பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 31 octobre 2014

எண்ணப் பரிமாற்றம்

கம்பன் உறவுகளின் கனிந்த வாழ்த்துகள்

இன்றைய அறிமுகம்

கைலாஷ் சத்யார்த்தி


2014 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக  நோபல் பரிசுக் கமிட்டி அறிவித்துள்ளது. .இந்த பரிசு வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி ஆஸ்லோ நகரில் நடைபெறும் விழாவில் இருவருக்கும் வழங்கப்படும்.
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறும் 7-வது இந்தியர் ஆவார்.  அன்னை தெரசாவுக்கு அடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர், அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
இவர்  மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி பிறந்தார்.எலெக்ட்ரிகல் என்ஜினீயரான இவர் தற்போது தெற்கு டெல்லியில் உள்ள அலக்னந்தா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.இவருக்கு  ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
1980–ஆம் ஆண்டு ருக்மார்க் (தற்போது குட்வீவ்) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு குழந்தை தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை நுகர்வோர் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டது.

அதன் பின்னர் 1983–ஆம் ஆண்டு குழந்தை பருவத்தைக்  காக்கும் இயக்கம் (பச்சன்  பச்சோ அந்தோலன்) என்னும் தன்னார்வத்  தொண்டு நிறுவனத்தைக்  கைலாஷ் சத்யார்த்தி தொடங்கினார். 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்து, அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து கல்வி பயில ஏற்பாடு செய்தார். குழந்தைகளுக்குக்  கல்வி இலவசமாக்கப்படவும்  குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராகவும், இவ்வியக்கம்  தீவிரமாகப்  போராடி வருகிறது.   இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து உலக நாடுகளில் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை. - பணத் தேவைக்காக அவர்களின் குழந்தைப் பருவம், கல்வி போன்றவை சுரண்டப்படுவதை குறித்துத் தனது போராட்டங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு செயல்பாடுகள் தவிர, வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.
குழந்தைகளின் கல்வி மற்றும் விடுதலைக்காகப் போராடிய இவர் பலமுறை பணமுதலைகளாலும் தொழிலதிபர்களாலும் தாக்கப்பட்டார்.அவரது மனைவி சுமேதா இவர்  எடுக்கும் முடிவுகள், முனைப்புகள், முயற்சிகள் அனைத்துக்கும் உறுதுணையாக இருந்துள்ளார்.

  இவர் பெற்ற விருதுகள்:
  • ஆக்சனர்  அமைதி விருது  1994(ஜெர்மனி)
  • கென்னடி சர்வதேச  மனித உரிமைகள் விருது 1995(அமெரிக்கா )
  • பிரெட்ரிக் எபெர்ட் சர்வதேச மனித உரிமைகள் விருது 1999 (ஜெர்மனி)
  • இத்தாலிய பாராளுமன்ற விருது 2007
  • அல்போன்சோ கோமின் சர்வதேச விருது 2008 ( ஸ்பெயின்)
  •  ஜனநாயக விருது 2009 (அமெரிக்கா )
நோபல் பரிசு பெற்றது குறித்து" குழந்தைகளின் உரிமைக்காகப்  போராடி வருபவர்களுக்குக்  கிடைத்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருது, இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைத்த மரியாதையாகக்  கருதுகிறேன். சிறுவர்களின் நலனுக்கான எனது போராட்டம் தொடரும்"  இவ்வாறு சத்யார்த்தி தெரிவித்தார்.

லூசியா லெபோ.

தமிழர் பழக்கவழக்கங்கள் - விளக்கம்


நெற்றியில் பொட்டு:
பெண்கள் நெற்றியில் குங்குமம் அல்லது பொட்டு வைப்பது தமிழர் மரபாகும். நெற்றியில் இரண்டு புருவங்களுக்கும் நடுவிலுள்ள புள்ளி
'அஜ்னா சக்கரம்' என்றும்  விழிப்புணர்வுப்  புள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாகவே தூண்டப்பட்டு ஒருவரின் பதற்றத்தைக்  குறைத்து மனத்தை அமைதிப்படுத்துகிறது.

மெட்டி:
 திருமணமான இந்துப்  பெண்கள் மெட்டி அணிவது  வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை.  பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாகச்  செல்கிறது.மெட்டி அணிந்து  நடக்கும்போது இந்த நரம்பு அழுத்தப்படுகிறது. இதனால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தைச்  சீராக்குகிறது . .
வணக்கம் :
 இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவை ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்படத்  தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்கச்  செய்யும்.

தரையில் அமர்ந்து உண்ணுவது :
 சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து  சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கிச்  சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு சீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு சீ ரணம் நன்றாக நடைபெறுகிறது.

விளக்கேற்றும் நிகழ்வு:
திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையும் பொண்ணுமாக மணமகன் வீட்டுக்கு வரும்போது ஆரத்தி எடுத்ததும் வலக்  காலை எடுத்துவைத்து உள்ளே வருகின்ற மணமகளை நேரே பூசை  அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைப்பார்கள். எங்கோ பிறந்து, வளர்ந்து  வேறொரு வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வருகின்ற மணமகளானவள் தன்னிடமுள்ள நல்ல குணாதிசயங்களைக் கூறாமல் கூறுகின்ற பாவனையாகவே இந்த விளக்கேற்றும் நிகழ்வு முற்காலத்தில் தொடங்கி  வைக்கப்பட்டது. அதாவது வீட்டுக்கு வருகின்ற மணமகளானவள் ஐந்து முகங்களைக் கொண்ட குத்துவிளக்கை ஏற்றுவதன் மூலமாக பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை, சமயோசிதபுத்தி, நல்ல விடயங்களில் வைராக்கியம் போன்ற ஐந்து நற்குணங்களுடன் இந்த வீட்டுக்கு வாழ   வந்திருப்பதைக்  குறிக்கிறது.

ஆரத்தி :
திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர், குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய், தொலை தூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர் முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது. 

  ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை இந்த  சூட்சுமப்  பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போவார்கள். அதனால்தான் திருஷ்டி  கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டிவிடுவது வழக்கம்..

ஆரத்தி எடுப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மஞ்சள்,குங்குமம், வெற்றிலை, கற்பூரம்,நீர்.ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும்போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்றுவிடும்.இதனை நீர்வலம் விடுதல் என்றும் கூறுவர் ..
தொகுப்பு:
லூசியா லெபோ.

mardi 30 septembre 2014

எண்ணப் பரிமாற்றம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfON-9lEriccD_6Qv7ERshktxdonzb67jssbYcfFvxVpN9Jq2Uc6hEKdn4XD2QH0X-8-Q9oVUslNyRIck5dzMhZBv6OPrpO9tPRNhg-3vztjlECu2f85_Q7SRyXfx_QCyyHQVqkbmOzSU/s1600/213FFB2B-7FF3-41BB-98B1-42B0FCCEF4C1.JPG


அன்புடையீர்,

வணக்கம். மனிதன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற அறிவும், புரிதலும் இல்லாமல் வாழ முடியாது. ஏனெனில் அவை அவனது தனி வாழ்வைப் பாதிக்கக்கூடியவை. அப்படி நடக்கும் நிகழ்வுகளின் தாக்கம் அவனை இன்புறுத்தவோ, சங்கடப்படுத்தவோ, கோபமூட்டவோ செய்யலாம். அதற்கான அவனது பதில் செயல்பாடு எப்படி அமைகிறது என்பது முக்கியம். பலரது ஒருமித்த ஒரே மாதிரியான எதிரொலி சமூகத்தையே புரட்டிப்போடும் வல்லமை கொண்டதாகலாம். அது சாத்வீகமானதாய், அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டதாய் இருந்தால் பலனும் சிறப்பானதாய், வரவேற்கக் கூடியதாய் அமையும். மாறாகக் கனலும் நெருப்பானால், அது பெருந்தீயை மூட்டி விடலாம். அது மனித இனத்தை அழிக்கவே உதவும்.

எந்தவொரு பிரச்சனையும் உண்டாக்கும் உணர்வு சில நேரமே அதே அளவில் இருக்கும். பின்னர் மெல்ல அடங்கவே செய்யும். அந்நேரத்தில் அறிவு அந்த இடத்தை ஆக்கிரமித்து புது வழி காண்பது இயல்பு. அதற்கிடமளிக்காமல் எடுத்தவுடன் உணர்வு வழி செல்வதோ அல்லது அதே உணர்வை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதோ நம் கையில்தான் உள்ளது.

துரதிர்ஷ்டவசமாக இயேசு, காந்தி போன்ற மகான்களைத் தவிர மக்களுக்காகத் தன்னை வருத்திக்கொள்ளும் ஆண்மை எல்லாருக்கும் இருப்பதில்லை. நீதியை நிலைநாட்ட, நியாயம் கிடைக்கத் துணிவோடு தவறைத் தவறென்று சுட்ட மனோபலம் வேண்டும். திருத்தவும், குற்றமிழைத்தோருக்கு மாற்றான பிரச்சனைத் தீர்வும் கொண்டிருக்க வேண்டும். அதை தார்மீக உணர்வோடு செயல்படுத்தத் தெரிய வேண்டும். சிந்தியாமல் வெறும் உணர்ச்சி மயமான முடிவுகளை எடுத்தால் அது செயல்படுவோரையும் அழித்து, எண்ணற்றோர் துன்புறவுமே வழி வகுக்கும். இந்தத் தெளிவின்மையால்தான் பல நெருக்கடிகளை மனிதன் போராட்டம், கலகம், தீவிரவாதம், வன்முறை, பயங்கர வாதம் என்கிற பல பெயர்களில் உண்டாக்கிக் கொள்கிறான்.

இதிலும் பல படிகள் உண்டு. ஆயுத பலத்தை மட்டுமே நம்பி களமிரங்குவோர் பெரிதாக சாதிப்பது ஒன்றுமில்லை. ஒரு சில ஊர்திகளை எரித்து, சில பொது உடமைகளை உடைத்து, சிலரைக் காயப்படுத்தி, பலரை பயமுறுத்தி விட்டால் அவர்கள் பெரிய வீரர்களாகி விடுவார்களா? அல்லது அவர்களுக்கு எல்லாரும் பணிந்து விடுவார்களா? அல்லது அந்தப் பிரச்சனைதான் தீர்ந்து போகுமா! அவர்களுடைய வரையற்ற ஆத்திரம் குறையலாமே தவிர தங்கள் மூடத்தனம் பின்னர் அவர்களுடைய மனச்சான்றால் புரிந்து, வருந்த நேரும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் வாழ்விலேயே அவர்கள் தவறை உணர்த்தும் அனுபவங்களை காலம் அவர்களுக்குத் தராமலா போகும்?!

பின்னர் மனம் குமைந்து, தனக்குள் மறுகுவதைக் காட்டிலும், செயல்படுமுன் அறிவை உபயோகித்தால் பிறருக்கு ஏற்படும் துன்பங்களும் இல்லாதொழியும். நாடும் அமைதியாகத் திகழும்!

திருமதி சிமோன்

அமைதிக்கு ஆன்றோர் அளித்த அறநெறிகள் .


 • வெற்றி என்பது தோல்விகளுக்கிடையேதான் இருக்கிறது.
 - அப்துல் கலாம்

 • பிழையைச் சரிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதில் அவமானம் இல்லை. - ராஜாஜி

 • சில சமயங்களில் வாய்திறந்து பேசுவதை விடப் பேசாமல் இருப்பதே மிக்க
 பயன் அளிப்பதாகும்.
 - டாக்டர் இராதாகிருஷ்ணன்

 • உண்மையாக நாணயமாக  நடப்பவனுக்கு மக்கள் நெஞ்சத்தில் ஓர் சிறந்த இடம் உண்டு.
 - பெரியார்

 • அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்
 - அண்ணா

 • புகழ்தான் நம்மைத் தேடி வர வேண்டும்; நாம் அதைத் தேடிப் போகக்கூடாது.
 - எம்.ஜி.ஆர்.

 • நம்முடைய உண்மையான தேவைகளைக் கடவுள் மட்டுமே அறிவார்.
 - அன்னை தெரசா

 • நிம்மதியைத் தேடி அலைவதில்  பயனில்லை. அது உங்கள் நெஞ்சுக்குள்ளே இருக்கிறது.
 - பாரதிதாசன்

 • கோபம் வந்துவிட்டால் நியாயங்கள் குழம்பிப் போவது வழக்கம்.
 - நாமக்கல் கவிஞர்

 • படிப்பால் அறிவு வளருமே தவிர,  ஒழுக்கம் வந்து விடாது.
 - மு.வரதராசனார்

வெற்றி வந்தால் பணிவு அவசியம்.
தோல்வி வந்தால் பொறுமை  அவசியம்.
எதிர்ப்பு வந்தால் துணிவு  அவசியம்.
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்

வாழ்வியல் பதிற்றந்தாதி



பாடலின் இறுதியில் (அந்தம்) வரும் வார்த்தையே முதலில் (ஆதி) வருவது போன்று எழுதும் கவிதை முறைக்கு "அந்தாதி" என்று பெயர். பத்துக் கவிதைகள் சேர்ந்தது "பதிற்றந்தாதி". இங்கு ஒவ்வொரு கவிதையின் இறுதிச் சொல்லும், அடுத்தக் கவிதையின் ஆரம்பமாகவும் உள்ளது.

  
உலகெலாம் வாழ்த்தும் உயிரெலாம் போற்றும்
நிலமெலாம் சாற்றுமந் நீரும் - நிலவின்
கதிரெலாம் காட்டும் களமெலாம் நின்றே
பதியுமாம் ஈசன் பதம்!


பதந்தனை நாடிடும் பண்புடை மாந்தர்
இதந்தனை நல்கும் இறைவன் - சதமே!
நலமதை நாளும் நமக்கெனக் கொள்ளார்
பலர் பெறக் காண்பார்  பலன்!


பலன்தரும் வாழையே பற்றி அவர்தம்
குலமோர்  பெருமையே கொள்ளும் - மலரின்
மணமாய்ப் பயனுற வாழ்வார்  தமையே
வணங்கும் இகமே மகிழ்ந்து!


மகிழும் எளிய மனமொரு கோவில்
முகியா அருளின் முடிவாய் - அகிலம்
இடையில் களித்திட ஈங்கவர் செப்பும்
கொடையே அன்பெனக் கூறு!


கூற்றும் செயலுமே கொண்டவர் ஒன்றென
ஏற்றம் பெறுவரே என்றுமக் - கூற்றுவன்
தோற்க நயம்படும் தோழமை கண்டவர்
ஏற்கும் அறமே இயைபு!


இயைபும் உறவை இசைந்திட உள்ளம்
தயையினை நல்கும் தகைமை - இணையிலா
மாண்பும் அதுவாம் மனுக்குலம் காத்திடும்
கேண்மையும் அஃதெனக் கேள்!


கேள்புலன் ஞானமும் கேடிலா தன்மையும்
மீள்வகை யாகிட வீணிலே - மூள்கிறக்
கோபமே சூழும் கொடுமை மாறவே
தீபமெனக் கூட்டும் சுடர்!


சுடர்விடும் அன்பு, துளிர்விடும் இன்பம்
தடமெனக் கல்விச் சரமும் - இடரிலா
ஆற்றலும் இல்லாள் அரும்பேர் மழலையென
வற்றிடா தூறும் வளம்!


வளம்பெறும் பூமி , மணந்தரும் சோலை
கிளர்ந்தெழும் தென்றல், கிளைக்கும்; - இளமை
கவிதைத் தமிழதன் காதல் அடடா
செவிபெறும் இன்பமே தேன்!


தேன்தரும் உண்ணத் தெவிட்டாச் சுவையென
வான் புகழ் பெறவே வாழ்வில் - சான்றோர்
செயலென மாந்தரும் தெள்ளியப்  பிணைப்பால்
 உயர்ந்திட  உய்யும் உலகு!

மற்றுமொரு முயற்சியாக ஒவ்வொரு வரிக்குப் பின்னும் முதல் வரி இணைந்து பொருள் தருகிறது.

யாதுமாகி நின்றாய்!

யாதுமாகி நின்றாய் வாழ்வில்!
     யானெனது எண்ணும்  மண்ணில்
சூதுணரா(து) ஈயும் அன்பில்
     சுகந்தனையே தந்த போதில்
தூதுவிடும் கண்கள் தன்னில்
     துலங்குமொரு பாச ஈர்ப்பில்
ஏதுமிலா ஏழை நெஞ்சில்
     இயங்குமொரு உயிரின் மூச்சில்!

திருமதி சிமோன்