பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 30 mai 2012

இன்றைய அறிமுகம் - கவிக்குயில் சரோஜினி



ஆந்திர மாநிலத்தில் ஒரு வங்காள குடும்பத்தில் எட்டுக் குழந்தைகளில்  மூத்த மகளாகப் பிப்.13. 1879 பிறந்தார் சரோஜினி. இவரது தந்தை விஞானியாகவும்  கல்வியாளராகவும் விளங்கிய அகோர்நாத் சடோபத்யாயா.தாய் கவிஞர் வரத  சுந்தரி.  இவருடைய  தந்தை தன் குடும்பத்தினர் ஆங்கிலேயர்கள் போல நாகரீகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது சுற்றத்தார் அனைவரும்  ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கண்டிப்புடன் இருந்தார். இது சரோஜினிக்குப் பிடிக்கவில்லை. முரண்டு பிடித்ததால் ஒரு நாள் முழுவதும் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டார்.பின்னர் ஆங்கிலத்தில் பேச ஒப்புக்கொண்டார். வைராக்கியத்துடன் ஆங்கில மொழியைக் கற்றுக் கவிதைகள் எழுதும் அளவுக்குப்   புலமை பெற்றார்.  

12 வயதில் மெட்ரிக்  பரிட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். உருது, தெலுங்கு, பெர்சியம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச கற்றுக்கொண்டார். தனது  13 -ஆவது வயதில் 1300 வரிகளில் 'ஏரி மங்கை'  என்ற ஆங்கிலக் கவிதையை எழுதினார்.பதினாறு வயதில் லண்டனிலுள்ள கிங்க்ஸ் கல்லூரி மற்றும் கிர்டன் கல்லூரியில் தன் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இங்கிலாந்தில் இருந்தபோது 2000 அடிகள் கொண்ட  நீண்ட கவிதை நாடகமும் கற்பனைக் கதை ஒன்றும் எழுதித் தம் ஆசிரியர்களிடம் காட்டினார். இலக்கணச் சுத்தமான அவருடைய படைப்புகளைக் கண்டு ஆச்சரியம்  கொண்ட அவர்கள், சரோஜினியின் கவிதை வடிக்கும் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தினர். மிகுந்த கற்பனை வளமும், தாள லயமும், இசை வடிவமும் , காதல், பிரிவு, ஏக்கம், இறப்பு, வாழ்வின் அற்புதங்கள் என்று அனைத்து ஆழ்மன உணர்வுகளையும் அழகுக் கவிதைகளாக்கும் வல்லமை பெற்றவரானார்.இந்திய அரசும்கேசரி ஹிந்த்என்னும் சிறப்பு வாய்ந்த பதக்கத்தைக் கொடுத்து அம்மையாரைக் கௌரவித்தது. அலங்கார வார்த்தைகளும் நகைச்சுவையும் ஆனந்தச் சுவையும் பொங்கி வழிந்த அவருடைய கவிதைகளில் பெரும் நாட்டம் கொண்ட அவருடைய ஆசிரியர்   எட்மன்ட் கோஸ் மற்றும் ஆர்தர் சைமன்ஸ் இவர் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர் . அதன் பலனாக, 1905 -ஆம் ஆண்டில், முதல் தொகுப்பான  The Golden  Threshhold(தங்க வாசல்), 1912 இல்   The Bird of Time (காலப்பறவை), The Broken Wing என்ற தொகுப்புகள் மலர்ந்தன. இந்நூல்கள் ஆங்கில சமுதாயத்தினரையும் பெரிதும் கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  இந்திய மக்களின் உள்ளத்து உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்து மேலை நாட்டவர்களுக்கும் விளங்கச் செய்தவர் இவரே. கவிக்குயிலின் பாடல்களில், டெனிசன் , ஷெல்லி ஆகிய ஆங்கில கவிஞர்களின் தாக்கம் இருந்தது.

 17 வயதில் சரோஜினி அவர்கள் டாக்டர் முத்யாலா கோவிந்தராஜுலு அவர்களை சந்தித்து அவர் மீது காதல் கொண்டார்.19 வயதில் தனது படிப்பினை முடித்த பின்னர், ஜாதி விட்டு ஜாதி மேற்கொள்ளப்படும் திருமணங்கள் செல்லாத காலக்கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது. ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி என நான்கு குழந்தைகள் பிறந்தனர். 

1903 ஆம் ஆண்டு  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவாகளுக்கு அவர் நிகழ்த்திய உரையில் 'என் வாழ்கையில் பரந்த தேசிய சகோதரத்துவத்தைக் கடைபிடிக்க முயன்று வருகிறேன்.. . . .    . . . ஒரு முஸ்லிம் நகரத்தில் வளர்ந்தேன், அங்கேயே    மணந்தேன் ஆனால் நான் வங்காளி அல்ல, நான் சென்னைக்காரி அல்ல, நான் ஒரு இந்தியப் பெண். இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்கள். இந்த இரு வகுப்பினரையும் மற்ற பிற வகுப்பினரையும் என்னுடன் பிறந்த சோதரர்களாகவே  கருதுகிறேன், நேசிக்கிறேன், மதிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.      

1903 - 1917 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபாலகிருஷ்ண கோகலே , ரவீந்திரநாத் தாகூர், முகமது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி. ராமசாமி ஐயர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார். கோகலே அவர்கள்தான் சரோஜினியின் மனத்தில் சுதந்திரத் தீயை மூட்டி , எழுச்சியூட்டும் பாடல்களை எழுத வற்புறுத்தினார். சரோஜினி  இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை, தேசியப் பற்று குறித்துப் பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றினார். 1918 -இல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாநில அரசியல் மகாநாட்டிற்குத்    தலைமை வகித்தார். பெண்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்பதிலும் அவர்கள் சமையலறையைவிட்டு வெளியே வரவேண்டும் என்றும் கைம்பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினார்.    ஜூலை 1919 -இல் சரோஜினி அவர்கள் இங்கிலாந்திற்கான ஹோம்ருல் லீக்கின் தூதர் ஆனார். ஓராண்டிற்கு  பிறகு  இந்தியா திரும்பி மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.1924 -ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரசில் பங்கேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவருள்  சரோஜினி ஒருவராகத் திகழ்ந்தார். 1925  -ஆம் ஆண்டு அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்  . இப்பதவிக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே.   1930 -இல் காந்தியும் இவரும் கைது செய்யப்பட்டுப் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பண்டிட் மாளவியா, காந்தி ஆகியோருடன் 1931 -ஆம் ஆண்டில் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார்.அக். 2, 1942  -இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 21 மாதங்கள் சிறையில் இருந்தார்.மகாத்மா அவர்கள்  இவரை 'மிக்கி மவுஸ்' என்று செல்லமாக அழைப்பாராம்.

நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உத்திரப் பிரதேசத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். சுதந்திர இந்தியாவில், ஒரு மாநிலத்தின் கவர்னராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி சரோஜினி  நாயுடுதான்!   அங்குத்  தம் பணியைச் செவ்வனே செய்து பல சிக்கல்களைத் தீர்க்க அரசியல் தலைவர்களுக்குப் பல ஆலோசனைகளை  வழங்கினார்.
1948 -ஆம் ஆண்டு காந்தியடிகள் இன்னுயிர் நீத்தபோது, தாங்கொண்ணா துயரத்துடன்  அன்னாரது அஸ்தியை  திரிவேணி சங்கமத்தில் கரைத்தார்.பின்னர் அம்மையாரின் உடல் நலத்திலும் நலிவு ஏற்பட ஆரம்பித்தது. மார்ச் மாதம் 02 -ஆம் நாள் 1949 -ஆம் ஆண்டு, லக்னோவில் அவர்தம் ஆழ்ந்த உறக்கம் துவங்கியது. 

பெண்குலத்திற்கு வழிகாட்டியாகவும் நல்லதொரு குடும்பத் தலைவியாகவும் தியாகச் சிந்தை கொண்டவராகவும் உலகச் சரித்திரத்தில் நீங்காத இடம் பிடித்தவர் இவர்.   1961 -ஆம் ஆண்டு அவரது மகள் பத்மஜா, வெளியிடப்படாத தனது தாயின் கவிதைகளை The Feather of Dawn என்னும் தலைப்பில் வெளியிட்டார்.

தொகுப்பு: லூசியா லெபோ

1 commentaire: