அன்புடையீர்,
வணக்கம்.
கடந்த
மாதம் 29/06/14 அன்று நடைபெற்று, உழைப்புக்கேற்ற நிறைவு தந்து,
மகிழ்வளித்த "மகளிர் விழா"வில் ஓர் கருத்தரங்கு 'சான்றோர் காட்டிய சமூக
நெறி'களை நினைவு கூர்ந்தது.
சமுதாயம்
தரத்தில் முன்னேறவும், மனித இனம் முழுமையுறவும், தெய்வீக நிலைக்கு உயரவும்
எத்தனையோ மகான்கள் எவ்வளவோ வழிகளைக் காட்டியுள்ளனர். தாங்கள் வாழ்ந்தும்,
அறிவுரை கூறியும், கண்டித்தும், கதை சொல்லியும் புரிய வைக்க முயன்ற
வாழ்க்கை ரகசியத்தை, அதன் நுணுக்கத்தை சற்றே சிந்தித்து, அதை விடக்
குறைவாகப் பின்பற்றினாலே மனிதம் புனிதமடைந்து விடும்.
ஆனால்
நாம் அந்தப் புனிதர்களின் கொள்கைகளைப் பறக்க விட்டுவிட்டு, அவர்கள்
பெயரால் குழுக்களாகப் பிரிந்தும், தாங்களே உயர்ந்தவர் என்று இறுமாந்தும்,
பிறரைத் துன்புறுத்தியேனும் தன்பாலிழுத்தும், மறுப்போரை விரோதித்தும்
வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறோம். துரதிர்ஷ்ட வசமாக அவர்கள்
சொன்னவற்றைச் சம்பிரதாயமாய் மாற்றி, கருத்தை மறந்து, காரியங்களை மட்டும்
நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
இதில் பரிதாபம்
என்னவென்றால் நாம் கொண்டாடுகிற அத்தனை மகான்களுமே "அன்பு" என்பதைத்தவிர
வேறெதையும் கற்பிக்கவில்லை! அதைப் புரியவைக்கவே அவர்கள் நாளெல்லாம்
பாடுபட்டார்கள்; மனதால் வதைப்பட்டார்கள்.
எல்லாரும், எப்போதும் இந்த "அன்பு" பற்றிப்
பேசுகிறோம். அது எல்லாரையும் சமமாக்கும்; அனைவரையும் மகிழ்விக்கும் என்பது
ஒவ்வொருவருக்கும் தெரிகிறது. பின் ஏன் அதைக் கடைப்பிடிப்பது மட்டும்
"மகான்கள்" தரமாகி விடுகிறது? உண்மையிலேயே "அன்பு" செலுத்துவது என்பது
அவ்வளவு கடினமானதா? அதைச் செலுத்தவிடாமல் தடுப்பது எது?
திறந்த மனதோடு
யோசித்தால், இதன் காரணம் விளங்கி விடும். நம்மிடம் இருக்கும் 'சுயநலம்'
தான் சாத்தானாகி நம்மைத் தடுக்கிறது.பிறருக்கு உண்டாகும் மேன்மைகளை,
சிறப்புகளை, செழிப்பை நாமும் விரும்புவதில் தவறேதுமில்லை. அவற்றை அடைய
முயல்வதில் தான் வாழ்வு சிறக்கவும் முடியும். ஆனால் அவற்றைக் கண்டு மனம்
வெதும்பியோ,சுணங்கியோ அசூயை கொள்ளும்போது நமது மனச்சான்று அங்கே விழித்து
வேலை செய்ய வேண்டும். அவர்கள் அடையும் இன்பம் நம்மை ஏன் துன்பத்திற்காளாக்க
வேண்டும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். நமது நிலை என்ன, நம்மால் எது
செய்ய முடியும், எது முடியாது, நியாயமான முறையில் எதை அடைய என்ன வழி
என்ற யதார்த்த உண்மையை உள் மனதுக்கு புரிய வைத்துவிட்டால் அதன் சலசலப்பு
நின்றுவிடும். நமக்கு இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவோம். அந்த நிறைவு
ஏற்பட்டு விட்டால் பிறர் எது செய்தாலும் அது நம்மைப் பாதிக்காது.
உலக
இன்பங்களோ, கொள்கைகளோ, இலட்சியங்களோ எதுவாக இருப்பினும் நம்மைப்
பொறுத்தமட்டில் வரைமுறையுடன் ஸ்திரப்பட்டு விட்டால், அதிலிருந்து நழுவாமல்
அவற்றைக் காப்பதில்தான் கவனம் செல்லுமே ஒழிய, பிறரை அவர்களது செயல்களை
எடைபோடத் தோன்றாது. எதிர்க்கவோ, அழிக்கவோ துணிய மாட்டோம். காழ்ப்புணர்ச்சி
மறைந்து விட்டால், அவர்களையும் வாழ விட்டு, நாமும் வாழும் நிலை உண்டாகும்.
இதுவே அன்பின் அடித்தளம். நாளடைவில் நமக்கிருக்கும் நிறைவு, நம்மிலும்
தாழ்ந்தவருக்கு கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தையும், அவர்களும் அதை அடைய
வேண்டும் என்ற ஆர்வத்தையும் உண்டாக்கும். இப்பரந்த நினவு நாளடைவில்
தன்னிலும் உயர்ந்தவரைக் காணும் போதும் கிளர்க்கும். இதுவே 'பிறரன்பு'.
"பிறரன்பு"
வளர வளர அதற்காக எதையும் தியாகம் செய்யும் மனநிலையை உருவாக்கும்.
சமூகத்துக்காகத் தன்னையே இழந்த அத்தனைப் பேரும் இப்படித்தான்
உயர்ந்தார்கள். இப்படி உயரத்தான் அழைத்தார்கள்!
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire