என்னினப் பொங்கலை எண்ணும் பொழுதெல்லாம்
பொன்மனப் பூங்கவிதை பூத்தாடும்! - வன்றமிழர்
பன்னலம் காண்க! படித்தாய்க! பைந்தமிழின்
முன்னலம் காண்க முனைந்து!
திருவள்ளுவர் ஆண்டென்று உரக்கச் சொன்னால்
திகைத்திங்குத் தமிழர் பலர் விழிக்கக் கூடும்!
இரும்..வள்ளுவர் யார்என்று இயம்பக் கூடும்!
இயக்குநரா? புதுவரவா? எழுதக் கூடும்!
அரும்வள்ளுவர் அந்தமிழின் ஞானி! இந்த
அகிலத்தின் முதலாசான்! அறத்தின் தந்தை!
பெரும்வள்ளுவர் அலைதவழ் பேற்றைச் சொன்னால்
பிடிப்பின்றிக் கேட்டிடுவார்! தமிழர் வாழ்க!
தம்நிலையை ஒருநொடியும் எண்ணா! அன்னைத்
தமிழ்நிலையும் ஒருநொடியும் எண்ணா! மின்னும்
நம்கலையை, நன்னெறியை எண்ணா! போற்றும்
நல்லாரின் நட்புறவை எண்ணா! அந்தக்
கும்மிருட்டை மிஞ்சுகின்ற இதயம் கொண்டு
கொழுகொழுத்துத் தந்நலத்தை மட்டும் எண்ணிச்
செம்மணியைச், செல்வத்தை நிலத்தை எல்லாம்
சேர்த்திடவே அலைந்திடுவார்! தமிழர் வாழ்க!
பள்ளியென்றும், பறையென்றும், ஈனர் என்றும்
பழித்திடுவார்! அழுத்திடுவார்! மேடை யேறி
அல்லியென்றும், அழகென்றும், அன்பே என்றும்
அமுதூறப் பேசிடுவார்! பின்னே நின்று
தள்ளியென்றும் சிரித்திடுவார்! எளியோர் வாழ்வைக்
கிள்ளியென்றும் குலைத்திடுவார்! பிறப்பில் மேல்..கீழ்
புள்ளியென்றும் வைத்திடுவார்! போதும் போதும்
புடைநற்றப் புளுகெல்லாம்! தமிழர் வாழ்க!
உனக்குள்ளே இருக்கின்ற ஒளியை ஏற்றி
உண்மையினை உணர்ந்திடுக பணத்தை நெஞ்சக்
கணக்குள்ளே வைத்தோர்தம் கால்கள் தொட்டுக்
கழுவுவதும், வணங்குவதும் ஏனோ? சின்ன
மனத்துள்ளே பெருங்குப்பை! கழிநீர் தேக்கம்!
மலையேறி வணங்குவதால் பயனும் உண்டோ?
இனத்துள்ளே மதம்பேசிப் பிரிந்து நின்றால்
இழந்திடுவாய்ப் புகழ்வாழ்வை! தமிழர் வாழ்க!
சொல்லொன்றும், செயலொன்றும், ஆகா என்றும்
சொந்தமென இவ்வுலகைச் சுருட்டப் பார்ப்பார்!
உள்ளொன்றும் வெளியொன்றும் வைத்துக் கொண்டே
உடனிருந்து சதிசெய்வார்! ஆட்சி மன்றில்
சில்லென்று அமர்ந்திடுவார்! தம்மின் இல்லம்
செழித்திடவே வழிசமைப்பார்! போகும் பாதை
கல்லென்றும் முள்ளென்றும் தெரிந்த பின்னும்
கண்மூடிப் பயணிப்பார்! தமிழர் வாழ்க!
கவிஞர் கி. பாரதிதாசன்
10 01 2011