பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 janvier 2011

பொங்க வேண்டும் புகழுடனே!

தங்கத் தமிழைத்  தலைசூடித்
தழைக்கும் வாழ்வைப் பெற்றிடலாம்!
சிங்கத் தமிழர் நாமென்றே
சிலிர்க்கும் உள்ளம் உற்றிடலாம்!
வங்கக் கடலின் வளத்தைப்போல்
வற்றா இன்பம் ஏற்றிடலாம்!
பொங்கும் இந்த நன்னாளில்
புதுமைப் பொங்கல் பொங்கிடலாம்!

கட்டுக் கடங்கா ஆசைகளைக்
காலுக் கடியில் தாம்போட்டுச்
சிட்டுக் குருவி போல்நாமும்
சிறகு விரித்துப் பறந்திடலாம்!
விட்டுக் கொடுத்து வாழ்வதைநாம்
விரும்பி மனத்தில் ஏற்பதனால்
முட்டும் துன்பம் ஏதுமின்றி
முத்தாய்ப் பொங்கல் பொங்கிடலாம்!

நல்லோர் மொழியை நம்மொழியில்
நன்றே அழகாய் மாற்றிவிட்டால்
பல்லோர் கருத்தைப் பண்புடனே
பசுமைத் தமிழில் அறிந்திடலாம்!
வல்லோர்  என்போர் வாழ்வுயர்ந்து
வளரும் வழியைக் காட்டிடுவார்!
இல்லார் என்போர் யாருமின்றி
இனிய பொங்கல் பொங்கிடலாம்!

திறமை பொங்க வேண்டும்! நல்
தெளிவு பொங்க வேண்டும்! சீர்
பெருமை பொங்க வேண்டும்! நற்
பேரும் பொங்க வேண்டும்! உள்
கருமை களைய வேண்டும்! பல்
கலைகள் வளர வேண்டும்! நற்
பொறுமை காக்க வேண்டும்! தைப்
பொங்க வேண்டும் புகழுடனே!

அருணா செல்வம் 03.01.2011