பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 juin 2014

எண்ணப் பரிமாற்றம்



அன்புடையீர்,

வணக்கம்.  "காலத்தின் கட்டாயம்" என்றொரு வாசகத்தை அடிக்கடி நாம் உபயோகிக்கிறோம். சொல்லப்போனால் நம்மால் கட்டுப்படுத்த முடியாததை, வேறு வழியின்றி ஒப்புக் கொள்ள நேர்ந்ததை இந்த வட்டத்துக்குள் அடக்குகிறோம். ஆனால் யோசித்துப் பார்க்கையில், யுக யுகமாய் நீண்டு, பரந்து, ஓடிக்கொண்டே இருக்கும், மாறிக் கொண்டே இருக்கும் காலத்துக்கு அதன் ஒவ்வொரு செயலுமே அதற்கான கட்டாயம்தான்!

பூத்திருக்கும் ஓர் அழகு மலர் அப்படியே நிரந்தரம் கொண்டு விட்டால் இன்னொரு பூவுக்கு அங்கே இடமில்லை. பொற்குவியலாய்ச் சுற்றி வரும் ஒரு குழந்தை வளர்ந்து உருமாற்றம் கொள்ளாவிடில் அடுத்தத் தலைமுறையில்லை.
இவ்வாறு மாற்றி, அழித்து, புதுப்பித்துக் கொண்டே இருக்கும் காலத்தின் செயல் நமக்குச்  சில நேரங்களில் ஏற்க இயலாததாய், தாங்கவொண்ணாத் துயரளிப்பதாய் அமைந்து விடுகிறது.  தன்னைத் துன்புறுத்துபவரையும் நேசிக்க வேண்டும் அதுவே உண்மையான மனித நேயம் என்று வாழ்ந்து காட்டிய ஏசுபிரான் அடிபட்டு, சிலுவையில் உயிர் விட வேண்டும் என்று யார் விரும்புவார்? அஹிம்சா வழியில் இந்திய விடுதலைக்கு வழி காட்டிய காந்தி, குண்டடிபட்டு மரணிப்பதில் யாருக்குச் சம்மதம்? ஆனால் இவர்களது மரணத்துக்குக் காரணமானவர்கள், இவர்கள் புகழை நிலைநாட்டியே உள்ளனர் என்பது சிந்தித்தால் புலனாகும். அன்றி நோயில் வீழ்ந்து, பாயில் படுத்து மரணமெய்துவது இவர்களது சிறப்பையே குறைத்து விடாதா?

முற்றும் துறந்து ஞானம் பெற்றவரும் இவ்வாறு நோயில் வீழ்ந்து பரிதாப மரணம் எய்தி உள்ளனரே என்ற எண்ணம் இங்கு தோன்றக் கூடும். உண்மை ஞானம் எய்தியவருக்கு, உடல் என்பது புறமானது; அந்நியமானது. அதற்கு நேரும் அழிவு ஆன்மாவுக்கு சம்பந்தமில்லாதது. ஏனைய செயல்களைப் போல அவர்கள் அதன் அழிவையும் மவுனமாகப் பார்ப்பார்கள்; ஏற்பார்கள்!

ஒரு சராசரி மனிதன் அவனைச் சுற்றி நடக்கும் காரியங்கள் 'காலத்தின் கட்டாய' மாற்றங்கள் என்பதைப் புரிந்து கொண்டால், விவேகம் பிறந்து விடும். அறிவு, மனம், நீதி, நேர்மை இவற்றுக்கப்பால் நடப்பவை ஏன், எதற்காக என்ற குழப்பம் ஏற்படாது. காலத்தின் வலிய கரங்களால் எழுதப்படும் விதி ஒவ்வொன்றும் ஓர் படைப்பையோ, அழிவையோ கொண்டிருக்கும். அதற்கானக்  காரணம் எல்லோருக்கும் காலப் போக்கில் புரியலாம், புரியாமலும் போகலாம். ஆனால் அதற்குத் தக்கக் காரணம் மட்டும் நிச்சயம் இருக்கும்!

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire