பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 26 juin 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                             

அன்புடையீர்,

வணக்கம். வீட்டிலாகட்டும் அன்றி சமூகத்திலாகட்டும் வழி நடத்திச் செல்ல  யாரேனும் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்றாக வேண்டியுள்ளது. அப்படிப் பொறுப்பேற்பவர் தன் மனசாட்சிக்கு விரோதமின்றித் தன் கடமையைச்  செய்வாராயின் அந்த வீடும், சமூகமும் மகிழ்வுடன் முன்னேற்றப் பாதையில் நடை போடும்.

மாறாகஇருந்துவிட்டாலோவிளைவுகளைப்பற்றிச்சொல்லவேண்டுவதில்லை! குடும்பம் சிதைந்து உறவுகள் நசித்துப் போகின்றன..சமூகச் சீரழிவோ நாட்டை, மக்களை , ஏன் எதிர் காலத்தையே பாதித்து விடுகிறது. என்னதான் விழிப்புடன் சட்டமியற்றி, ஏறுமாறாக நடந்தால் தலைமையை மாற்றிவிடலாம் என்கிற சனநாயகம் வேரூன்றி இருந்தாலும், பதவியில் இருக்கும் கொஞ்ச நாட்களிலேயே அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து , பணம் சுரண்டும் வஞ்சகத்தை வேரோடு அழிக்கஇன்னும் எந்த உபாயமும் கண்டுப்பிடிக்கப்பட வில்லை. 

நோய்க் கிருமியைப் போல இந்தத் தலைவர்கள் இரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். அப்பாவிப் பொதுமக்கள் புலம்பியவாறே தங்கள் அன்றாட வாழ்வின் போராட்டத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள் ! எங்கும், ஒரு பக்கம் குழி பறிக்கும் நேர்மை அற்றவர்கள் , இன்னொரு பக்கம் அதில் விழுந்து கிடக்கும் பாதிக்கப் பட்டவர்கள் என இரண்டே வர்க்கம் உருவாகி வருகிறது.

உலகெங்கும் தலைமைப் பீடத்தில் எத்தனைத் தகுதியற்றவர்கள் செங்கோலோட்சி அழிவின் பாதாளத்தில்மக்களை அமிழ்த்தியுள்ளார்களென சற்றே நோக்கினால் மனம் பதைக்கிறது. இதற்கு விடிவே கிடையாதா?!

ஆங்காங்கே ஒரு சில புரட்சிகளும், எதிர்ப்புகளும் தோன்றிப் பயனில்லை ! ஒட்டு மொத்தமாக ஒன்று இவர்கள் தலைமை ஏற்கவே முடியாதபடி "தகுதிகள்" நிர்ணயிக்கப் படவேண்டும். அல்லது குறிப்பிட்டக் காலவரையறைக்குள் அவர்கள் தங்கள் திறமையையும், நேர்மையையும் நிரூபிக்காவிட்டால், அடுத்தத் தலைமையை ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து வைத்து, மாற்றி விட வேண்டும். அப்போதுதான் தங்கள் பதவி தங்கள் நடத்தையைப் பொருத்தே நிலைக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கும். 'நாற்காலியை'ப் பிடித்து விட்டோம், இனி அடுத்தத் தேர்தல் வரை நம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற கர்வம் ஒழியும். எந்த நேரத்திலும் பதவி பறிக்கப்படலாம் என்ற உண்மை அவர்களை நேர்வழியில் நடத்தும்.

இது ஒன்றும் புது சிந்தனை அல்ல. தவறு செய்யும் குழந்தைகளைத் திருத்தக் கண்டிப்புடன் சிலக் கடுமையான முடிவுகளை எடுப்பதில்லையா அதுபோன்று  பணத்தாசையாலும், பதவி மோகத்தாலும் நிலை கெட்டு நடப்போரைக் களைஎடுத்து மக்களை நிம்மதியாக வாழவைக்கும் வழிதான்.

எத்தனையோ விதங்களில் உலகுக்கு வழி காட்டிய இந்தியா , பல தியாகிகளை  அரசியல் வானில் சுடரக் கண்ட இந்தியா, ஓர் அமைதியான உலகைப் படைக்க இந்தத் துறையில் ஏதேனும் செய்யாதா என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு இது !

திருமதி சிமோன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire