தொழிலதிபர் விசுவநாத்தின் ஒரே செல்லமகள் நிலா. இரண்டு வயதிலேயே தாயை இழந்துவிட்டதால், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த விமலாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட விசுவநாத், அவள் இறந்தபோது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால், பணம் இல்லாதவர்களைக் கண்டால் வெறுப்புடன் நடந்துகொண்டார். தன் மகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற, அக்கறையுடன் வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு அதிக கட்டுப்பாட்டுடன் வளர்த்து வந்தார். அதனால் நிலாவுக்கு தந்தையிடம் அன்போடு பயமும் இருந்தது.
அவர்கள் எதிர்வீட்டு மாடிப்பகுதிக்கு, சந்திரன் தன் மனைவி வேணி மற்றும் தங்கை அமுதாவுடன் குடி புகுந்தான். மெத்தப்படித்த சந்திரனுக்குச் சரியான வேலை கிடைக்காததால், ஒரு சிறிய கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். தங்கை அமுதா நிலாவோடு ஒரே வகுப்பில் படித்து வந்தாள்.
ஒரு நாள் நிலா தன் காரில் அமுதாவை வீடுவரை அழைத்துவந்ததைக் கேள்விப்பட்ட விசுவநாத் மகளை மிகவும் கடிந்துகொண்டார். மற்றொரு நாள் நிலா கேட்ட ஒரு புத்தகத்தை கொடுத்துப் போக வந்த அமுதாவை, அவள் காதுபடவே மோசமாகப் பேசினார். அதன்பிறகு அமுதா நிலா வீட்டுக்கு வருவதே இல்லை!
இந்நிலையில் திடீரென்று ஒருநாள் விசுவநாத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால், மாற்றுச் சிறுநீரகம் பொருத்தவேண்டும் எனச்சொல்லி விட்டனர். இது கேட்ட நிலா மிகவும் இடிந்து போனாள். தாயில்லா நிலையில், தந்தை நிலையும் இப்படி ஆனதால் நொந்து போனாள். எவ்வளவோ பணமிருந்தும், அப்பாவின் நண்பர்கள் பலர் இருந்தும் மாற்றுச் சிறுநீரகம் கிடைக்காது வருந்தினாள். தவித்து நின்ற அவளைத் தேடி அமுதா வந்தாள்.
“அழாதே நிலா! உன் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும். கட்டாயம் உன் தந்தை பிழைத்துக் கொள்வார். இறைவனை வேண்டிக்கொள்” என்று ஆறுதல் கூறினாள். தோழியைக் கண்டதும் அவள் தோளில் சாய்ந்து, கதறி அழுத நிலாவுக்கு அவள் சொன்னது எதுவும் காதில் விழவில்லை! அப்போது அங்கே வந்த மருத்துவர், “உங்கள் தந்தைக்கு பொருத்துவதற்கு சிறுநீரகம் கிடைத்து விட்டது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் ஒரு கையெழுத்து போடுங்கள்” எனக்கேட்டார். இயந்திரமாக கையெழுத்து போட்ட நிலாவை அணைத்துக் கொண்டாள் அமுதா! “என் அண்ணன்தான் உன் தந்தைக்குச் சிறுநீரகம் தருகிறார். அது உன் அப்பாவின் உடம்புக்கு ஒத்துப்போக வேண்டுமே என்றுதான் இறைவனை வேண்டிக்கொள்ளச் சொன்னேன். நல்லவேளை பொருந்தி விட்டது. இனி பயப்படாதே! உன் அப்பா நிச்சயம் பிழைத்துக்கொள்வார்” என்று சொன்ன அமுதாவை நன்றி பெருக்கோடு தழுவிக்கொண்டாள் நிலா.
வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து, விசுவநாத் நன்றாக உடல்நலம் தேறினார். மருத்துவர் மூலம் தனக்குச் சிறுநீரகம் தந்தது சந்திரன்தான் என அறிந்த விசுவநாத், மனமகிழ்ந்து சந்திரனை வரவழைத்து “என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு ஏதேனும் உதவி செய்து என் நன்றியைக் காட்ட விரும்புகிறேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் கேள்” என்றார். அதற்கு அவன் “வேண்டாம் ஐயா, நான் பணத்தை எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை. என் தங்கையைப் போன்றவள் நிலா! அவள் துயர் போக்க, என் தந்தை போன்ற உங்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். மனிதாபிமானம் உள்ள எவரும் செய்யக் கூடியச் செயல்தான் இது. நீங்கள் அமைதியாக இருந்து, உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.
விசுவநாத் இதைக் கேட்டு அவரையறியாமல் கலங்கினார். “நான் பணமிருந்தால் போதும். எதையும் பெற்றுவிடலாம் என்று நினைத்திருந்தேன். அது இல்லாதவர்களை பணத்திற்காக எதையும் செய்பவர்கள் என்று கணித்திருந்தேன். ஆனால் “மனித நேயம்” மிக்க நீ உன் செய்கையால் உயர்ந்து என் எண்ணத்தை மாற்றி விட்டாய். உனக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை” என்றார்.
“நீங்கள் பிழைத்ததே போதும் ஐயா! நான் வருகிறேன்” என்று புறப்பட்டான் சந்திரன். விசுவநாத் அவனை மறித்து, “நீ நிலாவைத் தங்கை என்று நினைப்பது உண்மையானால், தந்தை என்ற முறையில் நான் சொல்வதை மறுக்காமல் ஏற்க வேண்டும். என் கம்பெனி பொது மேலாளராக உன்னை நான் நியமிக்கிறேன். இதை ஏற்றுக் கொண்டு, என்னை கௌரவிக்க வேண்டும்” என்று வேண்டினார்.
சந்திரன் புன்முறுவலுடன் ஒப்புக் கொண்டான். நிலாவும், அமுதாவும் மகிழ்ச்சிப் பெருக்கோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
சரோசா தேவராசு