பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 13 juin 2010

கவிச் சோலை

                 கண்ணியம்

தன்மானம் பேணிடலும்
   சகமானங் காத்திடலும்
     தணிவாய் எங்கும்
இன்சொல்லே பேசுதலும்
  இன்செயலே செய்திடலும்
    இன்பம் தங்கும்
மென்னுரையால் குறைநீக்கி
  மேன்மையுற வைத்திடலும்
    மேலாம் என்றும்
நன்னடத்தை கண்ணியமாம்
  நாள்தோறும் அவ்விதமாய்
   நடத்தல் நன்றே!

தன்குறைகள் களைந்தபின்னே
  தான்பிறர்மேல் குற்றங்கள்
    சாட்டல் வேண்டும்!
தன்னிலையில் தாழாமல்
  தன்மானம் இழக்காமல்
    தமிழர் என்றும்
நன்னெறியில் சென்றிடவே
  நல்லொழுக்கக் கல்வியினை
    நாளும் பேணி
இன்னெறியாம் தமிழினையே
   இல்லமதில் இயம்பிடுவோம்
     இன்பம் காண்போம்!

பேராண்மை பேணுவதும்
   பெரும்பெண்மை காப்பதுவும்
      பீடு பெற்றுப்
பாராளும் பெருந்தகைமை
   பாங்குடனே ஏற்றாலும்
     பண்பாய்ப் பேசும்
கூர்மதியால் நன்மைகளே
  கூட்டிடுதல் மாண்பென்னும்
    குணத்தை ஏற்றே
ஊர்போற்ற வாழ்ந்திடுதல்
   உண்மையிலே கண்ணியமாம்
     உயர்வோம் நன்றே!

தேவராசு