரை எங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இரவில் வாண வேடிக்கை நடைபெற்றது கண்கொள்ளாக்  காட்சி. இந்தச் சிறப்புகளே  குறைவு . முன்பெல்லாம் அதிக செலவு செய்வார்களாம் இவ்விழாவுக்காக.  ஆமாம்  இராஜாவுக்கும் இந்த விழாவுக்கும் என்ன தொடர்பு?
எந்த இராசாவுக்காக   எதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது  என்று தெரிந்துகொள்ள  மிகுந்த ஆவலுடன் இருந்தேன். நீங்களும்  தானே?!

 மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசர்களை மக்கள் கொண்டாடுவது பொருத்தமானதே. அப்படி இல்லாமல் தங்கள் அரண்மனை ஆடம்பரங்களுக்காக அரசு வருவாயின் பெரும்  பகுதியைச் செலவிட்டு, பிரான்சின்  நிர்வாகப், பொருளாதாரச் சீர்கேடுகளைப்  பல்லாண்டுகளாக நீட்டித்திருந்த (பதினைந்தாம் லூயி,பதினாறாம் லூயி)  மன்னராட்சி முறையை வீழ்த்திய நாளுக்கான கொண்டாட்டம்தான் இது. பிரான்சில் அது நடந்தது 14 07 1789. இந்த நாள் Bastille Day (பஸ்தி நாள்) என்றும் "Fête Nationale"(தேசிய விழா) என்றும் அழைக்கப்படுகிறது. அதன் வரலாறு இதோ:

மன்னர்கள் உறுதியும் திறமையும் அற்றவர்களாகவும் ஆடம்பரத்தில் திளைத்தும் இருந்தனர்.அமைச்சர்களும் அதிகாரிகளும் ஊழல் மிகுந்தவர்களாகவும் நேர்மை அற்றவர்களாகவும் இருந்தனர். வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியது. இதனால்  மக்கள் அதிருப்தி கொண்டனர்.  'ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்' என்ற ராணி மேரி அந்துவானேத்தின் (மன்னர் பதினாறாம் லூயியின் மனைவி) கேலிப் பேச்சு   மக்களின் குமுறலை அதிகரித்தது.  
மேலும் வால்டேர்,ரூசோ , திதரோ,மண்டேச்க்கு முதலான அறிஞர்களின் எழுத்துகள்  மக்களின் போராட்டத்திற்கும்  புரட்சிக்கும் தூண்டுதலாக அமைந்தன.விளைவு   'பஸ்தி '  (Bastille)சிறைச்சாலை தகர்க்கப்பட்டது.
1789 ஜூலை 14 - ஆம் நாள் பல்லாயிரம்  பேர் கொண்ட மக்கள் கூட்டம் Hôtel des Invalides என்ற இடத்தில் அமைந்த படைக்கொட்டிலைச் சூறையாடி  ஆயுதங்களைக் கைப்பற்றியது. அதே போராட்ட உணர்வோடு அடுத்த சில நிமிடங்களில்  அடிமைத் தனத்தின் சின்னமாக திகழ்ந்த 'பஸ்தி '  சிறைச்சாலையைத் தகர்த்தெறிந்தார்கள்.ஒன்றுபட்ட மக்களின் எழுச்சியும் போராட்ட உணர்வும் செயல்பாடுகளும் அடக்குமுறைச் சின்னங்களையும் தகர்த்தெறியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது எனலாம்.இச்சிறை உடைப்பு நிகழ்வு நவீன காலப் பிரெஞ்சு தேசியத்தின்  எழுச்சியாகக் கருதப் பட்டது மல்லாமல் இந்நிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாக வடிவெடுத்து பிரான்ஸ்  குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது.   

 பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி   (monarchie "absolue" ) வீழ்த்தப்பட்டு, நிலப் பிரபுத்துவ , கிறிஸ்தவ அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.பல்லாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள், சமத்துவம், குடியுரிமை, வாழ்வுரிமை ஆகிய அனைத்திற்கும் வித்திட்டது பிரெஞ்சுப் புரட்சியே என்றால் மிகையாகாது. அது மட்டுமல்ல, பிரெஞ்சுப் புரட்சிதான் இவ்வுலகில் உள்ள எல்லா சோசியலிச குடியரசு புரட்சிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளில் குடியரசு அரசாங்கம் அமைவதற்கும் அடித்தளமிட்டது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.    
 
1880 முதல் இந்த நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு  கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிரெஞ்சு இராணுவ அணிவகுப்பு Champs Elysées என்ற அவெனுயுவில் நடைபெறும்.முப்படைகளின் ராணுவ மரியாதையைக் குடியரசுத் தலைவர் தன் சக அமைச்சர்கள் , அழைக்கப்பட்ட விருந்தினார்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்.இதுதான் ஐரோப்பாவில் மிக பழமையும் நீளமுமான அணிவகுப்பாகும்.இந்த அணிவகுப்பின் நேர்முக வருணனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். 1971 ஆம் ஆண்டு அணிவகுப்பில் பெண்கள் முதல் முறையாகப் பங்கேற்றனர்.
1989 - பிரெஞ்சு புரட்சியின் 200 -ஆம் ஆண்டின் நிறைவை முன்னிட்டுப் பல  சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. மார்கரெட் தட்சர், ஜார்ஜ் புஷ், ஹெல்முட் கொஹி போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.
அண்மைய  காலங்களில்  நேச  நாடுகளின் தலைவர்களும்  ராணுவமும்  அணிவகுப்பில் பங்குபெற அழைக்கப்படுகிறார்கள். 1994 -ஆம் ஆண்டு குடியரசு தலைவர் மித்திரன் அவர்களின் அழைப்பை ஏற்று  ஜெர்மன் வீரர்கள் பங்கேற்றனர்.
1999 -இல் மரோக் அரசர் ஹசன் II பங்கேற்றுச் சிறப்பித்தார்.
2005 -இல் பிரேசில் தலைவர் லுலா(Lula) அவர்களும் அந்நாட்டு இசைக்குழுவினர்,  விசேட  விமானப் பிரிவினர்களும் (escadrille de la fumée) சிறப்பு  செய்தனர் .
2007- ஹெலிகாப்ட்டர் உருவாக்கத்தின் 100 -ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது.மேலும் traité de Rome கையொப்பமிட்டதின் 50 -ஆவது ஆண்டின் நினைவாக, 27 ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தவர்கள் குடியரசு தலைவர் சர்கோசி அழைப்பிற்கிணங்கி வந்திருந்தனர்.        

2008 -இல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் மேடையின் முன்பாக பிரான்ஸ், ஐரோப்பியக் கூட்டணி, ஐ.நா.சபை ஆகிய கொடிகளை ஏந்திய வீரர்கள் பராசுடில் இறங்கி மக்களை மகிழ்வித்தது முதல் முறையாகும்.
2009: இந்தியாவுக்குச் சிறப்புக் கவுரவம் அளிக்கப்பட்டது.90 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவ பேண்டு இன்னிசைக் குழுவினர், எழுச்சி பாடல்களை இசைத்தபடி முன் செல்ல இந்தியாவின் முப்படைகளையும் சேர்ந்த 400 வீரர்கள் அணிவகுப்பில் பீடுநடை போட்டனர். இந்த அணிவகுப்பை அதிபர் சர்கோசியுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்  பார்வையிட்டார். பிரான்ஸ் தேசிய தின விழா அணிவகுப்பில் இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
 2010: முன்பு ஆபிரிக்கா கண்டத்தில்  பிரான்சின் வசமிருந்த 13 காலனிகள் பங்கேற்றன.
2011: ( France outre-mer) பிரான்சின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஆனால் பிரான்சுக்கு வெளியில் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் லா மர்செய்ஸ் பாடிச் சிறப்பித்தனர். தீயணைப்புப்   படை உருவாக்கத்தின் இரண்டாம் நூற்றாண்டின் நினைவாக அவர்களால் பல சாகச நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.       

 பிரான்சில் பெரும்பாலும் எல்லா நகரங்களிலும் 13 அல்லது 14 தேதிகளில் வாண வேடிக்கை நடத்தப்படும். மேலும் Bal நடனமும் நடத்தப்படும்.
 இந்த நாளில் சிறு  சிறு குற்றங்களை மன்னிக்கும்  அதிகாரத்தைக்   குடியசரசுத் தலைவருக்குப் பிரெஞ்சு அரசியலமைப்பு  தந்துள்ளது.

"போராட்டமே பொதுமக்களின் திருவிழா" என்ற லெனின் சொற்கள் இங்கு மெய்ப்பிக்கப்பட்டுள்ளன எனலாம். பிரான்சின் புரட்சியாக வெடித்த போராட்டம் மக்களின் கோலாகல விழாவாக நடைபெற்று வருகிறது.

_- லுர்சியா லெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire