பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 30 novembre 2014

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். தனிமை என்பது மிகக் கொடுமையானது என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே பலர் வெளியே சுற்றுவதும், புடை  சூழ இருப்பதும் பாதுகாப்பானது, தனிமையிலிருந்து காக்கும் வேலி  என எண்ணுகின்றனர். நோயுற்றிருக்கும் போதோ, அன்றி தானியங்க இயலா நிலையிலோ நிச்சயம் யார் உதவியேனும் அவசியம்தான். மேலும் மனித வாழ்வே இன்னொருவர் உதவி இன்றி நகர்த்த இயலாதது. அதனால் இந்தத் தனிமை பற்றி சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால் "மனம்" பெரும்பாலும் தனித்து இயங்குகிறது. தனக்கே உரிய எண்ணங்கள், கனவுகள், அனுபவங்கள், விருப்பு-வெறுப்புகள், இவை பற்றிய அலசல்கள் என அது ஓர் தனி உலகம். இதன் வெளிப்பாடுதான் பலர் நடுவிலும் சில வேளைகளில் ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுதல். உணர்வுகள் அதன் வயப்பட்டு விடுவதால் பிறரது உடனிருப்பு கூட அவசியமற்றதாகவோ, இடஞ்சலாகவோ தோன்றிவிடுகிறது. அப்படியானால் பிறரை நாம் நமது வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறோமா?!

சுயநலம் எனக் கொள்ளா விடினும், "நாம்" என்ற உணர்வுக்கு "பிறர்" என்கிற பந்தம் எந்த அளவு அவசியம், "தன்னிருப்பு" என்பதற்கு "இரண்டாமவர்" தேவையா என்ற விளக்கம் இந்தத் "தனிமை" பற்றிய பயத்துக்கு உரிய பதிலாக அமையும். கூடி வாழ்ந்த காலத்தில் சண்டை சச்சரவுகள் இருந்தபோதும், மனித நேயம் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ள வைத்தது. இன்று வாழ்க்கை முறைகளாலும், மன பேதங்களாலும், கடமை உணர்வு குன்றியதாலும் பலர், குறிப்பாகக் குழந்தைகளை ஆளாக்கியப்  பிறகு வரும் நாட்களில்  பெற்றோர் தனிமைப் பட்டுப் போகிறார்கள்.

எந்த வயதில், என்னக் காரணத்துக்காக இருந்தாலும் "தனிமை" வயதால் மாறி விடப் போவதில்லை. "தனியாக வந்தோம்-தனியாகவே செல்வோம். இதில் உறவென்ன, பகை என்ன!" என்று வேதாந்தம் உண்மையைத்தான் அறைந்தாற்போல் உரைக்கிறது. இன்பம் என்றாலும், துன்பம் என்றாலும் ஒவ்வொருவருடைய மன நிலைக்கு ஏற்றாற்போல் "அனுபவித்தல்" தனியே, தனக்குள் மட்டுமே நடக்க முடியும். 'தலை வலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் தெரியும்' என்பது கூட நம் உணர்வுகளை எவ்வகையிலும், யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது என்பதையே உணர்த்துகிறது.

எனவே "தனிமை" கண்டு பயந்து போவதிலோ, புலம்புவதிலோ எந்த அர்த்தமும் இல்லை. நம் மனதை, எண்ணங்களை, உணர்வுகளை சமன்படுத்த அறிந்து கொண்டால் போதும். ' துக்கத்தில் மூழ்குவது தன்  புண்ணைத் தானே சொரிந்து கொள்வது போன்றது' என்று அபத்தமாகக் கூறுவார்கள். பொங்கி வரும் உணர்வலைகளில் துயரமும் இருக்கும். நிறைவும் இருக்கும். வாழ்வே இரண்டும் கலந்ததாக இருக்கும் போது, ஒன்றை மட்டுமே நினைவில் கொள்வது இயலாதது. வருந்த நேர்ந்தால், அதற்கேற்ற வடிகாலும் உண்டு. கண்ணீரே ஒரு வகை விடுதலை தான்.

துயரப்படும் மனதுக்கு உரமூட்டவும், நம்பிக்கை இழந்த நிலையில் பிடிப்பேற்படுத்தவும் அறிந்து கொள்ள வேண்டும். தனக்குத் தானே இயலாவிட்டால்  புத்தகங்களோ, பாடல்களோ உணர்வுகளை மாற்றலாம். செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் இயங்கினால் தன்னை மறக்கலாம். வாழ்வின் உண்மையான "நிலையாமை" புரிந்து விட்டாலே அமைதி உண்டாகி விடும். இறை நம்பிக்கை இதற்கு வலுவூட்டும். பாரத்தை "சரணாகதி" அடைந்து விட்டால் இறக்கி விடலாம். பிறகு "தனிமை" "இனிமை" ஆகவே மாறிவிடும்!

திருமதி சிமோன்


Aucun commentaire:

Enregistrer un commentaire