பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 31 décembre 2014

சங்க இலக்கியங்களில் பண்டமாற்று


சங்க காலச் சமுதாயத்தில் நிலப் பிரிவுகளுக்கு ஏற்ற தொழில் முறைகள் மாறு பட்டாலும் ஒரு நிலத்தாருக்கும் மற்றொரு நிலத்தாருக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்தது.  ஒரு நிலத்தில் கிடைக்கும் பொருள்களை ஏனைய நிலத்திற்குக் கொண்டு சென்று பண்டமாற்று முறையில் வணிகம் செய்து வந்தனர். அதனால் பண்டைக்காலத்தில் உணவு, பொருள், மொழி ஆகியவற்றில் பரிமாற்றம் ஏற்பட்டது.  கைத்தொழிலாளர் தாங்கள் உருவாக்கிய சட்டி பானைபாய்கூடைமரப்பெட்டிவிசிறி  முதலான பொருள்களைத் தந்து மாற்றுப் பொருள் வாங்கினர்உடலுழைப்பைத் தந்து அதற்கு ஈடாய் ஏதாவது பொருள் பெற்றனர். அதிக விலையுள்ள பொருள்களை மட்டுமே தேவை கருதி காசு கொடுத்து வாங்கியுள்ளனர்.அன்றைய தமிழகத்தின் பண்டமாற்று முறையினை சங்க இலக்கியங்கள் தெளிவாகப் பதிவு செய்துள்ளன.

ஓர் இடையன் பாலைக் கொடுத்து அதற்கு ஈடாய்த் தானியத்தைப் பெற்றுக்கொண்டதை முதுகூத்தனாரின் குறுந்தொகைச் செய்யுள் விளக்குகிறது.
 பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்  (குறுந்தொகை 221)

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
( நற்றிணை - 183)
மருத நிலத்தைச் சேர்ந்த உப்பு வணிகர்கள் தம்முடைய நாட்டின் வெண்ணெல்லைக் கொடுத்து, நெய்தல் நிலப் பகுதியின் உப்பைப் பெற்று வந்து விலை கூறுகின்றனராம். கொள்ளை என்கிற சொல் கொண்டும் கொடுத்தும்  செய்யப்படுகிற வணிகத்தின் அதாவது பண்டமாற்று அடிப்படையில் உருவான சொல்லாகும் என்பதை அறியமுடிகிறது.

பண்டமாற்று முறையில் நடைபெற்ற உள்நாட்டு வணிகத்தில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டதற்கான குறிப்புகள் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன
ஊர்த் தெருக்களில் உப்பு விற்ற உமணப் பெண் நெல்லுக்கு அதை மாற்றியதை அம்மூவனார் காட்சிப்படுத்துகிறார்.இதோ அந்த பாடல்:

கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரி விலைமாறு கூறலின்.  (அகம்.140-5-8)

'நெல்லின் நேரே வெண்கல் உப்பு ' - நெல்லின் அளவுக்கே உப்பும் விற்கப்பட்டது என்பதனால் உப்பு எவ்வளவு உயர்ந்த பொருளாக மதிக்கப்பட்டது என்பது விளங்கும். சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகு இருந்தன என்று கல்வெட்டுக்களில் இருந்து தெரிகிறது.
கீழ் வரும் பாடலும் இதை உறுதிப்படுத்துகிறது எனலாம்.
நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீ ரோஎனச் சேரிதொறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி அமைத்தோ ளாய்நின் (அகம் 390)

ஒருத்தி நெல்லை ஏற்காமல் கழற்சிக் காய் அளவிலான முத்துக்களையும் ஆபரணங்களையும் பண்டமாற்றுப் பெறுகிறாள். இதனைப் பாடல் 126 -ஆல் அறியலாம்.
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி

யவனர் தம் அழகான வேலைப்பாடு அமைந்த மரக்கலங்களில் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, மிளகை ஏற்றிச் செல்லும் செய்தியை  அகநானூற்றின் 149 -ஆவது பாடல் விவரிக்கிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி
(கறி = மிளகு)

வேடர் தேனையும், கிழங்கையும் கொணர்ந்து மதுபானக் கடையில் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வறுத்த மீன் இறைச்சியையும், மதுவையும் வாங்கி உண்டதையும், உழவர் கரும்பையும் அவலையும் கொண்டுவந்து கொடுத்து, அதற்குப் பதிலாக வறுத்த மான் இறைச்சியையும், மதுவையும் பெற்று மகிழ்ந்ததையும் முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுபடையில்  கூறியுள்ளார்.

தேனெய் யடு கிழங்கு மாறியோர்
மீனெய் யடு நறவு மறுகவும் .
தீங் கரும்போ டவல் வகுத்தோர்
மான் குறையடு மது மறுகவும்

கொல்லிமலையில் காந்தள் மிகுந்த காட்டில் உள்ள சிறுகுடி மக்கள் அருவியைச் சார்ந்திருக்கும் நிலத்தில் ஐவன நெல் விதைத்து உழவு தொழில் செய்து வந்தனர். அவர்கள் பசியால் வாடும் நிலை வரின் தம் வசமிருந்த யானைத் தந்தங்களைத் தானியத்திற்கு மாற்றி, சோறு சமைத்து உண்டனர் என்பதை
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென
கடுங்கண் வேழத்துக் கோடு உண்ணும் (குறுந்தொகை - 100)
கபிலர் பாடலால் அறியமுடிகிறது.

சினம் மிக்க வேட்டை நாய்களையுடைய வேடன், மான் தசை வைக்கப்பட்ட 
ஓலையால் புனைந்த பெட்டியும் இடைச்சியர் குடம் நிறைய தயிரும் கொண்டுவந்து கொடுக்க, ஏரால் உழுதுண்டு வாழும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர் அவற்றை பெற்றுக்கொண்டு வைக்கோலும் பதறும் களைந்த தூய்மையான நெல்லை மாற்றாக கொடுப்பார்கள் என கோவூர்கிழார் புறநானூற்றில் பாடியுள்ளார் (பாடல் 33)

கான் உரை வாழ்க்கைக் கதநாய், வேடுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப , உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்
                                
சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு மாறி வர உப்பங்கழனிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம் என்று தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது – கல்லாடனார் பாடல்(குறுந்தொகை 269)(பெரும்பாணாற்றுப்படை அடிகள் 164 முதல் 166 வரை .)        
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ

என்பதால் நெய் விற்ற ஆயமகள் பொற்காசுகளை வாங்காமல் கன்றோடு கூடிய பால் எருமைகளை வாங்கிய செய்தியை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடலால் அறிகிறோம்.
  
ஆயர்களின் ஆட்டு மந்தைக்கு அருமையான உவமையை பெருங்கெளசிகனார் காட்டுகிறார் -மலைபடு கடாம்  (413-414)
பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன 
தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
பண்ட மாற்றுமுறை வணிகத்தில் பலரிடம் தம் பொருளை விற்று அவர்களிடமிர்ந்து பெற்ற பல நிற அரிசிகள் ஒன்றாய்க் கலந்திருந்தால் எப்படி இருக்குமோ அது போன்ற பல நிறமுள்ள ஆடுகளைக் கொண்ட ஆட்டு மந்தையாம்.
இன்னும் பல எடுத்துக்காட்டுகள் கூறிக்கொண்டே போகலாம். நம் தமிழரின் வாழ்க்கைமுறை அக்காலம்தொட்டே சிறப்பாக இருந்ததையே இவை காட்டுகின்றன. 

லூசியா லெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire