பண்பு என்பதற்கு இயற்கையான குணநலன் எனப் பொருள் கொள்ளலாம். பெற்றோரிடமிருந்து, பரம்பரையாக, வளர்ப்பு காரணமாக என்று ஆயிரம் கூறினாலும், ஓர் உயிர், அனுபவங்கள் வழியாகப் பெறும் பாடங்களை மனதில் இருத்தி, அதிலிருந்து தன்னைப் பண்படுத்திக் கொண்டு, அறிவு, மனச்சான்றுகளின் துணையுடன் தனக்கான அடையாளத்தை உண்டாக்கிக்கொள்வது அதன் பண்பெனப்படுகிறது.
அப்பண்பை
வெளிப்படுத்தும் முறையில் அது மற்றவருக்குத் தெரிய வருகிறது. சிலருக்கு
வகையாக அதை வெளியிடத் தெரியாமல் போகலாம். வேறு சிலர் தனித்து உணர்வதை பலர்
முன்னிலையில் வெளிப்படுத்தும் துணிவு பெறாது போகலாம். சீர் கொண்ட
குணநலனும், அதை உரிய நேரத்தில், உரிய முறையில் வெளியிடும்
திடமும் ஒவ்வொருவருக்கும் மிக மிகத் தேவை. அது அவர்களை மட்டுமல்ல, அவர்கள்
குடும்பத்தையும், சமுதாயத்தையுமே உயர்த்த முடியும்.
இதற்கு
உதாரணமாக எத்தனையோ சான்றோர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். கடமையை,
கொள்கையில் கொண்ட திடத்தை, நேர்மையை, நெஞ்சுரத்தைக் காட்டும் அவர்கள்
செயல்களை நினைவு கூர்வது நமது பண்பை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை.
1947இல்
நவக்காளி யாத்திரை செய்த வேளையில், காந்திஜி ஒருநாள் காலை செய்தித்தாள்
படித்தபடி கண்ணயர்ந்து விட்டார். அவருக்காக மற்றவர்கள் 5 நிமிடம் காத்துக்
கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. அவரை எழுப்பும் பொறுப்பு சகோதரி
மனுகாந்தியுடையது. விழித்த காந்தி, "500 மக்களுடைய 5 நிமிடத்தை நீ வீணாக்கி
விட்டாயே" என அவரைக் கடிந்தாராம்! ( இன்றைய அரசியல்வாதிகளும், மேடைப்
பேச்சாளர்களும் இதைப் பின்பற்றினால் எல்லோருடைய நேரமும் எவ்வளவு பயனுள்ள
வேறு வேலைகளுக்கு மிச்சமாகும்?!)
மது
விலக்குக் கொள்கைக்காகப் பெரியார் தாதம்பட்டியில் தங்கள் தோப்பிலிருந்த
500 தென்னை மரங்களை ஒரே நாளில் வெட்டிச் சாய்த்தாராம்! (பணத்தைத் துச்சமாக
மதித்து, கொள்கையைப் போற்றும் இத்துணிவு இன்று வருமா?)
காமராஜ்
இறந்தபோது அவர் சட்டைப் பையில் 100 ரூபாயும், வங்கிக் கணக்கில் 125
ரூபாயும் இருந்தனவாம்! (இன்றைய மந்திரிகளால் இவ்வாறு கனவு காணவும்
முடியாது!)
நேரு
ஒரு முறை காங்கிரெஸ் செயற்குழு கூட்டத்தில் பேசும்போது நிஜலிங்கப்பா அவரது
செல்வப் பரம்பரைப் பற்றிக் குறிப்பிட, பதிலுக்கு நேரு தன் கிழிந்து
தைக்கப்பட்ட சட்டையைக் காட்டியதோடு, பிரதமர் சம்பளத்தில் தனக்கு மாதம் 9
ரூபாய் மட்டுமே மிஞ்சுவதாகவும் கூறினாராம்! ( நம்ப முடியவில்லையல்லவா?)
முதலமைச்சர்
ஆனப் பிறகு அண்ணா முதன் முதலில் அமெரிக்கா போகு முன் எஸ்.எஸ்.
ராஜேந்திரனிடம் தான் அங்கே சென்று அணிய, சினிமாவில் உபயோகித்த கோட்டுக்களை
கடனாகக் கேட்டாராம்! (அரசாங்க தலைமைப் பதவி, இனாமாக எல்லாம் தரும் என்பதை
அவர் அறியவில்லை)
ராதாக்கிருஷ்ணன்
ஜனாதிபதியாக இருந்தபோது லண்டன் செல்ல, அவருக்கு முதலமைச்சர் இல்லத்தில்
விருந்து அளிக்கப்பட்டதாம். அவர் கையால் உண்பதைக் கண்டு, பரிகாசமாக 'முள்
கரண்டி உபயோகியுங்கள். அது சுகாதாரமானது' என்றாராம் மந்திரி. தயங்காது
உடனே, "அவசியமில்லை. என் கையே சுத்தமானதுதான். ஏனெனில் வேறு யாரும் அதை
உபயோகப்படுத்துவதில்லை" என பதிலடி கொடுத்தாராம் ராதாக்கிருஷ்ணன்! (என்ன
நெஞ்சுரம்!)
அன்பு, அமைதி,நேயம் போன்றவை மட்டும் பெரியமனிதத்
தன்மைகளல்ல. ஆய்ந்தறியும் குணமும், பகுத்துணரும் கூர்மையும், செயலாக்கும்
திறனும், அவற்றில் பிடிப்பும், எந்நிலையிலும் கைவிடா உறுதியுமே அவர்களை அதே
நிலையில் வைத்திருக்கும்! இன்று இப்பண்புகளைக் குறிப்பிடும்போதே மலைக்க
வைக்கின்றனவே, இன்னும் 50 ஆண்டுகள் சென்ற பின்னர் இவையே "சரித்திரக்
கதைகள்" எனப் பெயர் பெற்று விடுமோ?!
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire