இந்த
'டீன் ஏஜ்' பற்றிப் பேசாத பத்திரிக்கைகள் இல்லை. அதற்கான விளக்கம் சொல்லாத
'அறிஞர்கள்' இல்லை. அதற்குப் பயப்படாத பெற்றோர் இல்லை. அதை பயன்
படுத்திக்கொள்ளாத இளைஞர் வட்டமில்லை!
எத்தனையோ பருவங்களை மனிதன் தாண்டி வாழ்வை
முடிக்கையில், இந்தக் குறிப்பிட்டப்பட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும் ஏன்
இத்தனை முக்கியத்துவம்? அதைப்பற்றிய சிந்தனை, பரபரப்பு எல்லாம்?
சிறு
குழந்தை உலகைப் புதுமையாய்க் கண்டு, உணர்ந்து, புரிந்து கொண்டு அதில் வளைய
வரவும், தனக்கே உரித்தான முறையில் அதில் பங்கெடுத்து, தனக்கென ஓரிடத்தைப்
பெறவும், தன் வசப்படுத்தவும் கற்கும் போது, பெற்றோர், உற்றார், உறவு,
நட்பு, ஆசிரியர் என சுற்றி உள்ளோர் கவனிப்பில், சிந்தனையும், மனச்சான்றும்
கொண்ட ஒரு 'டீன் ஏஜ்', 'அடல்ட்' வாழ்வை எதிர் கொள்ள முடியாதா?
குழந்தைத் தன்மை மாறி, பருவ உணர்வுகளும், ஆசைகளும்
எழும் காலம்தான். அந்த வாயிலைத் தாண்டினால்தானே வாழ்வுக்குள் பிரவேசிக்க
முடியும்? அதற்காக அந்த மாற்றத்தை ஏன் பூதாகரமாகச் சித்தரிக்க வேண்டும்?
எந்தப் பெற்றோரும் தங்கள்
குழந்தைகளின் நியாயமான எந்த ஆசையையும் புறக்கணிப்பதில்லை. அவர்கள்
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போதுதான் சாதி, மதம், தராதரம் என்று
முட்டுக்கட்டைப் போடலாம். சமுதாயம் என்ன சொல்லுமோ என்ற கவலையில்தான் அந்த
குறுக்கீடும் இருக்கும். தாங்கள் விரும்பும் ஒன்று எந்த வகையிலும்
தாழ்ந்ததல்ல என்ற நம்பிக்கையும், அதை நிரூபிக்கும் திடமும் இருந்தால் இளைய
தலைமுறை அவர்கள் கவலையைப் போக்கி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்
கொள்ளட்டுமே!
இள
மனது கவர்ச்சி கண்டு அலை பாய ஆரம்பிக்கும்போது, அதற்குக் கடிவாளமிட்டு,
சன்னலை அடைப்பது அவர்கள் கடமை. இதை அறிவுறுத்தும் யாரும் அவர்களுக்கு
எதிரிகள் அல்ல. மாறாக சமயத்தில் நினைவுறுத்தும் மனசாட்சி போன்றவர்கள். அந்த
சலன நேரத்தில் மீண்டு விட்டால் வாழ்க்கை சரளமாகத் தன் வழியில் செல்லும்.
உரிய வயதில் முதிர்ச்சியோடு தேர்ந்தெடுத்து, நிதானமாக அடியெடுத்து, உறவை
நிர்ணயிக்கும்போது அது பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்
கூடியதாகவே இருக்கும். அப்படியே புரிந்து கொள்ளாதவர்கள் முன்னும் தலை குனிய
வேண்டாத வகையில் உங்கள் வாழ்வே அவர்களுக்கானப் பதிலாக இருக்கும்.
இடையே அந்தப்
புது உறவின் தூய்மையையும், ஆழத்தையும் காக்க வேண்டியது உங்கள் கடமை.
நீந்தத் தெரியாமல் நீரில் குதிப்பது விவேகமல்ல. காதலின் மேன்மை உணர்ந்து,
மனமும் உடலும் இணையும் முழு சரணாகதியே நிலைத்து நிற்கும். அதற்கானப்
பக்குவம் வரும் வரை காத்திருப்பதே ஒரு தவம். அந்தத் தவம் நிச்சயம் இன்ப
வாழ்வை வரமாக அருளும்.
எனவே
இளையோரும் பெற்றோரும் போர்க்களத்தில் சந்திப்பது போன்ற ஓர் தோற்றத்தை
'டீன் ஏஜ்' 'ஜெனெரேஷன் கேப்' என்ற பெயரில் உண்டாக்கி, அதன் மூலமே இரு
தரப்பையும் விரோதிகளாக்கும் கொடுமையை உடனடியாக நிறுத்துவோம்!
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire