நலமிருக்கும் நம்புகிறேன்!
கொஞ்சலிடும் உறவினிலும்
நஞ்சிருக்கும் அஞ்சுகிறேன்!
உயிர்க்கொல்லி விடத்தினிலும்
உயிர்பிழைக்கும் நம்புகிறேன்!
உயிர்காக்கும் மருந்தினிலும்
உயிரிழக்கும் அஞ்சுகிறேன்!
பருந்திருக்கும் கூட்டினிலும்
உறவிருக்கும் நம்புகிறேன்!
விருந்திருக்கும் வீட்டினிலும்
பகையிருக்கும் அஞ்சுகிறேன்!
பரத்தையர்கள் வாழ்வினிலும்
பண்பிருக்கும் நம்புகிறேன்!
பத்தினிகள் நாடகத்தில்
வன்பிருக்கும் அஞ்சுகிறேன்!
கொம்பிருக்கும் விலங்கிடத்தும்
குணமிருக்கும் உண்மையடி!
நம்புவதும் அஞ்சுவதும்
நாம் வகுத்த எல்லையடி!
- நாகரத்தினம் கிருஷ்ணா
சும்மா இருப்பதற்கு
இங்கே
சுதந்திரம் உண்டு!
சுறுசுறுப்பாய்
இருப்பதென்றால்
அதற்கு
அரசாங்க
அனுமதி வேண்டும்!
சுதந்திரம் சுதந்திரம்
என்று
அடிக்கடி யாரும்
சொல்ல வேண்டாம்!
தேசத்தில்
சுதந்திரம் என்கிற
வார்த்தையாவது
கொஞ்சம்
சுதந்திரமாய் இருக்கட்டும்!
- மு. மேத்தா
மாமரத்தின் கிளையிலொரு
மாங்காய் தொங்கக் கண்டேன்
மாங்காயின் மேல் கல்லை விட்டேன்
மண்டை உடைபட்டேன்.
பூமரத்தில் ஏறி ஒரு
பூப்பறிக்கப் போனேன்
பூப்பறிக்கத் தாவுகையில்
பொத்தென்று விழலானேன்.
ஊமையைப்போல் இருந்த நாயை
உதைக்கக் காலை எடுத்தேன்
உயரத் தூக்கிய வலதுகாலை
கடித்து விட்டது காலை.
தீமையான செய்கைகளைச்
செய்யவுங் கூடாது
செய்வோரிடம் எப்போதும்
சேரவும் கூடாது.
- பாரதிதாசன்
கண்ணென்ன கண்ணோ - வட்டுக்
கந்தலுடை கட்டிக் கையேந்து வாரைக் காணாத
கண்ணென்ன கண்ணோ!
கலையென்னக் கலையோ - நாட்டைக்
கறுக்கும் கொடுமையை அறுக்கும் வாளாக்காத
கலையென்னக் கலையோ!
- வாணிதாசன்
காந்தி காந்தி காந்தி என்று காதடைக்கக் கூவினோம்
காந்தி சொன்ன சாந்தி மட்டும் காதில் ஏறவில்லையே!
பூசையோடு கோயிலுக்குள் பூட்டிவைக்கும் சாமிபோல்
ஓசையோடு காந்திபொம்மை ஊர்வலங்கள் செய்கிறோம்!
நிலைகொண்ட மெய்ஞானக் கலைதந்த காந்திக்கு
சிலைவைத்து விட்டால் மட்டும் சிறப்பாமோ?
அலைகொண்ட நம்மனத்தில் அவன்கொண்ட செம்மைதங்கி
அதன்படி நடப்பது அதுவன்றோ இனி வேண்டும்?
- நாமக்கல் கவிஞர்
Aucun commentaire:
Enregistrer un commentaire