பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 31 décembre 2014

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். "புதியதோர் உலகம் செய்வோம்" என்று பாடத் தூண்டியது, நிச்சயம் இருக்கும் குறைகளை நீக்க வேண்டும் என்ற பேராவல் தான். மனிதன் எத்தனை நிறை அம்சங்களைக் கொண்டிருக்கிறானோ, துரதிஷ்டவசமாக அத்தனை குறைகளையும் தன்னகத்தே அடக்கியுள்ளான். இந்தப் போராட்டம் தனி மனித வாழ்வில் மட்டுமல்ல, சமுதாயத்திலும் தொன்று தொட்டு இருந்தே வருகிறது.

நீதியும், நேர்மையும் அடிபட்டு போவதும், எளியோரை உருக்குலைப்பதும், சுயநலம் தலை விரித்தாடுவதும், வேறு வழியின்றி உண்மை ஊமையாவதும் அன்று முதல் பெறும் அனுபவமே! ஒவ்வொரு காலத்தில் இவை ஒவ்வொரு வடிவத்தில் சவாலாக மனித இனத்துக்கு இருக்கிறது. சர்வாதிகள் நெறி பிறழ்ந்ததிலிருந்து, இன்றைய அரசியல்வாதிகளோ அல்லது பண பலம் கொண்ட முதலாளிகளோ முறை கெடுவது வரை, அதன் தாக்கம் அடி மட்ட சாமானியன் மீது விழுவதைத் தடுக்க இயல்வதில்லை!

இரை தேடி அலைவதொன்றே வாழ்வு என்றிருந்தவன், என்று விளைச்சலும், தன்னிறைவுமாக வாழ ஆரம்பித்தானோ அதுவே அவனது பொற்காலம் என்றாயிற்று! அதில் திருப்தியுறாமல், மேலும், மேலும் சேர்க்க ஆரம்பித்ததன் விளைவுதான் இன்றைய நிலை! பணத்துக்காக எதையும் செய்தும் பூரண அமைதி பரவியபாடில்லை. இல்லாமை பரவிக்கொண்டே போக, குற்றங்களும், நோயும் மலிய, சேர்த்தவனும் அவற்றுக்கு பலியாகவேண்டி உள்ளது.

இந்நிலையை மாற்ற நினைத்த நல்லுள்ளங்கள் உலகம் முழுதிலும் ஒவ்வொரு வழியில் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.

 இரண்டாம் உலகப் போரில் மீந்து போன வெடிமருந்து உப்பை ரசாயன உரமாக்கி இயற்கையைக் கெடுத்து, தட்ப-வெட்ப நிலை மாறி அவதியுறும் உலகைக் காக்க, வீணே பயன்படாதிருக்கும் நிலத்தில் இயற்கை உர விளைச்சலை (காய்கறிகள், பழங்கள் போன்றவை) மேற்கொள்ளுவதுடன், பலனை எல்லோருக்கும் இலவசமாகப் பகிர்ந்தளிக்கும் முறை எங்கும் பரவி வருகிறது. இதன் மூலம் 'விலை நிர்ணயிப்பு' என்றப் போர்வையில் பணம் திரட்ட வழி மூடிப் போவதுடன், எல்லோருக்கும் சத்துள்ள உணவு கிடைக்கிறது.

பண்ட மாற்று முறையில் தன்னிடம் உள்ளதை, அது தோட்டத்தில் விளைந்ததோ அன்றி சமைத்ததோ தேவைப்படுவோருக்கு அளித்து விட்டு, அவர்களிடம் உள்ளது தனக்குத் தேவை என்றால் அதைப் பெறும் முறை ஒன்று 'புட் ஸ்வாப் நெட்வொர்க்' என்ற பெயரில் நடைபெறுகிறது. உணவு மட்டுமல்லாது, துணிகள், பொருட்கள் எனவும் இதை விரிவுபடுத்துகிறார்கள்.

இதையும் தாண்டி, திறமைகளை இலவசமாகப் பகிர்தலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை பழுது பார்க்கத் தெரிந்தவர்கள், தேவைப்படுவோருக்கு செய்து கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக, வீடு கட்டத் தெரிந்தோரின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு உதவி செய்து, அவர்களால் செய்ய முடிந்த தன்  தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். 

இவை அவரவர் தேவையை இலவசமாக நிறைவேற்றிக் கொள்ள மட்டும் உதவவில்லை. பண அரக்கனை ஒழித்துக் கட்டுவதோடு, ஒருவர் திறமையை மதிக்கவும், பரஸ்பரம் நேயம் கொள்ளவும், அதன் மூலம் நல்லிணக்கம் கொள்ளவும் வைக்கிறது. பேதங்கள் மறைய இது ஓர் நல்ல வழி. சாதிச் சண்டை, மத வெறுப்பு போன்ற இதுவரை தீர்க்க இயலாத பிரச்சனைகள் கூட இதன் வழியாக இல்லாது போகும்.

கீதையில் கண்ணன் கூறிய "எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்!" என்ற பாதையை நோக்கி செல்கிறோம் என்பதற்கு இது ஓர் நல்ல எடுத்துக்காட்டு!

உலகை அனைவரும் இன்புறும் ஓர் சொர்க்கமாக மாற்ற இப்பாதை தொடரட்டும். இயற்கை வளங்கொழிக்கும் பூங்காவாய் அது மாறட்டும். இன்று இது கனவுலகோ என்ற ஐயத்தை எழுப்பினாலும், தொடர் முயற்சியால் மனிதனால் ஆகாதது எதுவுமில்லை என்கிற உண்மை நம்பிக்கை அளிக்கட்டும்!

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire