கோ. நம்மாழ்வார்
(10 மே 1938 - 30 டிசம்பர் 2013)
தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். தஞ்சை
மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள இளங்காடுதான் நம்மாழ்வார்
பிறந்த ஊர். திருவாளர் கோவிந்தசாமி-திருவாட்டி ரெங்கநாயகி இணையோருக்குப் பிறந்தவர். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம்.
இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றுப் பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். ஆய்வகங்களில் செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார்.
இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றுப் பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். ஆய்வகங்களில் செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார்.
பசுமைப் புரட்சி என்றப் பெயரால் வேதியியல் வேளாண்மை தொடங்கபட்ட காலம் அது..
வேளாண்மை வெளி
இடுபொருள்களைச் சார்ந்து அதிக செலவு பிடிக்கும் தொழிலாக மாற்றப்பட்டதையும் ,
வேளாண் நிலம் வேதி உப்புகளை க் கொட்டும் களமாக மாற்றப்பட்டதையும் கண்ட
நம்மாழ்வார் இந்த அழிவுப் பணியில் தாமும் பங்குதாரராக இருக்க விரும்பாமல்
அப்பணியிலிருந்து வெளியேறினார்.
இயற்கையோடு இயைந்த, வெளி இடுபொருள்கள்
சாராத தற்சார்பான வேளாண்மையே மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் என்று
உணர்ந்த நம்மாழ்வார், இயற்கை வழி
வேளாண்மை குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் பணிக்குத் தன்னை
அர்ப்பணித்துக்கொண்டார்.
சிறந்த ஆளுமை, மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி, தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமை,
இறுதி வரை நல்ல ஞாபக சக்தி, தான் படித்தவற்றை மற்றவருக்கு எளிதாக விளக்கும்
திறமை, தலைமைப் பண்பு, பகுத்தறிவு இவை அனைத்தும் வாய்க்கப் பெற்றவர்.
இறுதி வரை மக்களுக்காக வாழ்ந்த உத்தமர்.ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார்.
நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். தமிழ்
இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம்
தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை
விவசாயிக்குப் புரியும் என்பார்.
இயற்கையோடு இயைந்த உற்பத்திமுறை ,உணவு முறை, வாழ்வியல் முறை ஆகியவை
குறித்து நம்மாழ்வார் சிறார்களிடம் உரையாடுகிற முறையே தனிச் சிறப்பானது.
சிறார்களுடன் உரையாடுகிற போது மிகச் சிக்கலான அறிவியல் செய்திகளை மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் அழகுற அவர் சொல்லும் பாங்கு அவருக்கே உரிய தனிச்
சிறப்பான ஒன்று. அப்போது அக்குழந்தைகளுக்கு இடையே தாடிவைத்த மூத்த குழந்தை
ஒன்றை நாம் பார்க்க முடியும்.
காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது
கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய
மாட்டார்.
நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால்
அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப
மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார்.
பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும்.
வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செலவிட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் எனப் பொதுப் போக்குவரத்தையே
பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார்.
லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த
நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது
பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய
நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம் குறித்த நிறைய
புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே.
இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றித்
தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு
நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம்.
இரசாயனம் இல்லா விவசாயம், மருந்தில்லாத மருத்துவம், சுவரில்லாத கல்வி – இவைதான் மாற்றுலகை நிர்ணயிக்க அவர் சொன்ன சூத்திரம்.
நம்மாழ்வார் தன்னைப்பற்றி கூறிய சில செய்திகள்:
"நான் படிப்பு மூலமாக் கத்துக்கிட்டது குறைச்சல். வாசிப்புதான் எனக்கு
எல்லாத்தையும் கத்துக்கொடுத்துச்சு. வேலை இல்லாத நேரம்னா என்னைப் புத்தகம்
இல்லாம பார்க்க முடியாது.என் வாழ்க்கையை மாத்தின புஸ்தகம்னா ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும்
விவசாயி, (Masanabu Fukuoka) மசானபு
ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி ’.என்னைக் கவர்ந்தவர்கள் சின்ன வயசுல
பெரியார், அப்புறம் நான் நானாகக் காரணமான என்னோட குரு பெர்னார்ட், எப்பவும்
மகாத்மா காந்தி."
தன் குடும்பத்தை பற்றி மனம் திறந்த பொழுது:
"என் மனைவி
சாவித்ரி என்னை முழுமையாப் புரிஞ்சு நிறைவா
நடந்துகிட்டவங்க. வாழ்க்கையைத் தொடங்குன கொஞ்ச நாள்லேயே என் போக்கு
அவங்களுக்குப் புலப்பட்டுருச்சு. என்னோட வேலைகளும் பாதிக்காம,வீடும்
பாதிக்காம இருக்க ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுத்தோம். வீட்டு
நிர்வாகத்தை – அதாவது நெலபுல நிர்வாகத்தையும் சேர்த்துச் சொல்றேன் – அவங்க
கையில ஒப்படைச்சுட்டேன். தனிப்பட்ட முறையில எனக்கு இருந்த ஒரே சுமை
அதுதான். அதையும் அவங்க சுமந்ததாலதான் என்னால ஓட முடியுது".
நம்மாழ்வார் எதிர்த்துப் போராடியவை:
- பூச்சி கொல்லிகள்
- யூரியா போன்ற உரங்கள் -நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் - மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று நிரூபித்துக்காட்டியவர்
- மீத்தேன் வாயு திட்டம் - இந்தியா
- மரபணு சோதனைகளும் மாற்றங்களும் - பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவரல்ல. பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் அறிந்தவர். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார்.
- பி.டி கத்தரிக்காய்க்கு அனுமதி - பி.டி. கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு தன் நண்பர்களுடன் எதிர்ப்பு தெரிவித்ததுமல்லாமல் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றார்..
- வெளிநாடுகளிலிருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
- விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்
உருவாக்கிய அமைப்புகள்:
- 1979 ஆம் ஆண்டு “குடும்பம்’’ என்ற தொண்டு அமைப்பை நிறுவினார்.
- 1990 லிசா – LEISA -Low External Input Sustainable Agriculture -வெளி இடுபொருள் குறைவாக இருந்தால் உழவாண்மை நிலைத்து நிற்கும் என்பது இதன் பொருள். வளமிழந்த நிலத்திற்கு முதலில் வளத்தை ஏற்படுத்த வேண்டும். பிறகு கால்நடைகளுக்குத் தேவையானவற்றை அந்த நிலத்தில் உற்பத்தி செய்ய வேண்டும். அப்போது, கால்நடைகளின் உழைப்பும் சாணமும் நிலத்திற்குச் சேரும்.அடுத்து மனிதனுக்கு தேவையானவற்றை அங்கு உற்பத்தி செய்ய வேண்டும். அதற்குமேல் தான் சந்தைக்கானதை உற்பத்தி செய்ய வேண்டும். இந்த அமைப்பு இப்பொழுது பெரும் அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.
- 1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
- இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
- நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
- "வானகம்" - இது ஒரு தன்ன்னர்வ மாதிரிப் பண்ணை.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின் பேரில் இயற்கை விவசாயத்தின் இணையில்லா மகத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகத் தொடங்கப்பட்டது. சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்திருக்கும் இந்தப் பண்ணை சில வருடங்களுக்கு முன்பு வரை பாறை பூமியாய் தண்ணீர் வளமின்றி வறண்ட பிரதேசமாக இருந்துள்ளது.ஆனால் இயற்கை வழி விவசாய முறை இந்தப் பாறை நிலத்தைப் பல்லுயிர் வாழும் பெரும் கானகமாக மாற்றியுள்ளது.இயற்கை நமக்கு அளிக்கும் எல்லையில்லா வளத்தைச் சரியான முறையில் சேமித்தால் விளையும் அற்புத மாற்றங்களை நம் கண் முன்னே விளக்கிக் காட்டுகிறது இந்த வானகம்.
- ‘தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் அனைத்துக்கும் சென்று கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தார்.
- 60 க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களைத் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு மாவட்டத்தில் நிறுவியுள்ளார்.
மேற்கொண்ட நடைபயணங்கள் :
- 1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக நடைபயணம் மேற்கொண்டார்.
- 2002 -இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.
- 2003 - பூம்புகார் முதல் கல்லணை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்துப் பிரச்சாரம்
படைப்புகள்:
- தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
- உழவுக்கும் உண்டு வரலாறு - விகடன் வெளியீடு
- தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
- நெல்லைக் காப்போம்
- வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
- இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
- நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
- எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
- பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
- மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
- களை எடு - கிழக்கு பதிப்பகம்
- தமிழகப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தவர்.
- ‘பேரிகை' என்ற இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழையும் அவர்
நடத்திவந்தார்.
பெற்ற விருதுகள்:
- 2004 இல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இவருக்குச் ’சுற்றுச் சூழல் சுடரொளி' விருது வழங்கி கவுரவித்தது.
- 2007ல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் கௌரவ முனைவர் பட்டம் தந்தது.
- கபித்தலம் தமிழர் பண்பாட்டுப் பொங்கல் விழா விருது ,ஈரோட்டில் மக்கள் சிந்தனையாளர் விருது, பாரதியார் விருது என்று பல விருதுகளைப் பெற்றவர்.
- காலம் காலமாக மனிதர்களுக்கு மருந்தாகவும், வேளாண்மையில் பூச்சி விரட்டியாகவும் இன்னும் பல முனைகளில் பயன்படும் பொருளாகவும் விளங்கிவந்த வேம்பு, கிரேஸ் என்ற வட அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தால் காப்புரிமை என்ற பெயரால் கிரேஸ் நீம் என்று பெயர் சூட்டப்பட்டு அந் நிறுவனத்தின் தனிச் சொத்தாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு அவரவர் தோட்டத்தில் நிற்கும் வேப்பமரம் கூட கிரேஸ் நீம் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட சொத்தாக மாறியது. அதன் இலையையோ பழத்தையோ, கொட்டையையோ, மரப்பட்டையையோ, வேப்ப எண்ணெய்யையோ எதைப் பயன்படுத்தினாலும் கிரேஸ் நிறுவனத்தாருக்கு காப்புத்தொகை கட்ட வேண்டிய சட்ட நிலைமை ஏற்பட்டது.இதனைக் கண்டு நம்மாழ்வாரும் வடநாட்டில் வந்தனாசிவா அம்மையாரும் கொதிதெழுந்தார்கள். நாடெங்கும் இந்த அநீதியை எதிர்க்க மக்களை அணிதிரட்டுவதில் பெருமுயற்சி மேற்கொண்டார்கள்.உலக வர்த்தக அமைப்பு மாநாடு 1998 மே மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற போது அம்மாநாட்டு அரங்கத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து இந்தியக் கொடியை கையிலேந்திக் கொண்டு நம்மாழ் வாரும் வந்தனா சிவாவும் நடத்திய ஆர்ப்பாட்டம் உலகின் கவனத்தை இச்சிக்கலில் ஈர்த்தது. வந்தனா சிவா தொடுத்த வழக்கின் காரணமாக வேம்பு தொடர்பான காப்புரிமை இரத்து செய்யப்பட்டது.
- டிசம்பர் 25 2004 - சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்களை சீரமைக்கும் பணியில் முக்கிய பங்கேற்றார். 2006 ம் ஆண்டு இந்தனேசியா சென்று சுனாமியினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சீரமைப்பதற்கான பணிகளைச் செய்ய உதவி செய்தார்.
- பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். இவருடைய ஆலோசனைகளையும் விஞ்ஞானிகளின் கோரிக்கைகளையும் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார்.
- பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்ற நமது பாரம்பரியப் பழங்களையே பயிரிடுமாறு விவசாயிகளை ஊக்குவிப்பார். தானும் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதை இயன்றவரை தவிர்த்தே வந்தார். நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார். இவரது வழிகாட்டுதலில் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி அந்தோணிசாமி.
- ஆப்பிரிக்காவின் ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் நெல் நடவு 1960-களில் உலக அளவில் பிரபலமானது. ஆனால், விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார்.
- நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல... மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார். ஈஷா - தனது குருவாக ஏற்றுக்கொண்டவர் - மரம் நடுதலுக்கு ஆதரவு காட்டியவர்.
- 1990-களில் ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தது. அப்போது இத்தாலி நாட்டில் நடந்த துரித உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார், இங்கு ஆரம்பித்ததுதான் ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு, பளபளக்கும் பல்பொருள் அங்காடிகளில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியத் தானியங்களான சாமையும் கம்பும் போட்டிபோட முடிகின்றன என்றால், அதற்குக் காரணம் நம்மாழ்வாரே!
- காவிரிப் பாசனப் பகுதியை பாலைவனமாக்கும் மீத்தேன் எடுக் கும் திட்டத்தைக் கண்டித்து கிராமம் கிராமமாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் கிராமக் குழுக்களை உருவாக்கினார்.
இயற்கை
வேளாண்மைக்கான விதையை தமிழகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் விதைத்து,
இன்றைக்கு அவையெல்லாம் இயற்கை வேளாண்மைக்கான பயிற்சிப் பட்டறைகளாக
மிளிர்வதுதான் இவரது வாழ்க்கை அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள வெற்றி! -
30.12.2013 - மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்காக பட்டுக்கோட்டை சென்றிருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.அவருக்கு வயது 75.
நம்மாழ்வாரின் இறுதிச்சடங்கில் மண்ணை நேசிக்கும் விவசாயிகளின் கண்ணீர் மட்டும் நிறைந்திருக்கவில்லை. ஏராளமான இளைஞர் கூட்டம் தங்கள் ஆசானை இழந்த அழுகுரலுடன் அங்கே நிரம்பியிருந்தது. “எதையாவது செய்யணும், இந்த மண்ணை நேசித்து, சூழலைக் காக்கும் இயக்கத்தில் என் பங்கை நான் எப்படியாவது ஆற்ற வேண்டும்” என அந்த இளைஞர் கூட்டம் அங்கு சூளுரைத்தது.
தொகுப்பு: லூசியா லெபோ
நன்றி: இணையதளம், வலைபூக்கள்
குறிப்பு:
'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப்பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி - பசுமை விகடன் இதழ்தோறும் பேசுகிறார்கள்.படித்துப் பயன்பெறவும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire