பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 30 avril 2014

எண்ணப் பரிமாற்றம்




                                   பாரதப் பண்பாட்டின் அவசியம் 
மேற்கத்திய நவீனத்தைப் பின்பற்றுதல் வெறும் உடை, மொழி, நகர்புற வாழ்க்கை மாற்றம் என்பதுடன் அடங்கி விடுவதல்ல. அது ஓர் பாரம்பரியமான இந்தியப்  பண்பாட்டுக்கு முற்றிலும் மாறுபட்டது. 

இந்தியப் பாரம்பரிய பண்பாடு என்பது மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்டது. கணவன், மனைவி குழந்தைகளைக் காக்க வேண்டும், தாய், தான் பெற்ற மகவுக்காக எதையும் செய்ய முன் வர வேண்டும், குழந்தைகள், பெற்றோரைப்  பேண வேண்டும், உறவுகளைப் பலப்படுத்த விட்டுக் கொடுக்க வேண்டும், தன்னலத்தைத் துறந்து பிறருக்காகத் தியாகம் செய்வது போற்றுதலுக்குரியது என்பது போன்ற சிலக் கட்டுப்பாடுகள் வாழ்க்கையை வரைமுறைப் படுத்தின. அவை வலிந்து செய்யப்படாமல் இயல்பான ஒன்றாக இயற்கையாக செயல்படுத்தப்பட்டன. அதனால்தான் கைவிடப்பட்ட முதியோர், அனாதைக் குழந்தை, பாசத்துக்குத் தவிக்கும் தனி நபர்கள் என்ற பரிதாபம் சமூகத்தில் இல்லாதிருந்தது. உறவுகள் பொறுப்பேற்று வலிமை தந்தன. பிள்ளைகளுக்காக சேமிக்க நினைக்காத பாரதப் பெற்றோர் இல்லை. தன் ஆசைகளைக் குடும்பத்திற்காக அடக்கிக் கொள்ளாத பிள்ளைகள் இல்லை. இந்த உறவின் பலம் நாளடைவில் ஒருவர் ஒருவருக்காகச் செய்யும் செயல்களின் பரிமாணத்தை, அதன் அடிப்படையாக இருக்கும் அன்பைப் புரிய வைத்து, பிரச்சனைகளும் தீர்ந்து, அன்பும் கூடியது.

ஒரு பெண் குடும்பத்தின் அடிவேராகக் கருதப்பட்டாள். அவள் பெண்மை, தாய்மை அரணாக நின்று அனைவரையும் அணைத்துச்  செல்லும். அழகின் இருப்பிடமாக, அன்பின் வடிவாக, அமைதியின் களமாக, எல்லோரையும் இணைக்கும் சங்கிலியாக அவள் மென்மை  மேன்மையுற்றது.ஆனால் தனி நபர் சுதந்திரம் மேலை நாடுகளில் பேசப்பட்டு, செயல் படுத்தப்பட்டு, எங்கும் அதன் ஆதிக்கம் பரவி விட்டது.

குழந்தைகளுக்கு பெற்றோர் மீது குற்றம் சாட்ட உரிமை. உரிமைக்கும் ஆதிக்க மனப் போக்குக்கும் பேதம் தெரியாமல் இன்னும் எத்தனையோ பெண்கள் ஆண்களால் அவதிப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பச்சிளம் குழந்தைகள் சில வக்கிரம் பிடித்தவர்களை அடையாளம் காட்ட உரிமை வேண்டும் தான். ஆனால் பெற்றோரே தலையிடக் கூடாது என்று அவர்கள் தம்போக்கில் திரிவதுதானே நடக்கிறது! தங்கள் சுய முடிவு சரியானது என்ற மயக்கத்தில் தவறான பாதைக்குச் செல்வது, உறவுகளைத் துறந்துத் தனிப் பாதை அமைத்துக் கொள்வது என குடும்பம் சிதறுகிறது. இதில் பெரும்பாலும் புனிதம், தியாகம் என்ற சொற்களுக்கு இடமில்லை. 'தான்' 'தனது' இன்பம் மட்டுமே எல்லா நிலைகளிலும் பெரிதாகத் தெரிகிறது. மற்றவர்களுடனான மனத்தொடர்பு இல்லாததால் கடமையும் இல்லாதொழிகிறது. பொறுப்பும் அற்ற சுதந்திரப் பறவைகளாக பணம் இருந்தால் போதும் என்ற மன நிலை வளர்கிறது. எல்லாக் கேடுகளுக்கும் அதுவே அடிப்படையாகிறது.இந்தத் தனி மனிதத் தீவுகள் நாளடைவில் வெறுமையுற்று, மனப் பசுமை குன்றி, வறண்டு போவார்கள்!

குடும்பமென்னும் சோலை மட்டுமே தனி நபர் பாதுகாப்புக்கும், இன்பத்துக்கும் வழிகோல முடியும். இதை உணர்ந்து, உறவுகளில் உண்டாகும் சின்னஞ்சிறு பேதங்களுக்காக உறவையே உதறித் தள்ளாமல், விட்டுக் கொடுத்து வாழ்வின் உண்மை மதிப்புகளை அறிய முற்படுவோம்.

திருமதி சிமோன்  


Aucun commentaire:

Enregistrer un commentaire